தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 24 mei 2014

தமிழ் மக்களின் காணி அபகரிப்புகள் தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவூட்டப்பட வேண்டும்: ஓய்வுபெற்ற நீதிபதி !



கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தமிழ் மக்களின் காணி அபகரிப்புகள் தொடர்பில், சரியான ஆவணப்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டு அவை தொடர்பில் பொதுமக்களுக்கு சரியான தெளிவூட்டல்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஓய்வுநிலை மேல்நீதிமன்ற நீதிபதி பொன்னையா சுவர்ணராஜ் தெரிவித்தார்.
தமிழ் மக்களின் காணிகள் திட்டமிடப்பட்ட வகையில் அபகரிக்கப்பட்டு வருவது தொடர்பிலும் அவர் கவலை தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அம்பிலாந்துறையூர் அரியம் என்னும் கவிஞருமான பா.அரியநேத்திரன் எழுதிய தமிழன் தமிழனாக நூல் வெளியீட்டு நிகழ்வு இன்று சனிக்கிழமை காலை கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
பட்டிப்பளை பிரதேச கலை இலக்கிய சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் த.மேகராசா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக ஓய்வுநிலை மேல்நீதிமன்ற நீதிபதி பொன்னையா சுவர்ணராஜ் கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் ஆன்மீக அதிதிகளாக கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ வ.சோதிலிங்க குருக்கள், மட்டக்களப்பு கல்லடி காயத்திரி பீடத்தின் தலைவர் சிவயோகச்செல்வன் சாம்பசிவ சிவாச்சாரியார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மேற்கு வலய கல்விப்பணிப்பாளர் கே.சத்தியநாதன் ,பிரதிக்கல்விப்பணிப்பாளர் ஞா.ஸ்ரீநேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், பொன்.செல்வராசா,மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களை சேர்ந்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது முதல் பிரதியை மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் இயக்குனர் வி.றஞ்சிதமூர்த்தி அவர்கள் பெற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்வில் பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் கௌரவிப்பு நிகழ்வுகளும் இடம்பெற்றன. நூல்வெளியீட்டின் நயவுரையினை கிழக்கு பல்கலைக்கழகத்தின் மொழித்துறை தலைவர் திருமதி றூபி பலன்றீனா பிரான்சிஸ் நிகழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்த நிகழ்வின் ஏற்புரையினை நூலாசிரியர் அம்பிளாந்துரையூர் அரியம் நிகழ்த்தியதுடன் நன்றியுரையினை செல்வி மு.சுதர்ஷினி நிகழ்த்தினார்.

Geen opmerkingen:

Een reactie posten