[ வீரகேசரி ]
ஆம்! மலையகத்தின் ஏகப் பிரதிநிதிகள் என்று தங்களைச் சொல்லிக்கொள்கின்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் இலங்கையில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் பொதுமேடையொன்றில் நடந்துகொண்ட விதம் இதனை எடுத்துக் காட்டுகிறது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தினக் கூட்டம் பண்டாரவளையில் நடைபெற்றது. இதன்போது அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தனது பாதுகாப்பு அதிகாரிகள் புடைசூழ மேடைக்கு வருகை தந்தார். அந்த மேடையில் ஊடகவியலாளர் சிலர் தமது கடமைகளை செய்துகொண்டிருந்தார்கள்.
அமைச்சர் ஆறுமுகன் மேடைக்கு வந்தவுடனேயே கடமையில் இருந்த ஊடகவியலாளர் ஒருவரை தூக்கித் தள்ளிவிட்டார். இந்தச் சம்பவம் அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
பொறுப்பு வாய்ந்த அமைச்சரின் இந்த இழிசெயல் ஊடகங்களில் வெளியானதுடன் அது அனைவரையும் கொதிப்படையச் செய்துள்ளது.
உழைக்கும் தொழிலாளர் தினத்தில் போற்றப்பட வேண்டிய அவர்களின் முதுகில் குத்தியதுபோன்று அமைச்சர் ஆறுமுகனின் செயற்பாடு அமைந்திருந்தது.
உண்மையில் ஊடகவியலாளர்களுக்கே இந்தக் கதியென்றால் சாதாரண பொதுமக்களின் நிலை என்னவாக இருக்கும் என கேட்கத் தோன்றுகிறது.
ஆயிரக் கணக்கான மக்கள் மேடைக்கு முன்னால் கூடியிருந்த நேரத்தில் நிகழ்வுக்கு தலைமை ஏற்று வருகை தந்த அமைச்சர் இவ்வாறு நடந்து கொண்டமை கண்டிக்கத்தக்கது.
மக்களின் பிரதிநிதியாக இலங்கையின் அதி உயர் சபையான பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட தலைவரின் இச்செயல் எந்த வகையில் நியாயம்?
பொதுமேடையிலேயே இவ்வாறு நடந்துகொள்கிறார் என்றால் உதவி என்று அலுவலகத்துச் செல்லும் சாதாரண தொழிலாளியை எவ்வாறு நடத்துவார்?
மக்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டிய அமைச்சரின் சுயநினைவோடுதான் மேடைக்கு வந்தாரா என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
உண்மையில் மலையக மக்களை வழிநடத்துகின்றோம் என்று மார்தட்டிக்கொள்ளும் அமைச்சரின் பொறுப்பற்ற இச்செயல் அந்த மக்களை வெட்கித் தலைகுனியவைத்துள்ளது.
மலையக மக்களின் வாழ்க்கைப் பயணம் ஆரம்பம் முதலே போராட்டமாகத்தான் இருந்துவருகிறது. மலைகளில் கொழுந்துக்கூடையும் மண்வெட்டியும் சுமக்கும் இவர்கள் மனதில் அதற்கும் மேலான சுமைகளைத் தாங்கியவர்களாகவே வாழ்ந்து வருகிறார்கள்.
மலையக மக்களின் வாழ்க்கைப் பயணம் ஆரம்பம் முதலே போராட்டமாகத்தான் இருந்துவருகிறது. மலைகளில் கொழுந்துக்கூடையும் மண்வெட்டியும் சுமக்கும் இவர்கள் மனதில் அதற்கும் மேலான சுமைகளைத் தாங்கியவர்களாகவே வாழ்ந்து வருகிறார்கள்.
வறுமையின் கோரப்பிடியில் சிக்கி வாழ்ந்துகொண்டிருக்கும் மலையக மக்களின் தேவை அறிந்து மக்கள் சேவையுடன் அரசியலில் ஈடுபடும் நல்ல தலைமையை இனியும் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
பொதுமக்களிடம் அடாவடித்தனங்கள் புரியும் தலைமைத்துவத்துக்கு மக்களின் எதிர்ப்பு எப்போதும் உண்டு. தயவு செய்து அவ்வாறான தவறான தலைமைத்துவத்தை வழங்க வேண்டாம் என அமைச்சரிடம் கேட்டுக்கொள்கிறோம்.
அதேவேளை, மக்களின் இயலாமையைப் பயன்படுத்தி அரசியல் இலாபம் தேட முனையும் எந்தத் தலைமையும் வரலாற்றுக்கு பதில்சொல்லியே ஆக வேண்டும்.
அமைச்சர் நினைத்தபடி மக்களிடம் நடந்துகொள்வதற்கு அவர்கள் அடிமைகள் அல்லர் என்பதை உணர வேண்டும். தாங்கள் மாத்திரமே மலையகத்தை ஆள வேண்டும் என நினைப்பவர்கள் மக்களோடு மக்களாக இருந்து அவர்களின் வலிகளையும் சுமைகளையும் அறிந்து நடந்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் இவ்வாறு நடந்துகொண்ட சந்தர்ப்பத்தில் பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் இறக்குவானை பாரவத்தை எனும் தோட்டத்தில் நடந்துகொண்ட விதம் நினைவுக்கு வருகிறது.
மாகாண சபை தேர்தல் பிரசாரத்துக்கு அமைச்சர் முத்து சிவலிங்கம் வருகை தந்திருந்தார். அந்த வேளையில் சாதாரண தொழிலாளி ஒருவரைப் பார்த்து "உன்னை வெள்ளை வானில் தூக்குவேன்" என்று அதட்டும் தொனியில் எச்சரித்தார் பிரதியமைச்சர்.
இவ்வாறான செயற்பாடுகள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சிக்கே உரித்தானதுதானா?
தேர்தல் காலங்களில் மாத்திரம் மக்களின் இருப்பிடங்களை தேடிச் சென்று சிறுகுழந்தைகளை அணைத்துக் கொஞ்சி வாக்கு கேட்கும் தலைமைகள் இனிமேலும் தவறுகளை உணர்ந்து செயற்பட வேண்டும்.
http://www.tamilwin.com/show-RUmsyFTXLYmv5.html
Geen opmerkingen:
Een reactie posten