தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 1 december 2014

வாழ்வுக்கும் சாவுக்குமான போராட்டத்தில் மஹிந்தரும், மைத்திரிபால சிறிசேனவும்!

நன்கு திட்டமிட்டு மஹிந்தரை வீழ்த்தும் காய்நகர்த்தலில் பலரின் எதிர்பார்ப்பின் மத்தியில் மைத்திரிபால சிறிசேனவை முன்நிறுத்தி முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையார் வெற்றியடைந்துள்ளார்.
அம்மையாருக்குப் பாராட்டுக்களைத் தெரிவிப்போம். காரணம் அரசின் மோப்பத்திற்கு இரையாகாமல் செய்மதி தொலைபேசிகள் மூலமாகவும் வெவ்வேறு வாகனங்கள் மூலமாவும் கடந்த வருடங்களாக இந்த காய்நகர்த்தல் நடந்துள்ளதாக அறியவருகின்றது.
இது புலிகளிடம் இருந்து கற்றுக் கொண்ட பாடமாகவே பார்க்கப்படுகின்றது.காரணம் அண்மைக்காலங்களாக அரசிலிருந்து விலகக் கூடியவர்கள் அதிருப்தியாளர்கள் மற்றும் அமைச்சர்கள் ஆகியோரின் தொலைபேசிகள் ஒற்றுக் கேட்கப்பட்டு வந்தது.
அத்துடன் சில அமைச்சர்களின் நாளாந்த அசைவுகள் மற்றும் அவர்களது நடமாட்டங்கள் அரசின் உளவுத் துறையினால் மோப்பம் பிடிக்கப்பட்டு வந்தது.
இந்த மோப்பங்களில் இருந்து தப்பிக்கவும் அரசின் மோப்பக் காரர்களுக்கும் தண்ணி காட்டிவிட்டு மிகவும் இரகசியமாகவே இந்தக் காய்நகர்த்தல்கள் நடைபெற்று வந்துள்ளது.
வல்லரசு நாடு ஒன்றின் இலங்கைத் தூதுவர் ஊடாக இந்தப்பணி கச்சிதமாக நடந்துள்ளது.  சகல திட்டங்களையும் கச்சிதமாக முடித்து விட்டு அந்த தூதுவர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார். சபாஷ் தூதுவர்.
ஆனால் அரசைத் திசை திருப்புவதற்காக கரு ஜெயசூரிய என்றும், ரணில் என்றும்.சஜீத் என்றும் அரசைப் பேய்க்காட்டி விட்டு உண்மையான ஆட்டக்காரர் இனங்காட்டப்பட்டுள்ளார்.
இப்படித்தான் புலிகள் ஒவ்வொரு தாக்குதல் சம்பவங்களின் போதும் படைகளைத் திசை திருப்பிவிட்டு கச்சிதமாக தங்களது தாக்குதல்களில் வெற்றி காண்பார்கள்.
அதாவது கிழக்கில் தாக்குதல் திட்டத்தை வைத்து விட்டு வடக்கில் தாக்கப் போகின்றோம் என்று பெய்யான தகவல் ஒன்றைக் கசிய விடுவார்கள். பொய்யாக செய்தியை தங்களது வாக்கி டோக்கியில் சும்மா கசிய விடுவார்கள்.
இதைப் படையினர் ஒற்றுக் கேட்டு நம்பிக் கொண்டு கிழக்கில் படை நடவடிக்கைகளை உஷார் படுத்துவார்கள்.
ஆனால் வடக்கில் தாக்குதல் நடத்தி வெற்றியடைவார்கள். இப்படியாக படையினரைத் திசை திருப்பி விட்டு பெருமளவு தாக்குதல்களில் புலிகள் வெற்றி கண்டார்கள்.
இது புலிகளின் ஊடுருவித் தாக்கும் பாணியிலானது. இப்படியான பாணியில்தான் மைத்திரியை, சந்திரிகா அணியினர் தயார் படுத்தியுள்ளார்கள்.
யாருக்கும் தெரியாமல் மைத்திரியை ஒழித்து வைத்துள்ளார்கள். புலிகளின் இந்தப் பாணியில்தான் எதிர் கட்சிகளின் பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனா இனங்காட்டப்பட்டுள்ளார்.
அரசாங்க உளவுத்துறைக்கு தண்ணிகாட்டி விட்டுத்தான் நாங்கள் மைத்திரிபாலவை இப்படிக் களமிறங்க முடிந்ததாக முன்னாள் அமைச்சரும் எதிர்க் கூட்டணியின் பிரதான பாத்திரமேற்றுள்ளவருமான ராஜீத சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
தற்போது அரச கூட்டுக்குள் இருந்து கிளம்பவுள்ளவர்களுடன் மிகவும் இரகசியமான முறையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக மேலும் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
மஹிந்தரின் கூட்டுக்குள் இருந்து பொது வேட்பாளர்
எதிர் கட்சிகளின் பொது வேட்பாளர் என்பவர் ஆளும் அரசின் கூட்டுக்குள் ஊடுருவிப் புகுந்து அரசுக்கு அதிர்ச்சியைக் கொடுத்து தற்போது மஹிந்தர் மீது அதிருப்தி கொண்டுள்ள அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்களை தன்வசம் கொண்டு வந்து வெற்றி பெறும் வல்லமை கொண்டவராக இருக்க வேண்டும்.
நாடு முழுவதும் ஐ.தே.க.யின் செல்வாக்குக் குன்றாமல் குறையாமல் உள்ளது. ஐ.தே.க.யின் வாக்குகளுடன் ஆளும் தரப்பில் இருந்து பலரை இழுத்து வந்து விட்டால் அரசு ஆட்டம் கண்டு விடும்.
இந்த வல்லமையுள்ள ஒருவரை மஹிந்தவின் கூட்டுக்குள் இருந்து இறக்க வேண்டும் என்று கடந்த வாரம் எழுதியியிருந்தோம். அதன்படியே மைத்திரி அமைந்து விட்டார்.
ஆனால் நாங்கள் மங்களவை எழுதியிருந்தோம். உண்மையிலேயே அரசு பயந்து விட்டது. அரசு ஆட்டம் கண்டு விட்டது.
கரு ஜெயசூரிய பொது வேட்பாளர் என்றதும் மஹிந்தர் உடனடியாக வாழத்துத் தெரிவித்தார். அப்படியானால் தோல்வி பயமில்லையென்றால் மைத்திரிபால சிறிசேனவுக்கும் தனது வாழ்த்தைத் தெரிவிக்கலாம்தானே.
அரசுக்கு தோல்வி பயம் கவ்விக் கொண்டுள்ளது. அதனால்தான் அரசு கோவையுள்ளதாகப் பயம் காட்டுகின்றது.
இந்தப் போராட்டம் என்பது பணம். முப்படை, ஆட்பலம், அரசின் சகல வளங்கள் நிறைந்த நாடு முழுவதும் அறியப்பட்ட நன்கு பரிச்சயமான மஹிந்தவை எதிர்த்து நிற்பது என்பது மிகவும் இலேசுப்பட்ட காரியமல்ல.
அதற்கும் மேலாக வாக்கு மோசடிகள் வாக்களிப்புத் தடைகள். உச்சகட்ட மோதல்கள், உயிர் இழப்புக்கள் கொலை அச்சுறுத்தல்கள், கொலை முயற்சிகள் இப்படியாக தென்னிலங்கை கண்டிராத ஒரு மாபெரும் பாரிய பயங்கரமான தேர்தலை நாடு சந்திக்கவுள்ளது.
இவைகளைக் கடந்து மைத்திரி அணி நின்று பிடிக்குமா என்பது ஒரு சந்தேகம்தான்.
2010 ஆம் ஆண்டு முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு ஏற்பட்ட நிலைதான் மைத்திரிக்கும் ஏற்படும் என்று மஹிந்தர் பகிரங்கமாகவே தெரிவித்துள்ளதானது அச்சுறுத்தலின் உச்சக்கட்டம் எனலாம்.
அத்துடன் தனக்கு ஏற்பட்ட நிலை மைத்திரிக்கும் ஏற்படலாம் என்று சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
சிறை வாழ்க்கைக்காக உடம்மை தேற்றிக் கொள்ள வேண்டும் என்றும் சரத் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்.
மற்றது கட்சி மாறிப் போனவர்கள் மற்றும் கட்சி மாறவுள்ளவர்களின் கோவைகள் தன்னிடம் உள்ளதாக ஜனாதிபதி பயம் காட்டுகின்றார். அதனால் கட்சி மாறவுள்ளவர்கள் பயந்து விட்டார்கள்.
ஆனாலும் அரசின் கூட்டில் இருந்து 20 அமைச்சர்களும் எம்பிக்களும் கிளம்பத் தயாராக உள்ளார்கள் என்ற தகவல் இன்னும் பலமாகவே உள்ளது.
தமிழர்கள் வாக்குகள் தான் ஜனாதிபதியை தீர்மானிக்கும்
சிங்கள மக்களை உசுப்பேற்றி சிங்கள மக்களின் வாக்குகள் மூலம் மீண்டும் மூன்றாவது முறையாக தான் ஜனாதிபதியாகலாம் என்று நினைக்கும் மஹிந்தர் இம்முறையும் தமிழர்களின் வாக்குகள் இன்றி ஜனாதிபதியாக முடியாது என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.
காரணம் மஹிந்ருக்கும். மைத்திரிக்கும் சிங்கள மக்களின் வாக்குகள் ஓரளவு சரிசமமாக கிடைத்தால் வெற்றியைத் தீர்மானிப்பதற்கு 51 வீதமான வாக்குத் தேவைப்படும். அப்போது சிறுபான்மை மக்களின் வாக்குகள்தான் வெற்றியைத் தீர்மானிக்கவுள்ளது.
விசேடமாக தமிழ் மக்களின் வாக்குகள்தான் தீர்மானிக்கவுள்ளது. கூட்டமைப்பு தங்களது தீர்மானத்தை தெரிவித்துள்ளது. கூட்டமைப்பைப் பொறுத்தமட்டில் வெளிப்படையாக யாருக்கு வாக்களிப்பது என்பதை தெரிவிக்கமாட்டாது என்பதை தலைவர் சம்பந்தன் தெரிவித்து விட்டார்.
யார் சொன்னாலும் சொல்லா விட்டாலும் தமிழ் மக்கள் ஆட்சி மாற்றம் கோரியே வாக்களிப்பார்கள்.
முஸ்லிம்களைப் பொறுத்தமட்டில் அண்மைக்காலங்களாக முஸ்லிம்கள் மீது சிங்கள இனவாதிகள் நடத்தும் முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கைகளினால் அரசுக்கு எதிராகவே வாக்களிப்பார்கள்.
அதனால் மைத்திரியன் வெற்றி என்பது பிரகாசமாகவே உள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்காது தேர்தலைப் புறக்கணித்து விட்டதனால்தான் ஜனாதிபதியானார்.
இப்போதும் தமிழ் மக்கள் அரசுக்கு வாக்களிக் வேண்டும் அல்லது கடந்த ஜனாதிபதித்; தேர்தல் போன்று இம்முறையும் வாக்களிப்பைத் தவிர்க்க வேண்டும்.
ஆக ஜனாதிபதி எட்டி எட்டி உதைக்கும் தமிழ் மக்களின் வாக்குகள் தனது வெற்றிக்குத் தேவைப்படுகின்றது.
இம்முறையும் சிறுபான்மை மக்கள்தான் ஜனாதிபதியின் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்திகளாக உள்ளார்கள். அதிலும் குறிப்பாக தமிழ் மக்களின் வாக்குகள்தான் ஒட்டுமொத்த வெற்றியைத் தீர்மானிக்கவுள்ளது.
இந்த வகையில்தான் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அரசு தரப்பு வேட்பாளரான ஜனாதிபதி மஹிந்தவை ஆதரிக்கும் நிலைப்பாட்டைத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எடுக்க வேண்டும் என்று அரசின் சார்பாக அமைச்சர் பஷில் ராஜபக்ச பகிரங்கக் கோரிக்கை விடுத்திருந்தார்.
ஆனாலும் அரசு கருணாவைக் கொண்டு ஐ.தே.க மீது பலவகையான தாக்குதல்களை தொடுக்கத் தீர்மானித்துள்ளது. அதையெல்லாம் சிங்கள மக்கள் கணக்கில் எடுப்பார்களா என்பது வேறு கணக்கு.
ஆனால் ஐ.தே.க. ஆட்சிக்கு வந்தால் மீண்டும் புலிகள் எழுச்சி பெறுவார்கள் என்ற புரளியை அரசு எடுத்து விடவுள்ளது.
சகல வளங்களையும் கொண்டுள்ள மஹிந்தவை எதிர்த்து நிற்கக் கூடிய வலிமையான எதிர் கட்சியொன்று நாட்டில் இல்லை. சிங்கள மக்களிடத்தில் ஆட்சி மாற்றத்துக்கான அறிகுறிகள் நிறைந்து காணப்படுகின்றது.
அந்த மாற்றங்களை அறுவடை செய்யக் கூடியவர்களாக ரணிலோ அல்லது சஜித் பிரேமதாசவோ இலலை என்பது மட்டும் தெளிவாகத் தெரிகின்றது.
ஏனெனில் மஹிந்தவுக்குப் போட்டியாக நிற்கக் கூடிய ஒருவரை எதிர் கட்சிகளால் கொண்டு வரமுடியவில்லை. அதனால்தான் அரசின் அணியியிலிருந்து மைத்திரியைக் கொண்டு வந்துள்ளார்கள்.
மற்றும் மஹிந்தவை தோற்கடிக்க அவரது கூட்டில் இருந்து ஒருவரைக் கொண்டுதான் முடியும் என்று எதிரணியினர் நம்புகின்றனர். அதனால்தான் மைத்திரிபாலவை கொண்டு வந்துள்ளனர் எனலாம்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் முழு முயற்சியில்தான் மைத்திரி தெரிவாகியுள்ளார். மஹிந்தர், சந்திரிகா ஊடாக ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டாலும் கடந்த காலங்களாக மஹிந்தர் சந்திரிகாவைப் படாதபாடு படுத்திவிட்டார் என்ற தவலும் உள்ளது.
ஆனால் சந்திரிகாவும் பொறுமையாக இருந்து சமயம் பார்த்து மஹிந்தருக்கு எதிரான யுத்தம் ஒன்றை ஆரம்பித்துள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும்.
மைத்திரியை ரணிலும் ஐ.தே.க.யும் ஆதரித்ததன் மூலம் ரணிலுக்கான நிகழ்ச்சி நிரல் என்றும் உள்ளது. ரணில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடாது போனால் கரு ஜெயசூரியவை நிறுத்துவது என்ற முடிவில்தான் ரணில் இருந்தார்.
ஆனால் கருவை களமிறக்கி கரு தோற்று விட்டால் ரணிலின் தலைமைத்துவத்திற்கு ஆபத்து ஏற்பட்டு விடும். மைத்திரி வெற்றியடைந்தால் 3 மாதத்தின் பின்பு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட்டு ரணிலுக்கு அதிகாரம் கொண்ட பிரதமர் பதவி வழங்கப்படும் என்று ஒப்பந்தம் ஒன்றை ரணிலும் மைத்திரியும் கடந்த வாரம் செய்துள்ளார்கள்.
அதன் மூலம் ரணில் மிகவும் சுலபமாக பிரதமர் பதவியை அடைகின்றார்.
மைத்திரி வெற்றியடைந்தால் மிகவும் சுலபமான வகையில் ரணில் பிரதமராகலாம் என்ற நிலையுள்ளது.
அத்துடன் மைத்திரி வெற்றியடைந்தால் மஹிந்தவின் குடும்பத்தினர் புதிய ஆட்சி மூலம் பலவகையான சிக்ல்களை எதிர்நோக்கலாம், உச்சக்கட்ட பழிவாங்கலுக்கும் உள்ளாகலாம்.
ஆனால் ஆட்சி மாற்றம் வேண்டும் என்றும் ஆள் மாற்றம் வேண்டும் என்றும் அப்பாவி மைத்திரி பலிக்கடாவாகி விடுவாரோ என்ற அச்சம் பெருமளவு காணப்படுன்றது.
மஹிந்தராக இருக்கட்டும் அல்லது மைத்திரியாக இருக்கட்டும் இந்த ஜனாதிபதித் தேர்தல் என்பது இருவருக்கும் வாழ்வா சாவா என்ற ஒரு கனதியான போராட்டத்தில் இறங்கியுள்ளார்கள்.
எம்.எம்.நிலாம்டீன்.
mmnilamuk@gmail.com
http://www.tamilwin.com/show-RUmszCTVKZlu7.html

Geen opmerkingen:

Een reactie posten