தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 1 juni 2014

படையினரைப் பாதுகாக்க அரசாங்கம் முனைவது ஏன்?

கொலைகாரர்களை விட கழுதைகள் சிறந்தவை!- ஜே.வி.பிக்கு அஸ்வர் பதில்
[ ஞாயிற்றுக்கிழமை, 01 யூன் 2014, 05:44.11 AM GMT ]
புத்தளம் கழுதைக்கு இருக்கும் அறிவு கூட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வருக்கு இல்லை என்று ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் அந்துன்நெத்தி தெரிவித்திருந்தமைக்கு அஸ்வர் பதிலளித்துள்ளார்.
அது குறித்து அஸ்வர் மேலும் தெரிவிக்கையில்,
கொலைகளை செய்த கொலைகாரர்களை விட கழுதைகள் மிகவும் சிறந்தவை.
மனிதர்களை கொலை செய்த, மனிதர்களை சித்திரவதை செய்த ஜே.வி.பிக்கு ஒழுக்கமோ, கலாசார பண்புகளோ இல்லை.
ஜே.வி.பியினர் இந்த நாட்டை அழித்தவர்கள். எனக்கு அது பற்றி கவலையில்லை. எவ்வாறாயினும் கொலைக்காரர்களை விட கழுதைகள் சிறந்தவை.
புத்தளத்தில் இருந்து பண்டைய காலத்தில் மத்திய மலை நாட்டுக்கு கழுதைகளை பயன்படுத்தியே உப்பு கொண்டு செல்லப்பட்டது.
கழுதை என்ற மிருகம் மனிதர்களுக்கு குறைந்த பட்சம் அப்படியான சேவையை செய்தது. கொலை செய்யவில்லை எனவும் அஸ்வர் கூறியுள்ளார்.
படையினரைப் பாதுகாக்க அரசாங்கம் முனைவது ஏன்?
[ ஞாயிற்றுக்கிழமை, 01 யூன் 2014, 06:44.32 AM GMT ]
வெலிவேரியவில் சுத்தமான குடிநீருக்காக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டதாகக் கூறப்படும் பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்தன, துருக்கியில் உள்ள இலங்கைத் தூதரகத்தில், இராணுவ ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 
பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க. விடம் இருந்து மட்டுமன்றி, வேறும் சில கட்சிகளும், அரசியல் தலைவர்களும் இதற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு வெலிவேரியவில் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவத்தில், இரண்டு மாணவர்கள் உள்ளிட்ட மூன்று பேர் கொல்லப்பட்டதுடன் 37 பொதுமக்கள் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவம் அரசாங்கத்துக்கு கடும் கண்டனங்களை ஏற்படுத்தியிருந்தது.
அமெரிக்கா போன்ற நாடுகள் இதனைக் கண்டித்திருந்ததுடன், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அறிக்கைகளிலும் தீர்மானத்திலும் கூட இதுகுறித்து விமர்சிக்கப்பட்டிருந்தது.
இந்தச் சம்பவத்துக்குப் பொறுப்பானவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்று சர்வதேச அளவில் அழுத்தங்கள் கொடுக்கப்பட்ட போதிலும், இதுவரை அதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படவில்லை.
வடக்கில் மட்டுமன்றி, தெற்கிலும் கூட, இலங்கை இராணுவம், ஒரே மாதிரித் தான் நடந்து கொள்ளும் என்பதை � 1989 இல் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட ஜே.வி.பி கிளர்ச்சிக்குப் பின்னர், தென்னிலங்கை மக்களுக்கு நிரூபித்த சம்பவம் அது.
இதற்கு தெற்கில் கடும் எதிர்ப்புக் கிளம்பியதையடுத்து, அப்போது 14-2 ஆவது பிரிகேட் தளபதியாக இருந்த பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்தன, அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, தனது படைப்பிரிவுத் தலைமையகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்.
நீதிமன்ற விசாரணைகளுக்குப் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக இராணுவத் தலைமையகம் கூறியிருந்தது.
அதாவது, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் தவறில்லை என்பதே இராணுவத் தரப்பின் நியாயமாக இருந்தது.
இப்போது பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்தன, துருக்கிக்கான இலங்கைத் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகராக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இதனை அரசாங்கம் இரகசியமாகவே செய்த போதும், ஊடகங்கள் வெளிச்சத்துக்கு கொண்டு வந்து விட்டன.
இராணுவத் தலைமையகம், இப்போது இதனை ஏற்றுக்கொண்டுள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் ஆற்றிய பங்களிப்பைக் கௌரவிக்கும் வகையிலேயே, பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்தனவுக்கு வெளிநாட்டில் உள்ள தூதரகம் ஒன்றில், இராணுவ ஆலோசகர் பதவி வழங்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய குறிப்பிட்டுள்ளார்.
போர் முடிவுக்கு வந்த பின்னர், சேவையில் உள்ள இராணுவ அதிகாரிகளையும், ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளையும், வெளிநாடுகளில் இராஜதந்திரப் பதவிகளுக்கு அமர்த்துவது அரசாங்கத்தின் வழக்கமாகி விட்டது.
வெளிநாடுகளில் உள்ள தூதரகங்களில், பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்கு படை அதிகாரிகள் தான் நியமிக்கப்படுவதுண்டு.
அத்தகைய பதவியில் தான் பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆனால், தூதரகத்தின் இரண்டாவது நிலைப் பொறுப்பில் � பிரதித் தூதுவராக படை அதிகாரிகளை நியமிப்பது போருக்குப் பின்னர் அதிகமாகியுள்ளது.
இதற்கு முன்னர் பெரும்பாலும் ஓய்வுபெற்ற படைத் தளபதிகளே தூதுவர் பதவிக்கு நியமிக்கப்பட்டனர்.
2009 ஆம் ஆண்டு போர் இறுதிக்கட்டத்தை எட்டியிருந்த போது, முதல் முறையாக சேவையில் இருந்த இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் உதய பெரேராவை மலேஷியாவுக்கான பிரதித் தூதுவராக அரசாங்கம் நியமித்தது.
இராணுவத்தின் நடவடிக்கைப் பணிப்பாளராக இருந்த அவரை மலேஷியாவுக்கு அனுப்பிய அரசாங்கம், அவர் மூலமே, பிரபாகரனுக்கு அடுத்ததாக, புலிகள் இயக்கத்தின் தலைமையை பொறுப்பேற்ற கே.பி. எனப்படும் செல்வராசா பத்மநாதனைப் பிடித்து இலங்கைக்குக் கொண்டு வந்தது.
அதே மேஜர் ஜெனரல் உதய பெரேரா தான், இப்போது யாழ். படைகளின் தலைமையகத் தளபதியாக இருக்கிறார்.
2009ஆம் ஆண்டுக்குப் பின்னர், சேவையில் உள்ள அதிகாரிகளும், ஓய்வுபெற்றவர்களும் அதிகளவில் இராஜதந்திரிகளாக நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
ஜப்பானில் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட தூதுவராக உள்ள நிலையில், பிரதித் தூதுவராக மேஜர் ஜெனரல் விஜேசிறியை அனுப்பியுள்ளது அரசாங்கம்.
அவுஸ்திரேலியத் தூதுவராக முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் திசேர சமரசிங்க, ஐ.நா.வுக்கான பிரதி தூதுவராக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, பிரேஷிலுக்கான பிரதித் தூதுவராக மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, ரஷ்யாவுக்கான பிரதித்தூதுவராக மேஜர் ஜெனரல் கிரிசாந்த டி சில்வா என்று � இராஜதந்திரிகளாக பதவியில் உள்ள படை அதிகாரிகளின் பட்டியல் மிக நீளமானது.
போர் முடிவுக்கு வந்த பின்னர், போர் முனையில் முக்கிய பங்காற்றிய படை அதிகாரிகளுக்கு வெளிநாடுகளில் இரண்டு ஆண்டுகள் இராஜதந்திரப் பதவி வழங்கி கௌரவித்து வருகிறது அரசாங்கம்.
இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ள போதிலும், அரசாங்கம் அதனைக் கண்டுகொள்வதாக இல்லை.
இறுதிக்கட்டப் போரில் பங்கெடுத்த படை அதிகாரிகள் இவ்வாறு வெளிநாடுகளுக்கு இராஜதந்திரிகளாக அனுப்பி வைக்கப்பட்ட போது, அவர்கள் நெருக்கடிகளையும் சந்திக்க நேர்ந்துள்ளது.
குறிப்பாக, ஜேர்மனிக்கான பிரதித் தூதுவராக இருந்த மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸுக்கு எதிராகக் குற்றச்சாட்டு ஒன்று சுவிஸ் நீதிமன்றில் முன்வைக்கப்பட்டது.
மேஜர் ஜெனரல் பிரசன்ன டி சில்வாவை லண்டனில் கைது செய்வதற்கு கோரும் மனுவும் நீதிமன்றத்துக்கு சென்றது.
இவ்வாறு சர்ச்சைகளை உருவாக்கிய போதிலும், அரசாங்கம், படை அதிகாரிகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவதை மட்டும் நிறுத்தவில்லை.
இறுதிக்கட்டப் போரில், குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான இராணுவ அதிகாரிகளை வெளிநாடுகளில் பணியாற்ற அனுப்பிய போது, தெற்கில் கிளம்பாத எதிர்ப்பு, வெலிவேரியவில் தாக்குதல் நடத்த உத்தரவிட்ட பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்த்தன நியமிக்கப்பட்ட போது எழுந்திருக்கிறது.
ஆனால், இந்த எதிர்ப்புகளையெல்லாம் அரசாங்கம் நிராகரித்து விட்டது.
போரில் ஆற்றிய பங்களிப்புக்கான கௌரவிப்பே இது என்று எதிர்க்கட்சிகளின் வாயை அடைத்துள்ளது அரசாங்கம்.
அவ்வாறாயின் வெலிவேரிய தாக்குதலுக்கான பொறுப்புக்கூறுவது யார் என்று தெற்கில் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
தேவைப்பட்டால், விசாரணைக்காக பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்தனவைத் திருப்பி அழைக்கலாம் என்கிறது இராணுவம்.
போரில் சிறப்பாகப் பணியாற்றிய படை அதிகாரிகள் எவரும் தண்டிக்கப்படக் கூடாது என்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது.
இதனால் தான், வெலிவேரிய தாக்குதலில் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்படும் படை அதிகாரிகள், தண்டிக்கப்படாமல், சரியான நீதி விசாரணைக்குட்படுத்தப்படாமல் தப்பிக் கொண்டனர்.
சர்வதேச சமூகம், குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறவேண்டும் என்று வலியுறுத்தினாலும், அரசாங்கம் அதனைச் செய்யாமல் இழுத்தடித்து வருவதற்கு இதுவே காரணம்.
போரில் பங்கேற்ற படையினர் எவரும் கூண்டில் ஏற்றப்படக் கூடாது என்று அரசாங்கம் வலியுறுத்தி வருவதற்கு, படையினர் மீது கொண்ட அக்கறை மட்டும் காரணமல்ல.
அதுபோலவே, வெளிநாடுகளில் உள்ள தூதரகங்களில், இராஜதந்திரிகளாகப் படை அதிகாரிகள் நியமிக்கப்படுவதற்கும், போரில் அவர்கள் ஆற்றிய பங்களிப்பு மட்டும் காரணமல்ல.
இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்ற மீறல்களின் சாட்சியாளர்கள் அவர்கள் தான். அவர்களுக்குத் தான், என்ன நடந்தது என்று தெரியும் � அதற்கான உத்தரவுகளை வழங்கியது யார் என்று தெரியும்.
அவர்கள் எப்போதும் அரசதரப்பில் இருந்தால் தான், சர்வதேச சமூகத்தை சமாளிக்கலாம். குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிக்கலாம்.
எனவே அவர்களைத் தமது பக்கத்தில் தக்கவைத்திருப்பதற்காகவே, அரசாங்கம், வெலிவேரிய போன்ற பாரதூரமான சம்பவங்களைக் கூட கண்டுகொள்ளாதிருக்கிறது.
வெலிவேரிய சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகளுக்கே, இந்தளவுக்கு விட்டுக் கொடுப்பு என்றால், இறுதிப் போரில் பங்கெடுத்த படை அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுகள் எந்தளவுக்கு கவனத்தில் கொள்ளப்படும் என்ற கேள்வி எழுவதில் நியாயம் உள்ளது.
அரசாங்கமே படை அதிகாரிகளைப் பாதுகாக்க முனைவதால் தான் � அரசாங்கத்தின் சொந்த விசாரணைகளின் மீது சர்வதேச சமூகத்துக்கு நம்பிக்கையில்லாமல் போனது.
அத்தகைய அவநம்பிக்கையை துடைப்பதற்கான ஒரு வாய்ப்பாக இலங்கை இராணுவத்துக்கும் அரசாங்கத்துக்கும் வெலிவேரிய சம்பவம் ஒரு நல்வாய்ப்பாக கிடைத்திருந்தது.
ஆனால், அதை அரசாங்கம் சரிவரப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.
இதனால் தான், குற்றச்சாட்டுக்குள்ளான படையினர் மீது நீதியான விசாரணைகளை அரசாங்கம் முன்னெடுக்கும் என்ற நம்பிக்கை, தமிழ்மக்களிடத்திலும், சர்வதேச சமூகத்திடமும் மட்டுமன்றி தென்னிலங்கை சிங்கள மக்களிடமும் கூட இல்லாது போய் விட்டது.

-சுபத்ரா-
http://www.tamilwin.com/show-RUmsyGTVLZgo7.html

Geen opmerkingen:

Een reactie posten