ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள் இது அனுபவபூர்வமான வார்த்தை அரசியலிலும் இது மிக முக்கியமானது.' இவர் எங்களுடையவர் " என்ற ஈர்ப்பை ஆடைகளால் உருவாக்க முடியும்
தமிழ் அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை ஜி.ஜி. தந்தை செல்வா, தொண்டமான், அமிர்தலிங்கம், சம்பந்தன், சிவசிதம்பரம், ராஜதுரை விக்னேஸ்வரன் போன்ற எவரைக் குறிப்பிட்டாலும் உடனே நினைவுக்கு வருவது தேசிய உடையிலான தோற்றம் தான்.
sinnaththambipa@gmail.com
பிறநாட்டவர்களுடனான சந்திப்பு அல்லது வெளிநாட்டுப் பயணம் என்றால் மட்டுமே இவர்கள் பொதுவாக கோர்ட் ரை எனக் காட்சியளிப்பர். இதனையே டக்ளசும் பின்பற்றுகிறார்.
ஆனால் முதலமைச்சர் பதவியேற்ற புதிதில் கோர்ட் ரைக்குள் தன்னைத் திணித்து இல்லாத ஒரு இமேஜை உருவாக்க முனைந்த பிள்ளையான் பின்னர் அதிலிருந்து படிப்படியாக மீண்டார்.
தமிழ் மக்களிடம் நெருங்கிப்பழக இந்த ஆசைகள் தடையாக இருக்கும்.
ஐ.தே.க வின் தொடர்ச்சியான தோல்விக்கான காரணங்களுள் ரணிலின் உடையும் முக்கியமானது என்பதை அவரது நலம் நாடும் எவரும் புரிந்து கொள்ளவில்லை.
ஒரு சமயம் மகிந்தவும் ரணிலும் விகாரையொன்றுக்கு செல்கையில் மகிந்த சிங்களவரின் தேசிய உடையிலும் ரணில் நீளக் காச்சட்டையுடனும் காட்சியளித்தனர். இது பௌத்த உணர்வு கொண்ட சிங்களவரின் மனதில் எத்தகைய விளைவை ஏற்படுத்தி இருக்கும் என்பதை விபரிக்கத் தேவையில்லை.
தனது தாயாரின் மரணச் சடங்கின் போது கூட அவர் அந்த நீளக்காச்சட்டையை மாற்றி சிங்களவராகத் தோற்றமளிக்க முடியவில்லை. ஆனால் மகிந்தவோ இந்த மாதிரி விடயங்களில் வெகு ஜாக்கிரதையாக இருப்பார்.
ஒரு சமயம் மீனவர்களின் போராட்டம் ஒன்று நடைபெற்றது. சம்பவ இடத்துக்கு உடனே விரைந்த மகிந்த அப்போது கட்டியிருந்த சாறத்துடனேயே சென்றார்.வாக்குறுதிகளை வழங்கினாலும் அவரது அந்த ஆடையே அவர்களின் முடிவினை மாற்றப் போதுமானதாக இருந்திருக்கும்.
காலை உடற்பயிற்சிக்கு ஒரு வகை, பௌத்த விகாரை மற்றும் பொது வைபவங்களுக்குத் தேசிய உடை என ஒவ்வொரு கோலம் பூணுவார். அதனால் தான் பௌத்த சிங்களவர்களின் கதாநாயகனாக இன்னமும் அவரால் திகழமுடிகிறது.
இளைய தலைமுறையினரான சஜித்.- நாமல் கூட இந்த விடயங்களில் அக்கறையாக இருக்கும் போது ரணிலுக்கு இன்னமும் யதார்த்தம் புரியவில்லை.
பிரேமதாஸ உடை விடயத்தில் மட்டுமல்ல, மக்கள் சந்திப்பிலும் மிகவும் அக்கறையானவர்.அவரது முதலாவது சந்திப்பு அதிகாலை 4 மணிக்காக இருக்கும். இவ்வாறான செயற்பாடுகள் மக்கள் கவனத்தை ஈர்க்கும்.
4 மணிக்கு சந்திப்பென்றால் எத்தனை மணிக்குக் குறித்து ஆயத்தமாக வேண்டும் என்று வந்தவர் சிந்திப்பார். தந்தையைப் போலவே சஜித்தும் மக்கள் சந்திப்பில் மிகவும் அக்கறை காட்டுகிறார். ஆனால் ரணிலோ பாராளுமன்றில் ஜனாதிபதி சிறிசேன இருக்கும் போதே காணாமற்போய்விட்டார்.
சொலமன் ஆர்.டயஸ் பண்டாரநாயக்கா-- ரிச்சர் ஜீனியஸ் ஜெயவர்த்தனா என பெயரிலேயே கிறிஸ்தவராக இருந்தும் இருவரும் பௌத்த சிங்களவராகத் தம்மைக் காட்டிக் கொள்ள எவ்வளவு அக்கறை எடுத்தனர் என்பதை சற்றுச் சிந்தித்துப் பார்த்திருந்தால் தனது நடை உடையை மாற்றி சிங்களவர் மனதில் இடம்பிடிக்க சிறு முயற்சியாவது எடுத்திருப்பார் ரணில்.
இந்த வகையில் தமிழர் தரப்பில் நடந்த ஒரு சம்பவத்தையும் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது. தமிழ் இளைஞர் பேரவையைச் சேர்ந்த இறைகுமாரன்- உமைகுமாரன் ஆகிய இருவரும் புலிகளின் ஆதரவாளர்கள்.
அளவெட்டியைச் சேர்ந்த இவர்கள் ஓரிரவில் சந்ததியார் தலைமையில் வந்த புளொட் குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டு கொல்லப்பட்டனர். அளவெட்டியில் இவர்களைப் படுகொலை செய்த அதே புளொட், மட்டக்களப்பு நகர மண்டபத்தில் அஞ்சலிக் கூட்டமும் நடத்தினர்.
திரு யோகன் கண்ணமுத்து தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பிரதம பேச்சாளர் இரா.வாசுதேவா தனது உரையில், இப்படுகொலைகளுக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியே காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் சினமுற்ற அமிர்தலிங்கம் சுட்டவர்களே அஞ்சலி செலுத்துகின்றனர் எனப் பதிலளித்தார்.இறைகுமாரன்--உமைகுமாரனின் மரணத்துக்குக் காரணமாக இருந்த சந்ததியார் பின்னாளில் புளொட் இயக்கத்தினராலேயே காணாமற் போகச் செய்யப்பட்டார்.
ஒரு இணையத்தளம் ஜெசிக்கா விஜய் சுப்பர் சிங்கரில் பாடிய பாடல் புலிகளால் தடை செய்யப்பட்டிருந்தது என்று ஜனநாயகக் கண்ணீர் விடுகிறது.
எப்போது இவர்கள் புலிகளின் தணிக்கைக் குழுவில் இடம்பெற்றிருந்தனர் என்பது எந்தத் தமிழருக்கும் புரியாத விடயம்.
ஏனெனில் நாட்டில் எவருமே அறிந்திராத விடயத்தைக் கூறுவதென்றால் இவர்கள் கனவு கண்டிருக்க வேண்டும். அல்லது புலிகளின் இரகசிய தணிக்கைக் குழு அதிகாரிகளாக இருக்க வேண்டும்.
வித்தியாதரனோ மாவீரர் நாளுக்கான உரைக்கான 'இன் புட்" வழங்க தனக்கு சந்தர்ப்பம் கிடைக்காமல் போனதில்லை ( என் எழுத்தாயுதம் புத்தகம்) என்கிறார். இப்போ யார் புலி, யார் பொதுமக்கள், யார் ஜனநாயகவாதி என்பதே புரியாமல் போய்விட்டது.
ஆடை பற்றிய விடயத்தைக் கூறப்போய் வேறு விடயங்களுக்குப் போய் விட்டதாகக் கருதலாம்.
இறைகுமாரன்- உமைகுமாரன் இருவரும் தமிழ் இளைஞர் பேரவையினர் என்ற வகையில் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலதிபருமான அமிர்தலிங்கத்தின் துணைவியார் மங்கையர்க்கரசிக்கும் பழக்கமானவர்கள்.
ஏற்கனவே திட்டமிட்டபடி ஒரு திருமண வைபவத்திற்குச் சென்றிருந்தார். திருமதி மங்கையர்க்கரசி அங்கு வைத்தே இவர்களின் அகாலச் சாவு பற்றி அறிந்திருக்கிறார் போலிருக்கிறது.
அதனால் நிதானமிழந்தோ பதட்டத்திலோ என்னவோ திருமண வைபவத்திற்கான உடையுடன் அப்படியே மரண வைபவத்திற்குச் சென்றுவிட்டார்.
அங்கிருந்தோருக்கு அதிர்ச்சி. என்ன தான் எதிர்க்கட்சித் தலைவரின் துணைவியார் என்றாலும் திருமண வைபவத்துக்கான ஆடையலங்காரத்துடனா வருவது என்று அங்குள்ள பெண்களுக்கெல்லாம் அதிர்ச்சி.
ஏற்கனவே மாவட்ட அபிவிருத்திச் சபையை ஏற்றமை தொடர்பாக தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைமையுடன் முரண்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் இவர்களின் மரணச் சடங்குக்கு இவர் போன கோலம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அதுவும் அளவெட்டி என்பது தமிழரசுக் கட்சியின் தமிழ்த் தேசியத்தின் கோட்டையாக விளங்கியது.
அங்கு இப்படி ஒரு சம்பவம் என்றால் எப்படியிருந்திருக்கும். திருமதி அமிர்தலிங்கம் கொஞ்சம் நிதானித்து சாதாரண ஒரு சேலையுடன் சென்றிருந்தால் எந்தச் சலசலப்புக்கும் இடமளித்திருக்காது.
எனவே ஆடை என்பது அரசியலில் எவ்வளவு முக்கியத்துவமானது என்ன விளைவுகளை ஏற்படுத்தவல்லது என்பதை அரசியல்வாதிகள் உணர வேண்டும்.
தயாளன்sinnaththambipa@gmail.com
http://www.tamilwin.com/show-RUmtyDRWSUls1B.html
Geen opmerkingen:
Een reactie posten