எப்போதெல்லாம் தமிழர் விடுதலைக் கூட்டணி ஒதுக்கப்படுகின்றதோ, அப்போதெல்லாம் நடைபெறுகின்ற பேச்சுகளும் சரி எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகளும் சரி பயனற்றுப் போய்விடுகின்றன.
இப்படி சுட்டிக்காட்டியிருக்கின்றது தமிழர் விடுதலைக் கூட்டணி. அதன் நிர்வாகச் செயலாளர் இரா.சங்கையா 'தமிழர் விடுதலைக் கூட்டணியை ஒதுக்கிவைத்துவிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கின்ற செயற்பாடுகள் தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வினைப் பெற்றுத்தருமா? என்ற தலைப்பில் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இப்படித் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
அந்த அறிக்கையின் முழு விபரம் வருமாறு:- தமிழர் விடுதலைக் கூட்டணியை ஒதுக்கிவைத்துவிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கின்ற செயற்பாடுகள் தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வினைப் பெற்றுத்தருமா? இந்த கேள்விக்கான விடையை தெரிந்து கொள்ள வேண்டுமானால் சற்று பின்னோக்கி செல்ல வேண்டிய தேவை இருக்கின்றது. தமிழர் விடுதலைக் கூட்டணி வெறுமனே சுயநலத்தையும், பதவிகளையும் மனதில் நிறுத்தி உருவாக்கப்பட்ட ஓர் அரசியல் கட்சியல்ல.
ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்களின் அபிலாசைகளையும் அரசியல் உரிமைகளையும் வென்று எடுப்பதற்காக ஈழத்து காந்தி என்று அனைவராலும் வாஞ்சையுடன் அழைக்கப்பட்ட தந்தை செல்வா, சட்டமாமேதை அமரர் ஜி.ஜி.பொன்னம்பலம், ஆசியாவிலேயே மிகப்பெரிய தொழிற்சங்கங்களில் ஒன்றான இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவராக விளங்கிய மலையகத்தின் விடிவெள்ளி அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஆகியோரால் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்ட அமைப்பு.
மலையக மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டபோது எவ்வாறு தந்தை செல்வா அவர்கள் தமிழரசுக் கட்சியை உருவாக்கினாரோ, அதே போன்று ஒட்டு மொத்த தமிழ் பேசும் மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டபோது, மீண்டும் தந்தை செல்வா அவர்கள் காலத்தின் தேவை கருதி, அரசியல் முரண்பாடுகளை எல்லாம் மறந்து, ஏனைய தமிழ் தலைவர்களை தானே நேரில் சென்று அவர்களை அழைத்து, அவர்களையும் இணைத்து, தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கினார்.
அவருக்கு அன்றிருந்த அரசியல் பலத்திற்கு எவருடனும் கலந்து ஆலோசிக்காமல் எவரையும் இணைத்துக் கொள்ளாமலேயே ஓரு புதிய அமைப்பை உருவாக்கி இருக்கலாம். தமிழ் மக்களும் அமோக ஆதரவினை கொடுத்திருப்பார்கள். ஆனால் அவர் அவ்வாறு செய்யாமல், ஏனைய தலைவர்களையும் அழைத்து, தலைவர்கள் ஒன்றினைந்து செயற்பட்டால்தான் மக்கள் தங்களின் ஒற்றுமையை காட்டுவார்கள் என்ற வழிகாட்டலுக்கமைய செயற்பட்டார். அதில் வெற்றியும் கண்டார்.
அவரின் மறைவிற்கு பின் அதன் வழி வந்த தலைவர்கள் ஒற்றுமையாக செயற்பட்டதன் பலனே, 1977ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி அமோக வெற்றிபெற்று, பிரதான எதிர்கட்சியாகி, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமும், தளபதியுமாகிய அமரர் அமிர்தலிங்கம் அவர்கள் எதிர்க்கட்சி தலைவராக தெரிவானதும் ஆகும்.
இது தமிழர்களுக்கு கிடைத்த முதலும் கடைசியுமான வரலாறு வெற்றியாகும். அதற்கு காரணம் தந்தை செல்வாவினால் ஏற்படுத்தப்பட்ட ஒற்றுமைக்கு கிடைத்த பரிசு. இந்த ஒற்றுமை தொடர்ந்து வந்ததலைவர்களினால் கடைப்பிடிக்கப்படாமையினாலேயே தமிழ் மக்கள் இன்றைய அவல நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். அதன் பின்னர் ஆயதப் போராட்டமும், முறைப்படுத்தப்பட்ட ஒழுங்கமைப்புடன் ஒற்றுமையாக செயற்படுத்தப்படவில்லை.
அதனால் விடுதலை இயக்கங்களும் தங்களுக்குள்ளேயே மோதலை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்கள். இந்த சூழ்நிலையில் தமிழர் விடுதலைக் கூட்டணியும் அதன் தலைவர்களும் இருக்கும் வரை, இணைந்த வடக்கு கிழக்கு மாகாணங்களில், இந்திய முறையிலான ஒரு அரசியல் தீர்வை எப்படியும் பெற்றுக் கொடுத்துவிடுவார்கள், என்பதை தெரிந்து கொண்ட ஒரு சிலர் வஞ்சகமாக செயற்பட்டு தமிழ் இளைஞர்களை ஏவிவிட்டு, தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களை அழிப்பதில் வெற்றி கண்டார்கள்.
அதில் அன்றைய ஆளும் கட்சி அரசியல்வாதிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய தமிழ் மக்களின் தளபதி என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம், தளபதி அமிர்தலிங்கம் படுகொலை செய்யப்பட்டார். இதுதான் சிங்கள தலைமைகளுக்கு கிடைத்த முதல் வெற்றி.
அமிர்தலிங்கம் உயிரோடு இருந்திருந்தால், தமிழர் விடுதலைக் கூட்டணி என்ன இலட்சியத்திற்காக உருவாக்கப்பட்டதோ அந்த இலட்சியத்தை நிச்சயம் அடைந்திருக்கும். அதன் பின்னர் 2000 ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் ஆயுதப் போராட்ட இயக்கங்களுக்கடையில் ஓர் ஒற்றுமை ஏற்படுத்தப்பட்டு முதன் முதலாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு, தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சி;னத்தில் போட்டியிட்டு வெற்றியும் கண்டது.
அந்த ஒற்றுமையின் விளைவாக விடுதலைப் புலிகளுக்கும் அரசுக்குமிடையில் ஒரு சமாதான ஒப்பந்தம் உருவானது. சர்வதேசமும் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்திக் கொண்டிருந்தது. விடுதலைப் புலிகளும் நாட்டில் உள்ள எல்லா இடங்களுக்கும் சென்று வரக்கூடியதாக இருந்தது. இந்த சந்தர்ப்பத்தில் விடுதலைப் புலிகளை ஏகப்பிரதிநிதிகளாக ஏற்றுக் கொள்ளவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
ஒரு ஜனநாயக நாட்டில் ஏகப்பிரதிநிதி என்கின்ற செயற்பாடு, சர்வாதிகாரத்திற்கு வழிவகுத்துவிடும் என்பதால், தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகித்த தமிழர் விடுதலைக் கூட்டணி அதனை ஏற்றுக்கொள்ளாமல், ஜனநாயக நெறிமுறைகளுக்கு உட்பட்டு விடுதலைப் புலிகளுக்கு உந்து சக்தியாக இருந்து இனப்பிரச்சினைக்கு ஓரு நிலையான இந்திய முறையிலான ஒரு தீர்வினை பெற்றுத்தர உறுதியாக செயற்பட்டது. |
04 Jun 2014 http://www.lankaroad.net/index.php?subaction=showfull&id=1401870845&archive=&start_from=&ucat=1&
| தென்னாபிரிக்க மத்தியஸ்தத்துடன் பேச்சு சாத்தியம் |
இலங்கைப் பிரச்சினை தொடர்பில் தென்னாபிரிக்க மத்தியஸ்தத்துடன் இலங்கை அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் பேச்சு இடம்பெறுவதற்கான சாத்தியம் உள்ளது. இவ்வாறு பேச்சு நடைபெற்றால் அதன்போது தீர்வுத்திட்டம் ஒன்றைத் தயாரித்துச் சமரப்பிப்தற்கு கூட்டமைப்பு முடிவுசெய்துள்ளது. இந்தத் தீர்வுத்திட்டத்தில் உள்ளடக்கப்படவேண்டிய விடையங்கள் குறித்து மக்களின் கருத்தறியக் கூட்டமைப்பு திட்மிட்டுள்ளது.
எனவே இந்த மாத இறுதிக்குள், பொது மக்கள்,பொது அமைப்புக்கள், புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் தத்தமது கருத்துக்களைக் கூட்டமைப்பினரிடம் சமர்ப்பிக்கமுடியும். - இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரன். இன்று முற்பகல், அச்சுவேலியில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளை அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே அவர் இந்த அறிவிப்பை விடுத்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, இலங்கையில் நீண்டகாலமாகத் தெடரும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் பல்வேறு முயற்சிகளை நாம் முன்னெடுத்தோம்.
அவை காலத்துக்கு காலம் இலங்கை அரச தரப்பால் நிராகரிக்கப்பட்டும், தவறாக அர்த்தப்படுத்தப்பட்டும் பார்க்கப்பட்டதால் இழுபறியாகவே அவை முடிவடைந்தன. தற்போது தென்னாபிரிக்க அரசின் மத்தியஸ்தத்துடன் இலங்கை அரசுக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான பேச்சுக்கள் நடைபெறுவதற்கான ஏதுக்கள் தோன்றியுள்ளன. இதன்போது எல்லாத் தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ்மக்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணக்கூடியதாக தீர்வுத் திட்டம் ஒன்றைத் தயாரித்து வழங்க நாம் திட்டமிட்டுள்ளோம்.
கடந்த 2011 ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் சமர்ப்பிக்கப்பட்ட தீர்வுத் திட்டம் தொடர்பில் விமர்சனங்கள் எழுந்தன. அவற்றைத் தவிர்க்கும் வகையில் நாம் இப்போது தயாரிக்கவுள்ள தீர்வுத் திட்டத்தில் அனைத் தரப்பினரும் கருத்துக்களை உள்ளவாங்கத் திட்டமிட்டுள்ளோம்.
எனவே, பொதுமக்கள், பொது அமைப்புக்கள் வெளிநாடுகளிலுள்ள புலம்பெயர் அமைப்புக்கள் தமது கருத்துக்களை இந்த மாத இறுதிக்குள் எம்மிடம் சமர்ப்பிக்க வேண்டுகிறோம். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அச்சுவேலிக்கிளையிலும், மார்ட்டின் வீதியிலுள்ள தலைமையகத்திலும் அபிப்பிராயங்களைச் சமர்ப்பிக்க முடியும். புலம் பெயர் அமைப்புக்கள் tnaproposal@gmail.com என்ற மின்னஞ்சலி ஊடாக கருத்துக்களை அனுப்பிவைக்க முடியும் - என்றார். |
04 Jun 2014
http://www.lankaroad.net/index.php?subaction=showfull&id=1401871106&archive=&start_from=&ucat=1& |
|
Geen opmerkingen:
Een reactie posten