தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 13 maart 2015

25 ஆண்டுகளுக்கு பின் சொந்த ஊரைப் பார்த்த வளலாய் மக்கள்!



கடந்த 25 வருடங்களுக்கு பின்னர் உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்த தங்களது சொந்த மண்ணை அப்பிரதேச மக்கள் இன்று பார்வையிட்டனர்.
கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் யாழ். மாவட்ட செயலகத்தில் புனர்வாழ்வு மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் ஹரீம் பீரிஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு ஏற்ப இந்தப் பகுதி முதற்கட்டமாக விடப்பட்டுள்ளது.
பொது மக்கள், மிகவும் ஆர்வத்துடன் தமது வீடுகளுக்குச் செல்கின்றோம் என்ற உணர்வுடன் பார்வையிடச் சென்றனர்.
எனினும், அவர்களின் வீடுகள் இருந்த இடமே தெரியாமல் அழிக்கப்பட்டுள்ளதுடன் எல்லைகள் கூடத் தெரியாமல் அழிக்கப்பட்டு திறந்தவெளியாகவே காணப்பட்டது.
அவர்களுடைய வீடுகள் இருந்த இடத்தைக் கூட அடையாளம் காட்ட முடியாத நிலையில் பற்றைகள்,செடிகொடிகள் மற்றும் மரங்கள் வளர்ந்து காணப்பட்டது.
கோப்பாய் பிரதேச செயலாளர் ம.பிரதீபன் தனது அலுவலக ஊழியர்கள் மூலம் உரிய பதிவுகளை மேற்கொண்டு இராணுவத்தினரின் எந்த வகையான கெடுபிடிகளும் இன்றி பொது மக்கள் தமது காணிகளுக்கு செல்ல அழைத்து செல்லப்பட்டார்கள்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் கே.சர்வேஸ்வரனும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்.
கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட வளலாய் ஜே/284 கிராம அலுவலர் பிரிவில் உள்ள 236 ஏக்கர் காணியில் மக்கள் மீளக்குடியேற அனுமதித்த நிலையில் இங்கு நிலை கொண்டு இருந்த இராணுவத்தினர் தமது முன்னரங்க காவல் நிலையத்தை தற்போது இருந்த இடத்தில் இருந்து சுமார் ஒன்றரை கிலோ மீற்றர் தூரம் வரை பின்நகர்த்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
2ம் இணைப்பு
யாழ்.வலி,கிழக்கு பிரதேச எல்லைக்குட்பட்ட வளலாய் கிராமத்தில் பொதுமக்களுக்குச் சொந்தமான சுமார் 233 ஏக்கர் நிலத்தை பார்வையிடுவதற்கான அனுமதி இன்றைய தினம் வழங்கப்பட்டுள்ள நிலையில், மகிழ்ச்சியும் சோகமுமாய் மக்கள் தங்களுடைய நிலங்களை 25வருடங்களின் பின்னர் பார்வையிட்டதைக் காணமுடிந்தது.
கடந்த 1990ம் ஆண்டு போரினால் மக்கள் இடம்பெயர்ந்த நிலையில் குறித்த பகுதிகளை உள்ளடக்கியதாக உயர்பாதுகாப்பு வலயம் அமைக்கப்பட்டு மக்களுடைய நிலம் முழுமையாக அபகரிக் கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆட்சி மாற்றத்தின் பின்னர் வலி, வடக்கில் 1000 ஏக்கர் பொதுமக்களுடைய நிலத்தை விடுவிக்கும்,
திட்டத்தின் முதற்கட்டமாக இன்றைய தினம் வளலாய் பகுதி மக்கள் தங்கள் சொந்த நிலங்களுக்குச் செல்வதற்கும், தமது நிலங்களை அடையாளப்படுத்துவதற்கும் அனுமதிக்கப்பட்டது. இன்றைய தினம் சுமார் 272 குடும்பங்களை சேர்ந்த மக்கள் தங்கள் நிலங்களை பார்வையிடுவதற்காக வந்திருந்தனர்.
இதற்கமைய காலை 10மணியளவில் கோப்பாய் பிரதேச செயலர் தலமையில் மக்கள் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் அழைத்துச் செல்லப்பட்டனர். இதன்போது உயர்பாதுகாப்பு வேலிகள் அகறறப்பட்டு பின்னகர்த்தப்பட்டிருந்தன. இந்நிலையில் மக்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் தங்கள் நில ங்களை பார்க்க வேகமாகச் சென்றனர்.
எனினும் மக்களுக்குச் சொந்தமான ஒரு சில வீடுகள் மட்டுமே உள்ள நிலையில் மீதி வீடுகள் உடைக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டிருக்கின்றன.
இதற்கு மேலதிகமாக இன்றைய தினம் மக்கள் பார்ப்பதற்கு அனுமதிக்கப்பட்டி பெரும்பாலான காணிகள் பொதுமக்களுடைய விவசாய காணிகளாகும்.
இந்நிலையில் பல மக்கள், ஏமாற்றமடைந்த போதும் தமது சொந்த நிலங்களுக்கு வந்தமையினை நினைத்து மகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்தமையினை காணமுடிந்தது.
இந்நிலையில் இன்றைய தினம் தொடக்கம் மக்கள் தங்களுடைய நிலத்தை பார்க்கவும் காணிகளை துப்புரவு செய்யவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. எனினும் மீள்குடியேற்றம் இம்மாதம் 31ம் திகதிக்குள், நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten