தமிழ்த் தேசியக்கூட்டமைப்பை உடைப்பதற்கு இன்று பலர் திரைமறைவில் திட்டங்களைத் தீட்டி வருகின்றார்கள். இந்த விடயத்தில் அனைவரும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
மட்/ பட்டிருப்பு குறுமண்வெளி சிவசக்தி மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி, அதிபர் க.சத்தியமோகன் தலைமையில் குறுமண்வெளி பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினரகளான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன் விசேட அதிதிகளாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான ஞா.கிருஸ்ணபிள்ளை, மா.நடராசா, விசேட அதிதிகளாக பட்டிருப்பு வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி.ந.புள்ளைநாயகம், சிறப்பதிதிகளாக கல்முனை தமிழ் பிரதேச- பிரதேச செயலாளர் க.லவநாதன், உதவித்திட்ட பணிப்பாளர் பே.இராஜகுலேந்திரன் மற்றும் கௌரவ, அழைப்பு அதிதிகள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்.
நாங்கள் இந்த நாட்டில் நடைபெற்ற எட்டு தேர்தல் பரீட்சையில் சித்தியடைந்திருக்கின்றோம் அதன்காரணமாக எங்களை சர்வதேசம் மதித்து எங்கள் கருத்துக்களையும் உள்வாங்கி இன்று ஐ.நாவின் வாசல் வரைக்கும் செல்வதற்கு வழியேற்படுத்தி தந்திருக்கின்றது.
தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்பு நடைபெற்ற எந்தத் தேர்தலாக இருந்தாலும் அவை அனைத்திலும் த.தே.கூட்டமைப்பு அதீத வெற்றியீட்டி சாதனை படைத்திருக்கிறது. இதற்கு முழுக்கு முழுக்க தமிழ்மக்களே பொறுப்பானவர்கள். அவர்களது பலம் எம் பக்கம் இருக்கும் வரைக்கும் தமிழர்களுக்கான தீர்வை பெறுவதில் எமக்கு சிரமம் கிடையாது.
தமிழ் மக்கள் த.தே.கூட்டமைப்பிற்கு வாக்களிக்காமல் இருந்திருந்தால் எமது எல்லைக்கிராமங்கள் எங்கள் கைவசம் இருந்து பெரும்பான்மை இனத்தவர்களினால் மிக இலகுவாக பறிக்கப்பட்டிருக்கும். இன்று கெவுலியாமடு, முழுக்க தமிழ்கள் இன்றி சிங்களவர்கள் வசம் போயிருக்கும். அதுபோன்று தாந்தாமலையில் விகாரை அமைத்து புத்தம் சரணம் கச்சாமி எனும் நாமம் ஒலித்திருக்கும். தமிழ்மக்கள் த.தே.கூட்டமைப்பை பலப்படுத்தாமல் விட்டிருந்தால் சகலவற்றையும் இழந்து நிலமற்றவர்களாகப் போயிருக்கும் ஒரு துர்ப்பாக்கிய நிலை உருவாகியிருக்கும்.
2009 மே மாதம் 19 ஆம் திகதிக்குப் பின்னர் தான் வட, கிழக்கு மாகாணங்களை பொறுத்த வரையில் முழு நேர அரசியல் பணியை செய்து வருகின்றது. அதற்கு முன்னுள்ள காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகள் தான் முழுநேர அரசியல் பணியை செய்து வந்தார்கள்.
மக்களின் ஆணை த.தே.கூட்டமைப்பிற்கு கிடைத்ததன் காரணமாக இன்று வரைக்கும் தமிழ் மக்களுக்கான அரசியல் பணியை த.தே.கூட்டமைப்பு செய்து வருகின்றது. இதனை பொறுத்துக்கொள்ள முடியாத சிலர் த.தே.கூட்டமைப்பினை சிதைப்பதற்கான வேலைகளில் திரைமறைவிலே செய்ய ஆரம்பித்திருக்கின்றார்கள். அன்று த.தே.கூட்டமைப்பினை விமர்சித்தவர்கள் இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளை வேனில் அனாமேதய துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து வருகின்றார்கள் இதுதான் அவர்களது அரசியல் பணி.
இந்தநாட்டிலே யார்தான் ஆட்சிக்கு வந்தாலும் தமிழர் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான எந்த நல்லெண்ணமும் யாருக்கும் எள்ளளவேனும் கிடையாது. மாறாக 65 வருடகால வரலாற்றில் பெரும்பான்மைக் கட்சிகளாக இருந்த ஐக்கிய தேசியக் கட்சியோ, சிறிலங்கா சுதந்திரக் கட்சியோ, பொதுஜென ஐக்கிய முன்னனியோ தங்களது அரசியல் பலத்தை நிரூபிக்க இனவாதத்தினை கக்கி பெரும்பான்மை மக்களை தங்கள் வசம் வைத்திருந்தார்கள்.
இன்று புதிய அரசாங்கம் வந்து விட்டது. ஆனால் அதனால் ஒன்றுமில்லை இந்த நாட்டிலே இன்றும் 500க்கும் மேற்பட்ட அரசியல் கைதிகள் எந்த விசாரணைகளும் இன்றி தடுத்து வைக்கப்பட்டு விடுதலை செய்யாமல் அப்படியே சிறைவாசம் அனுபவித்து வருகின்றார்கள். அத்தோடு தமிழர்களது நிலங்களில் உள்ள இராணுவம் இன்றும் அந்த நிலங்களை விட்டு வெளியேறாமல் இராணுவ மயமாக்கலை செய்து வருகின்றது. இவ்வாறு அவர்களது அனைத்து
வேலைகளும் இன்றும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றது.
வேலைகளும் இன்றும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றது.
100 நாள் வேலைத்திட்டத்தில் இன்று அரைவாசிக்கும் மேலாக நாட்கள் கடந்து விட்டது. ஆனால் என்ன நடந்திருக்கின்றது என்றால் விடை காண்பது சிரமமானதாகவே இருக்கின்றது.
இந்த குறுமண்வெளி கிராமத்தினை பொறுத்த வரையில் பலர் போராட்டத்தில் தங்களை இணைத்துக்கொண்டு போராடி மடிந்திருக்கின்றார்கள். அது மாத்திரமல்ல பலர் கல்வி கற்று உயர்ந்த ஸ்தானத்தில் இன்றும் இருந்து கொண்டிருக்கின்றார்கள். இவர்களது செயற்பாடுகள் இந்தக் கிராமத்தில் என்றும் நிலைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை என்கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmtyDScSUlp6F.html
Geen opmerkingen:
Een reactie posten