சாதாரணமாக பிரதமர் மற்றும் அரசியல் சட்ட அமைப்புகளின் உயர் தலைவர்களது பதவி ஏற்பு நிகழ்ச்சி, குடியரசுத் தலைவர் மாளிகையில் அசோகா அரங்கத்தில்தான் நடைபெறுவது வழக்கம்.
வழக்கத்துக்கு மாறாக, குடியரசுத் தலைவர் மாளிகையில் திறந்தவெளி முற்றத்தில், முன்பு வாஜ்பாய் பதவி ஏற்றதைப் போல, பதவி ஏற்பு விழா நடைபெறும் என்று தெரிகிறது.
அதேபோல, நரேந்திர மோடி தனது பதவி ஏற்பு விழாவுக்கு தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பான "சார்க்' நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருப்பதும் விமர்சனத்திற்குள்ளாகி இருக்கிறது.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவும், இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கு அழைப்பு அனுப்பி இருப்பதைக் கண்டித்திருக்கிறார்கள்.
இதை வியப்புடன் பார்க்கிறார்கள் வெளிவிவகாரத்துறை அதிகாரிகள்.
நரேந்திர மோடி தனது பிரசாரத்திலும் பேட்டிகளிலும் மிகவும் கடுமையாக விமர்சனம் செய்தது பாகிஸ்தானைத்தான்.
தனது பதவி ஏற்பு விழாவுக்கு பாகிஸ்தான் பிரதமரை அவர் அழைப்பார் என்று நாங்கள் கனவிலும் கருதவில்லை என்கிறார்கள் மன்மோகன் சிங் அரசின் வெளிவிவகாரத் துறையைக் கையாண்ட அதிகாரிகள்.
தனது பதவி ஏற்பு விழாவுக்கு அழைப்பதன் மூலம் இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கு கௌரவத்தை ஏற்படுத்துகிறார் நரேந்திர மோடி என்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், வைகோவும் கருதுகிறார்கள் என்றால், பாகிஸ்தானும், வங்கதேசமும் இதை வித்தியாசமாகப் பார்க்கின்றன.
மக்களாட்சி சிந்தனை மேம்பட்டு விட்ட சூழலில், தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த அரசும் தனது பதவி ஏற்புக்கு அன்னிய நாட்டு அதிபர்களை அழைப்பதோ, அவர்கள் கலந்து கொள்வதோ வழக்கமில்லை.
மன்னராட்சியில்தான், மன்னரின் முடிசூட்டு விழாவிற்கு ஏனைய மன்னர்களுக்கு அழைப்பு விடுப்பது வழக்கம் என்பது அந்த நாடுகளின் கருத்து.
மொகலாய சாம்ராஜ்யம் இருந்தபோது, ஜஹாங்கீர், ஷாஜஹான், ஓளரங்கசீப் தொடங்கி மொகலாயச் சக்கரவர்த்திகளின் முடிசூட்டு விழாவுக்கு அவர்களுக்குக் கப்பம் செலுத்தும் நவாபுகளுக்கும் ராஜாக்களுக்கும் அழைப்பு விடுப்பது வழக்கமாக இருந்தது.
அதுபோன்ற நடைமுறையைக் கையாள்கிறார் நரேந்திர மோடி.
தெற்கு ஆசியாவில் இந்தியாவின் மேலாதிக்கத்தை மறைமுகமாக வெளிப்படுத்தும் விதத்தில் நரேந்திர மோடி, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட இந்தியாவின் அண்டை நாடுகளான "சார்க்' நாட்டு தலைவர்களுக்குத் தனது பதவி ஏற்பு விழாவுக்கு அழைப்பு விடுத்திருப்பதாகத்தான் பாகிஸ்தானும், வங்கதேசமும் கருதுகின்றன.
அதனால்தான், அந்த இரண்டு நாடுகளின் தலைவர்களும் விழாவில் கலந்து கொள்ளாமல் அதிகாரிகளை அனுப்புகிறார்கள்.
ராஜபக்ச கலந்து கொள்ள இசைவு தந்திருப்பதே, இலங்கை இந்தியாவின் மேலாதிக்கத்தை ஏற்றுக் கொள்கிறது என்பதன் வெளிப்பாடுதான் என்று வர்ணிக்கின்றன பாகிஸ்தானியப் பத்திரிகைகள் சில.
உண்மையிலேயே மோடிக்கு வெளிநாட்டுத் தலைவர்களை பதவியேற்பு விழாவுக்கு அழைக்க வேண்டும் என்கிற எண்ணம் இருந்திருந்தால் அவர், உலக நாடுகளின் தலைவர்களை அழைத்திருப்பார்.
தெற்காசியாவில் இந்தியாவின் மேலாதிக்கத்தை நிலைநிறுத்த வேண்டும் என்பதால்தான் சார்க் நாடுகளின் தலைவர்களை மட்டும் அவர் அழைத்திருக்கிறார் என்று குற்றஞ்சாட்டுகிறார்கள் பாகிஸ்தான் அரசியல் விமர்சகர்கள்.
நரேந்திர மோடியின் தரப்பிலிருந்து இதுபற்றி எந்தவித விளக்கமோ, அறிவிப்போ இல்லை என்றாலும், பா.ஜ.க. தரப்பில் தெரிவிக்கப்படும் கருத்து இதுதான்:
நாம் இலங்கையைப் புறக்கணிப்பதாலோ, ராஜபக்சவுடன் எந்தவிதத் தொடர்பும் இல்லாமல் இருப்பதாலோ யாருக்கென்ன லாபம்?
இலங்கை மீது போர் தொடுக்கவா போகிறோம்?
நரேந்திர மோடியின் வெற்றி, அதிபர் ராஜபக்சவை பயமுறுத்தி இருப்பதால்தான் அவர் உடனடியாக அழைப்புக்கு இணங்கி பதவி ஏற்புக்கு ஓடி வருகிறார்.
இதைப் பயன்படுத்தி நமது மீனவர்களின் பிரச்சினையிலும், இலங்கைத் தமிழர் பிரச்சினையிலும் அவர்களது உரிமையைப் பெறுவதுதான் புத்திசாலித்தனமே தவிர, அதிபர் ராஜபக்சவை புறக்கணிப்பது அல்ல என்கிறார்கள் பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர்கள்.
மோடியின் இராஜதந்திரம் பலிக்குமா? இல்லையா? என்பது அதிபர் ராஜபக்சவின் வருகையைப் பொறுத்துத்தான் அமையும் என்கிறார்கள் வெளியுறவுத் துறை அதிகாரிகள்.
http://www.tamilwin.com/show-RUmsyFRWLZlpy.html
Geen opmerkingen:
Een reactie posten