தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 16 maart 2015

தமிழ் அரசியல் தலைமைகளால் தமிழ் மக்களுக்கு கவலை



[ வலம்புரி ]
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வருகை தந்த போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கொழும்பில் சந்தித்துப் பேசினார். கூட்டமைப்புக்கு அறிவுரை கூறுவதாக அந்த சந்திப்பு நடந்தது.
பிரதமர் மோடியின் அறிவுரை, தமிழ் அரசியல் தலைமைகள் குறித்த இந்தியாவின் கணிப்பீடு அல்லது மதிப்பீடு ஆரோக்கியமானதாக இல்லை என்பது தெரியவருகிறது.
அதாவது, தமிழ் அரசியல் தலைமைகள் தமிழ் மக்களைத் தவறான பாதையில் வழிப்படுத்துகின்றன. எதற்கு எடுத்தாலும் அவசரத் தன்மை உடன்பட்டு செல்கின்ற மனநிலை அறவே இல்லாமை என்ற முடிவுகளையே பிரதமர் மோடியின் அறிவுரை சுட்டிக்காட்டி நிற்கிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பிரதமர் மோடி கூறிய அறிவுரைகளை வைத்துப் பார்க்கும் போது இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் மிகத் தெளிவாகப் பிரச்சினைகளை அறிந்துள்ளது. அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் நகர்வுகளை மிகத் துல்லியமாகப் படம் பிடித்துள்ளது என்பது தெளிவாகிறது.
எனவே, மோடியின் அறிவுரை என்பதில் இருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஓர் உண்மையை அறிந்திருக்க வேண்டும்.
அதாவது, தமிழ் அரசியல் தலைமைகள் புத்திசாலித்தனமாக-இராஜதந்திரத்தோடு செயற்படுவதில்லை என்ற கருத்தை உலக நாடுகள் கொண்டுள்ளன. இதன் பிரதிபலிப்பாக பிரதமர் மோடியின் அறிவுரையைக் கருதிக் கொள்ள முடியும்.
பாதிக்கப்பட்ட உரிமை கிடைக்கவேண்டிய உயிரிழப்புகளைச் சந்தித்த ஓர் இனம் மீது உலகம் இரக்கமும் அனுதாபமும் கொள்வதே வழமை. ஆனால், ஈழத்தமிழ் மக்களைப் பொறுத்தவரை உலக நாடுகளின் நிலைமை அதுவன்று.
மாறாக, நீங்கள் முதலில் நிதானமாக இருங்கள் என்பதே உலக நாடுகளின் போதனையாக உள்ளது. இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணை அறிக்கையை ஐ.நா பிற்போட்டமை தொடர்பில் நடந்த ஆர்ப்பாட்டங்கள், மைத்திரியின் அரசுக்குச் சந்தர்ப்பம் கொடுக்காமல் வடக்கு மாகாணசபை நிறைவேற்றிய தீர்மானங்கள் என்பன தமிழர்கள் குறித்து தப்பான அபிப்பிராயங்களை ஏற்படுத்தி இருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகின்றது.
அதேநேரம் வடக்கு மாகாண சபையில் ஆட்சித் தரப்பில் இருப்பவர்களே ஒருவருக்கு ஒருவர் முரண்பட்டுக் கொள்வது, செங்கோலை உடைப்பது போன்ற ஆவேசத்தனங்கள் தமிழ் மக்களுக்கு ஆட்சி செய்யத் தெரியாது என்றொரு கணிப்பையும் சர்வதேச மட்டத்தில் ஏற்படுத்தும்.
இத்தகையதொரு கணிப்பின் முடிவு எங்களை தவறாகக் கருத வைக்கும் என்பதால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதன் உறுப்பினர்கள் நிதானமாக நடந்து கொள்வது அவசியம்.
மிக மோசமான இனப்போரில் எல்லாவற்றையையும் இழந்து - பறிகொடுத்து ஏதிலிகளாக இருக்கும் தமிழர்களின் எதிர்காலம் என்பதை தகுதியான அரசியல் தலைமையால் மட்டுமே தீர்மானிக்க முடியும்.
ஆக, மோடியின் சந்திப்புக்குப் பின்பாயினும் ஒரு பலமான அரசியல் தளத்தை கூட்டமைப்பு அமைத்துக் கொள்வது அவசியம். இல்லையேல் தமிழ் அரசியல் தலைமை குறித்த தமிழ் மக்களின் கவலை கடுமைப்படுவது தவிர்க்க முடியாது.
http://www.tamilwin.com/show-RUmtyDSaSUloyE.html

Geen opmerkingen:

Een reactie posten