இலங்கை அதிபர் ராஜபக்ச வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளிக்க முயன்ற வாலிபரை கைது செய்த போலீசார் அவர் மீது தற்கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள வட்டக்காடு, கருப்பூர் பகுதியை சேர்ந்தவர் சின்னு. இவரது மகன் வெற்றிவேல் (31). கட்டிட கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று பகல் சேலம் நீதிமன்ற வளாகத்தின் முன் உள்ள நீதி தேவதை சிலை முன்பு நின்று கொண்டு தனது உடல் மீது தேசிய கொடியை போர்த்தியபடி மண்ணெண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
இதை பார்த்த அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் தண்ணீர் எடுத்து வந்து வெற்றிவேல் மீது ஊற்றி தீ குளிப்பை தடுத்தனர். அவரிடம் சென்ற பொதுமக்கள், இப்படி செய்யலாமா என்று கேட்டு வாக்குவாதம் செய்தனர்.
அப்போது, மோடி பதவியேற்பு விழாவில், இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள செயலை கடுமையாக எதிர்க்கிறேன். எனது எதிர்ப்பை வெளிக்காட்டும் நோக்கில் தீக்குளிக்கிறேன் என்று வெற்றிவேல் ஆவேசமாக கூறியுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்ததும் அஸ்தம்பட்டி போலீசார் விரைந்து வந்து வெற்றிவேலை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில் அவர் மீது தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
http://www.tamilwin.com/show-RUmsyFRYLZko5.html
Geen opmerkingen:
Een reactie posten