இந்நிலையில் இன்றைய தினம் குறித்த பகுதிக்கு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
அத்துடன் அங்குள்ள மக்களுடன் கலந்துபேசி மக்களுடைய குறை நிறைகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டுள்ளதுடன், குறித்த பகுதியின் நிலைமைகளையும் பார்வையிட்டுள்ளார்.
இன்றைய தினம் பிற்பகல் 2.30 மணிக்கு குறித்த பகுதிக்கு வடமாகாண அவைத்தலைவர் சீ.வி. கே.சிவஞானத்துடன் விஜயம் செய்திருந்த முதலமைச்சர், அங்குள்ள மக்களுடைய நிலைமைகள் தொடர்பாக ஒட்டகப்புலம் தேவாலயத்தில் மக்களையும், கிறிஸ்தவ மத தலைவர்களையும் சந்தித்து பேசினார்.
இதன்போது மேற்படி பகுதியில் 197.76 ஏக்கர் நிலம் விடுவிக்கப்படுவதாக கூறப்பட்டபோதும் அந்தளவு நிலம் விடுவிக்கப்படவில்லை என குற்றம்சாட்டிய மக்கள்,
தற்போது விடுவிக்கப்பட்டுள்ள 30 ஏக்கர் வரையிலான 22 குடும்பங்களுக்குச் சொந்தமான நிலம் மற்றும் விவசாய காணிகள் தவிர்ந்த வீடுகள், பாடசாலைகள், வைத்தியசாலைகள், தேவாலயங்கள் போன்றன தொடர்ந்தும் படையினர் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதாக சுட்டிக்காட்டினர்.
இதனால் கடந்த 25வருடங்களாக தொடர்ந்த அவல நிலை மீண்டும் தொடரும் நிலைக்குள் தாங்கள் தள்ளப்பட்டிருப்பதாகவும் மக்கள் கண்ணீருடன் முதலமைச்சருக்கு கூறியிருந்தனர்.
இந்நிலையில் இங்கு கருத்து தெரிவித்த முதலமைச்சர் இந்த விடயத்தை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுப்பேன் எனவும், மீள்குடியேற்ற விடயத்தில் அரசாங்கத்தின் பார்வையும், படையினரின் பார்வையும் வேறு, வேறாக உள்ளதா? என்ற சந்தேகம் தமக்கு உள்ளதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.
மேலும் மக்கள் தொடர்ந்து முதலமைச்சரிடம் பேசுகையில்,
2012ம் ஆண்டு படையினரின் கண்காணிப்புடன் நாங்கள் எங்கள் ஊர்களுக்கு வந்திருந்தோம், தேவாலயங்களில் வழிபாடுகளை நடத்தியிருந்தோம். அப்போது நாங்கள் சுதந்திரமாக நடமாடிய இடங்களில் தற்போது கண்ணி வெடிகள் உள்ளதாக படையினர் கூறுகின்றனர்.
மேலும் அப்போது இருந்த தங்களுடைய பல வீடுகள் இப்போது உடைக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.
இந்தப் பகுதியில் தாம் 266 குடும்பங்கள் மீள்குடியேற கேட்டிருந்த நிலையில் 22 குடும்பங்களுக்கு மட்டுமே காணிகளை விடுவித்து விட்டு வசாவிளான் பகுதியில் மீள்குடியேற்றம் பூர்த்தி என அரசாங்கம் கூற நினைப்பதாகவும் குற்றம்சாட்டிய மக்கள்,
தந்தை செல்வநாயம் தமிழ் மக்களை இனிமேல் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும். என கூறினார். வடமாகாண சபைத் தேர்தலின் போது அந்தக் கடவுளாக உங்களையே காண்பித்தார்கள். நாங்கள் உங்களை கடவுளாக பார்க்கிறோம் எங்கள் காணிகளை மீட்டுக் கொடுங்கள் என மக்கள் உருக்கமாக கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmtyDRWSUls0J.html
Geen opmerkingen:
Een reactie posten