[ ஞாயிற்றுக்கிழமை, 22 மார்ச் 2015, 10:47.51 AM GMT ]
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட வென்சர் தோட்ட கர்ப்பிணி தாய்மார்கள் 150 பேருக்கு வழங்கப்பட்ட பொதிகளில் இருந்த நெத்தலி, கடலை, மற்றும் கௌப்பி போன்ற பொருட்கள் மனித பாவனைக்கு உதவாதவையாக இருந்ததாகவும் அவற்றை நீக்குவதற்கான நடவடிக்கைளை பொகவந்தலாவை பொது சுகாதார பரிசோதகர் பீ.கே.எல்.வசந்தவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கினிகத்தேனை பிரதேச செயலகத்தில் பல்நோக்குக் கூட்டுறவு சங்கத்தினால் வழங்கப்பட்ட 2000 ரூபாய் பெறுமதியான பொதியில் சிவப்பு அரிசி 3கிலோ கிராம், பதப்படுத்தப்பட்ட மீன் ரின்கள் 2, நெத்தலி 500 கிராம், கடலை 1 கிலோ, பயறு 1கிலோ, கௌபி 1 கிலோ, பருப்பு 500 கிராமும் கொண்ட பொதிகளை பெற்றுக்கொண்ட தாய்மார்கள் பாவனைக்கு உதவாதவை என பொது சுகாதார பரிசோதகரிடம் முன்வைத்த முறைப்பாட்டிற்கு பின்னர் குறித்த பொதிகள் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன.
பாவனைக்கு உதவாத பொருட்களை மீண்டும் குறித்த பல்நோக்குக் கூட்டுறவு சங்கத்திற்கே வழங்க நடவடிக்கை மேற்கொண்டதாக பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.
மேலும் பாவனைக்குதவாத பொருட்களை விநியோகித்ததை பற்றி குறித்த சங்கம் எந்தவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லையெனவும் எதிர்காலத்தில் கொடுக்கும் போஷாக்கு பொதிகளுக்கான பொருட்களை தனியார் வியாபார நிறுவனங்கள் மூலமாக பெற்றுக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDRWSUlszH.html
தேசிய அரசாங்கத்தில் இணைந்த புதிய அமைச்சர்களின் பெயர் விபரங்கள்! - ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பிளவு
[ ஞாயிற்றுக்கிழமை, 22 மார்ச் 2015, 10:55.45 AM GMT ]
மைத்திரி- ரணில் தேசிய அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரும் இன்று இணைந்து கொண்டனர்.
இதன்படி 11 புதிய அமைச்சரவை பொறுப்பு அமைச்சுக்களும், 5 இராஜாங்க அமைச்சுப் பொறுப்புக்களும், 10 பிரதியமைச்சு பொறுப்புக்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருக்கு வழங்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான சத்தியப் பிரமாண நிகழ்வு சற்று முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
அமைச்சர்கள்
ஏ.எச.எம்.பௌசி - அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்
எஸ்.பி.நாவின்ன - தொழில் அமைச்சர்
எஸ்.பி.திஸாநாயக்க - கிராமிய விவகார அமைச்சர்
ஜனக பண்டார தென்னக்கோன் - உள்ளூராட்சி மற்றும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சர்
பிலிக்ஸ் பெரேரா – விசேட திட்டமிடல் அமைச்சர்
மகிந்த யாப்பா அபேகுணவர்தன – பாராளுமன்ற விவகார அமைச்சர்
ரெஜினோல்ட் குரே – விமான சேவை அமைச்சர்
விஜித் விஜயமுனி சொய்சா - நீர்ப்பாசன அமைச்சர்
மகிந்த அமரவீர – மீன்பிடிதுறை அமைச்சர்
சரத் அமுனுகம - உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைச்சர்
பியசேன கமகே - தொழிற் பயிற்சி திறன் விருத்தி அமைச்சர்
பிரதியமைச்சர்கள்
திஸ்ஸ கரலியத்த- புத்தசாசனம் பிரதியமைச்சர்
தயாசிரித்த திசேரா - மீன்பிடி பிரதியமைச்சர்
ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய - உள்நாட்டு பிரதியமைச்சர்
லச்மன் செனவிரட்ன- இடர்முகாமைத்துவ பிரதியமைச்சர்
லக்ஷ்மன் யாப்பா - விமான பிரதியமைச்சர்
லலித் திஸாநாயக்க- நீர்ப்பாசனம் பிரதியமைச்சர்
ஜெகத் புஸ்பகுமார - பெருந்தோட்டத்துறை பிரதியமைச்சர்
லசந்த அழகியவன்ன - கிராமிய அபிவிருத்தி பிரதியமைச்சர்
சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே- உயர்கல்வி பிரதியமைச்சர்
சாந்த பண்டார - ஊடகம் பிரதியமைச்சர்
இராஜாங்க அமைச்சர்கள்
பவித்ரா வன்னியாராச்சி- சுற்றுச்சூழல்
ஜீவன் குமாரதுங்க- தொழிலாளர் விவகார
மஹிந்த சமரசிங்க-நிதி
சீ.பீ. ரத்நாயக்க- அரச நிர்வாகம் மற்றும் ஜனநாயகக் கட்டுப்பாட்டு
டிலான் பெரேரா- வீடு மற்றும் சமூர்த்தி விவகாரம்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பிளவு
19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் தொடர்பான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாட்டால், அந்த கட்சிக்குள் பிளவு ஏற்படும் ஆபத்து உருவாகியுள்ளது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் சர்வாதிகாரங்களை நீக்குவது தொடர்பான 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்துடன் தேர்தல் சீர்த்திருத்த சட்டத்தையும் கொண்டு வர வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எடுத்துள்ள தீர்மானத்தினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
19வது திருத்தச் சட்டத்துடன் தேர்தல் சீர்த்திருத்த சட்டத்தையும் கொண்டு வர வேண்டும் என்று குறிப்பாக நிமால் சிறிபால டி சில்வா தலைமையிலான தரப்பினரே வற்புறுத்தி வருகின்றனர்.
எனினும் அவர்களின் இந்த நிலைப்பாட்டை எதிர்க்கும் 19வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவான குழுவும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் உள்ளது.
இவர்களில் 10 பேர் நாளைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து அமைச்சர் பதவிகளை பெற்றுக்கொள்ள உள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmtyDRWSUlszI.html
ஜனாதிபதியின் முயற்சியினால் புதிய அரசியல் கலாசாரம் உருவாகியுள்ளது: ரணில் - ஐரோப்பிய நாடுகளினது ஆதரவும் இலங்கைக்கு: ஜனாதிபதி
[ ஞாயிற்றுக்கிழமை, 22 மார்ச் 2015, 10:59.44 AM GMT ]
பல்வேறு நிலைப்பாடுகளை கொண்டு அரசியல் கட்சிகள் இலங்கையின் எதிர்கால நலனுக்காக ஒன்றி்ணைந்துள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு இலக்குக்கு நாங்கள் இணங்கவில்லை என்று எண்ணுகிறேன். அரசாங்கத்தில் வித்தியாசமான கருத்துக்கள் உள்ளன. அவற்றை விவாதித்து அரசாங்கம் முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறது எனவும் பிரதமர் கூறியுள்ளார்.
நாட்டில் நிதியிருக்கவில்லை – பிரதமர்
100 நாள் வேலைத்திட்டத்தை செயற்படுத்துவதில் நிதி பிரச்சினைகள் இருப்பதாகவும் நாட்டின் நிதி அனைத்தும் வெளிநாடுகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நிதி இல்லையென்ற போதிலும் வேலைகளை நிறுத்தப் போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு கட்சிகள் இணைந்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும். அதற்கு இரண்டு மாற்று வழிகள் உள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சியா, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியா, சிங்களமா, தமிழா, பௌத்தமா அல்லது ஏனைய மதங்களா என்பது பிரச்சினையல்ல.
புதிய முறையில் சென்று நாட்டுக்கு எதிர்காலத்தை ஏற்படுத்தி கொடுப்பதா அல்லது பழைய முறையில் இருந்து கொண்டு அழிந்து போவதா என்பதே இந்த இரண்டு மாற்று வழிகள் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாடுகளின் நம்பிக்கையை மக்கள் நலனுக்காக பயன்படுத்திக் கொள்ளப்படும்: ஜனாதிபதி
சர்வதேச சமூகம் புதிய அரசாங்கம் மீது கொண்டுள்ள நம்பிக்கையை மக்கள் நலனுக்காக பயன்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பிராந்திய வலய நாடுகளை மட்டுமன்றி ஐரோப்பிய நாடுகளினதும் நம்பிக்கையை இலங்கை வென்றெடுத்துள்ளது.
கடந்த அரசாங்கத்தை விடவும் பாரியளவில் சர்வதேச சமூகம் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றது.
புதிய தொழில்நுட்ப வர்த்தக சமூகத்துடன் முன்னோக்கிப் பயணிக்க, சர்வதேச சமூகத்தின் சகல ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
பொலனறுவையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் நேற்று இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகளினது ஆதரவும் இலங்கைக்கு: ஜனாதிபதி
பிராந்திய நாடுகள் மாத்திரமன்றி, அனைத்து ஐரோப்பிய நாடுகளினதும் ஆதரவு இலங்கைக்கு கிடைத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவையில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நாடுகள் புதிய அரசாங்கத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை, நாட்டு மக்களின் அபிவிருத்திக்காக பயன்படுத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இதற்கு காரணம் சர்வதேச நாடுகளுக்கிடையில் கடந்த காலங்களில் ஏற்பட்ட பிரிவினையை, புதிய அரசாங்கம் நிறைவு செய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையினால் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு, உலக நாடுகள் சில, கடந்த காலங்களில் ஆதரவுகளை வழங்கி வந்ததாகவும் இந்த நிகழ்வின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இதேவேளை நேற்று மாலை ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும், புதிய அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் நலன் வேண்டி பூஜை ஒன்று மஹியங்கனை புனித பூமியில் இடம் பெற்றுள்ளது. அங்கு ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு ஆசி வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகம் தெரிவிக்கின்றது.
http://www.tamilwin.com/show-RUmtyDRWSUlszJ.html
Geen opmerkingen:
Een reactie posten