தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 22 juni 2014

ஜெனிவாவில் எதிரொலித்தது அளுத்கம வன்முறை ( படங்கள் இணைப்பு)

போருக்கு முன்னும் பின்னும் இலங்கையில் பாலியல் பலாத்காரம் (படம் இணைப்பு)
போருக்குப் பின்னான சிறிலங்காவானது மிகப் பயங்கரமான சூழலைக் கொண்டுள்ளதாக லண்டனில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகளைத் தடுத்து நிறுத்துவதற்கான மாநாட்டில் கலந்து கொண்ட மனித உரிமைச் சட்டவாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டினர்.

மூன்று இளைஞர்கள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட உண்மைச் சம்பவத்தைச் சித்தரித்து உருவாக்கப்பட்ட Unlocked என்கின்ற நாடகத்தை 25 வயதான ராஜ் என்கின்ற தமிழ் மாணவர் பார்த்தார். இந்த நாடத்தில் நடித்த கலைஞர் ஒருவர் ராஜ் தனது வாழ்வில் சந்தித்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதாபாத்திரத்தைத் தேர்ந்தெடுத்திருந்தார். சிறிலங்காவைச் சொந்த இடமாகக் கொண்ட ராஜ் தனது நாட்டின் சிறைக்கம்பிகளுக்குள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டார். இவர் தற்போது தனது சொந்த நாட்டிலிருந்து பல மைல்கள் தூரத்தில் உள்ள லண்டனில் வாழ்ந்தாலும் கூட, இவருக்குள் இந்தக் கசப்பான நினைவுகள் பாதிப்பைச் செலுத்துகின்றன.
"நான் பல மாதங்களாக ஒரே சிறையில் அடைத்து வைக்கப்பட்டேன். அங்கு கட்டில்கள் இல்லை. யன்னல்கள் இல்லை. ஒரேயோரு விரிப்பு மட்டுமே இருந்தது. தலையணிகள் இல்லை. நான் எப்போதும் சிறைக் கூட்டின் மூலையொன்றில் இருப்பேன். எந்தவேளையிலும் எனக்கு எதுவும் நடக்கலாம் என நான் அச்சமுற்றேன். அதனை நினைவுபடுத்த நான் விரும்பவில்லை. நான் எப்போதும் எனது அம்மாவின் பெயரை அழைப்பேன். பிரார்த்தனையில் ஈடுபடுவேன்" என்கிறார் ராஜ்.

ராஜ் தனது சொந்த நாட்டில் அதிகம் சித்திரவதைப்படுத்தப்பட்டார் என்பதை நாடகம் மூலம் அறியமுடிந்தது. இவர் தனது வாழ்வில் சாதாரண மனிதன் சந்திக்கக் கூடிய துன்பங்களுக்கு அதிகமான சுமைகளைத் தாங்கியுள்ளார். இவரால் பேசமுடியவில்லை. இவரது கண்களில் நீர் நிரம்பியிருந்தது. நாடகம் தொடங்கி சிறிது நேரத்தில் இவர் மாநாட்டு மண்டபத்தை விட்டு வெளியேறி தேம்ஸ் நதிக்கரையோரமாக நடந்தார்.

"நான் எனது சுயமதிப்பை இழந்துவிட்டேன். நான் வாழ்வில் நிறைய அனுபவித்துவிட்டேன். இந்தக் கசப்பான நினைவுகளிலிருந்து நான் எப்போதாவது மீளமுடியுமா?" என ராஜ் வினவினார். மோதல் இடம்பெற்ற நாடுகளில் பாலியல் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அனைத்துலக மாநாட்டில் நடிகை அஞ்சலீனா ஜோலி மற்றும் பிரித்தானிய வெளியுறவுச் செயலர் வில்லியம் ஹேக் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். இந்த மாநாட்டு மண்டபத்தின் சுவர்களில் போரால் பாதிக்கப்பட்டவர்களின் ஒளிப்படங்கள் காண்பிக்கப்பட்டதானது ராஜ்ஜின் மனதை மேலும் வேதனையை ஏற்படுத்தியது.

அரசியல்வாதிகள் மற்றும் திரையுலக நட்சத்திரங்கள் எனப் பல்வேறுபட்டவர்களையும் லண்டன் டொக்லண்ட்டில் ஒன்றுசேர்த்த நான்கு நாள் உச்சிமாநாடானது, பாலியல் வன்முறைகளைப் புரிந்த குற்றவாளிகள் எளிதில் தப்பித்துக் கொள்ளவிடாது, அவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுப்பதை மேலும் இறுக்கமாக்குகின்ற அனைத்துலக கோட்பாடொன்றை உருவாக்குவதை நோக்காகக் கொண்டிருந்தது.

இந்த உச்சிமாநாட்டில், மனித உரிமைச் சட்டவாளர் அமல் அல்முடின், வடிவமைப்பாளர் ஸ்ரெலா மக்காற்னி, பியன்கா ஜகர், வெளியுறவுச் செயலர் ஜோன் ஹெறி போன்ற பல வெளியுறவு அமைச்சர்கள், ஐ.நா வின் மோதல்கள் இடம்பெறும் நாடுகளில் மேற்கொள்ளப்படும் பாலியல் வன்முறைகள் தொடர்பான வதிவிட வல்லுனர் சைனப் ஹாவா பன்குவாரா மற்றும் தென்சூடானுக்கான ஐ.நா பிரதிநிதி ஹில்டே ஜோன்சன் போன்ற பலர் கலந்துகொண்டிருந்தனர். அத்துடன் ராஜ் போன்ற பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

"போர் வலயத்தில் இடம்பெறும் பாலியல் வன்புணர்வுகள் வெளியுலகிற்குத் தெரிவதில்லை" என ஜோலி தெரிவித்தார். "இது உண்மைதான். பாலியல் குற்றங்கள் வெளிப்படுத்தப்பட வேண்டும். நவீன உலகில் தொலைத்தொடர்பாடலானது முன்னேற்றமடைந்துள்ள போதிலும், இவ்வாறான குற்றங்கள் உலகிற்கு இருட்டடிப்புச் செய்யப்பட்டன. ஆனால் தற்போது இந்த நிலை மாற்றமடைந்து வருகிறது" என ஹேக் தெரிவித்தார். ராஜ்ஜின் கதையானது மிகவும் வேதனைமிக்க போதிலும் இது சிறிலங்காவில் புதியதொன்றல்ல. சிறிலங்கா அரசாங்கமானது ராஜ் ஒரு தமிழ்ப் புலி எனக் குற்றம்சாட்டியது. ஆனால் தான் ஒருபோதும் ஆயுதம் தூக்கவில்லை எனவும் புலிகள் அமைப்பில் அங்கம் வகிக்கவில்லை எனவும் தனக்கு வன்முறை என்றால் பிடிக்காது எனவும் ராஜ் கூறுகிறார்.

போருக்குப் பின்னான சிறிலங்காவானது மிகப் பயங்கரமான சூழலைக் கொண்டுள்ளதாக லண்டனில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகளைத் தடுத்து நிறுத்துவதற்கான மாநாட்டில் கலந்து கொண்ட மனித உரிமைச் சட்டவாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டினர். சிறிலங்காவானது அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தவர்களால் ஆளப்படும் ஒரு குடும்ப ஆட்சி நிலவும் நாடாகும். இங்கு நீதி மற்றும் சட்டம் போன்றன மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

சிறிலங்கா அரசாங்கப் படைகளால் தமிழ்ப் புலிகள் அழிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகளின் பின்னரும் கடத்தல்கள், சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள் போன்றன தொடர்கின்றன. குறிப்பாக சிறிலங்காவில் வாழும் சிறுபான்மைத் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் தொடர்ந்தும் சித்திரவதைகளுக்கு உள்ளாகுகின்றனர்.

"இவ்வாறான சம்பவங்களைப் பார்க்கும் போது போர் இன்னமும் முடியவில்லை எனக் கருதலாம். குறிப்பாக, தமிழ்ப் புலிகளுடன் தொடர்பைப் பேணிய இளம் ஆண்கள் மற்றும் பெண்கள் தற்போதும் கடத்தப்படுகின்றனர். படுகொலை செய்யப்படுகின்றனர். இது ஐந்து ஆண்டுகளாகத் தொடர்கின்றன" என சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தத்தை சாட்சியப்படுத்தும் Still Counting the Dead என்கின்ற நூலில் இதன் ஆசிரியரான பிரான்சிஸ் ஹரிசன் குறிப்பிட்டுள்ளார்.

முகங்களை அடையாளங் காண்பிக்கும் புலனாய்வு சார் மென்பொருட்கள் மற்றும் துப்புக் கொடுப்பவர்கள் மூலம் பெறப்படும் தகவல்களைக் கொண்டு சிறிலங்காவில் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதாக ஹரிசன் தெரிவித்துள்ளார். சோமாலியா, தென்னாபிரிக்கா, சிரியா, ஆப்கானிஸ்தான் மற்றும் பல்கன்ஸ் போன்ற நாடுகளில் இடம்பெற்ற போரினால் பாதிக்கப்பட்டவர்கள் போலல்லாது சிறிலங்காவில் உள்ள தமிழ் ஆர்வலர்கள் தமது நாட்டில் பாதிப்படைந்தவர்களுக்காக ஒன்றாக இணைந்து குரல்கொடுப்பதில் இடர்களைச் சந்திக்கின்றனர்.

"போர் இடம்பெற்ற காலத்தில் நான் சிறிலங்காவை கொங்கோ மற்றும் பொஸ்னியா போன்ற நாடுகளுடன் ஒப்பீடு செய்வேன். ஏன் சிறிலங்காவில் இடம்பெறும் மீறல்கள் மட்டும் அறிக்கையிடப்படுவதில்லை? இது மூடிமறைக்கப்பட்ட யுத்தத்தில் அதிகம் இடம்பெற்றுள்ளது. பிரித்தானியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் தற்போதும் சிறிலங்காவுடன் தமது தொடர்பைப் பேண விரும்புகின்றன" என மோதல் சமரசம் மற்றும் மீளெழுகைக்கான மையத்தைச் சேர்ந்த அமெரிக்காவில் வாழும் இலங்கையரான நிம்மி கௌரிநாதன் தெரிவித்தார்.

"கடத்தல், பலவந்தமாகத் தடுத்து வைக்கப்படல், பாலியல் வன்புணர்வுகள், பாலியல் வன்முறைகள் போன்றன போருக்குப் பின்னான சூழலில் அதிகரித்துள்ளன" என சியாராலியோன் மற்றும் றுவாண்டா போன்ற நாடுகளில் பணிபுரிந்தவரும் பிரித்தானியா மற்றும் வேல்ஸ் ஆகியவற்றுக்கான மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினருமான ஜஸ்மின் சூக்காவால் இவ்வாண்டு வெளியிடப்பட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

"சிறிலங்காவில் மீறல்களுக்கு உட்படுத்தப்பட்டு தப்பித்தவர்களில் இந்த அறிக்கைக்காக நேர்காணல் மேற்கொண்டவர்களில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் சிறிலங்காவுக்கு வெளியே பாதுகாப்பான சூழலை அடைந்த பின்னர் தற்கொலை முயற்சிகளை மேற்கொண்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது" என சூக்காவின் அறிக்கைக்கு அறிமுகவுரை எழுதிய தென்னாபிரிக்க ஆயரான டெஸ்மண்ட் ருற்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

ராஜ்ஜூம் இவர்களில் ஒருவராவார். சிறிலங்காவிலிருந்து தப்பித்து பிரித்தானியாவுக்கு வந்ததன் பின்னர் ராஜ் இரு தடவைகள் தற்கொலைக்கு முயற்சித்தார். பிரித்தானியாவில் இவருக்கான புகலிடம் மறுக்கப்பட்டுள்ளது. இவர் தற்போது நாடு கடத்தப்படவுள்ளார். இவர் நுழைவிசைவை மீறியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். சிறிலங்காச் சிறைகளில் தன்னால் கழிக்கப்பட்ட இருள் படிந்த நாட்களின் நினைவுகளை ராஜ் இன்னமும் மறக்கவில்லை.

"அவர்கள் என்னை நிலத்தில் தள்ளி விழுத்தினார்கள். அவர்கள் எனது உடைகளைக் களைந்தார்கள். எனது மூச்சைத் திணறடித்தார்கள். அவர்கள் என்னை மிக மோசமான முறையில் நடாத்தினார்கள். நான் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டேன். நான் இப்போது சிறிலங்காவிலிருந்து பல மைல்கள் தூரத்தில் உள்ளேன். ஆனால் இந்தச் சம்பவத்தை நினைக்கும் போது என்னால் மூச்சுவிட முடியவில்லை" என்கிறார் ராஜ்.

இந்த மாநாட்டில் கலந்து கொண்ட M.I.A என நன்கு அறியப்படும் பாடகரான மாதங்கி அருள்பிரகாசத்தாலும் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. லண்டனிலில் உள்ள கனேடியத் தூதரகத்தில் உள்ள சிறிய மேடையில், பிரகாசமான பச்சை நிற பட்டு உடை அணிந்திருந்த 38 வயதான சிறிலங்காவைச் சொந்த இடமாகக் கொண்டவரும் தற்போதைய பிரித்தானியப் பாடகருமான மாதங்கி அருள்பிரகாசம் சிறிலங்காவில் இடம்பெற்ற பிறிதொரு கூட்டுப் பாலியல் வன்புணர்வுச் சம்பவத்தை உரத்து வாசித்தார்.

« நீங்கள் என்னைக் கொண்டு செல்ல முடியாது. எனக்கு குழந்தை ஒன்று உள்ளது » என M.I.A கூறியபோது அவரது கைகள் நடுங்கின. « நான் அச்சப்பட்டேன். நான் சித்திரவதைக்கு உள்ளாகப் போகிறேன். நான் கடத்தப்படப் போகிறேன். நான் கொலை செய்யப்படுவதற்கான நேரம் வந்துவிட்டது என நான் கருதினேன் » என மாதங்கி அருள்பிரகாசம் மாநாட்டில் குறிப்பிட்டார்.

அடுத்ததாக தனது முதுகுவலி காரணமாக கைத்தடி ஒன்றின் உதவியுடன் மாநாட்டில் கலந்து கொண்டிருந்த மனித உரிமைச் சட்டவாளரான பியன்கா ஜகர் வெள்ளையினத்தவர்களால் மேற்கொள்ளப்பட்ட பாலியல் வன்புணர்வுச் சம்பவத்தை உரத்து வாசித்த போது அவரது கண்களிலிருந்து நீர் வழிந்தது.

"மற்றவர்களைத் துன்புறுத்துவது பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்துவது போன்றன மிகவும் மோசமான சம்பவங்களாகும். இது ஒருவரை நிர்வாணமாக வெளியில் அனுப்புவதற்குச் சமனாகும்" என சிறிலங்காவில் பாலியல் வன்முறைகளுக்கு உட்பட்ட பலரை நேர்காணல் மேற்கொண்ட ஹரிசன் தெரிவித்தார். சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தில் 40,000 வரையான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதாக ஐ.நா தெரிவிக்கின்ற போதிலும் இந்த எண்ணிக்கை இதன் இரண்டு மடங்காகும் என ஹரிசன் சுட்டிக்காட்டினார். ஆனால் சிறிலங்காவில் பாலியல் வன்புணர்வுகளுக்கு உட்படுத்தப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கையை எவரும் கூறமாட்டார்கள்.

"போர்க் காலத்தில் சிறிலங்காவில் பாலியல் வன்புணர்வுகளுக்கு ஆயிரக்கணக்கானவர்கள் உட்படுத்தப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. ஆனால் போரின் பின்னரே சிறிலங்காவில் பாலியல் வன்புணர்வுகளுக்கு உட்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகும்" என கௌரிநாதன் கூறுகிறார். யார் போரில் வெற்றிபெற்றார்கள் என்பதைக் காண்பிக்கவே இவ்வாறான பாலியல் வன்முறைகள் இடம்பெறுவதாகவும் கௌரிநாதன் கூறினார்.

போரின் பின்னர் சிறிலங்காவில் தமிழ்ப் புலி ஆதரவாளர்கள் உறுப்பினர்கள் போன்றோர் கைதுசெய்யப்படுவதால் பல நூற்றுக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் நீதியற்ற முறையில் கைதுசெய்யப்பட்டு மோசமாக வன்புணர்வுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

28 வயதான ராஜினியும் இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் ஒருவராவார். இவர் புலிகள் அமைப்பிற்காகப் பணிபுரிந்தார். போர்க் காலத்தில் தகவல் வழங்குபவராகவும், பொதிகள் மற்றும் கடிதங்களைப் பரிமாறும் பணியை இவர் மேற்கொண்டார். ஆனால் 2009ல் இவர் இந்தப் பணிகளை நிறுத்திக் கொண்டார். இதன் பின்னர் இவர் சிறிலங்காவின் வடக்கிற்குச் சென்று தனது வாழ்வைப் புதிதாகக் கட்டியெழுப்ப முயற்சித்தார். ஆனால் இவர் மிகவும் அச்சத்தில் வாழ்ந்தார். தான் எப்போதாவது இராணுவத்திடம் பிடிபடுவேன் என அவர் கூறுவார்.

கடந்த வாரம் ஒரு நாள் இவர் கைதுசெய்யப்பட்டார். இவர் வேலையிலிருந்து வீடு திரும்பிய வழியில் வெள்ளை வானொன்றில் கடத்தப்பட்டார். வெள்ளை வானில் வந்தவர்கள் இவரிடம் அடையாள அட்டையைக் காண்பிக்குமாறு கேட்டனர். இவர் விசாரிக்கப்பட்டார். பின்னர் கண்கள் கட்டப்பட்டு கடத்தப்பட்டார். இவர் நிர்வாணமாக்கப்பட்டார். தாக்கப்பட்டார். சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டார். பெற்றோல் நிரப்பப்பட்ட பொலித்தீன் பையொன்றுக்குள் இவரது தலை மறைக்கப்பட்டது. இவரது மார்புகள் உட்பட பல பகுதிகளிலும் சிகரெட்டால் சுடப்பட்டது. தலைகீழாகக் கட்டித்தொங்கவிடப்பட்டார். இவரது தலை நீர் நிரப்பப்பட்ட வாளிக்குள் அமிழ்த்தப்பட்டது. இந்த சித்திரவதைகள் பல நாட்கள் இடம்பெற்றன. இதன் பின்னர் இவர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டார். நாளொன்றில் பல தடவைகள் பல ஆண்களால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டார். இந்தச் சித்திரவதைகள் பல வாரங்களாக இடம்பெற்றன.

ராஜ்ஜைப் போன்று ராஜினியின் குடும்பத்தவர்களும் இவரை சிறையிலிருந்து விடுவிப்பதற்காக இலஞ்சம் செலுத்தினர். போலிக் குற்றச்சாட்டுப் பத்திரம் ஒன்றில் கையெழுத்திட்டார். இவர் கையெழுத்திட்ட பின்னரும் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டார்.

"இவரது உடலில் சிகரெட்டால் சுடப்பட்ட தழும்புகள் உள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பாக பெண்கள் தமது உடல்களில் 30 இற்கு மேற்பட்ட தழும்புகளைக் கொண்டுள்ளனர். இவர்கள் மீண்டும் கைதுசெய்யப்படும் போது ஏற்கனவே சிறையிலிருந்தனர் என்பதை உறுதிப்படுத்த முடியும். இவர்களின் உடல் முழுவதும் இந்த அடையாளங்கள் காணப்படுவதால் சேலை உடுத்துவதன் மூலம் இதனை மறைக்க முடியாது. இதனால் இவர்கள் எப்போதும் பாதிக்கப்பட்டவர்களாகவே உள்ளனர்" என்கிறார் ஹரிசன்.

ராஜினி இந்தியாவுக்கு படகு மூலம் தப்பிச் சென்று பின்னர் பிரித்தானியாவில் புகலிடம் கோரினார். இவராலும் தான் பட்ட அவலங்களை மறக்கமுடியவில்லை. சிறிலங்காவில் இதுவரையில் எவரும் போருக்குப் பின்னான குற்றங்களுக்கு பொறுப்பேற்கவில்லை. ஜோலி மற்றும் ஹேக் போன்றவர்களின் அனைத்துலக சாசனம் வெற்றியுடன் அமுல்படுத்தப்பட்டால், ராஜ் மற்றும் ராஜினி போன்றவர்களைப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியவர்கள் தப்பிக்க முடியாது.


அமெரிக்காவை தளமாகக் கொண்ட Newsweek சஞ்சிகை (Janine di Giovanni )

மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.
22 Jun 2014
http://www.lankaroad.net/index.php?subaction=showfull&id=1403423596&archive=&start_from=&ucat=1&
பொது பல சேனாவைத் தடை செய்ய முடியாது � நிராகரித்தார் ஜனாதிபதி மகிந்த
பொது பல சேனாவைத் தடை செய்ய முடியாது என்ற சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

நேற்றுமுன்தினம் அலரி மாளிகையில் இடம்பெற்ற, ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்களின் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அளுத்கம வன்முறைகளுக்குக் காரணமான பொது பல சேனாவைத் தடை செய்ய வேண்டும் என்று நேற்று முன்தினம் காலையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்கள் ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன் ஆகியோர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதனால், அமைச்சரவைக் கூட்டத்தில் சிறிலங்கா அதிபருடன் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை அலரி மாளிகையில் நடந்த கட்சித் தலைவர்களின் கூட்டத்திலும், பொது பல சேனாவைத் தடை செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரினர்.

அதற்கு சிறிலங்கா அதிபர், பொது பல சேனாவைத் தடை செய்ய முடியாது என்றும், அவ்வாறு செய்தால் அவர்கள் கதாநாயகர்களாகி விடுவர் என்றும் குறிப்பிட்டார்.

அடிப்படைவாத அமைப்புகளைத் தடை செய்வதில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்றும், அதன் மூலம் மதங்களுக்கிடையிலான பிரச்சினை முடிந்து விடும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியலமைப்பை மோசமாக மீறும் செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களைக் கைது செய்திருந்தாலும் கூட, அத்தகைய செயற்பாடுகள் நிறுத்தப்பட்டிருக்காது என்றும் சிறிலங்கா அதிபர் தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் விமல் வீரவன்ச, அளுத்கம வன்முறைகளுக்கு சிங்கள, முஸ்லிம் அடிப்படைவாதிகளே பொறுப்பு என்று குறிப்பிட்டார்.

அதேவேளை, அமைச்சர் சம்பிக்க ரணவக்க, பொது பலசேனவுக்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

அப்போது, குறுக்கிட்ட அமைச்சர் வாசு தேவ நாணயக்கார, பொதுபல சேனாவைப் பாதுகாக்க ஜாதிக ஹெல உறுமய முற்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
22 Jun 2014
http://www.lankaroad.net/index.php?subaction=showfull&id=1403425596&archive=&start_from=&ucat=1&
ஜெனிவாவில் எதிரொலித்தது அளுத்கம வன்முறை ( படங்கள் இணைப்பு)
சிறிலங்காவில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகள் குறித்து ஜெனிவாவில் நடந்து வரும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

நேற்று நடந்த கூட்டத்தில், அளுத்கம வன்முறைகள் குறித்து ஜேர்மனி, கனடா, நோர்வே ஆகிய நாடுகள் பிரச்சினை எழுப்பின.

இதையடுத்து சிறிலங்காவின் ஜெனிவாவுக்கான பிரதி தூதுவர் மனிசா குணசேகர பதில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தார்.

“சிறிலங்கா அரசாங்கம் எந்தவொரு இன அல்லது மத வன்முறைகளையும் மன்னித்ததில்லை.

சம்பவம் தொடர்பான நம்பகமான தகவல்கள் திரட்டப்பட்டு, அரசாங்கம் பொருத்தமான நடவடிக்கையை மேற்கொள்ளும்.

எல்லா மக்கிளனதும். வழிபாட்டு இடங்கள் மற்றும் சொத்துக்களினதும் பாதுகாப்பை சிறிலங்கா அரசாங்கம் உறுதிசெய்யும் என்று இந்த சபைக்கு உறுதிமொழி அளிக்கிறது.

இந்த வன்முறைகளில், 2 முஸ்லிம்கள் ஒரு தமிழர் என மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.

6 காவல்துறையினர் உள்ளிட்ட 13 சிங்களவர்கள், 13 முஸ்லிம்கள் என 26 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இரு சமூகங்களினதும், 69 வீடுகள், 83 கடைகள், 11 வாகனங்கள் சேதமாக்கப்பட்டன.

தற்போது நிலைமைகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதுடன், விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

28 சிங்களவர்கள், 17 முஸ்லிம்கள் என 43 பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.

அவர்களில், 12 சிங்களவர்கள், 5 முஸ்லிம்கள் என 17 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
.Colombo-Muslim

Colombo-Muslim-02
Colombo-Muslim-01
Colombo-Muslim-03
Colombo-Muslim-04
Colombo-Muslim-06
Muslims-Sri-Lanka
Bananthurai-01
Bananthurai-02
Bananthurai-03
Bananthurai-05
Bananthurai-04
Bananthurai-08
Bananthurai-07
Bananthurai-06
22 Jun 2014
http://www.lankaroad.net/index.php?subaction=showfull&id=1403425844&archive=&start_from=&ucat=1&

Geen opmerkingen:

Een reactie posten