தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 13 maart 2015

ஒரு மாதத்திற்குள் இலங்கையில் போர்க்குற்ற விசாரணை ஆரம்பமாகும் !

இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்து ஆராய, உள்நாட்டு விசாரணை ஒன்றை இன்னும் சுமார் ஒரு மாதத்தில் அமைக்கலாம் என்று தான் நம்புவதாக, இலங்கையின் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருக்கிறார். லண்டனுக்கு சென்றிருந்த சிறிசேன, ´பிபிசி சந்தேஷியா´விற்கு சிங்கள மொழியில் அளித்த பேட்டியில், இந்த விசாரணை என்பது இலங்கையின் சட்டதிட்டங்களுக்கு அமைய செயல்படும் ஒன்றாக இருக்கும் என்றும், இலங்கையின் அரசியல் சட்ட வரையறைக்குள் இயங்கும் என்றும் கூறினார்.
அந்த விசாரணையில் பணியாற்றும் அதிகாரிகள் சுயேட்சையாகவும், பக்கசார்பற்ற முறையிலும் செயல்படுமாறு கோரப்படுவார்கள் என்றும் அவர் கூறினார். விசாரணையின் முடிவில் தவறிழைத்ததாகக் கண்டறியப்படும் எவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். ஆனால், இந்த விசாரணையில் வெளியார் எவரும் தலையிட அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கூறிய அவர், ஐநா மன்ற வல்லுநர்கள் தெரிவித்த கருத்துக்கள் கணக்கிலெடுத்துக் கொள்ளப்படும் என்றும் கூறினார்.
விசாரணையின்றி தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழர்கள் குறித்து பதிலளித்த சிறிசேன, இவர்கள் பிரச்சனை குறித்து ஆராய்ந்து முடிவெடுக்க ஒரு உயர்மட்டக்குழு நியமிக்கப்பட்டிருப்பதாகவும், அது பரிசீலித்து இவர்கள் விடுதலை செய்யப்படவேண்டுமா அல்லது அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதியப்படவேண்டுமா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று கூறினார். நல்லிணக்கத்தை எட்டும் நோக்கிலான புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கலாம் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக அவர் கூறினார்.

Geen opmerkingen:

Een reactie posten