தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 20 maart 2015

இந்தியாவில் சரத் பொன்சேகாவுக்கு உயரிய விருது



பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கனடாவிற்கு விஜயம்
[ வெள்ளிக்கிழமை, 20 மார்ச் 2015, 07:36.55 AM GMT ]
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கனடாவிற்கு விஜயம் செய்துள்ளார்.
கனடாவில் தங்கியிருக்கும் நாட்களில் சுமந்திரன் பல முக்கியஸ்தர்களைச் சந்திக்கவுள்ளதாகத் தெரியவருகிறது.
அத்துடன், புலம்பெயர் தமிழர்களுடனும் சந்திப்புக்களை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மயக்க மருந்து கொடுத்து வர்த்தகரிடம் கொள்ளை!
[ வெள்ளிக்கிழமை, 20 மார்ச் 2015, 07:48.19 AM GMT ]
நெல்லியடிப் பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தில், தேநீரில் மயக்க மருந்து கொண்டு வர்த்தகர் ஒருவர் அணிந்திருந்த பெறுமதியான ஆபரணங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று மாலை இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
குறித்த வர்த்தக நிலையத்துக்கு வந்த இருவர் வர்த்தகருடன் சிநேகமாக உரையாடியுள்ளனர்.
அவர்களில் ஒருவரிடம் தேநீர் வாங்கி வருமாறு மற்றவர் பணம் கொடுத்து அனுப்பியுள்ளார். அவரும் அருகில் உள்ள கடையில் தேநீர் வாங்கி அதனுள் மயக்க மருந்தைக் கலந்துள்ளார்.
தேநீர் கடை உரிமையாளர் குறித்த நபரிடம் என்ன கலக்கிறாய் என்று கேட்டபோது சமஹன் என்று பதிலளித்துள்ளார்.  
அந்தத் தேநீரைப் பருகியதும் கடை உரிமையாளர் மயக்கம் அடைந்துள்ளார்.
அதனையடுத்து அவர் அணிந்திருந்த ஆபரணங்கள், ஒரு தொகைப் பணம் என்பவற்றைத் திருடிக் கொண்டு இருவரும் தப்பிச் சென்றுள்ளனர்.
கடை உரிமையாளர் மயக்கமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


சுன்னாகம் நிலத்தடி நீரில் ஆபத்தான நஞ்சு மாசுகள் இல்லை: நிபுணர் குழு
[ வெள்ளிக்கிழமை, 20 மார்ச் 2015, 08:07.10 AM GMT ]
சுன்னாகம் பிரதேச நிலத்தடி நீரில் ஆபத்தான நஞ்சு மாசுகள் இல்லை என்று தாங்கள் மேற்கொண்ட ஆய்வுகளில் தெரியவந்திருப்பதாக, நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் தொடர்பாக ஆராய்வதற்காக வடமாகாண சபையால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழு அறிவித்துள்ளது.

தூயகுடிநீருக்கான செயலணியின் அமர்வு இன்று வெள்ளிக்கிழமை சுகாதார அமைச்சின் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இச்செயலணியில் கலந்துகொண்டு தாங்கள் மேற்கொண்ட ஆய்வுகள் தொடர்பாக விளக்கமளித்த நிபுணர்குழுவின் பிரதிநிதிகள், அதன்பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடாத்தினர். அதன்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
நிபுணர்குழு ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,
ஆய்வு நோக்கத்துக்காக சுன்னாகம் மின்நிலையத்தை மையப்படுத்தி எட்டுத் திசைகளிலும் 200 மீற்றர் இடைவெளியில் 2 கிலோமீற்றர் தூரத்துக்கு மாதிரி வலையமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் தற்சமயம் ஒரு கிலோமீற்றர் சுற்றுவட்டத்துக்கு ஆய்வுகளின் முதலாவது கட்டம் பூரணப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்கத் தமிழ்ச் சங்கமும், அவுஸ்ரேலியாவில் உள்ள தமிழ் உறவுகளும் இணைந்து அண்மையில் வாங்கி அனுப்பிவைத்துள்ள FROG 4000 என்ற கருவி கழிவு எண்ணெணையில் இருக்கக்கூடிய ஆபத்தான இரசாயனங்களை அளவிடக்கூடியது.
இந்தக் கருவியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் உடலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய பதார்த்தங்களான பென்சீன், தொலுயீன், ஈதையில் பென்சீன், ஓதோ சைலின், பரா சைலின் மற்றும் மெற்றா சைலின் போன்ற பதார்த்தங்கள் 85 வீதமான மாதிரிகளில் முற்றாக இருக்கவில்லை.
15 சதவீதமான மாதிரிகளில் நியம அளவிலும் பார்க்க 200 மடங்கு குறைவான அளவிலேயே அவதானிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ஒரு கிலோமீற்றர் சுற்று வட்டத்தினுள் எடுக்கப்பட்ட நீர் மாதிரிகள் கொழும்பில் உள்ள கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனத்துக்கு அனுப்பி பார உலோகத்துக்கான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
அவர்களது ஆய்வு முடிவுகளின்படி ஈயம், கட்மியம், ஆர்சனிக், வனேடியம், நிக்கல் போன்ற ஆபத்தான உலோக நஞ்சுகள் இருப்பது கண்டறியப்படவில்லை. தொடர்ந்து இரண்டாம் ஆய்வுகளை மேற்கொள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் உதவியுடன் வரும் 25 ஆம் திகதி தரையை ஊடுருவும் றேடார் யாழ்ப்பாணத்துக்கு எடுத்துவரப்படவுள்ளது என்றும் தெரிவித்தனர்.
ஊடகவியலாளர் சந்திப்பில் நிபுணர்குழுவைச் சோந்த கிழக்குப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கலாநிதி த.ஜெயசிங்கம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இரசாயனவியல் துறையைச் சேர்ந்த கலாநிதி கு.வேலாயுதமூர்த்தி, விவசாய பீடத்தைச் சேர்ந்த கலாநிதி நளினா ஞானவேல்ராஜா, பொறியியல் பீடத்தின் தலைவர் கலாநிதி அ.அற்புதராஜா ஆகியோர் கலந்துகொண்டிருந்தார்கள்.
http://www.tamilwin.com/show-RUmtyDRUSUlq6E.html


இந்தியாவில் சரத் பொன்சேகாவுக்கு உயரிய விருது
[ வெள்ளிக்கிழமை, 20 மார்ச் 2015, 08:37.49 AM GMT ]
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடைபெறும் 2015 பயங்கரவாத ஒழிப்பு தொடர்பான சர்வதேச மாநாட்டில் இலங்கை சார்பில் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா, ஓய்வுபெற்ற இராணுவ கெப்டன் சேனக ஹரிபிரிய டி சில்வா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த மாநாட்டில் முன்னாள் இராணுவத் தளபதிக்கு பயங்கரவாதத்தை ஒழித்தமைக்காக விருதும் வழங்கப்பட்டுள்ளது.
இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இதனை வழங்கியுள்ளார்.
இந்தியாவினால், வருடாந்தம் நடத்தப்படும் இந்த பாதுகாப்பு மாநாட்டில் உலகில் பல நாடுகளை சேர்ந்த பாதுகாப்பு சம்பந்தமான பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.
பயங்கரவாதம் தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகள், பயங்கரவாதத்தை தோற்கடித்த நாடுகளின் அனுபவங்கள் என்பன இந்த மாநாட்டில் பரிமாறிக்கொள்ளப்படும்.
இந்திய உள்துறை அமைச்சின் ஏற்பாட்டில், நடத்தப்படும் இந்த மாநாட்டை இந்திய சர்தார் பட்டேல் பொலிஸ் பல்கலைக்கழகம், ஜோதப்பூர் பாதுகாப்பு மற்றும் இந்திய குற்றவியல் கற்கை பிரிவு ஆகியவை ஒழுங்கு செய்துள்ளன.
இந்தியாவில் நடந்த செப்டம்பர் 26 தாக்குதல், நாட்டு எல்லையில் நடக்கும் பயங்கரவாத செயல்கள், பயங்கரவாத ஒழிப்பு தந்திரோபாயம், முஸ்லிம் அடிப்படைவாத குழுக்களின் பயங்கரவாத செயல்கள், கடல் வழி பயங்கரவாதம், பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்களை விநியோகிப்பது,
போதைப் பொருள் மற்றும் போலி நாணயங்கள் அச்சிடுவது போன்ற பயங்கரவாதிகளின் வருமான வழிகள் மாத்திரமல்லாது விடுதலைப் புலிகளின் போன்ற அமைப்புகளை தோற்கடித்து தொடர்பான அனுபவங்கள் இந்த மாநாட்டில் கலந்துரையாடப்பட்டு வருகின்றன.
இந்த மாநாட்டில், இந்திய பாதுகாப்பு அமைச்சர் மனோஹர் பரிகர், இந்திய வெளிவிவகார இணையமைச்சர் வீ.கே. சிங், அமெரிக்கா, பாகிஸ்தான், பங்களாதேஷ், கிரீஸ், சேர்பியா, இத்தாலி, இஸ்ரேல், நேபாளம், ரஷ்யா ஆகிய நாடுகளின் பாதுகாப்பு பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளனர்.
பயங்கரவாதம் அடக்குவதில் இலங்கை பெற்ற அனுபவம், வெற்றியை பெற்ற விதம் குறித்து சரத் பொன்சேகா மாநாட்டில் விளக்கியுள்ளார்.
அத்துடன் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை படையினருக்கும் இடையிலான ஒற்றுமை, வேற்றுமைகள், புலிகளை தோற்கடிக்க இலங்கை பாதுகாப்பு தரப்பினர் கையாண்ட தந்திரோபாயங்கள், வன்னி இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட விதம் குறித்தும் சரத் பொன்சேகா தெளிவுப்படுத்தியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDRUSUlq6G.html

Geen opmerkingen:

Een reactie posten