[ புதன்கிழமை, 18 மார்ச் 2015, 06:11.11 AM GMT ]
இலங்கை தமிழ் ஊடகவியலாளர்கள் சங்கத்தினால் நேற்று கொழும்பில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் இதுதொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில் ,
இதுதொடர்பாக நான் கடந்த காலத்தில் பல்வேறு முயற்சிகளை எடுத்திருந்தேன். அத்துடன் தற்போதும் தமிழ்த் தலைவர்கள் அவ்விடயத்தை முன்னெடுக்கவேண்டும் எனக்கோருகின்றேன். குறிப்பாக தமிழர்கள் செறிவாக வாழும் எட்டு மாவட்டங்களில் உள்ள அரசியல் பிரதிநிதிகள் ஒன்றுபடவேண்டியது மிக முக்கியமானதாகும். அனைத்து தமிழ் தரப்புக்களும் ஒன்றுபட்டு ஒரு காத்திரமான பலமிக்க அரசியல் கட்சியாக இருப்பது சிங்கள அரசியல் சக்திகளுக்கு அச்சத்தை ஏற்படுத்துவதாக அமைந்து விடும்.
அவ்வாறு இல்லாமல் பிரிந்து தனித்தனியாக செயற்படுவதென்பது எமது எதிர்காலத்தை பலவீனப்படுத்துவதாக அமைந்து விடும். ஆகவே அரசியல் கட்சியாக பதிவு செய்வது என்பது மிகவும் முக்கியவிடயமொன்று என்பதுடன் இவ்விடயத்தை வலியுறுத்தியும் இச்சிந்தனையை வலுப்படுத்தியும் ஊடகவியலாளர்கள் செயற்படவேண்டும் என்றார்.
தமிழ் மக்கள் யார்? அவர்கள் என்ன விடயத்திற்கான போராடுகின்றார்கள். அவர்களின் வரலாற்றுப் பின்னணி என்ன? அவர்களின் மொழியின் செழுமை என்ன? போன்ற விடயங்களை சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு செல்லவேண்டும்.
இவ்வாறான விடயங்களை சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு செல்ல ஊடகமொன்று இல்லை. அவ்வாறான ஊடகமொன்று உருவாக்கப்பட்டு சிங்கள மக்கள் மத்தியில் நல்ல கருத்துக்கள் கொண்டு செல்லப்படவேண்டும் அதற்கான கருமங்களை ஊடகவியலாளர்கள் முன்னெடுக்க வேண்டும்.
தமிழர்கள் விடயத்தில் அறியாமையில் இருப்பவர்களை வெளிச்சத்திற்கு கொண்டுவரவேண்டும். சுதந்திரமடைந்த காலம் முதல் தற்போழுது வரையில் தமிழ் மக்களை குழித்தோண்டி புதைக்க வேண்டும் என்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. தமிழர்களின் உரிமைக்கான போராட்டத்தில் தமது உயிரைக் கூட தியாகம் செய்யுமளவிற்கு துணிந்து உயிரைப் பணயம் வைத்தவர்கள் ஊடகவியாளர்கள் ஆவர்.
அவர்களின் தியாகம் தமிழ் மக்களால் என்றும் மறக்கமுடியாதவொரு விடயமாகும். ஆயுதமேந்திப்போராடியவர்கள் ஒருபுறமிருக்க, மறுபுறத்தில் பேனாமுனையால் ஊடகவியலாளர்கள் போராடினார்கள். தமிழ் மொழி என்பது செம்மொழியாகும். இவ்வுலகத்தில் தமிழ் மொழிக்குரிய சிறப்பை சீன மொழி மட்டுமே கொண்டிருக்கின்றது.
அதேநேரம் சமஸ்கிரதம் போன்ற பல பண்டைய மொழிகள் காலப்போக்கில் மருகி வருகின்றன. இருப்பினும் தமிழ் மொழியானது இன்னமும் தன்மை அழியாது செழுமையுடன் இருக்கின்றது. அதற்காக தலைநகரில் ஒரு சங்கம் அமைத்து செயற்பாடுகளை முன்னெடுப்பது மிகச் சிறப்பானதொரு செயற்பாடாகும். அதேநேரம் முஸ்லிம் சமூகத்தினரும் தமிழ் மொழியை வளர்ப்பதில் பங்காளர்களாக இருக்கின்றார்கள்.
ஆகவே தமிழ் மொழியை பாதுகாத்து வளர்க்கும் செயற்பாடுகளில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும். தமிழர்கள் எங்கெல்லாம் இருக்கின்றார்களோ அங்கெல்லாம் அனைவரும் ஒன்றிணைந்து தமிழ் மொழியை வளர்ப்பதில் ஈடுப்படாக இருக்கவேண்டும். இதற்காக ஊடகவியலாளர்கள் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும்.
தமிழர்கள் சிதறடிக்கப்பட்டுள்ளார்கள்.எமக்குள் சாதி, மதம், சமூகம் என பல பிரிவினைகள் காணப்படுகின்றன. அவை அனைத்தையும் கைவிட்டு, அனைத்து மக்களும் ஒன்றுபடவேண்டும். மனிதர்களை மனிதர்கள் மதிக்க வேண்டும். எல்லா சமூகங்களும் ஒற்றுமையாக இருக்கவேண்டும். அதனை விடுத்து உரிமைக்காக போராடுவதில் எந்தவிதமான பலனுமில்லை.
ஆகவே பிரிவினைகளை நோக்கிய பயணத்தில் பழமைவாய்ந்த சிந்தனைகள் அனைத்தும் தோற்கடிக்கப்படவேண்டும். புதிய சிந்தனைகள் அடித்தளமிட்டு கட்டியெழுப்பப்படவேண்டும். இச்செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை தமிழ் ஊடகங்கள் முன்னெடுக்க வேண்டும்.
தமிழ் மக்கள் சிறுபான்மை இனமல்ல. அவ்வாறு கூறப்படுவதை ஏற்றுக்கொள்ளவும் முடியாது. அது தவறானதாகும். 1995ஆம் ஆண்டு சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதியாக பதவிக்கு வந்தபோது அவரின் முன்னோர்கள் விட்டதவறுகளை விடவேண்டாம் என்ற கோரிக்கையை விடுக்கும் கடிதமொன்றை எழுதியிருந்தேன்.
அதேநேரம் நாம் வரலாற்று ரீதியான ஒரு இனம். எங்களுக்கென்று தனியான அடையாளங்கள் இருக்கின்றன. ஆகவே நாம் தேசிய இனம் என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதை அக்கடிதத்தில் வலியுறுத்தியிருந்தேன். இருப்பினும் அவ்விடயங்கள் தொடர்பில் கூடியளவில் கவனம் கொள்ளப்பட்டிருக்கவில்லை. போர் முன்னெடுக்கப்பட்டதில் முதற்கட்டமாக கொல்லப்பட்டதும், புதைக்கப்பட்டதும் உண்மையே ஆகும்.
உண்மை என்பது ஒளியாகும். அதன் பிரகாரம் பயணிப்பவராலேயே நேராக செல்லமுடியும். இல்லையேல் குறுகிய வட்டத்திற்குள்ளே மீண்டும் மீண்டும் சுற்றவேண்டியிருக்கும். யுத்தத்தின் போது இடம்பெயர்ந்து வந்திருந்த மக்கள் மீது குண்டுகள் விழுந்ததுடன், அவ்விடத்தில் பாரிய கிடங்குகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.
அவ்விடத்திற்கு நானே முதலில் சென்றிருந்தேன். அதன்போது பாதுகாப்பு தரப்பின் ஊடகத்தில் புலிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுவிட்டதாகவும் ஆயுதக்கிடங்கு தாக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுக்கொண்டிருந்தது. அத்தருணத்தில் முன்னாள் ஜனாதிபதிக்கு கடிதமொன்றை எழுதியிருந்தேன்.
நாட்டின் தலைவராக மக்களுக்கு வழிகாட்டவேண்டிய உங்களை, அருகில் இருப்பவர்களும், உதவியாளர்களும்தான் இருளில் வைத்திருப்பதாக குறிப்பிட்டிருந்தேன். அத்துடன் யதார்த்த நிலைமைகள் தொடர்பில் தங்களுடைய ஊழியர்கள் பணியாற்றிக் கொண்டிருப்பதால் அவர்கள் மூலம் உண்மையை அறிந்துகொள்ள முடியும் எனவும் வலியுறுத்தினேன்.
தமிழ் மக்களை கொன்று குவிக்கும் போர் வேண்டாம். ஒரு சமாதான நிலைமை ஏற்படுத்தப்படவேண்டும் என வெளிநாடுகளிடம் கோரினோம். பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என கோரினோம். குறிப்பாக நோர்வே பிரதமரிடம் வலியுறுத்தினோம். அதனை எழுத்துமூலமாகவும் அனுப்பினோம்.எனவே நோர்வே பிரதமர் இங்கு வருகை தந்து பேச்சுக்கள் மேற்கொள்ளப்பட்டனவே தவிர நடைமுறைப்படுத்தப்படவில்லை.
எமது அரசியல் கருமங்கள் அனைத்துமே ஏமாற்றப்பட்டதொரு நிலைமையாகவே இருந்து வந்துள்ளது. இவ்வாறான நிலைமைகள் மாறவேண்டும். தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கவேண்டும் என்ற அடிப்படையிலேயே தமிழ் மக்களும், சிங்கள மக்களும், ஒன்றிணைந்து தேசிய அரசாங்கம் ஒன்று உருவாக்கவேண்டும் என விரும்பினோம்.
அதன் அடிப்படையிலேயே புதிய அரசாங்கம் அமைந்தது. ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் தமிழ் மக்களுக்கு உரிமைகள் காணப்படுகின்றன என குறிப்பிடுகின்றார். ஆனால் அது இங்கு இல்லை தமிழ் நாட்டிலேயே உள்ளது எனக் கூறுகின்றார்.
அமெரிக்காவில் வெள்ளையர்களை பிரித்தானியாவுக்கு செல்லுமாறு கூறமுடியுமா? அதேபோன்று அவுஸ்திரேலியாவில் உள்ளவர்களை அயர்லாந்துக்கு செல்லுமாறு கூறமுடியுமா? அவ்வாறு கூறப்பட்டு அவர்கள் சென்றார்களாயின் நீங்கள் கூறுவதை நாம் ஏற்றுக்கொள்ள முடியும். சமயத்தலைவர்கள் பொய்மையை முன்னெடுப்பது தவறானதாகும் எனவும் அவர் அந்த உரையில் மேலும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசனும் கௌரவிருந்தினர்களாக அமைச்சர் திகாம்பரம் மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் மற்றும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும் மாகாண, மாநகர உறுப்பினர்கள் புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்துக் கொண்டிருந்தனர்.
http://www.tamilwin.com/show-RUmtyDScSUlp2C.html
பரணகம ஆணைக்குழுவில் நம்பிக்கையில்லை: சுமந்திரன்
[ புதன்கிழமை, 18 மார்ச் 2015, 07:01.39 AM GMT ]
நாடாளுமன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
காணாமல்போனோர் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்கும் பரணகம ஆணைக்குழு தமது விசாரணை நடவடிக்கைகளை சரியான முறையில் முன்னெடுக்கவில்லை.
பரணகம ஆணைக்குழுவின் சில அமர்வுகளில் நானும் பங்குபற்றினேன். இந்த ஆணைக்குழுவுக்கு பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. ஆனால், சாட்சிகள் பல்வேறு விதமான முறையில் அழைக்கப்படுகின்றனர்.
சாட்சிகளாக அழைக்கப்படுபவர்களிடம் ஆணைக்குழு தலையிட்டு கோழி, ஆடு தருகின்றோம் என்று கூறுகின்றது. "ஆடு, கோழி வேண்டாம். எமக்கு எமது பிள்ளைகளை மீட்டுத் தாருங்கள்'' என்று பல தாய்மார்கள் இதன்போது கூறினர்.
இதுபோன்ற சம்பவங்கள் இந்த ஆணைக்குழு விசாரணையில் இடம்பெற்றுள்ளன. இது ஒரு பாரிய விடயமாகும். இதனால் இந்த ஆணைக்குழுவின் விசாரணைகளில் எமக்கு நம்பிக்கை இல்லை. இவ்வாறான நிலையில், இந்த ஆணைக்குழுவின் பணிகள் மேலும் விஸ்தரிக்கப்பட்டுள்ளன.
இந்த ஆணைக்குழு மட்டுமன்றி, அதற்கு ஆலோசனை வழங்க நியமிக்கப்பட்டுள்ள டெஸ்மன் டி சில்வா தலைமையிலான சர்வதேச ஆலோசனைக் குழு மீதும் எமக்கு நம்பிக்கை இல்லை.
எனவே, இப்படியான விசாரணை தொடரக்கூடாது. இவ்வாறான நிலையில், சர்வதேச விசாரணை அறிக்கையை பிற்போடுமாறும், உள்ளக விசாரணை முன்னெடுக்கப்படும் என்றும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிடம் இலங்கை அரசு எழுத்துமூலம் கோரிக்கை விடுத்து உறுதியளித்துள்ளது.
பரணகம ஆணைக்குழு மற்றும் அதன் விசாரணை நடவடிக்கைகளில் எமக்கு நம்பிக்கை இல்லை. இந்தத் தவறான முறைக்கு இடமளிக்க முடியாது.
எனவே, சர்வதேச மேற்பார்வையுடன் புதிய பொறிமுறை ஊடாக இந்த உள்ளக விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும். அதைவிடுத்து, தவறான பாதையில் அரசு பயணிக்குமானால், மஹிந்த அரசுக்கு ஏற்பட்ட நிலைமையே இதற்கும் ஏற்படும்.
அதைக் காண நாம் விரும்பவில்லை. உண்மைகள் வெளிக்கொண்டுவரப்பட வேண்டும். அப்போதுதான் பிரச்சினைகளைத் தீர்த்து நாட்டை ஐக்கியப்படுத்தி பாதுகாக்க முடியும் எனத் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyDScSUlp2H.html
மகிந்தவை பிரதமராக்க சுதந்திரக்கட்சியினர் தயாரில்லை: ஜனாதிபதி
[ புதன்கிழமை, 18 மார்ச் 2015, 07:09.37 AM GMT ]
மத்திய மாகாண முதலமைச்சர் பதவியில் இருந்து சரத் ஏக்கநாயக்கவை நீக்க வேண்டும் என மாகாண சபையில் அங்கம் வகிக்கும் பெரும்பான்மையான உறுப்பினர்கள் கோரி வருகின்றனர்.
மாகாண சபையில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு தனக்கிருப்பதாக சத்திய கடிதங்களை சமர்பித்துள்ள திலின பண்டார தென்னகோனை முதலமைச்சராக நியமிக்க வேண்டும் எனவும் உறுப்பினர்கள் ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனினும் அந்த கோரிக்கையை நிராகரித்துள்ள ஆளுநர், ஜனாதிபதியின் சார்பில் பணியாற்றவே தன்னை தான் ஆளுநர் பதவியில் நியமிக்கப்பட்டுளளதாகவும் மாகாண சபை உறுப்பினர்களின் கோரிக்கையை நிறைவேற்ற தான் அந்த பதவியில் அமர்த்தப்படவில்லை எனவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் என்ன கூறினாலும் தற்போதைய முதலமைச்சரை பதவி நீக்கம் செய்வது குறித்து ஜனாதிபதியை சந்தித்து பேச்சு நடத்த உள்ளதாகவும் முதலமைச்சரை பதவியில் இருந்து நீக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க போவதாகவும் திலின பண்டார தென்னகோன் கூறியுள்ளார்.
இதனிடையே, கொழும்பில் இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களின் சந்திப்பில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தன்னை கட்சியின் தலைவர் என்ற முறையில் செயற்படவிடாத சக்தி பற்றி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த சுதந்திரக்கட்சியில் எவரும் தயாரில்லை எனவும் அந்த கோரிக்கைக்கு பின்னால் இருக்கும் சக்தி எது என்பதை அடையாளம் காண வேண்டும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDScSUlp2I.html
காணிகளை சுவீகரிப்பது நீதித்துறையை அவமதிக்கும் செயல்! சிவசக்தி ஆனந்தன்
[ புதன்கிழமை, 18 மார்ச் 2015, 07:19.33 AM GMT ]
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
புதுக்குடியிருப்பில் இராணுவத்தின் 682ஆவது படையணியினர் கையகப்படுத்தியிருந்த காணிகளை அவர்களுக்கே நிரந்தரமாக கையளிப்பதற்கு கிளிநொச்சி மாவட்டச்செயலக காணி சுவீகரிப்பு உத்தியோகத்தர் எம்.எம்.திலகரட்ண ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.
இக்காணிகள் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவினால் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட உறுதிக் காணிகளாகும்.
இறுதி யுத்தத்துக்குப் பின்னர் இவற்றுக்கு உரித்துடைய மக்களை மீளக்குடியேறவிடாது, இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்திருந்தனர். அத்துடன் அவற்றை நிரந்தரமாக சுவீகரிப்பதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டிருந்தமையை அடுத்து காணிகளுக்கு உரித்துடைய மக்கள் கொழும்பு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்திருந்தனர்.
நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் காணிகளை சுவீகரிப்பது சட்டத்துக்கு முரணானதும், நீதித்துறையை அவமதிப்பதுமான செயலாகும். மக்களுக்கு உரித்துடைய காணிகளை ஆக்கிரமிப்பு செய்தமை அடிப்படை மனித உரிமை மீறலாகும்.
மீள்குடியேற்றம், அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் போகச்செய்யப்பட்டோரை கண்டறிதல் பல்வேறு தேவைப்பாடுகளுடன் பொதுமக்கள் காணப்படுகின்றார்கள்.
அவ்வாறான நிலையில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை விடுவிப்பதும் மக்களின் பிரதான பிரச்சினைகளில் மிகமுக்கியமானதாக உள்ளது.
இவ்வாறான நிலையில் அத்தேவைகளுக்கு பிரச்சினைகளுக்கு தீர்வொன்று எட்டப்படும் என்ற நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்தனர். ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தி அதன் பங்களார்களாக தமிழ் மக்கள் இருக்கின்றனர்.
முன்னாள் ஜனாதிபதி ஒருவர் அதிகாரபூர்வமாக வழங்கிய காணி உறுதிகளை இந்நாள் ஜனாதிபதி இரத்து செய்து காணிகளை அபகரிப்பது ஜனநாயகத்துக்கு ஏற்புடையதல்ல.
இவ்விடத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவும், நீதிமன்றமும் அவமதிக்கப்படுகின்றனர். மாற்றத்துக்காக வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்புகள், நம்பிக்கைகள் பொய்த்துப் போய்விடக்கூடாது.
ஆட்சி மாற்றத்தின் பின்னர் புதிய ஜனாதிபதியுடன் நடைபெற்ற முதலாவது சந்திப்பில், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள எமது மக்களின் காணிகளை நூறுநாள் வேலைத்திட்டத்தின் கீழ் அவசரமாக கையளித்து துரிதகதியில் மீள்குடியேற்றம் நடைமுறைப்படுத்தப்பட்டு பூரணப்படுத்தப்படல் வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தோம்.
ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகள் அனைத்தும் எமது மக்கள் வாழ்ந்து வளப்படுத்திய காணிகளாகும். அங்குள்ள வீடுகள் பயன்தரு மரங்கள் உள்ளிட்ட வளங்கள் மிகப்பெறுதிமிக்கவையாகும்.
எனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடக்கு கிழக்கில் பொதுத்தேவைக்கென்ற அடிப்படையில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள எம்மக்களுக்கு உரித்துடைய காணிகளை, அவற்றுக்கு உரித்துடையவர்களிடத்தில் மீளவும் கையளித்து இயல்பு வாழ்க்கையை உறுதிப்படுத்துவதானது நல்லாட்சிக்கான ஒர் உதாரண செயற்பாடாக அமையும் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmtyDScSUlp3A.html
Geen opmerkingen:
Een reactie posten