தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 2 maart 2015

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 28வது கூட்டத்தொடர் இன்று! இலங்கை தொடர்பாக பல அமைப்புக்கள் அறிக்கை

செய்மதி உபகரணங்களுடன் இந்தியாவில் இருந்து இலங்கை சென்ற யாத்திரீகர்கள் கைது
[ திங்கட்கிழமை, 02 மார்ச் 2015, 06:34.24 AM GMT ]
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நவீன தொழிநுட்பத்துடனான செய்மதி உபகரணங்களுடன் யாத்திரீகர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் சென்னையில் இருந்து இலங்கைக்கு சென்ற போதே, அவர்களை சோதனையிட்ட அதிகாரிகள் இவற்றைக் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட செய்மதிகளின் பெறுமதி 13 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா என விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவிவித்துள்ளனர்.
இவர்கள் இந்தியாவில் உள்ள புத்தகாய உள்ளிட்ட பெளத்த புனித தலங்களுக்கு யாத்திரை சென்று திரும்பியவர்கள் என சுங்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.


தமிழர் பகுதிகளிலிருந்து ராணுவத்தை திரும்பப்பெற ஐநா மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் இந்தியா நிர்ப்பந்திக்க வேண்டும்: திருமாவளவன்
[ திங்கட்கிழமை, 02 மார்ச் 2015, 07:31.19 AM GMT ]
ஐநா மனித உரிமைக் கவுன்சிலின் 28ஆவது கூட்டம் இன்று ஜெனிவாவில் தொடங்கியுள்ளது. இலங்கை அரசின் வேண்டுகோளை ஏற்று இந்தக் கூட்டத்தில் இலங்கையின் போர்க் குற்றங்கள் குறித்து சமர்ப்பிக்கப்படவிருந்த அறிக்கை செப்டம்பர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புதிய அதிபர் பதவியேற்று இத்தனை நாட்கள் ஆன பிறகும்கூட தமிழர் பகுதிகளிலிருந்து இராணுவத்தை வெளியேற்றவோ, இராணுவத்தால் அபகரிக்கப்பட்ட தமிழர்களின் நிலங்களைத் திருப்பிக்கொடுக்கவோ இலங்கை அரசு எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அதுபோலவே ஐந்து ஆண்டுகளுக்கு மேல் எந்தவித விசாரணையும் இல்லாமல் இரகசியச் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழர்களை விடுவிப்பது பற்றியும் இலங்கை அரசு வாய் திறக்கவில்லை.
போர்க்குற்ற அறிக்கை சமர்ப்பிப்பதை அடுத்த கூட்டத்துக்கு ஒத்தி வையுங்கள் எனக் கேட்ட இலங்கை அரசு இப்போது செப்டம்பரில் நடைபெறவுள்ள கூட்டத்திலும் அறிக்கையை சமர்ப்பிக்கவிடாமல் முட்டுக்கட்டை போடும்வகையில் பேசிவருகிறது.
இலங்கையின் வெளியுறவுத் துறை துணை அமைச்சர் அஜித் பெரெரா ‘செப்டம்பருக்குள் எங்களால் விசாரணையை முடிக்க முடியாது’ என இப்போது கூறியிருக்கிறார்.
பொதுத்தேர்தல் நடத்தப்பட்டு சிறிசேனாவின் கையில் அதிகாரம் உறுதிப்படுத்தப்பட்டுவிட்டால் அதன் பின்னர் அவரும் இராஜபக்சே போலத்தான் நடந்துகொள்வார் என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
இந்திய மீனவர்கள் தொடர்ந்து கைதுசெய்யப்படுகிறார்கள், இலங்கையின் சீன ஆதரவு நிலையிலும் பெரிதாக மாற்றம் இல்லை, இந்தியா பலமுறை வலியுறுத்தியும்கூட தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வு குறித்து இலங்கை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
 எனவே, இலங்கையின் ஏமாற்று வேலைகளுக்கு இந்தியா பலியாகி விடாமல் இந்த ஐநா மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் உறுதியான நிலைப்பாட்டை மேற்கொள்ளவேண்டும்.
தமிழர் பகுதிகளிலிருந்து இராணுவத்தை வெளியேற்றவும், அபகரிக்கப்பட்ட நிலங்களைத் திருப்பிக்கொடுக்கவும், சட்டவிரோதமாக ரகசியச் சிறைகளில் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழ்க் கைதிகளை விடுவிக்கவும், தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வை அளிக்கவும் இந்தியா வலியுறுத்தவேண்டும்.
வடமாகாண சபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட ‘இனப்படுகொலை’ தீர்மானத்தின் அடிப்படையில் ஐநா விசாரணையை விரிவுபடுத்த இந்தியா குரலெழுப்ப வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். என தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDTWSUnx6B.html

மாட்டு வண்டி சக்கரத்தில் மகிந்தவைக் களமிறக்கத் திட்டமிடும் வீரவன்ஸ உள்ளிட்ட குழு
[ திங்கட்கிழமை, 02 மார்ச் 2015, 07:50.55 AM GMT ]
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத் திட்டம் தோல்வியடைந்தால், மக்கள் ஐக்கிய முன்னணியின் மாட்டு வண்டி சக்கர சின்னத்தில் அவரை போட்டியிட வைக்க திட்டமிடப்பட்டு வருவதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்தன, வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ஸ, உதய கம்மன்பில ஆகியோர் இந்த மாற்று நடவடிக்கை குறித்து சிந்தித்து வருகின்றனர்.
இவர்கள் நால்வரும், மகிந்த ராஜபக்சவை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், அண்மையில் கட்டுநாயக்கவில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலமர்வில் பேசிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மகிந்த ராஜபக்சவை மீண்டும் அரசியலுக்கு கொண்டு வரும் வேலைத்திட்டத்திற்கு தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்.
அதேவேளை விமல் வீரவன்ஸவின் தேசிய சுதந்திர முன்னணி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கூட்டணி கட்சியல்ல என எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தொலைக்காட்சி அரசியல் கலந்துரையாடல் ஒன்றில் தெரிவித்திருந்தார்.
விமல், வாசு, தினேஷ், கம்மன்பில ஆகியோர் இணைந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அழித்தேனும் தமது அரசியல் எதிர்காலத்தை தற்காத்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அந்த கட்சியினர் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

மேல் மாகாண சபை வழங்க வேண்டிய நிதி கிடைப்பதில் தாமதம்: கொழும்பு மாநகர சபை குற்றச்சாட்டு
[ திங்கட்கிழமை, 02 மார்ச் 2015, 08:09.07 AM GMT ]
மேல் மாகாண சபையிலிருந்து கிடைக்க வேண்டிய 300 மில்லியன் ரூபா நிதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை குற்றம் சுமத்தியுள்ளது.
உறுதிப் பத்திரங்களை பதிவு செய்யும் போது அறவிடப்படுகின்ற முத்திரைப்பணம் கிடைப்பதிலேயே தாமதம் ஏற்பட்டுள்ளதாக மாநகர சபையின் பொருளாளர் கே.டி சித்ரபால தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் கிடைக்க பெறும் பணம் பிரதேசத்ததின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக பயன்படுத்தப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்தும் வகையில் மாநகர மேயர் ஏ.ஜே.எம். முஸம்மிலின் கையொப்பத்துடன் கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கடந்த வருடத்திற்காக வரவு செலவு திட்டத்தில் மாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட முழுமையான நிதி இதுவரையும் கிடைக்காத நிலையில் 50 வீதமான நிதியே கிடைக்கப்பெற்றுள்ளது எனவும்,
இந்நிதியை விரைவில் பெற்றுத்தருமாறு கோரி நிதி அமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளதாகவும், அவ்வாறு குறித்த நிதி கிடைக்கப்பெற்றால் இந்த பணத்தை மாநகர சபைக்கு செலுத்த முடியும் என மேல்மாகாண சபை முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க விளக்கமளித்துள்ளார்.
பணத்தை விரைவில் பெற்றுத்தருமாறு கோரி நிதி அமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளதாகவும் பணம் கிடைக்கும் பட்சத்தில் அவற்றை செலுத்த முடியும் எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 28வது கூட்டத்தொடர் இன்று! இலங்கை தொடர்பாக பல அமைப்புக்கள் அறிக்கை
[ திங்கட்கிழமை, 02 மார்ச் 2015, 08:23.47 AM GMT ]
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 28வது அமர்வு இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில், குறித்த அமர்வில் இலங்கை குறித்து ஆராய்வதற்காக பல மனித உரிமை அமைப்புகளும், அரச சார்பற்ற அமைப்புகளும் அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளன.
இலங்கை குறித்த அறிக்கைகளை சர்வதேச சட்டத்தரணிகள் சங்கம், சர்வதே மன்னிப்புச் சபை, மனித உரிமைகளுக்கான ஆசிய மன்றம் உட்பட பல அமைப்புகள் சமர்ப்பித்துள்ளன.
கடந்த 2009ம் ஆண்டு மே மாதம் இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த போதிலும், இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பான விடயங்கள் பாதிக்கப்படுகின்றன என சர்வதேச சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களை சீர்திருத்தவென அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட புனர்வாழ்வுத் திட்டம் குறித்து அந்த அமைப்பு கரிசனை வெளியிட்டுள்ளது.
மேலும் சர்வதேச மனித உரிமை சட்டங்கள் குறிப்பிடும் விதத்தில் தேசிய சட்டங்கள் மற்றும் கொள்கைகளை வகுப்பதன் மூலமாக இலங்கையின் புதிய அரசாங்கம் மனித உரிமைகளுக்கான தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தலாம் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கையில் 2014ம் ஆண்டில் மனித உரிமை ஆர்வலர்கள் கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டனர்.
இலங்கையின் புதிய அரசாங்கம் பத்திரிகையாளர்கள் மற்றும் மனித உரிமை பணியாளர்களுக்கு எதிரான கடந்தகால சம்பவங்கள் குறித்து விசாரிப்பதாக சாதகமான உறுதிமொழியை வழங்கியுள்ளதாக மனித உரிமைகளுக்கான ஆசிய மன்றம் தெரிவித்துள்ளது.
இந்த சாதகமான உறுதிமொழிகள் வழங்கப்பட்டுள்ள போதிலும் நாட்டில் காணப்படுகின்ற தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கும் கலாச்சாரம் முடிவிற்கு வருமா என்பது தெரியவில்லை எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில்,  ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவும், மனித உரிமை ஆணையாளர் அலுவலகமும் இலங்கையின் நிலவரத்தை உன்னிப்பாக அவதானிக்க வேண்டும்.
தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கும் கலாச்சாரத்தை முடிவிற்கு கொண்டுவருமாறு அதனை கோரவெண்டும் எனவும் மனித உரிமைகளுக்கான ஆசிய மன்றம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கையின் புதிய அரசாங்கம் அளித்துள்ள உத்தியோகபூர்வ வாக்குறுதிகளை வரவேற்றுள்ள சர்வதேச மன்னிப்புச் சபை அரசாங்கம் இந்த வாக்குதிகளை செயற்பாடுகளாக மாற்றும் அதன் மூலம் இலங்கையில் ஓரு தசாப்த காலமாக சட்டத்தின் ஆட்சிக்கும்,மனித உரிமைகளுக்கும் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்யும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyDTWSUnx6H.html

Geen opmerkingen:

Een reactie posten