[ புதன்கிழமை, 25 யூன் 2014, 04:40.09 PM GMT ]
வட கிழக்கு மாகாணங்களின் நிர்வாக மொழி, தமிழ் மொழி என்ற அரசியலமைப்பின் 16ம் திருத்தத்திற்கமையவே நாம் செயற்படுவோம் என மாகாணசபை பேரவை தலைவர், அரசகரும மொழிகள் ஆணைக்குழுவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கையில் சமகாலத்திலும் நடைமுறையில் இருக்கும் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக்கோரி மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரதி தமிழில் தமக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறி ஜாதிக ஹெல உறுமய அரசகரும மொழிகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு கொடுத்துள்ளது.
இந்நிலையில் அந்த ஆணைக்குழு பேரவை தலைவரிடம் இது தொடர்பில் கேட்டுள்ள விளக்கத்திற்கு பதிலளிக்கும் வகையிலேயே பேரவை தலைவர் மேற்படி கடிதத்தை எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மேற்படி விடயத் தலைப்பிலான தங்களது 18.06.2014ம் திகதிய கடிதம் சார்பானது, வடக்கு கிழக்கு மாகாணங்களின் நிர்வாக மொழி, தமிழ் மொழி ஆகும் என்ற அரசியல் யாப்பின் 16வது திருத்த ஏற்பாடுகளுக்கமையவே வடக்கு மாகாணசபை செயற்படுகிறது என்பதை முதலில் தங்களுக்குத் தெரியப்படுத்த விரும்புகிறேன்.
வடக்கு மாகாண சபை நிருவாகத்தைத் தமிழில் மேற்கொள்வது எமது அரசியல் சட்ட உரிமையாகும்.
தங்களது கடிதத்தில் குறிப்பிடப்படும் எமது 10.05.2014ம் திகதிய கடிதம், ஜாதிக ஹெல உறுமய கட்சிக்கு மட்டும் எழுதப்பட்டதல்ல. பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அத்தனை கட்சிகளுக்கும் அனுப்பப்பட்டவை.
ஒரு தேசியக் கட்சியெனத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் ஒரு கட்சி தம்மிடம் தமிழ் தெரிந்த ஒருவர் கூட இல்லையென்ற அடிப்படையில் இப்புகாரைச் செய்திருப்பது அவர்களின் இனவாதச் சாயத்தை வெளிப்படுத்துகின்றது.
நாம் கடிதம் அனுப்பிய வேறு எந்த அரசியல் கட்சியும் புகார் செய்யவில்லை என்பது கவனிக்கப்பட வேண்டியது.
இத் தீர்மானத்தில் அவ்வாறே தெளிவாகக்கூறப்பட்டுள்ளது. காலவரையிட்டு எமக்கு எழுது முன்பு இந்த அம்சத்தை தாங்கள் கவனித்திருக்க வேண்டும்.
இந்த நிலையில் இவர்களுக்கு தமிழர்களைப் பற்றிப் பேச எந்த உரிமையும் கிடையாது என்பது இதிலிருந்து வெளிப்படுகிறது.
எந்தவொரு சிங்கள ஆளொருவர் எம்முடனோ, பேரவைச் செயலாளருடனோ பேசினால் நாம் கட்டாயமாக சிங்களத்திலேயே அவருடன் பேசுகின்றோம்.
வடக்கு மாகாண சபையைப் பொறுத்தவரை எமது மொழிக் கொள்கை மிகத்தெளிவானது. எமது சபையில் இரண்டு சிங்கள உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களுக்கான சகல கடிதத் தொடர்புகளும் சிங்கள மொழியிலேயே இடம் பெறுகின்றன. அவர்களது உரைகள் சிங்களத்திலேயே பதியப்படுகின்றன.
அவர்களது சிங்கள உரைக்கு சிங்களத்திலேயே நான் பதிலளிக்கின்றேன். தமிழில் ஏனையோர் பேசும் போது தமிழ் மொழியாக்கம் சமாந்தரமாக இடம்பெறுகின்றது.
இந்த நடைமுறை எந்த சிங்கள ஆளொருவருக்கும் பொருந்தும். ஜாதிக ஹெல உறுமய என்னிடம் ஒரு மொழி பெயர்ப்பைக் கோரியிருந்தால் நான் நிச்சயம் வழங்கியிருப்பேன்.
மேலும் தமிழ் மொழி இந்த நாட்டின் இரண்டு தேசிய கரும மற்றும் நிருவாக மொழிகளில் ஒன்று என்பது கவனிக்கப்பட வேண்டும்.
இவர்களது புகார் பற்றி எமக்கு தெரியப்படுத்தியமைக்கு நன்றி. ஆனால் வடக்கு மாகாணத்துக்கு வெளியே உள்ள மாகாண சபைகள் உள்ளிட்ட அனேகமான திணைக்களங்கள் எமக்கும் ஏனைய திணைக்களங்களுக்கும் தனிச்சிங்களத்திலேயே கடிதங்கள் எழுதுகின்றன என்பதைத் தாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன்.
அவர்களுக்கு நாம் சிங்களத்திலோ ஆங்கிலத்திலோ பதிலளிக்கின்றோம். இவற்றுக்கெல்லாம் தங்களுக்கு நாம் புகார் செய்தால் தங்கள் ஆணைக்குழு அலுவலகம் அவற்றால் நிரம்பி வழியும்.
ஒருவேளை இது பற்றி தங்களுக்கு புகார் செய்யவில்லையென நீங்கள் கருத்துத் தெரிவிப்பீர்களாயின் ஒரு பகிரங்க அறிவிப்பு மூலம் அவ்வாறு செய்யும்படி சகலரையும் நாம் கோரமுடியும்.
ஒன்றை மட்டும் நாம் தெளிவுபடுத்த விரும்புகின்றோம். நாம் மிகவும் விட்டுக் கொடுப்புடனும் புரிந்துணர்வுடனுமே செயற்படுகின்றோம் ஜாதிக ஹெல உறுமயவின் தமிழின விரோதப்போக்கு மாதிரி அல்ல.
அவர்களால் நாம் அச்சுறுத்தப்பட முடியாது. இந்தச் சந்தர்ப்பத்தில் மட்டுமல்ல வேறு எந்தச் சந்தர்ப்பத்திலும் நாம் அரசகரும மொழிக் கொள்கையை மீறவில்லை என்பதே எமது நிலைப்பாடு என்பதைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.
என்று குறிப்பிடப்படடுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyGRZLaexz.html
வடமாகாண சபையின் நியதிச் சட்டங்கள்: அங்கீகாரம் வழங்காமல் இழுத்தடிக்கும் சந்திரசிறி
[ புதன்கிழமை, 25 யூன் 2014, 04:53.55 PM GMT ]
வடமாகாண சபை தமிழ் தேசிய கூட்டமைப்பினால் முதன்முறையாக கைப்பற்றப்பட்டிருக்கும் நிலையில், நியதிச் சட்டங்களை இயற்ற வேண்டிய தேவை தொடர்பாக பல்வேறு சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.
இந்நிலையில் நிதி நியதிச்சட்டம், முத்திரைவரி கைமாற்றுச் சட்டம் மற்றும் முதலமைச்சர் நிதி நியதிச் சட்டம் ஆகிய 3 நியதிச் சட்டவரைபுகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
இவை கடந்த மாதம் அங்கீகாரத்திற்காக அளுநரிடம் வழங்கப்பட்டிருந்த நிலையில் அவை தொடர்பாக பரிசீலித்து, அரசியலமைப்புடன் ஒப்பிட்டு பரிசீலித்து அதனை அங்கீகரிப்பதாகவும் அதற்குக் கால அவகாசம் தேவை எனவும் ஆளுநர் கடந்த மா காணசபை அமர்வின்போது சபைக்கு எழுத்துமூலம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நாளைய தினம் நடைபெறவுள்ள மாதாந்த சபை அமர்வில் தீர்மானிக்கப்பட்டு நாளை மறுதினம் மேற்படி நிதி நியதிச் சட்ட வரைபுகள் தொடர்பான விவாதத்தினையும், வாக்கெடுப்பினையும் நடத்துவதற்குப் பேரவைச் செயலகம் தீர்மானித்திருந்ததுடன், அது தொடர்பில் கடந்த கூட்டத்தில் பேசப்பட்டுமிருந்தது.
நிலை இவ்வாறிருக்க, இன்று மாலை ஊடகங்களுக்கு அறிக்கை விடுத்துள்ள வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி குறித்த நியதிச்சட்ட வரைபுகளை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப் போவதாகவும், அங்கே குறித்த சட்டவரைபுகளில் உள்ள சிக்கல்கள் குறித்து பரிசீலிக்கப்பட்டதன் பின்னரே அங்கீகாரம் வழங்க முடியும் என கூறியிருப்பதுடன், அந்த அங்கீகாரத்திற்கு மேலும் கால அவகாசத்தைக் கேட்டிருக்கின்றார்.
ஆனால் அந்தகால அவகாசத்திற்கான கால எல்லை குறிப்பிடப்படவில்லை. நியதிச் சட்டங்கள் தொடர்பில் தொடர்ந்தும் இழுபறி நிலை உருவாகவுள்ளதுடன், கடந்தமுறை ஆளுநர் கால அவகாசம் கோரியதற்கே அவையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் மேலும் கால அவகாசத்தை ஆளுநருக்கு வழங்கும் பட்சத்தில் அத்தகைய எதிர்ப்புக்கள் நாளைய தினம் நடைபெறும் சபை அமர்விலும் நடக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை மேற்படி நியதிச்சட்ட வரைபுகள் தற்பொழுதும் கிழக்கு மாகாணசபையில் நடைமுறையில் உள்ள சட்ட வரைபுகளை ஒத்தே உருவாக்கப்பட்டிருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyGRZLaex0.html
Geen opmerkingen:
Een reactie posten