[ ஞாயிற்றுக்கிழமை, 22 மார்ச் 2015, 05:03.33 AM GMT ]
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைப் பயணத்தின் போது ,திருகோணமலையில் உள்ள எண்ணெய்க் குதங்களை, இந்தியாவின் ஐ.ஓ.சி (இந்தியன் ஒயில் நிறுவனம்) ஊடாக புனரமைப்பதற்கு இரு நாடுகளும் இணைந்து உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.
13 ஆண்டுகளுக்கு முன்னர், ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த அரசாங்கத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டுக்கமைய.திருகோணமலை எண்ணெய்க் குதங்களின் மீதான கட்டுப்பாட்டை இந்தியா தன்வசம் எடுத்துக் கொண்டிருந்தாலும், மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் அந்த உடன்பாடு எந்த நேரத்திலாவது இடைநிறுத்தப்படுமா என்ற கேள்வி நீடித்துக் கொண்டேயிருந்தது.
அப்போது, திருகோணமலை எண்ணெய்க் குதங்களை புனரமைத்து பயன்படுத்துவதற்கு 35 ஆண்டு கால குத்தகை உடன்பாட்டில் ஐ.ஓ.சி. நிறுவனத்துடன் இலங்கை அரசாங்கம் கையெழுத்திட்டிருந்தது. அதையடுத்தே ஐ.ஓ.சி நிறுவனம்,இலங்கையில் தனது செயற்பாடுகளுக்காக லங்கா ஐ.ஓ.சி என்ற துணை நிறுவனத்தை உருவாக்கி,இங்கு எரிபொருள் விற்பனை மற்றும் விநியோகத்தில் இறங்கியது.
இதற்காக, திருகோணமலையில் உள்ள 99 எண்ணெய்க் குதங்களில்,15 எண்ணெய்க் குதங்களை மட்டும்,சீரமைத்துப் பயன்படுத்தி வருகிறது. இவை கீழ்நிலை எண்ணெய்த் தாங்கிகளாகும். ஆனால்,தற்போது செய்து கொள்ளப்பட்டுள்ள உடன்பாட்டுக்கமைய ஐ.ஓ.சி நிறுவனம்,மேல்நிலை எண்ணெய்த் தாங்கிகளைப் புனரமைக்கவுள்ளது.
இதன் ஊடாக ,இலங்கையில், இந்தியாவின் ஐ.ஓ.சி நிறுவனம் மேலும் காலூன்றவுள்ளது. இலங்கையின் எண்ணெய் விநியோகத்தை இவ்வாறு முற்றுமுழுதாக இந்தியாவின் கையில் ஒப்படைப்பது ஆபத்தானது என்றும் ,பயங்கரமானது என்றும் எதிர்கட்சியில் உள்ள சிலர் குரல் கொடுத்தாலும், தற்போதைய அரசாங்கம் அதைக் கண்டு கொள்ளவில்லை.
இந்தியாவைப் பொறுத்த வரையில், திருகோணமலையிலுள்ள எண்ணெய் குதங்களின் மீது அதற்கு எப்போதுமே ஒரு கண் இருந்து வந்துள்ளது. காரணம்,1930களில் பிரித்தானிய அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட, அந்தப் பிரமாண்டமான எண்ணெய்க் களஞ்சியத் தொகுதி, பாதுகாப்பு ரீதியாக தெற்காசியப் பிராந்தியத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
தெற்காசியப் பிராந்தியத்திலேயே, மிகப்பெரிய எண்ணெய்க் களஞ்சியத் தொகுதி இதுவேயாகும். பிரித்தானியர்களால்,இரண்டாம் உலகப்போருக்கு முன்னதாக,அமைக்கப்பட்ட 101 எண்ணெய்க் குதங்களில் தற்பொழுது கூட 99 குதங்கள் பாவனைக்கு உகந்த நிலையில் தான் உள்ளன. தலா 12,100 மெட்ரிக் தொன் எரிபொருளைச் சேமித்து வைக்கத் தக்கவகையில்,இந்த எண்ணெய்க் குதங்கள் ஒவ்வொன்றும் இருக்கின்றன.
பிரித்தானியர்களால் அமைக்கப்பட்ட 101 எண்ணெய்க் குதங்களில் இரண்டு மட்டுமே சேதமடைந்து விட்டன. ஒன்று ஜப்பானிய விமானத் தாக்குதலிலும் மற்றது, விமான விபத்து ஒன்றிலும் சேதமடைந்தன. எஞ்சிய 99 எண்ணெய்க் குதங்களைக் கைப்பற்றுவதற்கு அல்லது அவற்றைக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு,அமெரிக்கா,இந்தியா போன்ற பல நாடுகள் போட்டியிட்டு வந்திருக்கின்றன.
சீனாவுக்குக் கூட இதனைப்பெறுவதில் ஆர்வம் இருந்தது. இதனால் தான்,இந்தியா எப்போதுமே திருகோணமலையின் மீது தனது கவனத்தைக் குவித்து வந்திருந்தது. 2002 ஆண்டு செய்துக் கொள்ளப்பட்ட உடன்பாட்டையடுத்து ,ஐ.ஓ.சி நிறுவனம்,15 மில்லியன் டொலரை செலவிட்டு,15 கீழ்நிலை எண்ணெய்த் தாங்கிகளை மட்டும் புனரமைத்திருந்தது.
அவை இப்போது,அந்த நிறுவனத்தினால் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில்,எஞ்சிய எண்ணெய்க் குதங்களையும் புனரமைத்துப் பயன்படுத்தும் திட்டத்தை இந்தியா 2013 ஆம் ஆண்டு,முன்வைத்த போது மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் அதனை நிராகரித்திருந்தது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்த பின்னர், சீனாவுடன் நெருக்கமாகிய மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் இந்தியாவிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகிப் போயிருந்தது. இந்தியாவுடன் இருந்து வந்த முரண்பாடுகள் காரணமாகவே, திருகோணமலை எண்ணெய் குதங்கள் தொடர்பான உடன்பாட்டை விரிவாக்கிக் கொள்ள மறுத்ததுடன்,ஏற்கனவே செய்து கொள்ளப்பட்ட 35 ஆண்டு குத்தகை உடன்பாட்டையும் இரத்துச் செய்யப் போவதாகவும் மிரட்டி வந்தது.
ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் முறையற்ற வகையில், எண்ணெய் தாங்கிகள் அமைந்துள்ள நிலத்தையும் ,இந்தியாவுக்கு குத்தகைக்கு கொடுத்துள்ளதாகவும், அவற்றைக் குத்தகைக்கு கொடுக்க அதிகாரமில்லை என்றும், மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் கூறியிருந்தது.
இந்த இழுபறியால் கடந்த சில ஆண்டுகளாக திருகோணமலை எண்ணெய்க் குதங்களைப் புனரமைப்பது பற்றிய புரிந்துணர்வு உடன்பாடு கையெழுத்திடப்படவில்லை.
திருகோணமலை எண்ணெய்க் குதங்கள் விவகாரத்தில்,மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் கடும்போக்கு இந்தியாவுக்கு எரிச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்தியிருந்தது. இப்போது,இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு ,திருகோணமலை எண்ணெய்க் குதங்களைப் புனரமைக்கும் உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளது இந்தியா.
இந்தியாவைப் பொறுத்தவரையில்,திருகோணமலையில் உள்ள 99 எண்ணெய்க் குதங்களையும் பயன்படுத்தும் அளவுக்கு,இலங்கையில் அதற்குச் சந்தை வாய்ப்பு ஏதும் கிடையாது. ஏனென்றால்,திருகோணமலையில் உள்ள குதங்களில் சேமிக்கக் கூடிய எண்ணெயின் அளவு அந்தளவுக்கு பிரமாண்டமானது.
பிரித்தானியர்கள் கூட,இந்த எண்ணெய்த் தாங்கிகளை,இலங்கையில் விநியோகிப்பதற்காக உருவாக்கியிருக்கவில்லை. போரின் போது கப்பல்கள்,விமானங்களுக்குத் தேவைப்படக்கூடிய எரிபொருளைக் சேமித்து வைப்பதற்காகத் தான்,இதனை உருவாக்கியிருந்தனர். அதுபோலவே, இரண்டாம் உலகப் போரில் பிரித்தானிய மற்றும் நேசநாட்டுப் படைகளின் தேவைக்கு இந்த எண்ணெய்க் குதங்கள் பெரிதும் பயன்பட்டன.
அதன் காரணமாகத் தான், இந்த எண்ணெய்க் குதங்களைக் குறிவைத்து ஜப்பானிய விமானங்கள் தாக்குதல் நடத்தியிருந்தன. எனினும், ஒரே ஒரு எண்ணெய்க் குதத்தை மட்டும் தான்,ஜப்பானியர்களால் அழிக்கமுடிந்தது.
இப்போது இந்தியாவும் கூட இந்த எண்ணெய்க் குதங்களின் கட்டுப்பாட்டை,தன்வசம் எடுத்துக் கொள்வதற்கு ,எத்தனிப்பதற்குக் காரணம் இவை வேறு நாடுகளின் கைகளுக்குச் சென்று விடக்கூடாது என்பதற்காகத்தான்.
1987 ஆம் ஆண்டு,இலங்கையுடன் இந்தியா அமைதி உடன்பாட்டைச் செய்து கொண்டு தனது படைகளை அனுப்பியதற்கு திருகோணமலைத் துறைமுகமும் ஒரு காரணம். அந்தக் காலகட்டத்தில் ,திருகோணமலைத் துறைமுகம் அமெரிக்காவின் கைகளுக்குச் சென்று விடக் கூடியவாய்ப்புக்கள் இருந்தன. அதனால் தான் இந்தியா அவசர அவசரமாக இலங்கையில் கால் வைத்தது.
மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் காலத்தில் கூட,இந்தியாவுக்கு திருகோணமலை குறித்து நிறையவே கவலைகள் இருந்தன. சீனக்குடா விமான தளத்தில்,சீன அரசு நிறுவனம் ,விமானப் பராமரிப்பு நிலையம் ஒன்றை அமைப்பதற்கு இணங்கியிருந்தது மஹிந்த ராஜபக்ச அரசாங்கம். இந்தியா அதனை தனது இராஜதந்திர முயற்சிகளின் மூலமே தடுத்தது.
எனவே, திருகோணமலை எந்த வகையிலும் தனது கையை விட்டுச் சென்று விடக்கூடாது என்பதில் இந்தியா உறுதியாக இருக்கிறது. எண்ணெய்க் குதங்களையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியிருக்கிறது.
முழு எண்ணெய்க் குதங்களும் இலங்கையில் விநியோகம் செய்வதற்குத் தேவைப்பாடாது போனாலும்,அனைத்தையும் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதன் மூலம்,பிறரின் தலையீடுகளைத் தவிர்க்க நினைக்கிறது இந்தியா.
அதைவிட,தெற்காசியப் பிராந்தியத்தின் எண்ணெய் மையமாக திருகோணமலையை மாற்றவிரும்புவதாக ,இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டிருந்தார்.
அது, திருகோணமலை மீது இந்தியா கொண்டுள்ள ஆர்வத்தைப் புலப்படுத்துகிறது. எவ்வாறாயினும், தற்போது இந்தியா திருகோணமலை மீதான தனது கட்டுப்பாட்டை மேலும் வலுப்படுத்தியிருக்கிறது.
இதவே இந்தியப் பிரதமரின் இலங்கைப் பயணத்தின் மூலம் அடையப்பெற்ற மிகப்பெரிய நன்மை என்று,கல்கத்தா ரெலிகிராப் போன்ற ஊடகங்கள் வர்ணித்திருந்தன.
இந்தியாவைப் பொறுத்தவரையில் திருகோணமலை மீதான கட்டுப்பாட்டை உறுதிப்படுத்தியிருப்பது, சீனாவுக்கு எதிரான அதன் நகர்வுகளின் முக்கியமான ஒரு கட்டம் என்றே குறிப்பிடலாம்.ஏனென்றால்,பாதுகாப்பு மூலோபாய ரீதியாக,திருகொணமலையின் இடஅமைவு, அத்துணை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று.
-சுபத்ரா-
http://www.tamilwin.com/show-RUmtyDRWSUlr7H.html
காணாமல்போன இளைஞன் சடலமாக மீட்பு- முதியவர் ஒருவர் 15 அடி பள்ளத்திலிருந்து மீட்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 22 மார்ச் 2015, 05:23.30 AM GMT ]
நேற்று மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் நோர்வூட் பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய சேகர் அமரதேவன் எனும் இளைஞரே நீர்த்தேக்கத்தில் மூழ்கி காணாமல் போயிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவ தினத்தன்று மாலை தனது நண்பர் ஒருவருடன் இணைந்து நீர்த்தேக்கத்தில் மீன் பிடிக்க சென்றுள்ளார். அங்கு இருவரும் பிரிந்து சென்று மீன் பிடிக்கின்றபோது குறித்த இளைஞன் காணாமல் போயிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
காணாமல்போன குறித்த இளைஞனை பொலிஸாரும் பொது மக்களும் இணைந்து தேடி வருகின்றனர்.
இரண்டாம் இணைப்பு
இளைஞன் சடலமாக மீட்பு
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நோர்வூட் காசல்ரீ நீர்த்தேக்கத்தில் மீன்பிடிக்க சென்ற இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் நோர்வூட் அயரபி தோட்டத்தை சேர்ந்த சேகர் அமரதேவன் (வயது 22) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த இளைஞன் மீன் பிடிக்க சென்று மீண்டும் வீடு திரும்பாததையடுத்து அதன்பின் இளைஞன் காணாமல் போயுள்ளதாக அவரது குடும்பத்தார் நோர்வூட் பொலிஸ்
நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.
நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.
இந்நிலையில் இன்று பொலிஸார், பொது மக்கள், கடற்படையினா் ஆகியோர் இணைந்து நீர்த்தேக்கத்தில் தேடுதல் மேற்கொண்ட போது மேற்படி இளைஞன் சடலமாக
மீட்கப்பட்டுள்ளார்.
மீட்கப்பட்டுள்ளார்.
ஹற்றன் நீதவான் விசாரணைகளை மேற்கொண்ட பின் சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
காணாமல்போன முதியவர் 15 அடி பள்ளத்திலிருந்து மீட்பு
காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த முதியவர் ஒருவர் காட்டுப்பகுதியில் 15 அடி பள்ளத்தில் விழுந்து கிடந்த நிலையில் மீட்கப்பட்டு நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கினிகத்தேனை பண்டாரநாயக்க மாவத்தையைச் சேர்ந்த தொலவத்தகே தொண் உபசேன (வயது 82) என்ற முதியவர் காணாமல் போயுள்ளதாக அவரது குடும்பத்தார் கினிகத்தேனை பொலிஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.
இந்நிலையில், நேற்றுக் காலை 11.30 மணியளவில் அவரது செருப்பு, குடை, சாரம் என்பன கினிகத்தேனை தியநில்ல பகுதியில் காணப்பட்டதையடுத்து, இது தொடர்பாக மஸ்கெலியா அதிரடிப் படை உயரதிகாரி சி.ஐ.குலந்துங்கவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இதனையடுத்து அதிரடிபடையினருடன் சென்று தேடுதல் மேற்கொண்ட போது 15 அடி பள்ளத்தில் காட்டுப்பகுதியில் முதியவர் விழுந்து கிடந்த நிலையில் உயிருடன் மீட்கப்பட்டு கினிகத்தேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னா் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
http://www.tamilwin.com/show-RUmtyDRWSUlr7I.html
இந்திய மீனவர்கள் 54 பேர் இலங்கை கடற்படையினரால் கைது!
[ ஞாயிற்றுக்கிழமை, 22 மார்ச் 2015, 05:36.58 AM GMT ]
ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களை நேற்றிரவு சுமார் 8.30 மணியளவில் 10 படகுகளுடன் இலங்கை கடற்படையினாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் ஜயந்த ஜெயவீர தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் தலைமன்னார் முகாமிற்கு கடற்படையினரால் அழைத்து செல்லப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக -இலங்கை மீனவர்கள் இடையே மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை சென்னையில் வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள நிலையில் இந்த கைது சம்பவம் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இராமேஸ்வரம் மீனவர்கள் நாளை பணிப்பகிஷ்கரிப்பில்
இராமேஸ்வரம் மீனவர்கள் 54 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர்.
இவர்களை நாளை இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கச்சத்தீவு பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுப்பட்ட 54 இராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மீனவர்களை நேற்று கடற்படையினர் கைது செய்தனர்.
இதன் போது கடற்படையினர் மீனவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன், மீனவர்களின் படகுகளையும், வலைகளையும் சேதப்படுத்தியுள்ளனர்.
இலங்கை கடற்படையினர் இக்கொடூர செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்தே நாளை இராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளனர்.
இதேவேளை கைது செய்யப்பட்ட இராமேஸ்வர மீனவர்கள் 33 பேரையும் எதிர்வரும் 27ம் திகதி வரை தடுத்து வைக்குமாறு மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyDRWSUlsyA.html
Geen opmerkingen:
Een reactie posten