தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 23 juni 2014

இலங்கையின் ஊடக சுதந்திரம் குறித்து எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு கவலை!

கொலை அச்சுறுத்தல்! சகல ஆதாரங்களுடனும் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளேன்: சிறீதரன் எம்.பி
[ திங்கட்கிழமை, 23 யூன் 2014, 07:56.55 AM GMT ]
முஸ்லிம் மக்களுக்குச் சார்பாக போராட்டம் நடத்தினால் உன்னைக் கொல்வேன் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனுக்கு தொலைபேசியில் இனந்தெரியாத நபர் ஒருவர் கொலை அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் கிளிநொச்சி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக சிறீதரன் எம்.பி தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் இடம்பெற்ற மேற்படிச் சம்பவம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினருடன் தொடர்புகொண்டு கேட்டபோது,
தென்னிலங்கையில் அளுத்கம, பேருவளை, தர்காநகர் போன்ற பகுதிகளில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைச் சம்பவங்களை கண்டித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பும், தமிழ்த் தேசிய மக் கள் முன்னணியும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை யாழ்.நகரில் நடத்தியிருந்தோம்.
இந்நிலையில் நேற்றைய தினம் (நேற்று முன்தினம்) சனிக்கிழமை காலை தமிழரசு கட்சியின் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் காலை 10.46 மணியளவில் 0771171737என்ற தொலைபேசி இலக்கத்திலிருந்து எனக்கு அழைப்பு வந்தது.
ஆனால் நான் கூட்டத்தில் இருந்தமையினால் அதனை எடுக்கவில்லை. பின்னர் கூட்டம் முடிந்ததும் மாலை 2.52 மணிக்கு அந்த இலக்கத்திற்கு நான் தொலைபேசி அழைப்பை எடுத்திருந்தேன்.
அதற்கு பதில் கிடைக்காத நிலையில் மீண்டும் மாலை 3.06ற்கு அந்த இலக்கத்திலிருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது.
இதனையடுத்து நான் அழைப்பை எடுத்தபோது மிக தீய வார்த்தைகளால் பேசியதுடன், முஸ்லிம் மக்களுக்குச் சார்பாக போராட்டம் நடத்துகிறாயோ? உன்னைக் கொல்ல வேண்டும். மேலும் உன்னைப்போன்ற சிலரை கொன்றால் மட்டுமே, தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு புத்திவரும் என பேசி தீர்த்தார்.
பின்னர் மாலை 3.11ற்கு மீண்டும் அழைப்பை எடுத்து அதேபோன்று பேசிக் கொண்டிருந்தார். ஆனால் மிக அமைதியாக உங்களுடைய பிரச்சினைகள் தொடர்பாக நேரில் வந்துபேசுங்கள் என நான் கூறியிருந்தேன்.
ஆனால் அவர் என்னை நேரில் அழைத்து அச்சுறுத்தப் பார்க்கிறாயோ எனக்கேட்டதுடன், கட்சி தொடர்பாகவும், முஸ்லிம் மக்கள் தொடர்பாகவும் கடுமையாக அவர் பேசிக்கொண்டார்.
அதன் பின்னர் நான் அவருக்கு கூறினேன். நாங்கள் பொலிஸில் சந்தித்துப் பேசுவோம் என கூறியதுடன், தொலைபேசியைத் துண்டித்துக் கொண்டேன். பின்னர் எனக்கு தொலைபேசியில் அழைப்பு எடுத்தவருடைய தொலைபேசி இலக்கத்தை எனது நண்பர் ஒருவருக்கு எஸ்.எம்.எஸ் ஊடாக அனுப்பியபோது,
தவறுதலாக அந்த எஸ்.எம்.எஸ் எனக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தவருடைய இலக்கத்திற்கும் சென்றுவிட்டது. அதன் பின்னர் அவருடைய இலக்கத்திலிருந்து எனக்கு தன்னிச்சையாக பதிலளிக்கும் எஸ்.எம்.எஸ் கிடை க்கப் பெற்றது. அந்த தன்னிச்சை எஸ்.எம்.எஸின் முடிவில் தமிழ் நாதம்.கொம் என குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
எனவே அந்த சகல ஆதாரங்களுடனும், நான் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்குச் சென்று மாலை 4 மணியளவில் முறைப்பாடு கொடுத்திருந்தேன். அதற்கமைவாக இன்றைய தினம் (நேற்று ஞாயிற்றுக் கிழமை) எனது அலுவலகத்திற்கு வந்து முறைப்பாடு பெற்றுச் சென்றிருக்கின்றார்கள்.
இந்நிலையில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட வன்முறைகளுக்கு முஸ்லிம் மக்களுடன் இணைந்து நாமும் நியாயம் கேட்டது, வெறுமனே அரசாங்கத்திற்கு மட்டுமல்லாமல், அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் சில தரப்புக்களுக்கும் பெரும் கோபத்தை உண்டாக்கியிருப்பது தெளிவாக தெரிகின்றது.
ஆனால் நாம் பாதிக்கப்பட்ட ஒரு சிறுபான்மை தரப்பு என்றவகையில் பாதிக்கப்படும் மற்றொரு சிறுபான்மை தரப்பிற்காக குரல் கொடுப்பது எங்கள் கடமை. அதனை தொடர்ந்து செய்வோம் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRXLaft4.html
புத்தளம் விமான ஓடுபாதை புனரமைப்பு! காணி ஆக்கிரமிப்பில் பசில்
[ திங்கட்கிழமை, 23 யூன் 2014, 08:12.18 AM GMT ]
புத்தளம், பாலாவி பிரதேசத்தில் அமைந்துள்ள விமான ஓடுபாதையை புனரமைத்து, அப்பகுதியில் பெரும் பரப்பிலான காணிகளைக் கைப்பற்றும் நடவடிக்கைகளில் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் கவனம் திரும்பியு்ளளது. 

புத்தளம், பாலாவி பிரதேசத்தில் அமைந்துள்ள விமான ஓடுபாதை சுமார் இரண்டு கிலோமீற்றர் தூரம் கொண்டதாகும். தற்போதைய நிலையில் இந்த விமான ஓடுபாதை கைவிடப்பட்ட நிலையில் உள்ளது.

இந்நிலையில் கற்பிட்டி சுற்றுலா வலயம், டொல்பின் மற்றும் திமிங்கிலங்கள் செரிந்து வாழும் கடற்பிராந்தியம், வில்பத்து சரணாலயம் போன்ற இடங்களை பார்வையிடுவதற்காக அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் செல்கின்றனர்.

இதன் காரணமாக பாலாவி விமான ஓடுபாதையை புனரமைப்பதன் ஊடாக அப்பிரதேசத்தின் சுற்றுலாத் தொழில் துறையை அபிவிருத்தி செய்யும் போர்வையில் பெருமளவான காணிகளை ஆக்கிரமிப்புச் செய்வதற்கு அமைச்சர் பசில் ராஜபக்ஷ காய் நகர்த்தி வருவதாக தெரிய வந்துள்ளது.
குறித்த பிரதேசத்தில் இறால் பண்ணை மற்றும் சுற்றுலா ஹோட்டல் என்பவற்றை நிர்மாணிக்க அமைச்சர் பசில் ராஜபக்ஷ திட்டமிட்டுள்ளதாகவும் மேலும் தெரிய வந்துள்ளது.
மேலும் இதே அடிப்படையில் மட்டக்களப்பு விமான ஓடுதளத்தையும் அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmsyGRXLaft5.html
இலங்கையின் ஊடக சுதந்திரம் குறித்து எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு கவலை
[ திங்கட்கிழமை, 23 யூன் 2014, 08:27.10 AM GMT ]
இலங்கையின் ஊடக சுதந்திர நிலைமைகள் குறித்து எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
இலங்கையில் உள்ள ஊடக சுதந்திர நிலைமைகள் குறித்து திருப்தி அடைய முடியாதுள்ளது என்றும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
அண்மையில் அளுத்கமவில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைகளின் போது செய்திகள் சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டியே அந்த அமைப்பு மேற்கண்டவாறு கூறியுள்ளது.
அந்தப் பகுதிகளுக்குச் சென்ற ஊடகவியலாளர்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது என்று தெரிவித்துள்ள அந்த அமைப்பு, சண்டே லீடர் ஊடகத்தின் ஊடகவியலாளர்கள் உட்படச் சிலர் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர் என்றும், பிராந்திய ஊடகவியலாளர்கள் சிலர் தாக்கப்பட்டனர் என்றும் கூறியுள்ளது.
அத்துடன் ஊடகவியலாளர்களின் ஒளிப்படக் கருவி போன்ற சொத்துகளுக்குக் கடுமையான சேதம் விளைக்கப்பட்டிருந்தது என்றும் அந்த அமைப்பு கூறுகின்றது. குறித்த சம்பவங்களை ஊடகங்கள் முழுமையாக வெளியிடுவதற்குத் தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறான சம்பவங்கள் மிகவும் கண்டிக்கத்தக்கன. இதுபோன்ற செயற்பாடுகள் இலங்கையின் ஊடக சுதந்திர நிலைமை குறித்து கேள்வி எழுப்பியுள்ளன என்றும் தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyGRXLaft6.html

Geen opmerkingen:

Een reactie posten