[ வியாழக்கிழமை, 22 மே 2014, 02:39.51 PM GMT ] [ பி.பி.சி ]
இலங்கையில் அரசாங்கத்தில் இருப்பவர்களின் அளவுக்கதிகமான அதிகாரம் மற்றும் செல்வாக்கு காரணமாக நேர்மை, தூய்மை போன்ற விழுமியங்கள் புரையோடிவருவதாக 2013 ஆம் ஆண்டுக்கான ஊழல் மதிப்பீட்டு சுற்றாய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்ற வருடம் நாற்பது புள்ளிகள் எடுத்து 79ஆவது இடத்திலிருந்த இலங்கை இந்த வருடம் 37 புள்ளிகளை மட்டும் எடுத்து 91ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரசாங்கப் பிரதிநிதிகள் வசம் அதிகாரம் குவிந்துவருவதால், அரசியல் சாசன ரீதியாக ஆளும் கட்டமைப்பில் இருந்த வரம்புகளும் கட்டுப்பாடு அம்சங்களும் செயலற்றுப் போய்வருவதாக டிரான்ஸ்பரன்ஸி இண்டர்நேஷனல் அமைப்பின் சுற்றாய்வு கூறுகிறது.
தவிர பொதுமக்களின் பணம் தவறான வழியில் சுருட்டப்படுகின்ற போக்கும் பரவலாகிவருவதாக அது சுட்டிக்காட்டுகிறது.
மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்ற சட்டம் இயற்றும் மன்றங்களுடைய மேலாண்மையைக் குலைப்பதாகவும், நீதித்துறையின் சுதந்திரத்தை பாதிப்பதாவும் இந்தப் போக்கு அமைந்துள்ளதென குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக காவல்துறை, கல்வித்துறை, காணி நிர்வாகம், அரசியல் கட்சிகள் போன்றவற்றில் ஊழல் அதிகமாகியிருப்பதாக டிரான்ஸ்பரன்ஸி இண்டர்நேஷனலின் இலங்கைப் பிரிவு கூறுகிறது.
பொதுத்துறை அரசியல் மயமாகிவருவதாகவும், அரசுத்துறை ஊழியர்களின் நியமனங்கள், வேலையிட மாற்றங்கள், பதவி உயர்வு போன்ற விஷயங்களில் ஊழலும் அரசியல் தலையீடுகளும் அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
எனவே இலங்கையில் ஊழல் ஒழிப்பு வழிமுறைகள் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும், வெளிப்படைத்தன்மையையும், பொறுப்புகூறலையும் அதிகரிக்கும் விதமாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்றும் டிரான்ஸ்பரன்ஸி இண்டர்நேஷனல் இலங்கைப் பிரிவின் செயல் இயக்குநர் எஸ் ரனுகே கூறினார்.
1994ஆம் ஆண்டு இலங்கையில் கொண்டுவரப்பட்ட லஞ்சத் தடுப்புச் சட்டம் சுற்றவர நடந்துவரும் மாற்றங்களுக்கு ஏற்ப இதுவரையில் திருத்தப்பட்டிருக்கவில்லை.
தனியார் துறை, சிவில் சமூகம் போன்ற துறைகளில் காணப்படுகின்ற ஊழலை ஒழிக்க இந்த சட்டத்தில் வழியில்லாமல் இருக்கிறது என்று சுட்டிக்காட்டப்படுள்ளது.
இந்த நிலை மாற வேண்டும் என டிரான்ஸ்பரன்ஸி இண்டர்நேஷனல் வலியுறுத்துகிறது.
அதேநேரம் ஏனைய தெற்காசிய நாடுகளோடு ஒப்பிடுகையில் இலங்கையில் ஊழல் குறைவாக உள்ளது.
இந்தப் பட்டியலில் தெற்காசிய நாடுகளைப் பொறுத்தவரையில் பூட்டானுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இலங்கை உள்ளது
ஊழல் தரவரிசைப் பட்டியலில் இந்தியா 36 புள்ளிகளுடன் 94ஆவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyFRWLZmx7.html
ஐரோப்பாவால் முடியுமென்றால், ஏன் எங்களால் முடியாது?- இராணுவப் பேச்சாளர் கேள்வி
[ வியாழக்கிழமை, 22 மே 2014, 03:02.49 PM GMT ]
ஐரோப்பிய நாடுகளில் ஹிட்லரின் ஆதரவாளர்களை தடை செய்யும் போது, இலங்கையில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களைத் தடுப்பதில் எந்தவித குற்றமும் இல்லையென பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் வடக்கில் விடுதலைப் புலிகளின் நினைவாக நடக்கவிருந்த நிகழ்ச்சியை தடுத்ததாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
ஆனால், தமிழ் அரசியல் கட்சிகள் கூறுவதுபோல், பத்திரிகை நிறுவனத்தையோ, அல்லது எந்தவித நிறுவனத்தையோ சோதனை செய்யவில்லை.
வடக்கில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது, எந்தக் கோவில்களையும், எந்தப் பத்திரிகை நிறுவனத்தையோ சுற்றி வளைக்கவில்லையென தெரிவித்துள்ளார்.
தீவிரவாதிகளின் நினைவாக நடத்தப்படவிருந்த நிகழ்ச்சிகளை மட்டுமே தடுத்ததாக அவர் தெரிவித்தார்.
ஐரோப்பிய நாடுகளில், ஹிட்லர் ஆதரவாளர்களை கைது செய்வது போல இலங்கையிலும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களை கைது செய்து தடுத்து வைப்பதில் தவறில்லையென குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyFRWLZloy.html
போர்க்குற்றங்கள் தொடர்பில் இராணுவ விசாரணைக்குழு நியமனம்!
[ வெள்ளிக்கிழமை, 23 மே 2014, 01:51.49 AM GMT ]
இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரின் போது அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது, மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டது தொடர்பில் பல்வேறு தரப்பினராலும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
இதில் பிரித்தானிய தொலைக்காட்சியான சனல்4 ஒருபடி முன்னே சென்று தாம் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக புகைப்படம் மற்றும் ஒளிப்பதிவுக் காட்சிகளையும் வெளியிட்டு வருகின்றது.
இவ்வாறான போர்க்குற்ற ஆதாரங்கள் காரணமாக இலங்கை சர்வதேச ரீதியில் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. மேலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் கண்டனத்துக்கும் ஆளாகியுள்ளது.
இந்நிலையில் சர்வதேசத்தின் கவனத்தை திசை திருப்பும் வகையில் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கென இராணுவ விசாரணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு இதனை சிபாரிசு செய்திருந்தது. இன்றைய தினமின பத்திரிகையில் இந்தச் செய்தி பிரசுரமாகியுள்ளது.
போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை இராணுவத்தின் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை என்று மறுத்துள்ள இராணுவப் பேச்சாளர் ருவன் வணிகசூரிய, எனினும் இந்த விசாரணைக்குழுவின் விசாரணைகளை தாம் வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.
சனல்4 ஊடகத்தின் குற்றச்சாட்டு குறித்து இராணுவம் விசாரணை
சனல் 4 ஊடகம் மற்றும் ஏனைய தரப்பினரால் சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளது.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய இவ்வாறு இராணுவக் கண்காணிப்புக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் 30 வீதமானவை ஏற்கனவே அமுல்படுத்தப்பட்டுள்ளன.
போர் இடம்பெற்ற காலத்தில் பல்வேறு சம்பவங்கள் இடம்பெற்றதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் சரியோ, பிழையோ அது குறித்து விசாரணை நடத்துமாற கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.
இந்த பரிந்துரைகளின் அடிப்படையில் இராணுவ கண்காணிப்பு குழுவொன்றை அரசாங்கம் நிறுவியுள்ளது.
படையினர் இரத்த தானம் அளிக்க அனுமதிக்கவில்லை என சிலர் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
எனினும், 2010ம் ஆண்டு முதல் இதுவரையில் 13200 அலகு இரத்தத்தை படையினர் வடக்கு மக்களுக்காக தானம் செய்துள்ளனர். இதற்கு மேலதிகமாக அவசர நிலைமைகளின்போதும் வடக்கு மக்களுக்கு படையினர் இரத்தம் வழங்கியுள்ளனர் என பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளர்.
நகர அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு அமைச்சு கட்டடத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyFRXLZlp6.html
Geen opmerkingen:
Een reactie posten