“சமீப காலங்களில் நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் சிரியா, மற்றும் ஈராக்கில் இருந்து பிரிட்டனுக்குள் வந்து இறங்கியுள்ளார்கள்” என கூறி அதிர வைத்திருக்கிறார், பிரிட்டிஷ் உளவுத்துறை எம்.ஐ.-6ன் முன்னாள் பயங்கரவாத தடுப்புப் பிரிவின் தலைவர். அவர் கொடுத்துள்ள அதிர்ச்சி அத்துடன் முடியவில்லை. “இவர்களை பிரிட்டனுக்குள் தேடிப் பிடிப்பது, பிரிட்டிஷ் உளவுத்துறைகளால் இயலாத காரியம். ஏதாவது குண்டு வெடித்த பின்னர்தான், இவர்களில் சிலரையாவது ட்ராக்-டவுன் பண்ண முடியும்” என்றும் கூறியுள்ளார் அவர்.
எம்.ஐ.-6ன் முன்னாள் பயங்கரவாத தடுப்புப் பிரிவின் தலைவர் ரிச்சார்ட் பாரெட், பிரிட்டிஷ் உளவுத்துறை பணியைவிட மேலதிகமாக சுமார் 10 ஆண்டுகள் ஐ.நா.வுக்காக தலிபான்களை உளவு பார்த்த அனுபவம் கொண்டவர். இதனால், தீவிரவாத இயக்கத்தினரின் நடைமுறைகளை நன்கு அறிந்தவர். தமக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில், “பிரிட்டிஷ் பிரஜைகளான சுமார் 300 பேர், சமீப காலங்களில் சிரியா, மற்றும் ஈராக்கில் யுத்த முனைகளில் சண்டையிட்டுவிட்டு, பிரிட்டன் திரும்பியுள்ளார்கள். இவர்களில் ஒரு குறிப்பிட்ட சதவீதமானவர்களாவது, பிரிட்டனுக்குள் தீவிரவாத தாக்குதல் களை செய்யும் திட்டத்துடன் வந்திருக்கலாம். இவர்கள் யாரும் பிரிட்டனுக்கு புதிய ஆட்கள் அல்ல. ஏற்கனவே இங்கு வசித்த, பிரிட்டிஷ் பிரஜைகள். இதனால், இவர்கள் நடையுடை பாவனைகளில் எந்த வித்தியாசத்தையும் கண்டுபிடிக்க முடியாது.
சாதாரண பொதுமக்களோடு பொதுமக்களாக இவர்கள் கலந்துள்ளனர்.
நீங்கள் லண்டன் சிட்டி பஸ்ஸில் பயணிக்கும்போது அருகில் அமர்ந்துள்ள நபர், சில வாரங்களுக்கு முன் சிரியாவிலோ, ஈராக்கிலோ யுத்தம் புரிந்து கொண்டு இருந்தவராக இருக்கலாம். இதனால், இவர்களை ட்ராக்டவுன் செய்வது, பிரிட்டிஷ் உளவுத்துறைகளுக்கு இயலாத காரியம். அதுதான், தற்போது உளவுத்துறைகள் திணற வேண்டியுள்ளது. 300 பேரை விடுங்கள். அதில் மூன்றில் ஒரு தொகையினரை கூட, கண்டுபிடிக்க வேண்டும் என்றால், பிரிட்டிஷ் உளவுத்துறைகளுக்கு பல மாதங்கள் பிடிக்கும். அதற்குள் அவர்களில் சிலர், தமது திட்டத்தை நிறைவேற்றி விடலாம்” என்கிறார் ரிச்சார்ட் பாரெட். ஐ.நா.விடம் உள்ள தகவல்களின் அடிப்படையில், சிரியாவில் யுத்தம் தொடங்கிய காலத்தில் இருந்து சுமார் 12,000 வெளிநாட்டவர்கள் அங்கு யுத்தம் புரியும் தீவிரவாத இயக்கங்களுடன் இணைந்து சண்டையிட்டுள்ளனர். இவர்களில் பலர் சில மாதங்கள் சண்டையிட்டபின், தத்தமது நாடுகளுக்கு திரும்பி விடுகின்றனர்.
“பிரிட்டனை பொறுத்தவரை, தற்போது ஈராக்கில் யுத்தம் புரியும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் மட்டும், சுமார் 500 பிரிட்டிஷ் பிரஜைகள் யுத்த முனையில் உள்ளனர் என கணிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் பலர் ஈராக்கில் சண்டையிடுவது குறித்து, அவர்களது பிரிட்டிஷ் பெற்றோருக்கேகூட தெரியாது. இவர்கள் வேறு எங்கோ ஒரு நாட்டுக்கு உல்லாசப்பயணம் சென்றிருப்பதாக பெற்றோர் நம்புகின்றனர். இவர்கள் திரும்பி பிரிட்டனுக்கு வரும்போது, அவர்களது பாஸ்போர்ட்டில், ஈராக் சென்றதற்கான ஸ்டாம் ஏதும் இருக்காது. காரணம், வேறு ஒரு நாட்டுக்கு சென்று, அங்கிருந்து தரை மார்க்கமாகவே ஈராக் சென்றிருப்பார்கள்” என்றும் கூறுகிறார், ரிச்சார்ட் பாரெட். .
http://www.athirvu.com/newsdetail/224.html
Geen opmerkingen:
Een reactie posten