தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 15 maart 2015

போர்ச் சூழல் காரணமாக 85000 பெண்கள் விதவையாக்கப்பட்டுள்ளனர்: சீனித்தம்பி யோகேஸ்வரன்

மஹிந்த, விமலுக்கு ஆதரவு வழங்கும் ஐ.தே.க! ஜனாதிபதி குற்றச்சாட்டு - ஐ.ம.சு.மு தலைவராக மைத்திரிபால
[ ஞாயிற்றுக்கிழமை, 15 மார்ச் 2015, 06:44.26 AM GMT ]
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸ ஆகியோரின் அரசியல் செயற்பாடுகளுக்கு, ஐக்கிய தேசிய கட்சியின் சில தலைவர்களின் அனுசரணைகள் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று இடம் பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்களின் கூட்டத்தில் ஜனாதிபதி இதனை கூறியதுடன் அவர்களின் பெயர் விபரங்களையும் வெளியிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்கள், மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்தன, ஈபிடிபியின் தலைவர் டக்லஸ் தேவானந்தா, பொடிஅப்புஹாமி மற்றும் மக்கள் கட்சியின் பிரதிநிதிகளும் கூட்டத்தில் கலந்துக்கொண்டனர்.
இக்கூட்டத்தில் மகிந்தவை பிரதமராக்குமாறு வலியுறுத்தி விமல் வீரவன்ச நடாத்துகின்ற கூட்டங்கள் தொடர்பாக கட்சி தலைவர்கள் கவனம் செலுத்தியுள்ளனர்.
மேலும் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் மற்றும் புதிய தேர்தல் முறை தொடர்பாக மக்களுக்கு தெளிவுப்படுத்தும் கூட்டங்களை நாடு முழுவதும் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஜாதிக ஹெல உறுமய, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் லங்கா சமசமாஜக் கட்சிகளை கூட்டணியுடன் இணையுமாறு அழைப்பு விடுப்பது எனவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் வெற்றிடமாக உள்ள தேசிய அமைப்பாளர் பதவிக்கு ஜனக்க பண்டார தென்னக்கோன் நியமிக்கப்பட்டதுடன் முன்னணியின் உப தலைவராக டக்ளஸ் தேவானந்தா, பிரதிச் செயலாளராக மகிந்த அமரவீரவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஐ.ம.சு.மு தலைவராக மைத்திரிபால சிறிசேன நியமிப்பு
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமிக்கப்பட்டுள்ளார்.
மதியம் கூடிய மத்திய குழு கூட்டத்தில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக முன்னாள் அமைச்சர் சீ.பி.ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தேசிய அமைப்பாளர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னர் அப்பதவியில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச கடமை புரிந்தது குறிப்பிடதக்கது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளராக சுசில் பிரேமஜயந்த செயற்படவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

100 நாள் போதவில்லை: லக்ஷ்மன் கிரிஎல்ல
[ ஞாயிற்றுக்கிழமை, 15 மார்ச் 2015, 06:50.48 AM GMT ]
100 நாள் வேலைதிட்டம் 100% வெற்றிகரமாக முன்னொக்கி கொண்டு செல்வதற்கு முடியவில்லை எனவும் தற்பொழுது தேவைபடுவது பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலை நோக்கி செல்வது மட்டுமே என பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் லக்ஷ்மன் கிரிஎல்ல தெரிவித்துள்ளார்.
நேற்று சிங்கள ஊடகத்துடன் இடம் பெற்ற நேர்காணல்களில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் விரைவில் பாராளுமன்ற பெரும்பான்மை கிடைக்கும் என நம்பப்பட்டது எனினும் தற்பொழுது கிடைக்காதென தோன்றுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிப்பு, ஆணைக்குழு ஸ்தாபித்தல், தேர்தல் முறையை மாற்றுதல் 100 நாள் வேலைதிட்டத்தின் பிரதான வாக்குறுதியாக காணப்பட்டது எனினும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற காலம், நேரம் போதுமானதாக இல்லை எனவும் தேர்தலுக்கு செல்வதனை தவிர மாற்று கருத்து எதுவும் இல்லை என அமைச்சர் சுட்டிகாட்டியுள்ளார்.
மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் பாராளுமன்றம் காலாவதியான தயாரிப்பு போன்று உள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் புதிய பாராளுமன்றம் தயாரிக்க வேண்டும் எனவும் அதனை சோபித்த தேரர், ரத்ன தேரர் புரிந்துக்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


நான் சிறந்த சுதந்திரக் கட்சிக்காரன்! தவறு செய்திருந்தால் என்னை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லுங்கள்: மகிந்த
[ ஞாயிற்றுக்கிழமை, 15 மார்ச் 2015, 07:17.01 AM GMT ]
அரசியலில் இருந்து சில நாட்களாக தான் ஒதுங்கி இருப்பதாகவும் தான் சிறந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்காரன் எனவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பு தேசிய கலாபவனத்தில் நடைபெற்ற புகைப்பட கலைஞர் சங்கா வித்தானகமவின் ஊடகங்களில் வெளியான படங்களை கொண்ட முதலாவது புகைப்படக் கண்காட்சிக்கு வருகை தந்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அங்கு சென்றிருந்த ஊடகவியலாளர்கள், மகிந்த ராஜபக்சவிடம் தேசிய அரசாங்கம் மற்றும் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து வினவினர்.
தேசிய அரசாங்கம் பற்றிய யோசனைகள் இருக்கின்றதா என கூறிய முன்னாள் ஜனாதிபதி, நாம் பார்ப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கண்காட்சியில் முன்னாள் ஜனாதிபதியுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பாவும் கலந்து கொண்டார்.
நான் தவறு செய்திருந்தால் என்னை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லுங்கள்: மகிந்த
நான் எதாவது தவறு செய்திருந்தால் என்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துங்கள் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நேற்று இந்திய ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியில் இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தன் சகோதரர்களையும் தன் பிள்ளைகளையும் தாக்குவதை நிறுத்தி விட்டு தவறு செய்திருந்தால் தங்களை நீதிமன்றித்தில் ஆஜர்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
தன் சகோதரர் கோத்தாபய ராஜபக்ச சட்டரீதியாக செய்த செயல்களுக்கும் குற்றம் சுமத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அவர் முன்னாள் பாதுகாப்பு அமைச்சராக கடமை புரிந்தவர் அதற்கமைய அனைத்து முடிவுகள் தொடர்பாகவும் கேள்வி எழுப்பப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


போர்ச் சூழல் காரணமாக 85000 பெண்கள் விதவையாக்கப்பட்டுள்ளனர்: சீனித்தம்பி யோகேஸ்வரன்
[ ஞாயிற்றுக்கிழமை, 15 மார்ச் 2015, 07:39.46 AM GMT ]
கடந்த கால யுத்தம் காரணமாக வடக்கு கிழக்கிலே அண்ணளவாக 85000 பெண்கள் தங்கள் கணவனை இழந்து விதவைகளாக்கப்பட்டுள்ளனர் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார். 
வாழைச்சேனைப் பிரதேச செயலாளர் பிரிவில் புதுக்குடியிருப்பு காந்தி ஜீ இளைஞர் கழகம் நடாத்திய சர்வதேச மகளிர் தின நிகழ்வு சனிக்கிழமை புதுக்குடியிருப்பு வாணி வித்தியாலயத்தில் இடம் பெற்ற போது, அதில், பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
யுத்த காலத்தில் விதவைகளாக்கப்பட்டவர்களில் அதிகமானோர் மட்டக்களப்பு மாவட்டத்திலயே இருக்கின்றனர். அதிலும் இளம் வயதில் விதவைகளாக்கப்பட்டவர்கள் அதிகம் காணப்படுகின்றனர். மட்டக்களப்பு மாவட்டம் வறுமையில் 19.4 வீதத்தினால் காணப்படுகின்ற போது, இளம் விதவைகள் தங்களது வாழ்வாதாரத்திற்காக கடுமையாகப் போராட வேண்டிய துர்ப்பாக்கிய நிலையுள்ளது.
கணவனை இழந்து, தனது வறுமை காரணமாக இளம் பெண்கள் கீழத்தேய நாடுகளுக்கு தொழில் நிமித்தம் பணிப் பெண்களாகச் செல்கின்றார்கள். அவ்வாறு தனது குடும்ப கஸ்டத்தின் காரணமாக செல்லும் பெண்களில் பல பெண்கள் அங்கு பாலியல் வன்முறைகளுக்குள்ளாக்கப்படுகின்றார்கள்.
சிலர் துன்புறுத்தப்படுகின்றனர். தமது பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக வெளிநாடு சென்ற பல பெண்கள் சவப்பெட்டிகளில் வந்த வரலாறு நமது சமுகத்தில் அதிகம் காணப்படுகின்றது.
கடந்த 2006ம் ஆண்டு பிற்பகுதியில், மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் தங்களது இடங்களுக்கு குடியேற்றப்பட்டார்கள். ஆனால், அந்தக் குடியேற்றத்தின் பின்னர் 100க்கும் மேற்பட்டடோர் காணாமல் போயுள்ளார்கள். கடத்தப்பட்டுமுள்ளனர்.
கடத்தப்பட்டவர்களில் அதிகமானோர் இளம் குடும்பத்தலைவர்கள் என்றபடியால், அக்குடும்பத் தலைவிகள் வாழ்வாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அக்குடும்பத் தலைவர்களைக் கடத்தியவர்கள் இன்று சௌகரியமாக வாழ்ந்து வருகின்றனர்.
காணாமல் போனவர்களது உறவுகள் என்னிடம் சொன்னார்கள். எங்களது கணவனை, எங்களது உறவுகளைக் கடத்தியவர்களை எங்களுக்குத் தெரியும். அவர்களைக் காட்டிக் கொடுத்து, தண்டனை பெற்றுக் கொடுப்பதற்கு எங்களுக்கு களமமைத்துத் தாருங்கள் என்று. அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்குறிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம் என்றும் குறிப்பிட்டார்.
புதுக்குடியிருப்பு காந்தி ஜீ இளைஞர் கழகத்தின் தலைவர் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில், அதிதிகளாக கிழக்கு மாகாண இளைஞர் சேவைகள் மன்றப் பணிப்பாளர் கே.தவராஜா, மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சேவைகள் மன்ற உதவிப்பணிப்பாளர் எம்.எல்.எம்.என்.நைறூஸ், கோறளைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ரீ.தினேஸ் மற்றும் இளைஞர் சேவைகள் மன்ற உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
பாராளுமன்ற உறுப்பினரால் நிகழ்வில் கலந்து கொண்ட பெண்களுக்கு சேலைகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டதுடன், இளைஞர் கழக உறுப்பினர்களால் நாடகமும் அரங்கேற்றப்பட்டது.
http://www.tamilwin.com/show-RUmtyDSZSUmx0F.html

Geen opmerkingen:

Een reactie posten