தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 21 juni 2014

அளுத்கம வன்செயல்: 8 பேர் பலி! 170 பேர் காயம்! 580 கோடி பெறுமதியான சொத்திழப்பு!- சபையில் விபரித்த மு.கா. எம்பி



பச்சோந்திகளாக செயற்படும் சர்வதேசம் குறித்து நாம் அவதானத்துடன் செயற்பட வேண்டும்!- கண்டி போகம்பறையில் ஜனாதிபதி
[ சனிக்கிழமை, 21 யூன் 2014, 12:56.19 AM GMT ]
மனித உரிமை பற்றிப் பேசிக்கொண்டு பச்சோந்திகளாக செயற்படும் சர்வதேசத்தின் செயற்பாடுகளில் நாம் அவதானத்துடன் செயற்பட வேண்டியது அவசியமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
சட்டங்களில் மட்டுமன்றி அனைத்திலும் அவர்கள் இருபக்கம் தலையாட்டும் பச்சோந்திகளாக செயற்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி மனித உரிமை, இனநல்லிணக்க செயற்பாடுகளில் எம்மிடமிருந்து அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது எனவும் குறிப்பிட்டார்.
நாட்டு மக்கள் நல்லிணக்கத்துடன் செயற்படுகையில் நம்மிடையே நல்லிணக்கமில்லாத சில அரசியல்வாதிகள் அரசியல் அதிகாரங்களை பெற்றுக் கொள்ளும் நோக்கில் சர்வதேசத்திற்கு நாட்டைக் காட்டிக் கொடுத்து வருகின்றனர் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
உள்நாட்டில் மக்கள், இனம், மதம் தொடர்பில் எதையும் பேசாத இத்தகைய அரசியல்வாதிகள் சர்வதேசமெங்கும் தவறான பிரசாரங்களை மேற்கொள்வதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
கண்டி போகம்பறை சிறைச்சாலையை அரசாங்கத்தின் அபிவிருத்திக்காக கையேற்கும் அதேவேளை இந்த சிறைச்சாலை பள்ளேகலைக்கு மாற்றப்படுகிறது. அந்த விசேட வைபவம் நேற்று போகம்பறை முன்றலில் நடைபெற்றது.
அமைச்சர்கள், சந்திரசிறி கஜதீர, கெஹலிய ரம்புக்வெல்ல உட்பட அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் துறைசார்ந்த முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி:
போகம்பறை சிறைச்சாலையை பள்ளேகலைக்கு மாற்றப்படுகிறது.  இது நூறு வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க சிறைச்சாலையாகும்.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ள அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ போன்றோரும் இந்த சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். எனது அதிர்ஷ்டம் நான் இந்த சிறையில் தடுத்து வைக்கப்பட் டிருக்க வில்லை. மெகசீன் மற்றும் தெற்கிலுள்ள சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்தேன்.
சிறைச்சாலைகளை மூடிவிட்டு குற்றச் செயல்கள் இல்லாத நாட்டை உருவாக்குவதே எமது நோக்கம். சகல சிறைச் சாலைகளும் புனர்வாழ்வு நிலையங்களாக மாற்றப்படவேண்டும். அதுவே எமது எதிர்பார்ப்பு.
தற்போது பலர் மரண தண்டனைக்குள்ளாக்கப்பட்ட நிலையிலும் நாம் அந்த தண்டனையை நிறைவேற்ற ஆரம்பிக்கவில்லை. அவர்களும் தற்போது சிறைக்கூடங்களிலேயே உள்ளனர். இதற்கு அனுமதி வழங்கும் கையொப்பத்தை இடுவதற்கு என்னால் இன்னும் முடியாமலுள்ளது. இது தொடர்பிலும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
இனங்களுக்கிடையில் நல்லுறவை ஏற்படுத்துவதிலேயே நாம் அரும்பாடுபட்டு வருகிறோம். தற்போது மக்கள் மத்தியில் நல்லிணக்கம் உள்ளது. எனினும் அரசியல்வாதிகளிடம் அது இல்லாமல் போயுள்ளது.
மக்கள் பிரதிநிதிகளாக உள்ள சில உள்நாட்டில் கலந்துரையாடுவதை விடுத்து சர்வதேச ரீதியில் குரலெழுப்பத் தொடங்கியுள்ளனர் அனைத்தையும் வெளிநாட்டுடனேயே பேசுகின்றனர்.
அரசாங்கத்தில் ஏதாவது தவறு தொடர்ந்தால் அரசாங்கத்தில் உள்ள அனைவரும் அதனைப் பொறுப்பேற்க வேண்டும். எனினும் இப்போது அனைவரும் எம் பக்கமே விரல் நீட்டுகின்றனர்.
அரசாங்கம் எந்த சந்தர்ப்பத்திலும் சட்டத்தை மீற, ஒரு இனத்தைக் காட்டிக் கொடுக்க, அடிமைப்படுத்த ஒருபோதும் இடமளிக்காது.
கண்டியில் தலதாமாளிகை அநுராதபுரத்தில் ஸ்ரீ மகாபோதி ஆகியவற்றுக்கு முன்பாகவே ஏகாதிபத்திய வாதிகள் திட்டமிட்டு சிறைச்சாலைகளை உருவாக்கியுள்ளனர். தெற்கிலும் அவ்வாறே இடம்பெற்றுள்ளது.
மனித உரிமை பற்றி பேசுபவர்களே இவ்வாறு செயற்பட்டுள்ளனர். நாம் எவ்வாறு மனித உரிமைகளைப் பாதுகாத்து வருகிறோம் என்பதை தாங்கள் கவனத்திற் கொள்ள வேண்டும்.
http://www.tamilwin.com/show-RUmsyGRVLagp2.html

அளுத்கம வன்செயல்: 8 பேர் பலி! 170 பேர் காயம்! 580 கோடி பெறுமதியான சொத்திழப்பு!- சபையில் விபரித்த மு.கா. எம்பி
[ சனிக்கிழமை, 21 யூன் 2014, 01:16.49 AM GMT ]
அளுத்கம வன்செயல் காரணமாக 8பேர் பலி, 170 பேர் காயம், 580 கோடி பெறுமதியான சொத்து இழப்பு, 150 வீடுகள் அழிப்பு, 2450 பேர் இடம்பெயர்வு, 17 பள்ளிவாசல்கள் மீது தாக்குதல், 1000 பேர் தொழில் வாய்ப்பு இழப்பு, 272 கால்நடைகள் கொலை, 86 கொள்ளைச் சம்பவங்கள். இவ்வாறு நேற்று பாராளுமன்றத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி.யான மொஹமட் அஸ்லம் தகவல் வெளியிட்டார்.
நேற்று வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் தகவல் வெளியிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி.யான மொஹமட் அஸ்லம் மேற்படி சம்பவத்தை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும் ஏற்பட்டுள்ள அழிவுகளுக்கும் இழப்புகளுக்கும் அரசாங்கம் நட்ட ஈட்டினை வழங்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தார்.
பாராளுமன்றத்தில்  நேற்று 2013 ஆண்டுக்கான நிதி திட்டமிடல் அமைச்சின் அறிக்கை தொடர்பிலான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்ட தகவல்களையும் கண்டனத்தையும் வெளியிட்டார்.
அஸ்லம் எம்.பி.இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
அளுத்கமையில் இடம்பெற்ற அசாம்பாவித சம்பவம் தொடர்பில் நாம் எமது கவலையை தெரிவித்துக் கொள்கின்றோம். இந்த சம்பவமானது கண்டனத்துக்கு உரியதாகும். சமாதானத்தை பாதுகாக்கும் பொலிஸார் உரிய வகையில் சட்டத்தை நடைமுறைப்படுத்தியிருந்தார்களேயானால் இத்தகைய அழிவுகளும் இழப்புக்களும் ஏற்படாத வண்ணம் பாதுகாத்திருக்க முடியும். ஆனால் அங்கு அவ்வாறு இடம்பெறவில்லை.
இச் சம்பவத்தில் தமிழர் ஒருவர் உட்பட நான்கு பேர் படுகொலை செய்யப்பட்ட அதேவேளை மேலும் நான்கு பேர் சம்பவம் தொடர்பான அதிர்ச்சியால் மாரடைத்து மரணமாகினர். இதன்படி இந்த சம்பவத்தில் எட்டு பேர் உயிரிழந்திருக்கின்றனர். அது மாத்திரமல்லாது 170 பேர் காயமடைந்துள்ளனர்.
150 வீடுகள், கடைகள் மற்றும் 17 பள்ளிவாசல்கள் தாக்கி அழிக்கப்பட்டுள்ளன. 370 குடும்பங்களை சேர்ந்த 2450 பேர் இடம்பெயர்ந்து அகதிகளாகியுள்ளனர்.
அத்துடன் இந்த சம்பவத்தால் 580 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களுக்கு அழிவு ஏற்பட்டுள்ளது. இங்குள்ள வர்த்தக நிலையங்கள் அழிவுக்குள்ளாக்கப்பட்டுள்ளதால் சுமார் ஆயிரம் பேர் வரையிலானோர் தொழில் வாய்ப்புகளை இழந்திருக்கின்றனர்.
பாடசாலை மாணவர்கள் தமது அனைத்து உடைமைகளையும் அது மாத்திரமன்றி 272 கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளதுடன் இங்கு 86 கொள்ளைச் சம்பங்களும் நடந்தேரியுள்ளன.
தர்கா நகரை கொண்டுள்ள நான் அங்குள்ள சிங்கள மக்களை நன்கு அறிவேன். அவர்களுடன் முஸ்லிம்கள் சகஜமாகவே வாழ்ந்து வருகின்றனர். எனினும் சம்பவம் தினத்தன்று புறபகுதிகளில் இருந்து வந்தவர்களாலேயே இந்த அசாம்பாவித சம்பவங்கள் நடத்தப்பட்டுள்ளன.
ஆகவே இதனை நாம் மிகவும் வன்மையாக கண்டிக்கின்றோம். அத்துடன் இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் உரிய வகையிலான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் எமது பிரதேசத்துக்கு ஜனாதிபதி நேரடியாக வருகை தந்து அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்தமை தொடர்பில் எமது மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு சமாதான சூழல் ஒன்று உருவாக்கப்பட்டிருக்கின்ற நிலையில் நடந்தேறியுள்ள சம்பவமானது மீண்டும் பழைய நிலைக்கு இழுத்துச் செல்லும் ஒரு செயற்பாடாகவே அமைந்திருக்கின்றது.
இவ்வாறான விடயங்களுக்கு இடமளிக்கக் கூடாது. இச்சம்பவத்தின் காரணரான பொதுபலசேனாவே பொதுச் செயலாளரை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்பதுடன் இவ்வாறான சம்பவங்களுக்குள் முடிவுக்கட்டப்பட வேண்டும் என்றும் இந்த இடத்திலே கோரிக்கை வைக்கின்றேன்.
ஏனெனில் முஸ்லிம்களாகிய நாங்கள் பாகிஸ்தானில் பிறக்கவில்லை. ஆப்கானிஸ்தான் எம்மை ஏற்றுக் கொள்ளப் போவதுமில்லை. நாம் இலங்கையர் என்று கூறி கொள்வதில் பெருமை அடைகின்றோம்.
அதுமாத்திரமன்றி சிங்களவர்களில் பெருபான்மையானோர் இவ்வாறான குறுகிய சிந்தனையை கொண்டிருக்கவும் இல்லை. தாக்குதலை நடத்தவும் இல்லை. ஆனால் சிங்களவர்களில் மிக சிறுதொகையினரே இப்படி செயற்படுகின்றனர்.
சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பாதுகாப்பு தரப்பினரே அளுத்கமை தாக்குதலுக்கு ஒத்துழைப்பையும் வழங்கியிருந்தனர். ஆகவே இது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRVLagp3.html

Geen opmerkingen:

Een reactie posten