இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் அகதிகளைத் நாட்டுக்குத் திருப்பி அனுப்ப வேண்டாமென அகதிகளுக்கான ஐ.நா. தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் தங்கிருந்தபடி, தஞ்சம் கோரியிருந்த நூற்றுக்கணக்கான பாகிஸ்தான் பிரஜைகளை, இலங்கை அரசாங்கம் அண்மையில் கைது செய்து தடுத்து வைத்துள்ளது.
இது தொடர்பில் இலங்கையிடம் விளக்கம் கோரியுள்ள அகதிகளுக்கான ஐ.நா. முகவர் அமைப்பு, அவர்களை அவர்களது சொந்த நாட்டுக்கு நாடு கடத்த வேண்டாம் என்று கோரிக்கை விடுத்துள்ளது.
அதுமட்டுமின்றி, இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் புகலிடக் கோரிக்கையாளர்களைச் சந்திப்பதற்கும் அகதிகளுக்கான ஐ.நா.தூதரகம் இலங்கை அரசிடம் அனுமதி கோரியுள்ளது.
அகதிகளுக்கான ஐ.நா.தூதரகத்தின் பூர்வாங்கப் புள்ளிவிவரங்களின்படி தடுத்து வைக்கப்பட்டுள்ள 142 பாகிஸ்தான் அகதிகளில் 141 பேர் பூஸாவில் உள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவு தடுப்பு முகாமிலும், ஒருவர் மிரிஹான குடிவரவு, குடியகல்வு பிரிவிலும் காவலில் உள்ளனர்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள இவர்கள் அனைவருமே ஆண்கள். பெரும்பான்மையானோர் அஹமதியா சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர் 17 வயதுடையவர். மூவர் மருத்துவக் கண்காணிப்பில் இருக்க வேண்டியவர்கள். இருவர் மாற்றுத் திறனாளிகள்.
கடந்த மே 27 ஆம் திகதி புதுடில்லியில் புதிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்தித்த சமயம், இந்தியப் பிரதமர் தரப்பில் எழுப்பப்பட்ட சில ஆட்சேபனைகளை அடுத்தே இலங்கையில் தஞ்சம் கோரிய நிலையில் தங்கியிருந்த பாகிஸ்தானியர் சுற்றிவளைத்துப் பிடிக்கப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகின்றது.
Geen opmerkingen:
Een reactie posten