1970களில் ஈழத்தமிழ் மக்களின் பிரச்சனையானது இலங்கைத் தீவிற்குள் அடக்கி ஒடுக்கப்பட்ட போராட்டமாகவே இருந்தது.
அண்டைய நாடான இந்தியாவிலும் பார்க்க யப்பான், பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளின் வியாபார நலன் சார்ந்த நாடாக அன்று இலங்கை இருந்தது.
இந்தியா, ரஷ்யா சார்பான நாடாக இருந்தது. வங்காள தேச விடுதலைப் போராட்டத்தில் ரஷ்யாவின் துணையுடன் தான் இந்தியா, பாகிஷ்தானை பிரிவுபடுத்தி இந்து சமுத்திரத்தில் தனது முத்திரையை மற்றைய நாடுகள் அங்கீகரிக்கும் வண்ணம் பதித்தது.
இது சர்வ வல்லமை பொருந்திய ஆட்சித் தலைவியான இந்திரா காந்தியின் தனிப்பட்ட நிர்வாகத் திறமையினால் இந்தியா கையோங்கி இருந்தது என்றால் மிகையாகாது.
இந்திரா காந்தியின் ஆட்சிக்காலத்தில் ஜே.ஆர் ஜெயவர்த்தனா போன்ற நரித்தன்மை கொண்ட சிங்களவர்கள் ஆட்சிப்பீடத்தில் இருந்தாலும் இந்திரா காந்தியின் போர்க்குணம் தெரிந்த சிங்களத் தலைவர்கள் ஈழத்தமிழர் விடயத்தில் அடக்கியே வாசித்தனர்.
ஜே.ஆர். ஜெயவர்த்தனாவின் மேற்குலகச் சார்புக் கொள்ளைகளைப் பிடிக்காத இந்திரா அம்மையாரின் உதவியுடன் தான் தமிழ் ஈழப் போராளிகளுக்கு தமிழ் நாட்டில் பயிற்சி கொடுக்கப்பட்டது.
தமிழ் இளைஞர்கள் இரண்டொரு பிரிவாக இருந்hலும் தமிழ் நாட்டில் ஒற்றுமையுடன் போராட்டப் பயிற்சிகளை எடுத்தார்கள். அனைவரது இலட்சியமும் “தமிழரின் தாகம் தமிழ் ஈழத் தாயகம்” என்ற உயர்ந்த இலட்சியத்தை வரிந்து கட்டிக் கொண்டவர்களாக காட்சி தந்தனர். இவை அனைத்தும் வரலாற்றின் ஒரு முக்கிய பகுதி.
தமிழ்ஈழ விடுதலைப் போராட்டத்தினைத் தம்முயிரைக் கொடுத்து 30 வருடங்கள் போராடிய காலத்தில் தான் இந்தியா, அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் எமது போராட்டத்தினை அவர்களின் பூகோள நலனுக்குப் பாவிக்க முயன்றார்கள்.
“முத்துமாலை” என்ற மாபெரும் திட்டத்தின் ஒரு பகுதியாக சீனா தனது காலை இலங்கையில் பதிக்கத் தொடங்கியது. இந்தியாவிலும் பார்க்க பல மடங்குகள் பொருளாதார பலம் கொண்ட சீனா இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் எதிராக இலங்கையில் கால் பதித்து விட்டது.
இந்தியா, அமெரிக்கா போன்று 10 மடங்கு முதலீட்டை சீனா இலங்கையில் செய்துள்ளது என்றால் சீனாவின் நலன் சார்ந்ததாகவே இலங்கை செயற்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.
ஈழ விடுதலைப் போராட்டம் சீனாவின் முதலீடுகளுக்கு எதிரானது என்பதால் இந்தியாவிலும் பார்க்க சீனா ஈழ விடுதலைப் போராட்டத்தை அழித்தொழிப்பதில் முன்நின்றது. யுத்தம் முடிந்த பின்பு தான் இலங்கை யார் பக்கம் என்பதை வல்லரசுகள் கணக்கிட்டுப் பார்த்தார்கள், கூட்டிக் கழித்துப் பார்த்தால் இந்தியாவையும், அமெரிக்காவையும் கைவிட்டு சீனா பக்கமே சிங்கள ஏகாதியத்தியம் சாய்ந்து விட்டது.
சமீபத்தில் சீனாவுக்குச் சென்ற அதிபர் ராசபக்ச சுதந்திர வர்த்தக வலயம் உட்பட பல ஒப்பந்தங்களைச் சீனாவுடன் செய்துவிட்டு வந்துவிட்டார். அனைத்து விபரங்களும் மறை பொருளாகத் தயாரிக்கப்பட்ட ஒப்பந்ததஙகளாகவே இருக்கும். பிரபல எழுத்தாளர் தராகி சிவராம் “இந்து சமுத்திரத்தில் சீனா நிச்சயம் கால் பதிக்கும்” என்று அவரது அரசியல் கட்டுரைளில் பல முறை எழுதினார்.
அம்பாந்தோட்டையில் நிறுவப்பட்ட துறைமுகத்தில் சீனாவின் 9 நீர் முழ்கிக் கப்பல்கள் ஒரே நேரத்தில் தரித்து நிற்குமளவுக்கு நிர்மாணிக்கபபட்டுள்ளது. சீனாவின் போர்க்கப்பல்கள் பல முறை அம்பாந்தோட்டைக்கு வந்து போனமையானது இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் எரிச்சலை உண்டு பண்ணிவிட்டதனை இந்து பத்திரிகையில் இந்திய ஆய்வாளர்களால் பல முறை கூப்பாடு போட்டு பக்கம் பக்கமாக எழுதப்பட்டது.
இந்திய அறிஞர்கள் கூப்பாடு போட்டாலும் அரசியல்வாதிகள் சீனா ஒரு சுண்டைக்காய் நாடு என்று சொல்லி தம்மைத் தாமே ஏமாற்றினார்கள். காலி முகத்திடலில் சீனா ஆடம்பர விடுதிகள் கட்டுவதற்காக இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி சீனாவுக்கு காணியை விற்றார்கள்.
இதனைப் போன்று பல உதாரணங்களை கூறமுடியும். இந்தியாவுக்கு தமிழ் மக்கள் சம்பூரில் குடியிருந்த நிலங்களை தாரைவார்த்து விட்டு நாடகமாடுகின்றது இலங்கை அரசு.
இலங்கையில் இன்று என்னென்ன நடக்கின்றதோ இவையனைத்தும் 5 வருடத்திற்கு முன்பு தென்சூடானில் நடந்தவையே மாண்புமிகு சம்பந்தரின் இந்தவாரப் பாராளுமன்ற உரையானது தென் சூடான் தலவைர் கிர் மாயாடித் அவர்களின் உரையொத்தமையை நாம் கண்டு கொள்ள முடியும்.
சூடன் அதிபர் ஓமார் அல் பசீர் அவர்களிடம் தென் சூடான் மக்களின் விருப்பம் குறித்து சூடானியப பாராளுமன்றத்தில் கிர் ஆற்றிய உரையானது உலக மக்களின் மனதைத் தொட்டது
ஆனால் சூடான் மக்களின் மனதையோ, அதிபரின் மனதையோ மாற்றவில்லை. அமெரிக்காவின் வலது கரமாகச் செயற்பட்ட கிர் அவர்கள் இறுதியில் வெற்றி வாகை சூடினார்
சீனாவின் ஆத்ம நண்பனான ஓமார் அல் பசீர் 20 வருடங்களுக்கு மேலாக தென் சூடான் மக்களை கொன்றொழித்தார். தென் சூடானின் எண்ணை வளங்கள் அனைத்தும் சீனாவினால் சுரண்டப்பட்டன. இன்றும் சீனாவின் முதலீடு தென் சூடானில் அதிகாரம் செலுத்துகின்றது.
சீனாவின் தலையீட்டால் தென் சூடானில் நிரந்தரமான சமாதானம் நிலை கொள்ளவில்லை. தென் சூடானின் சுதந்திரப் போராட்டத்தில் அமெரிக்காவின் இறுதி ஆப்புக்கு சீனா தலை சாய்க்க வேண்டி வந்தது.
பாதுகாப்புச் சபையில் வீட்டோ அதிகாரத்தை பாவிக்காமல் சூடான் அதிபர் அல் பசீர் அவர்களை சீனா மெல்ல மெல்ல கைவிட்டது.
5 வருடத்தின் பின்பு சர்வசன வாக்கெடுப்பு நடந்த போது 98 வீதமான தென் சூடான் மக்கள் தனி நாட்டுக் கொள்கைக்கு ஆதரவாக வாக்களித்து தென் சூடான் தனிநாடாக உலக நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டது.
தென் சூடானிய மக்களுக்கு உதவிய அமெரிக்காவே இன்று ஈழத்தமிழர்களுக்காக நீதி கேட்டு சீனாவுடனும், ரஷ்யாவுடனும் ஐ.நா.சபையில் யுத்தம் ஒன்றை நடாத்திக் கொண்டிருக்கின்றது.
இந்த வேளையில் ஈழம் வாழ் தமிழ் மக்களையும், அவர்கள் தேர்ந்தெடுத்த தலைவர்களையும் மதித்து அவர்கள் இன்றைய சூழலில் எவ்வாறு காய் நகர்த்துகின்றார்களோ அதனை வெளிநாடு வாழ் தமிழர்களாகிய நாம் மனப்பூர்வமாக ஆதரிக்க வேண்டும்.
இன்றைய நிலையில் கூட்டமைப்பின் இராஜதந்திரம் மற்றைய அனைத்து அமைப்புக்களிலும் பார்க்க பல மடங்கு பெரியது. சமஷ்டியைப் பெற்றுக் கொள்வதா? இந்தியா சொல்லும் 13 ஐ பெற்றுக்கொள்வதா?
அதற்கேற்றவாறு இராஜதந்திரமகப் தீர்மானிப்பது போராட்டம் நடந்த மண்ணில் வாழம் மக்களின் உரிமையாகும். ஆடிக்கறக்க வேண்டிய நேரம் ஆடத்தான் வேண்டும்.பாடிக் கறக்க வேண்டிய நேரத்தில் பாடித் தான் கறக்க வேண்டும்.
இது விளங்காத சில பத்திரிiயாளர்கள் வாய்க்கு வந்தபடி த.தே.கூட்டமைப்பை திட்டித்தீர்ப்தை தற்காலிகமாகவேனும் நிற்பாட்ட வேண்டும். விமர்சனம் வேறு. திட்டித்தீர்ப்பது என்பது மக்களை குழப்புவதாகும்.
ஆ.கோபால்,கனடா
http://www.tamilwin.com/show-RUmsyGRVLagsy.html
Geen opmerkingen:
Een reactie posten