தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 14 maart 2015

இந்தியப் பிரதமர் மோடி தலைமன்னாருக்கான ரயில் சேவையை ஆரம்பித்து வைத்தார்



இந்தியப் பிரதமர் மோடி தலைமன்னாருக்கு விஜயம் செய்து, மன்னார்- தலைமன்னாருக்கிடையிலான ரயில் சேவையை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார்.
இலங்கைக்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் இன்று காலை வடக்கிற்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்தார்.
அதற்கமைய தலைமன்னார் பியர் பகுதிக்கு இந்திய விமானப்படையினரின் உலங்குவானூர்தி மூலம் சென்றடைந்த மோடி தலைமன்னார் ரயில் நிலையத்தை திறந்து வைத்ததுடன் மடுவுக்கான ரயில் சேவையினையும் ஆரம்பித்து வைத்துள்ளார்.
தலைமன்னாரில் மோடிக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இன்னும் சற்றுநேரத்தில் யாழ்ப்பாணத்திற்கு வரவுள்ளதுடன் பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளவுள்ளார்.

மீனவர் பிரச்சினை குறித்து வடமாகாண அமைச்சர் டெனீஸ்வரன்  இந்தியப் பிரதமருக்கு கடிதம்
இரு நாட்டு மீனவர் பிரச்சினையை தீர்க்க இராஜ தந்திர ரீதியில் நடவடிக்கை எடுக்குமாறு வடமாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியள்ளார்.
அக்கடிதத்தில்,
தங்களை இந்த மண்ணின் மக்கள் சார்பில் வரவேற்பதில் நான் பெரு மகிழ்வடைகின்றேன். இன்றைய நாள் இப்பிரதேச மக்களுக்கு ஒரு நன்நாள். தங்களின் வருகை எமது மாகாணத்திற்கு ஒரு வரலாற்று நிகழ்வு.
பாரதத்தின் பிரதமராக தாங்கள் பெரு வெற்றியீட்டியதோடு மட்டும் நின்றுவிடாமல் தங்களால் முன்னெடுக்கப்படுகின்ற செயல்திட்டங்கள் எல்லோராலும் வரவேற்கப்படுவதுடன் தங்களின் தேசப்பற்றையும் எடுத்துக்காட்டுகின்றது.
இதற்கு உதாரணமாக clean India திட்டத்தை குறிப்பிடலாம். மேலும் தங்களின் இலங்கை விஜயம் அயல் நாட்டு உறவை மேம்படுத்த வேண்டும் என்ற அக்கறையை வெளிப்படுத்துகின்றது.
அந்தவகையில் இந்திய அரசின் நிதிஉதவியின் மூலம் மீளமைக்கப்பட்ட வடக்கிற்கான புகையிரதப் பாதை மற்றும் புகையிரத நிலையங்கள் 25 வருடங்களின் பின் மீண்டும் சேவையை ஆரம்பித்துள்ளமை எங்கள் எல்லோருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி.
இது போன்று எமது மக்களுக்கான ஐம்பதாயிரம் வீட்டுத்திட்டம் இந்திய அரசின் நிதி உதவியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. நீண்ட கால போரின் அழிவுகளால் வீடுகளை இழந்த மக்களுக்கு இத்தகைய உதவி மிகப் பெரிய வரப்பிரசாதம்.   இவற்றிற்காக இந்திய அரசிற்கும் இந்திய மக்களுக்கும் நாங்கள் நன்றிக்கடன் பட்டவர்களாக இருக்கின்றோம். 
இவை மட்டுமல்லாமல் இலங்கையில் நடைபெற்ற ஆயுத மோதல்களின் போதும் அமைதிப் பேச்சுக்களின் போதும் இந்தியாவின் வகிபாகம் தவிர்க்க முடியாத ஒன்று.
இலங்கை - இந்திய உறவு நீண்ட நெடுங்கால உறவைக் கொண்டது அதனடிப்படையிலேயே இந்திய அரசின் நலத்திட்டங்கள் இலங்கை மக்களுக்கு கிடைக்கப் பெறுகின்றது.
இவ்வாறான நலத்திட்டங்களையும் இரு நாட்டு உறவையும் பாதிக்கக்கூடிய சம்பவங்களும் அவ்வப்போது நடைபெறுகின்றது. விஷேடமாக வட பகுதி மீனவர்களே இதில் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
இந்திய மீனவர்களின் எல்லை கடந்த வருகையும் அவர்களினால் பயன்படுத்தப்படும் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறமை அதாவது இளுவைப் படகுகளில் பயன்படுத்தும் மடி வலை போன்றவற்றை குறிப்பிடலாம். குறித்த இளுவைப் படகுகளில் பயன்படுத்தும் மடி வலையானது கடல் தாவரங்கள், பவளப்பாறைகள் போன்ற கடல் வாழ் உயிரினங்களின் வளர்ச்சிக்கு தேவையான வளங்களை முற்றுமுழுதாக அழித்துவிடுகின்றன.
அத்துடன் வட பகுதி மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி முறமை பாதிக்கப்படுவதுடன் அவர்களின் மீன்பிடி உபகரணங்களும் சேதமாக்கப்படுகின்றன. மேற்படி சம்பவங்கள் மீனவர்களின் வாழ்வாதாரத்தை வெகுவாகப் பாதிப்படைய செய்கின்றது.
இதன் காரணமாக இரு நாட்டு மீனவர்களுக்கும் இடையில் முறுகல் நிலையும் கைகலப்பும் ஏற்படுகின்றது. இவை மட்டுமன்றி இலங்கை கடற்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப் படுகின்றனர்.
இவ்வாறான சம்பவங்கள் தொடரும் பட்சத்தில் எதிர்காலத்தில் இரு நாட்டு இராஜ தந்திர உறவுகள் பாதிப்படையக்கூடும். ஆகவே  இந்தப் பிரச்சினையை தீர்க்க இராஜ தந்திர ரீதியில் திட்டம் வகுக்கப்பட வேண்டும்.
இந்த சந்தர்ப்பத்தில் மக்கள் பிரதிநிதி என்றவகையில் சில உதவித்திட்ட கோரிக்கைகளை தங்களிடம் முன்வைக்கலாம் என எண்ணுகிறேன். 
வர்த்தக ரீதியான உறவை மேம்படுத்தவும் சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கவும் தலைமன்னார் - இராமேஸ்வரத்திற்கு இடையிலான கப்பல் போக்குவரத்தை இந்திய அரசு மீள ஆரம்பிக்க வேண்டும்.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் இதுவரை மீள் குடியேற்றம் செய்யப்படாமல் முகாம்களிலும் தற்காலிக இடங்களிலும் பல ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களைக் கருத்தில் கொண்டு மேலும் ஒரு தொகுதி வீட்டுத்திட்டத்தை இந்திய அரசு வழங்கும் பட்சத்தில் எமது மக்களுக்கு இது பாரிய உதவியாக இருப்பதுடன் நிம்மதியான வாழ்க்கைக்கு அத்திபாரமாக அமையும்.
பிரதான நகரங்களை மையப்படுத்தி city bus service நடாத்துவதன் மூலம் நகர்ப்புற மககளின் போக்குவரத்து நெரிசலை குறைத்து பயணிகளின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்ய முடியும். எனவே இதற்கான பேருந்துகளை இந்திய அரசிடம் இருந்து எதிர்பார்க்கின்றோம்.
இறுதியாக தாங்கள் எங்கள் நாட்டிற்கும் எமது பிரதேசத்திற்கும் வருகை தந்தமைக்காக எங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்.
என குறிப்பிடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyDSYSUmw4B.html

Geen opmerkingen:

Een reactie posten