தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 25 mei 2014

இலங்கையின் பிரிவினையை எதிர்க்கிறோம் - ஆர்.எஸ்.எஸ்

இந்து மத தலைவர்களின் ஆர்ப்பாட்டத்தில் பொதுபல சேனா!
[ ஞாயிற்றுக்கிழமை, 25 மே 2014, 10:16.03 AM GMT ]
இலங்கையில் முறையற்ற மதமாற்றங்களுக்கு எதிராக இந்து மத தலைவர்கள் நேற்று கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரும், அந்த அமைப்பின் அமைப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
இந்து மத தலைவர்கள் ஏற்பாடு செய்த இந்த ஆர்ப்பாட்டத்தை ஆதரிப்பதாக ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyFRZLZkt5.html

இலங்கையின் பிரிவினையை எதிர்க்கிறோம் - ஆர்.எஸ்.எஸ்
[ ஞாயிற்றுக்கிழமை, 25 மே 2014, 10:58.20 AM GMT ]
இலங்கையில் பிரிவினையை எதிர்ப்பதாக பாரதீய ஜனதா கட்சியின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முக்கிய தளபதிகளில் ஒருவரான மும்பாய் வாழ் தமிழர் சேஷாத்ரி சாரி கூறியுள்ளார். இந்திய நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை கூறியுள்ளார்.
ஆர்.எஸ்.எஸ். தளபதிகளில் முக்கியமானவர் சேஷாத்ரி சாரி. இவர், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அதிகாரபூர்வ ஆங்கில இதழான ‘ஓர்கனைசர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் என்பதுடன் பா.ஜ.க-வின் தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்து வருகிறார்.
அவர் அளித்த செவ்வி வருமாறு
இது தே.ஜ.கூ. ஆட்சி எனில், மோடி பதவியேற்புக்கு சார்க் நாட்டு ஆட்சித் தலைவர்களை அழைக்க பா.ஜ.க. தனித்து முடிவெடுத்தது ஏன்?
இது பா.ஜ.க-வின் தன்னிச்சையான முடிவு அல்ல. அடுத்து, இனிவரும் நாட்களில் வெளியுறவு விவகாரங்கள் எப்படி இருக்க வேண்டும் எனவும், இந்த நாட்டின் சக்தியை எப்படி உபயோகப்படுத்த முடியும் என்பதற்கும் ஆதாரமாக விடுக்கப்பட்டதுதான் இந்த அழைப்பு. இந்த விஷயத்தை, தமிழகத்தில் ராஜபக்சவின் வரவை எதிர்க்கும் அரசியல் கட்சிகளுக்கு மெல்ல மெல்லப் புரிய வைப்போம். அவர்கள் புரிந்து கொண்டால் நாட்டுக்கு நல்லது.
ராஜபக்சவைத் தவிர்த்திருக்க முடியாதா?
எப்படி முடியும்? சார்க் நாடுகளை அழைக்கும் போது இலங்கை அல்லது பாகிஸ்தானை மட்டும் வர வேண்டாம் என்று கூற முடியுமா? இந்தியாவுக்கு எதிரி நாடு கிடையாது என்பது எங்கள் கருத்து. அனைவரிடமும் நேசக்கரம் நீட்டவே இந்தியா விரும்புகிறது.
இலங்கைத் தமிழர்கள் பிரச்சினைகளை அணுகுவதில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க-வுக்கு இடையே உள்ள பெரிய வித்தியாசம் என்ன?
இந்தியா-இலங்கையின் உறவு என்பது தமிழர்கள் பிரச்சினையால் பகையாகிவிடக் கூடாது. தமிழர்களின் பிரச்சினைகளை கொழும்பு, உண்மையாகவும் சுமுகமாகவும் தீர்க்கும் என பா.ஜ.க. கருதுகிறது. மேலும், இதற்காக அந்த அரசு முயற்சிப்பதாகவும் நம்புகிறது. இதற்கு கொழும்பு மற்றும் புதுடெல்லிக்கு, தமிழர்களுடன் இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்த நாம் கால அவகாசம் தருவது அவசியம். ஆனால், எதிர்பாராதவிதமாக ஐ.நா. சபையில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில், ஐ.மு.கூ. அரசு இலங்கையிலிருந்து வெளிநாட்டில் புலம் பெயர்ந்து வாழும் சில குழுக்களின் வலையில் விழுந்து, தவறாக வழிகாட்டப்பட்டுவிட்டது. இதன் விளைவாக, புதுடெல்லிக்கும் கொழும்புக்கும் இடையே இடைவெளி அதிகரித்துவிட்டது.
அப்படியெனில், ஐ.நா-வில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் இந்தியா நடுநிலைமை வகித்திருக்கக் கூடாது என்கிறீர்களா?
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, அந்தத் தீர்மானத்தில் இந்தியா நடுநிலை என்ற நிலைப்பாட்டை எடுத்திருக்க வேண்டும். அதேசமயத்தில், இலங்கைக்குச் சாதகமாக வாக்களிக்க வேண்டிய அவசியமும் இல்லை. இந்த நடவடிக் கைகள் மூலம், அந்தப் பிரச்சினை கொழும்பு-புதுடெல்லி-இலங்கைத் தமிழர்கள் ஆகிய தரப்புக்கு இடையில் மட்டும் இருந்திருக்கும். இப்போது, அந்தப் பிரச்சினையில் மற்ற உலக நாடுகளும் தலையிட வாய்ப்பாகிவிட்டது. இந்தத் தீர்மானத்தால், தமிழர்களின் பிரச்சினை உலகமயமாகிவிட்டது. இனி இதில், அநாவசியமாகப் பிரச்சினைகள் வருமே ஒழிய அவற்றைத் தீர்ப்பது கடினம். இதைத்தான், வடமாகாணத்தின் முதலமைச்சரான விக்னேஸ்வரனும், “இந்தப் பிரச்சினை என்பது வட மாகாணத்துக்கும், இலங்கை அரசுக்கும் உட்பட்டதாகும் எனவும், இதில், தமிழக அரசியல் கட்சிகள் தலையீடு இருக்கக் கூடாது” எனவும் கூறியிருக்கிறார். இப்போது, உலக நாடுகளும் தலையிடுவதற்குக் காரணமாக ஐ.மு.கூ. அரசு இருந்துவிட்டது. இந்த அணுகுமுறைதான் அவர்களுக்கும் எங்களுக்கும் இடையிலான வித்தியாசம்.
ஐ.நா. தீர்மானத்துக்கு முன்பாகத் தமிழகத்தின் பா.ஜ.க. தலைவர்கள் தம் தலைமையிடம் கேட்டபோது, அதன் தேசியத் தலைவர்கள் வெளிப்படையாக வந்து கருத்து சொல்லாதது ஏன்?
கருத்து கூறினார்கள். அது பரவலாகச் செய்திகளில் வரவில்லை. இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு காஷ்மீர் ஒரு பெரிய உதாரணம், பலஸ்தீனமும் ஒரு நல்ல உதாரணம். இதுபோல், பல பிரச்சினைகள் இந்த உலகத்தில் உலகமயமாக்கப்பட்டு அவை, தீர்க்கப்படாமலேயே உள்ளன. எனவே, இந்தப் பிரச்சினை இலங்கைத் தமிழர், இலங்கை அரசு மற்றும் இந்திய அரசுகளுக்கு இடையே தீர்க்கப்படுவதுதான் சிறப்பாக இருக்கும். இலங்கைத் தமிழர்கள் பிரச்சினை அவர்களின் முக்கியமான விருப்பங்களின் பேரில் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுத் தீர்க்கப்பட வேண்டும் என்பதில் இந்தியா மிகவும் நம்பிக்கை வைத்திருக்கிறது. நாம் இலங்கையில் பிரிவினையை எதிர்க்கிறோம், இதில் மற்ற நாடுகள் தலையிடுவதையும் எதிர்க்கிறோம்.
இந்த விளக்கத்தைத் தேர்தலுக்கு முன்பாக அளித்திருக்கலாமே?
எங்கள் விளக்கத்தைப் பொதுமக்கள் கவனத்துக்குக் கொண்டுசெல்வதைத் தமிழகத்தின் அரசியல் சாதுர்யவான்கள் தடுத்துவிட்டனர். இது நம் அரசியல் அமைப்பின் ஒரு குறைபாடு.
சார்க் நாடுகளின் ஆட்சித் தலைவர்களுக்கான அழைப்பு மூலம் பா.ஜ.க. சொல்லும் செய்தி என்ன? இந்தியா ஒரு வல்லரசு என்கிறீர்களா? மோடி அதன் முடிசூடா சக்கரவர்த்தி என்கிறீர்களா?
இது உலகின் எந்த நாடுகளுக்கும் கிடைக்காத ஜனநாயகத்தின் வெற்றி. இதில், அதிக அளவில் வாக்களிப்பு நடைபெற்று ஒரே கட்சிக்கு மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது. இதை, இந்தியாவின் அண்டை நாடுகளுக்கும் உலகத்துக்கும் எடுத்துக்காட்ட விரும்புகிறோம். இந்த ஜனநாயகத்துக்கு வெற்றி கிடைக்கும் எனவும், அதுதான் நாட்டுக்கான சிறந்த வளர்ச்சி என்பதையும் உலகத்துக்கு உணர்த்த சார்க் நாடுகள் அழைக்கப்பட்டிருக்கின்றன என்றார்.
http://www.tamilwin.com/show-RUmsyFRZLZkuy.html

Geen opmerkingen:

Een reactie posten