தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 26 juni 2014

ராஜா கனகராஜாவின் கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது!

தமிழகத்தை நோக்கி நகர்த்தப்படும் வெட்டுக் காய்கள்!
[ புதன்கிழமை, 25 யூன் 2014, 11:40.50 PM GMT ]
இந்த வாரத்தில் இரண்டு வெட்டுக் காய்கள் தமிழகத்தை நோக்கி நகர்த்தப்பட்டுள்ளது. ஒன்று, சுப்பிரமணியசுவாமி ஊடான ஜெயலலிதா - மகிந்த சந்திப்பு விவகாரம். அடுத்தது, சர்ச்சைக்குரிய 'பிறகு'  (வித் யூ வித்அவுட் யூ) என்ற தமிழ்த் தலைப்புடன் 'ஒப நத்துவா ஒப எக்கா' என்ற சிங்களப் படத்தை தமிழகத்தில் திரையிட முயன்றது.
தமிழீழ மக்களது துயரங்களுக்கு நீதி தேடும் தமிழக முதல்வரையும், அத்தனை துயரங்களுக்கும் காரணமான போர்க் குற்றவாளி மகிந்தாவையும் சந்திக்க வைக்கும் முயற்சி ஒன்றை, தமிழகத்தின் அரசியல் கோமாளியும், மகிந்தவின் நண்பருமான சுப்பரமணியசுவாமி மேற்கொண்டிருந்தார்.
தமிழக மீனவர் பிரச்சினையை மையப்படுத்தி இருவரையும் சந்திக்க வைப்பதன் மூலம், தமிழீழ மக்கள் தொடர்பான தமிழக முதல்வரது கடும் போக்கில் மாற்றங்களை உருவாக்கும் முயற்சியாகவே இது நோக்கப்படுகின்றது.
இதற்கு அடுத்ததாக, சிறிலங்காவின் பிரசன்ன விதானகே இயக்கிய 'ஒப நத்துவா ஒப எக்கா' எனும் சிங்களப் படத்தின் 'வித் யூ, வித்அவுட் யூ' என்ற ஆங்கிலத் தலைப்பை 'பிறகு' என்ற தமிழ்ப் பெயருடன் சென்னை, வடபழனியில் உள்ள ஆர்.கே.வி. ஸ்ரூடியோவில் செவ்வாய்க்கிழமை சிறப்புக் காட்சியாக திரையிடப்பட்டது.
தமிழ் ஸ்ரூடியோ அமைப்பு இதற்கான ஏற்பாட்டைச் செய்திருந்தது.
இந்தப் படம், கடந்த வாரத்தில் வெளியிடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருந்தது.
எனினும், படம் குறித்த சர்ச்சைகள் தீவிரமடைந்த நிலையில், பாதுகாப்பு குறித்த காரணங்களால் சென்னைத் திரையரங்குகளிலிருந்து ஞாயிறு அன்று விலக்கிக் கொள்ளப்பட்டது.
இரு வருடங்களுக்கு முன்னால், சிறிலங்கா அரசால் இந்தப் படத்திற்குத் தடை விதிக்கப்பட்டு, பின்னர் விலக்கிக் கொள்ளப்பட்டிருந்தது.
படத்தில், சிங்கள ஆட்சியாளர்களுக்கு நெருடலான சில காட்சிகள் இருந்த காரணத்தாலேயே அது சிறிலங்காவில் திரையிட அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
அந்தக் காரணங்களுக்காக, இந்தப் படம் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவானதான கருத்துருவாக்கத்தோடு தமிழகத்தில் திரையிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.


முதலில், சிங்களப் படைப்பாளிகளோ, இலக்கிய கர்த்தாக்களோ தமிழர் தளங்களில் கால் பதிக்கும் முயற்சியை மேற்கொள்வதற்கு முன்னர் தமிழ் மண்ணில், தமிழர்களுக்கு நேர்ந்த அவலங்களின் உண்மை நிலைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
சிங்களப் படைகள் மீதும், சிங்கள அரசு மீதும், அவர்களது வெற்றிவாதத்தில் பங்கெடுக்கும் சிங்களப் பேரினவாதத்தின் மீதும் முன்வைக்கப்படும் ஆதாரங்களுடனான போர்க் குற்றச்சாட்டுக்களை ஒப்புக்கொள்ள வேண்டும்.
அதன் பின்னராகவே, அதன் வலிகளுக்கான தீர்வு நோக்கிப் பயணிக்க முடியும்.
பிரசன்ன விதானகேயின் இந்தப் படத்திலும், நடந்தேறிய குற்றங்களின் ஒரு பகுதியை இராணுவ சிப்பாய்களின் மீது சுமத்திவிட்டு, சிங்கள ஆட்சியாளர்களையும், சிங்களப் பேரினவாதத்தையும் தப்பிக்க வைக்கும் முயற்சியே எத்தனிக்கப்படுகின்றது.
அதுவும், யுத்த களத்து ரணங்களால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து விடுபட முடியாத தமிழ்ப் பெண்ணான செல்வியை, அவளது வலிக்குக் காரணமான அதே சிங்களப் படையின் சிப்பாயே வாழ்வு கொடுப்பதாகவும் இந்தப் படத்தின் கதைக்களம் நகர்கின்றது.
உண்மைகள் மறைக்கப்பட்டு, அவள் மீண்டும் ஒரு பலிக் களத்தில் நிறுத்தப்படுகின்றாள். அது வெளிச்சத்திற்கு வந்தபோது, அவள் தன்னையே மாய்த்துக் கொள்கின்றாள்.
தமிழ் இனத்தின் மீதான சிங்களப் பேரினவாதத்தின் இன அழிப்பு நடவடிக்கைகளை ஒரு சிலரது குற்றச் செயல்களாக்கி விட்டுத் தப்பிக்கும் முயற்சியில், அவர்களது குற்றங்களையும், நண்பர்கள் என்ற காரணத்தால் அதனை மறைத்ததையும் ஒப்புக்கொள்ளும் சரத்சிறி என்ற கதாநாயக பாத்திரத்தின் மூலமாக, இயக்குனர் பிரசன்ன விதானகே பாதிக்கப்பட்ட தமிழினத்திற்கு எந்த நீதியை வழங்க முற்படுகின்றார்?
எல்லா உண்மைகளை மறைத்து விடுவதனாலும், அதற்குப் பரிகாரமாக, பாதிக்கப்பட்ட பெண் ஒருவரைத் திருமணம் என்ற பெயரில் மீள் வல்லுறவு கொள்வதனாலும் பிரச்சினைகள் முற்றுப்பெற்றுவிடும் என்று நினைக்கிறாரா?
அதாவது, முப்பது வருடங்களுக்கு முந்தைய தமிழ்ச் சினிமாவில் வருவது போன்று, கற்பழித்தவனே அவளைத் திருமணம் செய்து கொள்ளும் நீதியை நிலைநாட்ட முற்படுகின்றாரா?
அதுவும், சிங்களப் பேரினவாதத்தை ஆண் வல்லமையாகவும், தமிழினத்தின் இன்றைய நிலையை பெண் இயலாமையாகவும் கொண்ட பாத்திரப் படைப்புக்கள் சகிக்க முடியாத கொடூரங்கள்.
இறுதியில். தன்னையே மாய்த்துக் கொள்ளும் செல்வி, மீளவே முடியாத தமிழினத்தின் தோல்வியின் அடையாளமாக்கப்பட்டுள்ளாள்.
இல்லையெனில், அவளது துப்பாக்கி குறி தவறாமல் வெடித்திருக்க வேண்டும்.
அதற்கு, பிரசன்ன விதானகேயின் சிங்கள மேலாதிக்க வெற்றிவாதம் இடம் கொடுக்கவில்லை.
மொத்தத்தில், தமிழகத்தை நோக்கி நகர்த்தப்பட்ட இரண்டு காய்களும் தமிழ்த் தேசியவாதிகளால் களத்திலிருந்து அகற்றப்பட்டுவிட்டது.
- தமிழ்ச்செல்வன்
http://www.tamilwin.com/show-RUmsyGRZLaex1.html
ராஜா கனகராஜாவின் கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது!
[ புதன்கிழமை, 25 யூன் 2014, 11:51.05 PM GMT ]
ராஜா கனகராஜாவினால் வட மாகாண ஆளுநர் பதவியை வழங்குமாறு விடுத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
யாழ்ப்பாண சங்கிலிய மன்னர்களின் இறுதி வாரிசு என ராஜா ரெமிஜியஸ் கனகராஜா தம்மை அடையாளப்படுத்திக்கொண்டுள்ளார்.
ராஜா கனகராஜா தற்போது நெதர்லாந்தில் வாழ்ந்து வருகின்றார்.
சங்கிலிய மன்னர்களின் வழித்தோன்றலான தமக்கு வட மாகாண ஆளுநர் பதவியை வழங்குமாறும், படையதிகாரிகளை தொடர்ந்தும் ஆளுநர் பதவியில் நீடிக்க வேண்டாம் என கோரியிருந்தார்.
கனகராஜா இலங்கையில் வாழ்ந்த காலப்பகுதியில் செஞ்சிலுவைச் சங்கத்தில் கடமையாற்றியிருந்தார்.
நெதர்லாந்திற்கு விஜயம் செய்திருந்த அமைச்சர் ராஜித சேனாரட்னவை, நெதர்லாந்திற்கான இலங்கைத் தூதரகத்தில் வைத்து கனகராஜா சந்தித்து, வட மாகாண ஆளுநர் பதவியை வழங்குமாறு கோரியுள்ளார்.
எனினும், இந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
கனகராஜா 2007ம் ஆண்டு நியூயோர்க்கில் வைத்து, புலிகளின் சமாதானப் பேரவைப் பொறுப்பாளர் புலித்தேவனுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார் என சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyGRZLaex2.html

Geen opmerkingen:

Een reactie posten