இந்திய தேசத்தின் மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு அன்பு வணக்கம். யாழ்ப்பாணத்திற்கும் மன்னாருக்கும் தாங்கள் வருவதையிட்டு தமிழ் மக்கள் தமது அன்பான வரவேற்பை தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றனர்.
உலக நாட்டுத் தலைவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனராயினும் உங்களின் இலங்கை விஜயம், யாழ்ப்பாண வருகை தமிழ் மக்களிடம் புத்துணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு அடிப்படைக்காரணம் உங்கள் மீது கொண்ட அதீத நம்பிக்கை என்பதை கூறித்தானாக வேண்டும்.
ஈழத்தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் அகரம் எழுதப்பட்ட இடம் இந்தியா என்பதை எவரும் மறுத்துவிட முடியாது.
அதேநேரம் இலங்கைப் பேரினவாத ஆட்சியாளர்கள் தமிழ் மக்களுக்குத் துன்பம் இழைத்த போதெல்லாம் இந்தியா எங்களைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கையை நாங்கள் ஒரு போதும் கைவிடவில்லை.
1983ம் ஆண்டு ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் ஆட்சியில் தமிழர்கள் சுட்டெரிக்கப்பட்டனர். காடைத்தனத்தின் வெறியாட்டம் தென்பகுதி எங்கும் விஸ்வரூபம் எடுத்து ஆடிய போது, அன்னை இந்திரா காந்தி சிதம்பரம் கப்பலை அனுப்பி எங்கள் உறவுகளை வடக்குக்கு கொண்டு வந்த உதவியை இன்றும் நினைக்கின்றோம்.
ஆனால் அதே இந்திராகாந்தியின் மருமகள் சோனியாகாந்தி வன்னிப் பெருநிலப்பரப்பில் வைத்து எங்கள் இனத்தின் மீது கொண்ட காழ்ப்புணர்வை- வஞ்சத்தை தீர்த்துக் கட்டி விட்டார்.
விடுதலைப் புலிகள் மீது கொண்ட கோபத்தை தமிழ் மக்கள் மீது காட்டியதில், விதவைகள்; அநாதைகள்; அங்கவீனர்கள்; சித்தம் பேதலித்தோர் என்றதொரு துன்பப்பட்டியலை சோனியாகாந்தி தந்து விட்டார்.
இந்து சமயத்தின் மீது அதீத நம்பிக்கை கொண்ட தங்களுக்கு தேரையின் கதை தெரிந்திருக்க நியாயம் உண்டு.
ஒரு முறை இராமபிரான் ஆற்றில் நீராடுவதற்காக தன் அம்பை ஆற்றங்கரையில் ஊன்றி வைத்து விட்டு நீராடச் சென்றார்.
நீராடித் திரும்பிய இராமர் அம்பை இழுத்தெடுத்த போது அம்பில் குத்துண்ட தேரை ஒன்று துடிதுடித்துக் கொண்டிருந்தது.
ஓ! தேரையே நான் அம்பை ஊன்றிய போது நீ ஏதாவது சொல்லியிருக்கலாம் அல்லவா? என்றார் இராமர்.
இராமபிரானே! எனக்குத் துன்பம் ஏற்படும் போதெல்லாம் இராமா... இராமா... என்று தான் நான் கூப்பிடுவேன். ஆனால் அந்த இராமனே! என்னைக் குத்தும் போது நான் யாரைக் கூப்பிட முடியும் என்றது தேரை. அந்த தேரையின் நிலையில்தான் ஈழத்தமிழர்களும்.
அன்புக்குரிய பிரதமர் நரேந்திர மோடி அவர்களே! இந்தியா எங்களைக் காப்பாற்றும் என்று நம்பியிருந்த மக்களை இந்தியாவே பழி தீர்த்தது என்று நினைக்கும் போது தேரையின் அவலம் எமக்கும் பொருந்துகிறதல்லவா?
ஆம், விடுதலைப் போராட்டம் நடத்திய ஓர் இனம் இன்று வெறும் கையோடு, கண்ணீரும் கம்பலையுமாக அலைகிறது.
காணாமல் போனவர்களைத் தேடுவதிலேயே பல வருடங்கள் கடந்து விட்டன.
இப்போது உரிமை கேட்ட போராட்ட அமைப்பு இல்லை; ஆன அரசியல் தலைமை இல்லை; தமிழினத்தைக் காக்க ஜனநாயக அரசு இல்லை என்ற நிலையில் உங்களின் வருகையாவது எங்களுக்கு ஒளி தராதா? என்று ஏங்கி நிற்கிறது தமிழினம்.
பிரதமர் மோடி அவர்களே! உங்கள் வருகையால் தமிழ் இனம் உரிமை பெறட்டும். நிம்மதியான, சுதந்திரமான வாழ்வு வாழட்டும்.
இந்த எதிர்பார்ப்போடு சிவபூமி எனும் ஈழத்தமிழ் மண் உங்களை இருகரம் கூப்பி வரவேற்கிறது. வாருங்கள். ஆறாத துன்பத்தை ஆற்றுங்கள் .
http://www.tamilwin.com/show-RUmtyDSYSUmw4F.html
Geen opmerkingen:
Een reactie posten