தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 14 maart 2015

மோடி இலங்கை நோக்கி ஓடி..! அரசியல் மட்டத்தில் பல்வேறு கருத்துக்கள்!



பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு மேற்கொண்டுள்ள உத்தியோகபூர்வ விஜயமானது அரசியல் மட்டத்தில் பல்வேறு கருத்துக்களை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் பத்து ஆண்டுகளாக நீடித்த மகிந்த ராஜபக்சவின் குடும்ப ஆட்சி முடிவிற்கு கொண்டுவரப்பட்டு மைத்திரிபால சிறிசேன தலமையிலான புதிய அரசாங்கம் பதவியேற்ற இந்த சூழலில், பாரதப் பிரதமரின் இலங்கைப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக நோக்கப்படுகின்றது.
இலங்கை ஆட்சி மாற்றம்
கடந்த தை மாதம் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் எதிர்பாராத விதமாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இலங்கை ஆட்சியை பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன பொறுப்பேற்றுக்கொண்டார்.
அன்றிலிருந்து இந்தியாவின் விசுவாச அலைகள் அல்லது இந்தியாவிற்கு சார்பான நிலைப்பாட்டினை ஆட்சியைக் கைப்பற்றிக்கொண்ட அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றமையை அவதானிக்க முடிகின்றது.
தேர்தல் வெற்றியை தொடர்ந்து இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இந்தியாவிற்கு விரைந்ததும், அதற்குப் பின்னர் இலங்கையின் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியா வந்ததும், பின்னர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இலங்கைக்கு பயணம் மேற்கொண்டதும் என்று நோக்குகையில் இலங்கை ஆட்சி அதிகாரத்தினை இந்தியா தான் தீர்மானிக்கின்றதா என்கின்ற கேள்வி எழுகின்றது.
இதற்கு காரணம் இல்லாமலும் இல்லை. தேர்தல் முடிந்த கையோடு சிங்களப் பிரதேசமொன்றில் உரையாற்றிய இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியா 13 சீர்திருத்தத்திற்கு அப்பால் செல்ல வேண்டாம் என்று கூறியதாக தெரிவித்திருக்கும் கருத்து இங்கு நோக்கத்தக்கது.
இவ்வறான சூழமைவில் பாரதப் பிரதமரின் இலங்கை விஜயம் மிகப்பெரிய அரசியல் இராஜதந்திரம் என்று முடிவிற்கு வர முடிகின்றது.
இது தவிர 2015ன் ஆரம்பம் வரை ஆட்சியில் இருந்த மகிந்த தலைமையிலான அரசாங்கம் சீன நிலைப்பாட்டு அரசியலாகவும், முழுக்க முழுக்க சீனாவின் ஆதரவோடும், சீனாவின் வர்த்தக கம்பனிகளின் பெருக்கமும், போர்க்கப்பல்கள், அபிவிருத்தி என்று அத்தனை விடயங்களிலும் சீனாவின் பங்கு இலங்கையில் மேலோங்கியிருந்தது.
புலிகளை வெற்றி கொள்வதற்கு இந்தியாவின் உதவியினை இலங்கை பெற்றதாயினும் 2009 ற்கு பின்னர் அது முற்றுமுழுதாக சீன சார்பு அரசியலை முன்னிலைப்படுத்தியது.
இச்செயற்பாடு இந்திய அரசாங்கத்திற்கு அயல்நாட்டு இராஜதந்திர தோல்வியாகவே காணப்பட்டதோடு மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலாகவும் இருந்தது.
குறிப்பாக சீனாவின் முத்துமாலைத் திட்டமானது இந்திய தேசியத்தின் பாதுகாப்பிற்கான அச்சுறுத்தல் என்று இந்திய உளவுப்பிரிவான றோ தெரிவித்திருந்தது.
இச்சூழல்களை நன்கு கவனத்தில் கொண்டிருந்த இந்தியாவின் புதிய பாரதிய ஜனதா கட்சியானது புதிய ஆட்சிமாற்றம் ஒன்றைக் கொண்டுவரத் திட்டமிட்டிருந்தது.
அதுவும் இந்தியாவிற்கு சார்பான ஒரு அரசாங்கத்தினை. அதன் விளைவால் தான் மகிந்த ராஜபக்ச தமிழ் மக்களின் வாக்குகளால் ஆட்சி அதிகாரத்திலிருந்து தூக்கி வீசப்பட்டார்.
இதை மகிந்த ராஜபக்சவும் தெரிவித்திருக்கின்றார். என்னுடைய ஆட்சியை கவிழ்க்க றோ அமைப்பு கடுமையாக பாடுபட்டது என்று.
இவ்வாறு இலங்கையில் நிலவிய ஒரு தாழமுக்கத்தினை நீக்கிய இந்திய தேசம் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருந்துவரும் அரசியல் தீர்வுத்திட்டம் தொடர்பாகவும் தன்னுடைய பங்கினை செயல்ப்படுத்த தீர்மானித்துள்ளது.  அதன் ஒருவடிவமே மோடியின் இலங்கைப் பயணம்.
ராஜீவ் காந்திக்கும் ஜே.ஆர். ஜெயவர்தனவுக்கும் இடையில் நடந்த இந்திய இலங்கை ஒப்பந்தத்தின்படி அன்று கைச்சாத்திடப்பட்டிருந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் 13வது திருத்தச் சட்டத்தினை அமுல்ப்படுத்துவது தொடர்பாக கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் உரிமையினை பெற போராடி வரும் இலங்கை தமிழ் மக்களின் அரசியலில் இப்போது மிகப்பெரிய சிக்கல் நிலையினை ஏற்படுத்தியிருக்கின்றது இந்திய தேசம்.
2009 மே மாதம் 18ம் திகதியோடு புலிகள் இலங்கையில் இருந்து முற்றுமுழுதாக அழிக்கப்பட்டதில் இருந்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பே தமிழ் மக்களின் பிரதிநிதியாக செயற்பட்டு வருகின்றது.
ஆனால் கூட்டமைப்பு புலிகள் போன்று வலுவான பேரம் பேசும் சக்தியாக இல்லை என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாகவும் உள்ளது.
இவ்வாறான சூழலில் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்து புலிகள் முப்பது ஆண்டுகள் போராடினாலும் அவர்களை இந்தியா தன்னுடைய பங்கிற்கு மகிந்தவோடு இணைந்து அழித்து பேரம்பேசும் சக்தியாக திகழ்ந்த தரப்பை நிர்மூலமாக்கியதோடு, இப்போது தான் கொண்டுவந்த ஒப்பந்தமாகிய 13வது திருத்த சட்டத்தை திணித்து தமிழ்மக்களின் அரசியலை மாகாணசபைக்குள் முடக்கத் திட்டமிட்டுள்ளதை பிரதமர் மோடியின் இலங்கை விஜயம் நன்கு உணர்த்துகின்றது.
ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல சீனாவை இலங்கையில் இருந்து விரட்ட மகிந்த ஆட்சியை முடிவிற்கு கொண்டு வந்த இந்திய தேசம், தன்னுடைய கழுகுக்கால்களை ஆழப் பதிப்பதற்கு இலங்கை தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிராகரித்து 13வது திருத்தச் சட்டத்தினையும் திணிக்க முற்படுகின்றது என்று குறிப்பிட்டால் மிகையாகாது.
இவை தவிர, அமெரிக்க அரசாங்கமும் இலங்கையில் தன்னுடைய ஆதிக்கத்தினை அதிகரிக்க கூடாது என்பதைக் கருத்தில் கொண்டே மோடி செயல்படுகின்றார் என்று கூறமுடியும்.
கிழக்கில் அமைந்திருக்கும் திருகோணமலையில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தை அமைப்பதனூடாக அமெரிக்காவின் திருகோணமலையை தன்னகப்படுத்தும் திட்டத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கின்றார் மோடி.
அதேபோன்று சம்பூர் அனல் மின்நிலைய வேலைகளும் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றது. அங்கிருந்து வெளியேறிய மக்களுக்கு இன்னமும் நிவாரணங்கள் வழங்கப்படாமல் இருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இவை யாவற்றுக்கும் மேலாக போர்க்குற்ற விசாரணைகள், மனிதவுரிமை மீறல்கள் தொடர்பான எத்தக் கருத்தையும் மோடி வெளியிடாமல் இருப்பதும் இங்கு நோக்க வேண்டியுள்ளது.
ஆக 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் பிரதமர் ஒருவர் இலங்கைக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ பயணமானது மிகப் பெரிய இராஜதந்திர அலையென்று சொன்னால் அது குறைவானதல்ல.
மோடியின் அலை இந்தியாவில் மட்டுமல்ல இலங்கையிலும் மிகப்பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.
மோடி இலங்கை நோக்கி ஓடியது இந்திய வரலாற்றிலும், பாரத அரசியலிலும் மிகப்பெரிய மாற்றத்தினை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்துக்களுக்கு இடமில்லை.
ஆனால் இலங்கைத் தமிழ் மக்களின் நிலைமையை எண்ணி கலங்க வேண்டிய காலம் மீண்டும் உருவாகிக்கொண்டிருக்கின்றது என்பது மட்டும் உண்மை. 
- புவி -
http://www.tamilwin.com/show-RUmtyDSYSUmw7F.html

Geen opmerkingen:

Een reactie posten