தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 25 mei 2014

மீண்டும் சர்சசையை ஏற்படுத்தியுள்ள ஜனாதிபதியின் புதுடில்லிப் பயணம்!


புதுடில்லியில் உள்ள ராஷ்டிர பவனின் முன்னுள்ள வளாகத்தில் இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி நாளை பதவியேற்கவுள்ளார்.
இதுவரை பதவியேற்ற இந்தியப் பிரதமர்களில் சந்திரசேகர் மற்றும் அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகிய இருவரும் தான், இந்த இடத்தில் இதற்கு முன்னர் பதவியேற்றுள்ளனர். மற்றெல்லாப் பிரதமர்களும் நாடாளுமன்ற தர்பார் மண்டபத்தில் தான் 500 ற்குட்பட்ட விருந்தினர்களின் முன்னிலையில் பதவியேற்றுள்ளனர்.
ஆனால், நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவுக்கு 3,000 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். இந்த அழைப்புகள் ஒரு பக்கத்தில் சர்சசைகளையும் தோற்றுவித்துள்ளது.
குறிப்பாக இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளிடையே கடுமையான கோபத்தை ஏற்படுத்தியுள்ளன.
ஏற்கனவே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்தியா வருவதற்கு எதிராகப் போராட்டம் நடத்திய இந்தக் கட்சிகளால் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் இந்திய அரசாங்கத்தின் அழைப்பாளராக பங்கேற்பதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
நரேந்திர மோடி தலைமையில் தேர்தலைச் சந்தித்த பாஜக தேர்தலில் வெற்றிமுகம் காட்டுகிறது என்று தெரியவந்தவுடனேயே விழுந்தடித்துக் கொண்டு வாழ்த்து தெரிவிக்க முனைந்த தலைவர்களில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் ஒருவராவார்.
தேர்தல் முடிவுகள் முறைப்படி அறிவிக்க முன்னரே அவர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், இலங்கைக்கு வருமாறு தனிப்பட்ட அழைப்பையும் விடுத்தார். அந்த அழைப்பு ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு சாதகமான தகவல் கிடைத்துள்ளதாகவும், விரைவில் மோடி கொழும்பு வருவார் என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல உறுதிப்படுத்தியுள்ளார்.
அண்மைக்காலத்தில் இந்தியாவுடனான உறவுகளில் இருந்து வரும் நெருடலைப் போக்கவும் பிராந்திய விவகாரங்களில் கடும் நிலைப்பாட்டை எடுக்கலாம் என்று கருதப்படும் பாஜக அரசாங்கத்துடன் உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளவும் நரேந்திர மோடியுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சற்று அதிகமாகவே ஆர்வம் காட்டுகிறார்.
இந்திய வெளிவிவகாரக் கொள்கையை பாஜக அரசாங்கம் மறுசீரமைக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அது இலங்கை மீது தாக்கத்தை ஏற்படுத்தக் கூடாது என்பதால், புதுடில்லியுடன் நல்லுறவு அவசியம் என்று மகிந்த ராஜபக்ச அரசாங்கம் நினைப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.
கொழும்பில் இருந்து அனுப்பப்பட்ட சாதகமான சமிக்ஞைக்கு புதுடில்லியில் இருந்தும் சாதகமான சமிக்ஞைகளே காட்டப்பட்டுள்ளன.
இலங்கையுடன் வலுவான உறவுகளை எதிர்பார்த்துள்ளதாக நரேந்திர மோடி தனது டுவிட்டர் குறிப்பில் கூறியுள்ளது இலங்கைக்கு சற்று ஆறுதலான விடயம். சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் இலங்கை கொண்டிருக்கும் உறவு இந்தியாவுக்கு எப்போதுமே நெருடலை ஏற்படுத்தும் விடயமாக இருந்து வருகிறது என்பதில் சந்தேகமில்லை.
எனவே இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பிராந்திய பாதுகாப்பு விவகாரங்களில் முன்னைய காங்கிரஸ் அரசாங்கம் போலல்லாது பாஜக அரசாங்கம் கடும் போக்கையே கடைப்பிடிக்க முனையும் என்பதே பொதுவான கணிப்பாக உள்ளது.
அப்படியான சூழலில் இலங்கையின் சீன, பாகிஸ்தான் நட்பு என்பது இந்தியாவினது உறவுக்கு இடைஞ்சலான விடயமாக இருக்கும் என்றே கருதப்படுகிறது. இதனை சுமுகமாக கையாள்வதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நரேந்திர மோடி அரசுடன் நட்புறவை ஏற்படுத்த விரும்புகிறார்.
பாஜகவில் அண்மையில் இணைந்து கொண்டவரும் எப்போதுமே இலங்கைத் தமிழர் நலனுக்கு குறுக்கே நிற்பவரும் தமிழ்நாட்டில் அரசியல் கோமாளி என்று வர்ணிக்கப்படுகின்றவரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் நெருங்கிய நண்பராகி விட்டவருமான சுப்ரமணிய சுவாமியே இதற்கான ஆலோசனைகளை வழங்கியுள்ளதாகவும் தகவல்.
நரேந்திர மோடிக்கும் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் நெருக்கத்தை ஏற்படுத்தும் பாத்திரத்தை இவரே வகிக்கிறார்.
நரேந்திர மோடியுடன் உறவை வலுப்படுத்த எத்தனித்துக் கொண்டிருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல அமைந்தது, இந்திய வெளிவிவகார அமைச்சின் அழைப்பு.
நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு அவரது சார்பில் இந்திய வெளிவிவகாரச் செயலர் சுஜாதா சிங் அழைப்பு அனுப்பியிருந்தார். இப்படியொரு வாய்ப்பு கிடைக்கும் போது அதை தட்டிக் கழிக்க இலங்கை தயாராக இல்லை. நாளை நடக்கவுள்ள பதவியேற்பு விழாவில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பங்கேற்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அழைப்பும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதுடில்லி வருகையும் தான், பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருந்த மதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளுக்க மட்டுமன்றி திமுக. அதிமுக போன்ற கட்சிகளுக்கும் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளன.
ஏற்கனவே மகிந்த ராஜபக்ச இந்தியாவுக்கு யாத்திரைப் பயணம் மேற்கொண்ட போது மத்தியப் பிரதேசம் வரை சென்று எதிர்ப்புப் போராட்டம் நடத்தியவர் வைகோ.
அதுபோல திருப்பதியிலும் புதுடில்லியிலும் அவரும் அவரது கட்சியினரும் போராட்டங்களை நடத்தியிருந்தனர்.
ஆனால் புதுடில்லியில் தமத கூட்டணிக்குத் தலைமையேற்ற நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் தாம் பங்கேற்கும் நிகழ்வில் மகிந்த ராஜபக்சவும் பங்கேற்பதை வைகோ, அன்புமணி ராமதாஸ் போன்றவர்களால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. இதற்கு அவர்கள் கடும் எதிர்பபை வெளியிட்டுள்ளனர்.
தமிழ்நாட்டு முதல்வர் ஜெயலலிதா கூட மகிந்த ராஜபக்ச பங்கேற்கும் நிகழ்வைப் புறக்கணிப்பார் என்றே தகவல்கள் கூறுகின்றன. இந்த இடத்தில் தமிழ்நாட்டு கட்சிகளினது எதிர்ப்பு கண்டுகொள்ளப்பட வாய்ப்புக்களில்லை. ஏனென்றால் இது இந்திய மத்திய அரசின் வெளிவிவகாரக் கொள்கையைச் சார்ந்த விடயம்.
நரேந்திர மோடி அண்டை நாடுகளுடன் வலுவான உறவுகளை ஏற்பேடுத்திக் கொள்ள முனைகிறார் என்ற காட்டுவதற்கான ஒரு எத்தனமே இந்த அழைப்பு.
ஏற்கனவே நரேந்திர மோடியை பிரதமர் பதவிக்கு கொண்டு வந்த பாஜக மீது முஸ்லிம்களுக்கு விரோதமான கட்சி என்ற பெயர் உள்ளது. உள்நாட்டில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் அத்தகையதொரு படிமத்தை இல்லாமல் செய்யவே நரேந்திர மோடி முயற்சிப்பதாக தெரிகிறது. குறிப்பாக பாகிஸ்தான் விவகாரத்தில் பாஜக கடும் போக்குடனேயே நடந்து கொண்டது.
ஆனால் வெளிவிவகாரக் கொள்கை என்று வரும் போது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், மாலைதீவு போன்ற இந்தியாவைச் சுற்றியுள்ள முஸ்லிம் நாடுகளுடன் உறவுகளை வைத்துக் கொளவது அவசியமாகிறது.
இந்தியாவினது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு இது அவசியமானது வழக்கத்தில், பாகிஸ்தானுக்கு இந்தியா காட்டும் எந்தப் பச்சைக்கொடிக்கும் பாஜக அல்லது அதன் இந்துத்துவ தோழமை கட்சிகள் மற்றம் அமைப்புகள் தான் எதிர்ப்புத் தெரிவிப்பது வழக்கம்.
ஆனால் சார்க் அமைப்பிலுள்ள பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஷ்தான், நேபாளம், பூட்டான், மாலைதீவு, இலங்கை ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கு பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போது இந்துத்துவ அமைப்புகள் எதுவும் வாய் திறக்கவில்லை.
ஆனால் தமிழ்நாட்டில் இருந்தே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த விவகாரத்தில் தமிழ்நாட்டின் எதிர்ப்பை பாஜக தலைமையோ நரேந்திர மோடியோ கண்டுகொள்ளப் போவதில்லை.
 நரேந்திர மோடி பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டவுடன் புதுடில்லியில் அவரைச் சந்தித்த வைகோ இலங்கைத் தமிழர் விவகாரத்தில் காங்கிரஸ் அரசு போன்று செயற்படக்கூடாது என்று கேட்டிருந்தார்.
அதற்கடுத்த நாளிலேயே ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு பற்றிய தகவல் வெளியானது. அது வைகோவுக்கு அதிர்ச்சியாகிவிட்டது. ஆனால் இதனை பொதுவான கண்ணோட்டத்துடன் நோக்குபவர்களுக்கு இது தவிர்க்க முடியாத ஒரு கட்டம் என்பது தெளிவாகத் தெரியும்.
கடந்த ஆண்டு  பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ஷெரீப் பதவியேற்ற போது இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அவர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.
அதேபாணியில் நரேந்திர மோடியும் அழைப்பு விடுத்துள்ளார். இந்தியாவைப் பொறுத்தவரையில் பாகிஸ்தானுடன் ஒப்பிடுகையில் இலங்கை விவகாரம் ஒரு சின்ன விடயம்.
பாகிஸ்தானைச் சமாளிப்பது தான் இந்திய வெளிவிவகாரக் கொள்கையின் முக்கிய அம்சமாக உள்ளது. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு அழைப்பு விடுத்தால், அது பாஜகவின் பின்னுள்ள இந்துத்துவ அமைப்புகளை எரிச்சலுக்குள்ளாக்கும்.
எனவே தான், ஒரே கல்லில் இரண்டு காய்களை வீழ்த்த சார்க் தலைவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்க முடிவு செய்திருந்தார் நரேந்திர மோடி. இதன் மூலம் நவாஸ் ஷெரீப்பை அழைத்து அவருக்கும் பாகிஸ்தானுக்கும் பச்சைக்கொடி காண்பிக்கவும் முடியும்.
அதேவேளை இந்துத்துவ அமைப்புகளின் கோபத்துக்கு ஆளாக வேண்டியும் வராது.
மகிந்த ராஜபக்சவுக்கு அனுப்பும் அழைப்பு தமது தமிழ்நாட்டுக் கூட்டாளிகளுக்கு கடுப்பை ஏற்படுத்தும் ன்பது அவருக்குத் தெரியாமல் போயிருக்காது.
அனாலும் அதை அவர் பொருட்டாகக் கருதவில்லை.
ஏனென்றால் இந்த விடயத்தில் தமிழ்நாட்டின எதிர்ப்பைக் கண்டுகொள்ளத் தேவையில்லை என்பதே பாஜக தலைமையின் கருத்தாகத் தெரிகிறது.
அதாவது இலங்கைத் தமிழர் விவகாரத்தில் ஏதாவதொரு முடிவு எடுக்கப்படும் போது தமிழ்நாட்டின் கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படலாமே தவிர இதுபோன்ற அழைப்புகள், சந்திப்புகளை புறக்கணிக்கும் விடயத்தில் இந்த எதிர்ப்புகளை நரேந்திர மோடி அரசாங்கம் கண்டு கொள்ளாது.
இது இலங்கைக்கு ஆறுதலளிக்கும் விடயமாகத் தெரியலாம்.
இனித் தமிழ்நாட்டின் ஆதிக்கம் புதுடில்லியில் இருக்காது என்று இலங்கை கொண்ட மகிழ்ச்சிக்கு காரணம் இதுதான்.
ஆனால் நரேந்திர மோடியின் பதவியேற்பில் மகிந்த ராஜபக்ச கலந்து கொண்டு உறவுகளை ஏற்படுத்திக் கொண்டாலும் இலங்கைப் பிரச்சினை விவகாரத்தில் நரேந்திர மோடி அரசாங்கத்தின் செயற்பாடுகள் அனைத்தும் இலங்கைக்கு சாதகமாக அமைந்து விடுமா என்பது சந்தேகமே.
அதுபோலவே தமிழ்நாட்டிலுள்ள அரசியல் கட்சிகள், இலங்கை விவகாரத்தில் கையாளும் அணுகுமுறைகளை இராஜதந்திரத்துடன் அணுகத் தவறினால் பல சந்தர்ப்பங்களில் மூக்குடைபட்டுக் கொள்ளவும் நேரலாம்.
அவ்வாறு ஏற்படும் மூக்குடைபடுதல், தமிழ் நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும் இலங்கை அரசுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஹரிகரன்

Geen opmerkingen:

Een reactie posten