தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 25 mei 2014

தாயகத்திலும் புலத்திலும் தமிழர், தமிழர்களால் தொடர்ந்து ஏமாற்றப்படுகிறார்கள்!- ச. வி. கிருபாகரன்!

கடந்த மனித உரிமைச் சபையில் சிறிலங்கா மீதான வாக்கெடுப்பின் பின்னர் ஒர் கட்டுரை, “ஜெனிவா மனித உரிமை சபையில், கோமாளிகள், கும்மாளமும், நாசகார வேலையும்” என்ற தலையங்கத்துடன் எழுதினேன். அதனை தொடர்ந்து சிலருடைய கொக்கரிப்பு காரணமாக, “உண்மைகளை யாரும் மறைக்க முடியாது!” என அடுத்த கட்டுரையையும் வெளிவந்தது.
எனது ஆக்கங்களில் கூறப்பட்ட விடயங்கள் ஏதேனும் பிழையென சுட்டிக்காட்டி, யாரும் எழுதினால், நிசே்சயம் நேரத்தை ஒதுக்கி, அவற்றை ஆறுதலாக வாசித்து பதில் கூற தயாராகவுள்ளேன்.
அன்றும் இன்றும் சிறிலங்காவின் அரச ஊடகங்கள் - தமிழ், சிங்களம், ஆங்கிலத்தில் என் மீது வசைபாடுவதை யாவரும் அறிவார்கள். இவர்களுக்கு துணையாக, சிலரின் ஊதியத்திற்கு வேலையும் சில ஆண்டிகள், தமது ஏஜமான்களினால் கொடுக்கப்பட்ட தகவல்களை அடிப்படையாக வைத்து, என் மீது தமக்குள்ள எரிச்சல் பொறாமையினாலும், தமது சிறு அறிவிற்கு ஏற்ற வகையிலும், எழுதும் அலட்டல்கள் பற்றி எனக்கு எந்வித அக்கறையும் இல்லை. இவர்களால் என்னுடன் போட்டி போட முடியாது என்பது அவர்களுக்கே தெரியும்.
சந்திரனைப் பார்த்து நாய்கள் குலைப்பதும், நாய்கள் குலைத்தாலும் சந்திரன் தனது கடமை தொடர்ந்து செய்யும் என்பது உலக வழமை. “நிலவிற்கு பயந்து பரதேசம் போபவர்களிடம்”, இவ் ஆண்டிகளின் கோழைத்தனம் சில வேளைகளில் வெற்றியளிக்கலாம். தற்போதைய இடைவெளியில், சரித்திரம் அரசியல் தெரியாத இவர்கள், தம்மை தமிழ் தேசியத்தை காப்பாற்றும் பெரும் தலைவர்களாக புலம்பெயர் தேசத்தில் காண்பிக்க முனைவது சிரிப்பிற்கு இடமானது.
தமிழ் தேசியம் என்றால் என்ன?
தமிழ் தேசியம் விடுதலை போராட்டம் என்றால் என்ன? பல தசாப்தங்களாக, மது மங்கை தூள் வியாபாரத்தில் காலத்தை கழித்துவிட்டு, திடீரென 2007ம் ஆண்டு யூன் மாதத்தின் பின்னர், யாருடையோ ஏவுதலில் தமிழ் செயற்பாட்டாளராக வேசம் போடுவது அல்ல.
தமிழ் தேசியத்தில் விசுவாசம் உள்ளவர்கள், திடீரென தோன்றி, நீண்ட காலம் வேலை செய்யும் இளைஞரோரையும், முதியோரையும் ஓரம் கட்டுவதும் அல்ல.
தமிழீழ விடுதலை போராட்டத்திற்கு பங்களித்தவர்களிடம் பங்களிப்பு செய்யாதீர்களென முன்பு கூறியவர்களும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் வெளியீடுகளை கிழித்து எறிந்து, இவற்றை யாரும் வாசிக்கப்படாது என முன்பு கட்டளையிட்டவர்களும், காலப்போக்கில் தமது பிள்ளைகளுக்கு மேடை தேவைபட்டு உதயமானவர்களும், சாதி சமயம் பார்த்து திருமணம் செய்து வைப்பவர்களும், இன்று தமிழ் தேசியம் பேசுகிறார்கள். “ஆலையில்லா ஊருக்கு இலுப்பம் பூ சர்க்கரை போல்” இவர்கள் தான் இன்றைய நவீன தமிழ் தலைவர்களா? இவர்களுக்கு உண்மை யதார்த்தம் போன்றவற்றை எப்படி பிடிக்கும்?
சர்வதேச மொழி ஒன்று கூட ஒழுங்காக பேசத் தெரியாத இவர்களால், தமிழீழ மக்களுக்கு என்ன செய்ய முடியும்? அத்துடன் இவர்கள் செயற்பாடு என்பது, எல்லை கோட்டிற்கு உள்ளாக்கபட்டதே. இவர்களிடம் அரசியல் வேலைகளை பொறுப்பு கொடுத்தவர்களையும், இவர்கள் நன்றாக அரசியலை நகர்த்துகிறார்களென கூறுபவர்களையும் எண்ணி பரிதாபப்படுகிறேன். இவர்களால் “கழுதை தேய்ந்து கட்டெறும்பாக போய் கொண்டிருப்பதை உணர முடியவில்லையா?
இவ் நவீன தேசியவாதிகள், ஜெனிவா மனித உரிமை சபையில் கலந்து கொண்ட வேளையில், அங்கு பிரசன்னமாகியிருந்த ஊடகவியலாளர்களிடம் “தயவு செய்து என்னையும் செவ்வி எடுங்கோ” என்று மண்டாடிய கதையை, யாரும் அறிந்துள்ளார்களா?
இவ் அற்ப மனிதர்கள், இப்போதைய விழிப்பு போராட்டங்களில் யார் யார் கலந்து கொள்ளவில்லை என்பதை கணக்கிடுவதற்கு முன்பு, தாம் எத்தனை தசாப்தங்களாக தமிழ் இன விடுதலைப் போராட்டங்களில் கலந்து கொள்ளவில்லை என்பது மட்டுமல்லாது, விடுதலை உணர்வு கொண்ட எத்தனை பேரை, விடுதலை போராட்டத்திற்கு பங்களிக்கவிடாது மழுங்கடித்தோம் என்பதை முதலில் கணக்கிட வேண்டும். முன்பு இப்படியான வேலை திட்டங்களை கபடமாக மேற்கொண்டவர்கள் யாரும், இன்று நிலைக்கவில்லை என்பதை இவர்கள் அறியவில்லை போலும்.
சிலர் தமது அறிவிற்கு ஏற்ற வகையில் தம்மை போன்ற அற்பர்களுக்கு சினிமா காண்பிப்பதற்காக ஏதோ புலம்புகிறார்கள். “காய்கிற மரத்திற்கு தான் கல்லெறி விழும் என்பதை நன்கு அறிவேன்”. காய்க்காத மரத்திற்கு கல்லெறிபவர்கள், நல்ல மனநோய் வைத்தியரை நேரத்திற்கு பார்ப்பது நல்லது. இவர்களையிட்டு பரிதாபப்படுவதற்கு மேலாக நாம் என்ன செய்வது? இவர்கள் தங்களை திருப்திப்படுத்தும் வேலைகளை மட்டும் நான் செய்வதுடன், தமது கற்பனைகளையும் பொய்களையும் நான் ஏற்க வேண்டுமாம். இவ்வளவிற்கும், இவர்கள் யார்? எங்கு, எப்படி, எப்பொழுது உருவானவர்கள்?
25வது ஆண்டு நிறைவு
அடுத்த ஆண்டு 2015ல் எனது மனித உரிமை செயற்பாட்டின் 25வது வருடம். ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை அமர்வுகளில் தொடர்ந்து கடந்த 24 வருடங்களாக பங்கு பற்றி வருகிறேன். இக் காலவேளையில் - பல நாட்டின் தலைவர்கள், முக்கிய புள்ளிகள், சர்வதேச மனித உரிமைச் அமைப்புக்களின் பிரதிநிதிகள், சர்வதேச மனித உரிமைச் செயற்பாட்டாளர் போன்று பலரை சந்திந்துள்ளேன்.
அத்துடன், பல்கலைக்கழகங்களிலும், சர்வதேச நிறுவனங்களிலும், மனித உரிமை கல்வி, பயிற்சி ஆகியவற்றை பெற்றுள்ளேன். இவ் வேளைகளில் சிறிலங்காவின் நீதித்துறை, சட்ட மா அதிபர், பாதுகாப்பு பிரிவின் காரியாலயங்களில் கடமையாற்றுவோர், சிறிலங்காவின் புத்திஜீவிகள் சிலர் என்னுடன் கல்வி, பயிற்சிகளை பெற்றுள்ளார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
சிறிலங்காவின் அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் உட்பட பல அமைச்ர்களுடனும், சிறிலங்காவின் இராஜதந்திரிகள் முக்கிய புள்ளிகளுடனும், ஐ.நா. மனித உரிமை சபை அமர்வு வேளைகளில், ஒரு தடவை அல்ல, பல தடவைகள் - பல சர்வேதேச இராஜதந்திரிகள், முக்கிய புள்ளிகள் கலந்து கொண்ட கூட்டங்களில், வெற்றிகரமாக விவாதம் செய்திருக்கிறேன் என்பதை, டக்ளஸ் தேவானந்தாவின் ஆட்கள், டக்ளஸிடமும், ராஜபக்சவின் ஆட்கள் ராஜபக்சவிடமும், வினாவினால் அவர்களே இவற்றை கூறுவார்கள். இவை பற்றி செய்திகள் உடனுக்குடன் சிறிலங்காவின் – சுதந்திர ஆங்கிலம், தமிழ், சிங்கள பத்திரிகைகளில் வெளியாகியிருந்தன.
என் மீதான எரிச்சல் பொறாமைக்காக, நான் ஆதாரத்துடன் கூறும் உண்மைகளை கண்டு, “இவன் எங்கள் இருப்பிற்கே உலை வைக்கிறான்” என்று யாரும் பயந்து பிரயோசனம் இல்லை.
முள்ளிவாய்க்காலின் முன்பு தமிழர்களது மனித உரிமை செயற்பாடுகளை முன்னெடுப்பது என்பது, “கல்லில் நார் உரிப்பதற்கு சமமானது.” சர்வதேச சமுதாயம், சர்வதேச பிரதிநிதிகளின் ஆதரவு தமிழர்களுக்கு ஆறவே கிடைக்காத காலம்.
முள்ளிவாய்க்காலின் பின்னர், ஐ.நா. மனித உரிமைச் செயற்பாடுகளில் ஈடுபடுவது என்பது ஒரு பெரிய விடயம் அல்ல. அங்கு எம்மை எதிர்ப்பதற்கோ, கேள்வி கேட்பதற்கோ, கடுமையாக நடப்பதற்கு அங்கு யாரும் இல்லை. இதற்கு பதிலாக அங்கு பலருடைய உதவிகள், தமிழர்களது மனித உரிமை செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கு உண்டு.
மூக்கு உடைபட்ட தமிழன்
எந்தவித மனித உரிமை கல்வியோ, பயிற்சியோ அனுபவமோ அற்ற இவர்களினால், தம்பட்டம் அடிப்பதை விட, பாதகத்திற்கு மேலாக சாதகமாக தமிழர்களுக்கு எதை செய்ய முடியும்?
உதாரணமாக, கடந்த மனித உரிமை சபையில், பாலஸ்தீன மக்கள் பற்றிய விவாதம் நடைபெற்ற வேளையில், யாழ்பாணத்திலிருந்து ஜெனிவாவிற்கு வருகை தந்திருந்த ஒருவர், ஐ. நா. மனித உரிமை சபையின் நடைமுறைகளை அறிந்திருக்காத காரணத்தினால், பாலஸ்தீன விவாதத்தின் பொழுது, இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் பற்றி உரையாற்ற முனைந்தார்.
இவ்வேளையில், சிறிலங்காவின் அரச பிரதிநிதி, இவ்வுரை சபையின் நிகழ்ச்சி நிரலுக்கு அப்பாற்பட்டது என கூறி, இடையூறு செய்தார். உடனடியாக சபை தலைவர் இவ்வுரையை நிறுத்தியது மட்டுமல்லாது, இவ்வுரையை ஐ. நா. மனித உரிமை சபையின் இணையதளத்திலிருந்தே நீக்கிவிட்டார்.
மனித உரிமை சபையில் இருந்தோர் இச் சம்பவத்தை, ஓர் தமிழனது உரையாகவே பார்த்தார்களே ஒழிய, யாழ்பாணத்திலிருந்து தகவல் திரட்டுவதற்காக ஜெனிவாவிற்கு வந்த தனிப்பட்ட ஒருவரது உரையாக பார்க்கவில்லை. தகவல் திரட்டுவதற்காக ஜெனிவா வந்த ஒருவரது செயற்பாட்டால், முழு ஈழத் தமிழ் இனத்தின் கௌரவம், மானம், ஜெனிவாவில் காற்றில் பறந்தது என்பதே உண்மை.
யாழ்ப்பாணத்தில் உள்ள “யாழ் ஊடக அமையத்தில்”, விரும்பியவர்கள் யாவரும், தாம் விரும்பியவற்றை கூறலாமா? அல்லது இதற்கு சில விதிமுறைகள் உண்டா? என்பதை நாம் அறிய விரும்புகிறோம். காரணம், வெளிநாடு சென்று திரும்பும் சிலர், விசேடமாக ஐ. நா. மனித உரிமை சபையில் நடந்ததாக கூறப்படும் கற்பனை கதைகளையும் பொய்களையும், யாழ் செய்தியாளர்கள் எப்படியாக உறுதிப்படுத்துகிறார்கள்? “யாழ் ஊடக அமையம்” அதனது பெயர் புகழை இழக்க வேண்டுமென்ற நோக்கிலேயே சிலர் தமது வேலை திட்டங்களை மேற்கொள்கிறார்களா?
ஐ.நா. மனித உரிமை செயற்பாட்டில் யாவரும் கலந்து கொள்ள வேண்டுமென்பதை நான் மிகவும் நீண்ட காலமாக ஊடகங்களில் கூறிவருவதை யாவரும் அறிவார்கள்.சர்வதேச மொழிகளில் ஆளுமை அற்றவர்களும, அரசியல் சரித்திரம் ஒழுங்காக தெரியாதவர்களும், சிறிலங்கா அரசின் நிலைபாட்டிற்கு வக்காளத்து வாங்குபவர்களும், சிறிலங்கா அரசிற்கு தகவல் சேர்ப்பவர்களும், குழப்பவாதிகளும் அங்கு செல்வதால் தமிழினத்திற்கு எந்தவித பிரயோசனமும் இல்லை.
“நாங்கள் இவற்றை பார்த்து கொள்ளுவோம், நீங்கள் ஏன் இங்கு வந்தீர்களென”, என எவ்வேளையிலும் யாருக்கும் கூறியது கிடையாது, இது எனது வேலையும் இல்லை. கடந்த மனித உரிமை சபையில் பங்கு கொண்ட ஒரு பெண்ணிடம், இப்படியாக நான் கூறியதாக ஓர் விசமத்தனமான கட்டுக்கதை உலாவுவதாக அறிந்தேன். இக் கட்டுக்கதையின் இரகசியத்தை, நோக்கத்தை மக்கள் அறியும் காலம் வேகு தூரத்தில் இல்லை.
தகவல் திரட்டப்படுகிறது
கடந்த மனித உரிமைச் சபையில் ஏறக்குறைய 45 தமிழர்கள் பங்குபற்றியுள்ளார்கள். இவர்களில் சிலர், யுத்த காலத்தில் தமிழீழ விடுதலை புலிகளை கடுமையாக விமர்ச்சித்தவர்கள், ஒரு சிலர் மகிந்த ராஜபக்சவுடன் மிக நெருங்கிய தொடர்புகளை கொண்டவர்கள், வேறு சிலர், டக்ளஸ் தேவானந்தாவின் தொடர்புகளை கொண்டவர்களாகவும் காணப்பட்டார்கள்.
இவர்கள் சுயநிர்ணய உரிமை, தமிழ் தேசியம், சர்வதேச விசாரணை, இன அழிப்பு போன்ற கவர்ச்சியான சொற்பதங்கள் மூலம், மிக உணர்ச்சி வசப்பட்ட தமிழர்களை நன்றாக ஏமாற்றுபவர்களாக கணப்படுகிறார்கள்.
இவர்கள் தமது ஏஜமான்களுடன், இரண்டாம் மூன்றாம் நபர்கள் மூலம் தொடர்புகளை பேணுபவர்கள். இவ் நபர்கள், தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கான, மிகவும் திறமையான பயிற்சிகள் பெற்றவர்கள். ஆகையால், இவர்களை இனம் காணுவது மிகவும் கடினம். இவர்களது உரை, கதை, பழக்க வழக்கங்களை மிகவும் அவதானமாக அவதானிப்பவர்களால் மட்டுமே இதை கண்டுபிடிக்க முடியும். இவ் வேலைத்திட்டத்திற்காக, ராஜபக்ச அரசு பெரும் தொகை பணத்தை, மாதாந்த ஊதியத்திற்கும், பயிற்சிகளுக்கும் செலவிட்டு வருகிறது.
உதாரணத்திற்கு ஓர் சம்பவத்தை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
ஜெனிவாவில், தமிழ் தேசிய கூட்டமைப்பு பாரளுமன்ற உறுப்பினர் ஒருவருடன் கதைத்துக் கொண்டிருந்த வேளையில், யாழ்பாணத்திலிருந்து வருகை தந்த ஒருவர், எமக்கு தெரியாமலே எமக்கு அருகாமையில் வந்து எமது சம்பாசணைகளில் தானும் கலந்து கொண்டார். இவ்வேளையில் இவ் நபர், இவ் பாராளுமன்ற உறுப்பினர் அணிந்திருக்கும் அடையாள அட்டையை கவனிப்பதையே தனது நோக்கமாக கொண்டிருந்தார். அவ் அட்டையை கவனித்ததும், உடனடியாக, நீங்கள் எப்படியாக இவ் அமைப்பிடமிருந்து இவ் அட்டையை பெற்றுக் கொண்டீர்களென தனது கேள்விக் கணைகளை ஆரம்பித்து விட்டார். இது அவருக்கு கொடுக்கப்பட்ட தகவல் திரட்டும் பணி.
அமெரிக்கா தீர்மானத்தை எதிர்த்த நபர்
எனது கட்டுரைகளுக்கு தேவையான தகவல்களை எப்பொழுதும் மிகவும் கவனமாக ஆராய்ந்து பெற்றுக் கொள்வது வழமை. இப்படியாக ஆராயும் வேளையில், கடந்த அமெரிக்கா தீர்மானத்தை எதிர்த்த சில நபர்கள் பற்றிய பல தகவல்களை பெற்றுக் கொண்டேன்.
தற்பொழுது, இரு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இடையில் பெரும் போட்டி காரணமாக, இவர்களை மாறி மாறி ஜனதிபதி ராஜபக்சவுடன் நெருங்கி வியாபாரம் செய்பவர்களாக குற்றம் சாட்டப்படுகிறது. என்னை பொறுத்த வரையில், இவர்கள் இருவரும் வியாபாரிகள், நிச்சயம் லாபம் பெரிதளவு காணப்படும் இடத்தில் தமது வியாபாரத்தை செய்வார்கள். இதை அரசியலாக மாற்றுவதற்கு முன், தமிழ் தேசியம், சுயநிர்ணய உரிமை பற்றி மிக தீவிரமாக பேசுபவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
சில தமிழர்கள், இவ் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றை, புலம்பெயர் வாழ் மக்கள் அறவே புறக்கணிக்க வேண்டுமென மிகவும் கடுமையான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்கள். ஆனால் யாழ்ப்பாணத்தில் இயங்கும் ஓர் அரசியல் கட்சி, இவ் தொடர்பு நிறுவனத்திடம் நிதி உதவி பெற்று செயற்படுவதாக அறியப்படுகிறது. அப்படியானால், “மீனுக்கு தலையையும், பாம்புக்கு வாலையும்” காட்டும் இரட்டை நாக்கு, இரட்டை வேடம், இவ் அரசியல் கட்சிக்கு தேவையா?
இணையத் தளங்களில் பிரசுரமாகும் படங்களை, பலர் மிகவும் அவதானமாக பார்ப்பதில்லை! அப்படியானால், இத்துடன் இணைக்கப்பட்டுள்ள, முதலாவது படத்தில் காணப்படுபவர் யார்? என்பதை மக்களே முடிவு செய்ய வேண்டும். (படம் இலக்கம் - 1)
யாழ் சிவில் அரங்கு
யாழ்ப்பாணத்திலிருந்து இயங்குவதாக கூறப்படும் யாழ்ப்பாண சிவில் அரங்கு என்பது யாரால் எப்பொழுது எதற்காக ஆரம்பிக்கப்பட்டது?
இக்கேள்வியை கேட்பதற்கான முக்கிய காரணம், இவ் சிவில் அரங்கில் நூற்றுக்கு மேற்பட்ட அமைப்புக்கள் உள்ளதாக கூறப்பட்ட பொழுதிலும், வெளிநாடுகளில் நடைபெறும் மாகாநாடுகள், கூட்டங்களுக்கு, ஒரு நபர் மட்டுமே கலந்து கொள்கிறார்.
அது மட்டுமல்லாது, தமிழ் தேசிய கூட்டமைபிலிருந்து பிரிந்து இயங்கும் குழுவினர்கள் கலந்து கொள்ளும் மாகாநாடுகள், கூட்டங்களில் மட்டுமே சிவில் அரங்கின் பிரதிநிதி கலந்து கொள்வது மட்டுமல்லாது, அவர்களது அரசியல் நிலைப்பாட்டிற்கு, சிவில் அரங்கின் பிரதிநிதி வக்காளத்து வாங்குவதையும் நாம் பல இடங்களில் அவதானிதுள்ளோம்.
இவ் யாழ்ப்பாணத்து சிவில் அரங்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து இயங்கும் குழுவினர்களுக்கு உறுதுணையாக இருப்பதற்காகவே ஆரம்பிக்கப்பட்டதா?
ஆகையால் இவ் விடயத்தில் ஓர் தெளிவான கருத்தை, நிலைப்பாட்டை மக்கள் தெரிந்து கொள்வதற்காக உரியவர்கள். தமிழ் தேசிய கூட்டமைபிலிருந்து பிரிந்து இயங்கும் குழுவினர், தமது மௌனத்தை கலைத்து உண்மைகளை கூறுவார்களா?;.
இதேவேளை ஓர் சிவில் அரங்கின் அங்கத்தவர், எப்படியாக ஒருவரது அரசியல் சிந்தனைக்கு வக்காளத்து வாங்க முடியும்? இப்படியான நடவடிக்கைகளால் தான் ராஜபக்சா அரசு> இன்று புலம் பெயர் நாட்டில் உள்ள, சாத்வீக சமாதான அமைப்புக்களை, பயங்கரவாத அமைப்புக்களென கூறி தடை செய்துள்ளதுடன் நியாயப்படுத்துகிறது.
இக்கட்டுரைக்கு ஆதாரமாக மேலும் இரு படங்களை இத்துடன் இணைத்துள்ளேன் - (இலக்கம் 2, இலக்கம் 3)
தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து இயங்கும் குழுவினர் இப்படங்களிற்கு, சளாப்பல் அற்ற, மக்கள் ஏற்க கூடிய சரியான விளக்கத்தை கொடுப்பார்களென நம்புகிறேன்.
இப்படியான பின்னணிகளை 2005ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொண்டிருந்த நபர்கள் தான், தமிழர்களது சுயநிர்ணய உரிமைக்கும், தமிழ் தேசியத்திற்கும் குரல் கொடுக்கப் போகிறார்களா? இவர்கள் மக்களுக்கு சினிமா காட்டுகிறார்களா?.
தமிழ் தேசிய கூட்டமைப்பை யார் பிரித்தார்கள்? எதற்காக பிரிக்கப்பட்டது? என்பவற்றை மக்கள் இன்றுடன் மிக தெளிவாக விளங்கிக் கொள்வாரகளென நம்புகிறேன்.!
இதே இடத்தில் ஓர் முக்கிய கேள்வி மனதில் தோன்றுகிறது. யுத்தவேளையில், இவ் நபர் என்ன செய்தார்? இவருடைய சிந்தனை, கருத்து, செயற்பாடுகள் யாவும் தமிழீழ விடுதலை போராட்டத்திற்கும், தமிழீழ விடுதலை புலிகளுக்கு ஆதரவாக இருந்தாரா என்பதை, மக்கள் இவர்களிடமிருந்து கேட்டு அறிய வேண்டும். இக் கேள்விகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து இயங்கும் குழுவினர் பதில் கொடுப்பார்களா?
இவ் விடயத்தில், அடுத்த கட்டுரைக்கான போதிய தகவல்கள், ஏற்கனவே சேகரிக்கப்பட்டுள்ளது என்பதை சகலருக்கும் அறியத் தருகிறேன்.
புலம்பெயர் வாழ் அமைப்புகளுக்கு தடை
கடந்த ஏப்ரல் மாதம், புலம்பெயர் தேசத்தில் இயங்கும் 16 தமிழ் அமைப்புகளும், 424 தனி நபர்களும், சிறிலங்கா அரசினால், ஐ. நா. பாதுகாப்பு சபை பிரேரணை, 1373க்கு கீழ் தடை செய்யப்பட்டுள்ளதாம்!
தடைசெய்யப்பட்ட 16 அமைப்புக்களில், ஐந்து அமைப்பு (தமிழீழ விடுதலை புலிகள், தமிழர் ஒருங்கிணைப்பு குழு, தமிழர் புனர்வாழ்வு கழகம், உலகத் தமிழ் அமைப்பு, உலகத் தமிழர் ஒருங்கிணைப்பு குழு) தவிர்ந்த மற்றைய அமைப்புக்கள் யாவும் மிக அண்மையில் உருவாக்கபட்டவை.
அடுத்து, தடைசெய்யப்பட்ட 16 அமைப்புக்களும், 424 தனி நபர்களும், வெளிநாடுகளிலேயே வாசிக்கிறார்கள் அல்லது அமைந்துள்ளது.
ஐ. நா. பாதுகாப்பு சபையின் பிரேரணை 1373 என்ன கூறுகின்றதென ஆராய்வோமானால், “எல்லா நாடுகளும்” இணைந்த நடவடிக்கையென கூறப்படுகிறது.
அப்டியானால், இவ் அமைப்புக்களோ அல்லது நபர்களோ, ஏதாவது சர்வதேச பயங்கரவாதத்திற்கு துணை போயிருந்து, சர்வதேச சமாதானத்திற்கும் பாதிப்பை உண்டு பண்ணக்கூடியவர்களா இருந்திருந்தால், அவர்கள் நிலை கொண்ட நாடுகளினால் முதலில் இவர்கள் தடை செய்யப்பட்டிருப்பார்கள். அல்லது, இவ் அமைப்புக்களையோ அல்லது தனி நபர்களையோ தடை செய்யும் முன்னர், சிறிலங்கா அரசு, இவர்கள் நிலை கொண்டிருக்கும் நாடுகளை கலந்து ஆலோசிக்கப்பட்டிருக்க வேண்டும்.
இப்படியாக ஒன்றும் நடந்திருக்காத நிலையில், தடைசெய்யப்பட்ட அமைப்போ அல்லது தனி நபரோ, ஒழுங்கான சட்ட ஆலோசனைகளை பெற்று, இவ் தடை மீது நடவடிக்கை எடுக்க முன்வருவார்களெயானால், இவ்விடயத்தை தலைகீழாக மாற்றக் கூடிய நிலை உருவாகலாம்.
இவ் விடயத்தில், ஐ.நா.சாசனத்தின், அத்தியாயம் 7ல், சாரம் 39லிருந்து 51 வரை, கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.http://www.un.org/en/documents/charter/chapter7.shtml
நீதிமன்றம் செல்ல விரும்பாதோர், இவ்விடயத்தை ஐ.நா.மனித உரிமை குழுவிடம், பாதிக்கப்பட்டவர்கள் (தடை செய்யப்பட்டவர்கள்) என்ற அடிப்படையில், முறையீடு செய்ய தகுதியுடையவர்கள். இதற்கு எந்தவித நிதியும் தேவையில்லை.
(Model complaint form for communications under)
Optional Protocol to the International Covenant on Civil and Political Rights
சுவராசியமான செய்திகள்
சிறிலங்காவினால் மேற்கொள்ளப்பட்டுள்ள தடை பற்றி பல சுவராசியமான கதைகள் உண்டு.
அண்மையில் ஆரம்பிக்கப்பட்டு தடைசெய்யப்பட்ட அமைப்புக்களில், ஒரு சில மட்டுமே கடுமையாக வேலை செய்பவை. மற்றவை, புலம்பெயர் வாழ் மக்களுக்கு சினிமா காட்டுபவை, தம்பட்டம் அடிப்பவை.
இவ் அமைப்புக்களுக்கு, புலம்பெயர் மக்களது ஆதரவோ அல்லது தமிழ் கல்விமான்கள் புத்திஜீவிகளது ஆதரவு அறவே அற்றவர்கள். இவர்கள் மிரட்டல் பணியில் வேலைகளை மேற்கொள்பவர்கள். தமது அமைப்புக்களின் பெயர் தடைசெய்யப்பட்டதையிட்டு இவர்களுக்கு எல்லையற்ற சந்தோசம்.
தடைசெய்யப்பட்ட தனிநபர் பட்டியலில் தமது பெயர்கள் இணைக்கப்பட்டுள்ளதையிட்டு சில தனிநபர்கள் மகிழ்ச்சி கொண்டாட்டங்கள் நடத்துகிறார்கள். வேறு சிலர் தமது பெயர் பட்டியலில் இணைக்கப்படாமையிட்டு மிகவும் கோபமும் சோகமும் அடைந்துள்ளார்கள்.
வேறு சிலர், தடை செய்யப்பட்ட பட்டியலில் உள்ளவர்களைவிட, தாம் பல மடங்கு கடுமையாக உழைத்ததாகவும், ஆனால் சிறிலங்காவின் காதுகளுக்கு இவை எட்டவில்லையென அதிசயப்படுகிறார்கள்.
ஒரு சில நபர், தாங்கள் வாழும் நாட்டில் உள்ள சிறிலங்கா தூதுவரலாயத்திற்கு தொலைபேசி செய்து, தாம் தமிழீழ விடுதலை போராட்டத்திற்கு செய்துவந்த எதையும், நீங்கள் யாரும் அறிய முடியவில்லையெனவும், ஆகையால் உங்கள் புலனாய்வு உத்தியோகத்தர் கெட்டித்தனம் அற்ற சோம்பேறிகளென கூறப் போவதாகவும் கூறினார்கள்.
கடந்த 15ம் திகதி வியாழக்கிழமை, தொலைகாட்சி செவ்வி ஒன்றில் இவை பற்றி வெளிப்படையாக என்னால் கூறப்படும் வரை, இவ் அமைப்புக்களும் தனிநபர்களும், இந்த தடையினால் மிரண்டார்களோ என்னவோ, திடீரென அமைதியாகி விட்டார்கள். இவர்கள் யாரும் வெளிப்படையாக தம் மீதான தடையை எதிர்த்து எந்த கருத்தையும் கூற முன்வரவில்லை.
எம்மைப் பொறுத்தவரையில் சிறிலங்காவின், இவ் தடை என்பது ஒரு பூச்சாண்டி விளையாட்டு. இது, “நல்லூரில் குண்டுவிழும் வேளையில், ஊர்காவற்துறையில் துவக்கு தூக்கியதற்கு” சமமானது.
நாட்டில் பயங்கரவாதத்தை ஒழித்துள்ளோம் எனக் கூறும் சிறிலங்கா அரசு, சர்வதேசத்திற்கு “புலி பூஞ்சாண்டி” காட்டுவதற்காக மேற்கொள்ளப்படும் வேலை திட்டங்களில் இதுவும் ஒன்று. இவற்றை கண்டு யாரும் பயப்பிட வேண்டிய அவசியமில்லை. “தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா”. நாம் இவற்றை கண்டு அஞ்சாது தொடர்ந்து வீறு நடை போட வேண்டும்.
எம்மைப் பொறுத்தவரையில், இவ் தடையில் சேர்க்கப்பட்டுள்ள பெயர் வழிகளும், அமைப்புக்களின் தெரிவில், தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்ற அமைப்பின் பிரதிநிதிகளும், இவர்களுடன் முக்கிய உரையாற்ற வந்த சில நபரின் பங்கு, பெரிதளவில் காணப்படுகிறது. இங்கு இணைக்கபட்டுள்ள படங்கள் 2, 3 ஆகியவற்றை சரியான முறையில் ஆராய்பவர்கள் இதற்கான விடையை பெற்றுக் கொள்வார்கள்.
மிக விரைவில், ஈ.பி.டி.பியும், தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்ற அமைப்பும் இணைந்து வேலைத்திட்டங்களை முன்னெடுத்தால் அதிசயப்படாதீர்கள்.
இவ் தடையினால் பிரதானமாக பாதிக்கப்படப் போவது சிறிலங்கா அரசே. எதிர்வரும் கோடை கால விடுமுறைக்கு, சிறிலங்காவிற்கு சென்று வரவுள்ள புலம்பெயர் வாழ் தமிழர்களது எண்ணிக்கை பாரியளவில் குறைந்தே காணப்படும்.
உண்மை என்னவெனில், இவ் தடையை காரணம் காட்டி, சிறிலங்காவிற்கு செல்லும் புலம்பெயர் வாழ் மக்கள் எவரையும், எந்தவித காரணம் காட்டாது கைது செய்து, காலவரையின்றி சிறையில் அடைப்பதற்கு இத் தடை வழி வகுக்கும். புலம்பெயர் வாழ் மக்கள், தங்களது எதிர்கால நடவடிக்கையை, சரியான முறையில் திட்டமிட்டு, மதிநுட்பமான முறையில் அணுகாத நிலையில், இவர்கள் நிச்சயம் பாதிக்கப்படுவார்கள்.
தாயகத்திலும் புலத்திலும், தமிழர் தமிழர்களால் தொடர்ந்து ஏமாற்றப்படுகிறார்கள்!
ச. வி. கிருபாகரன்
பிரான்ஸ்.
24 மே 2014
TCHR France - tchrfrance@hotmail.com
http://www.tamilwin.com/show-RUmsyFRZLZks4.html

Geen opmerkingen:

Een reactie posten