போருக்குப் பின்னான மீள்கட்டுமானப் பணிகளின் போது போரின் போது காணாமற் போனவர்களின் குடும்பங்கள் சிறப்புத் தேவைக்குட்பட்டவர்கள் என அங்கீகரிக்கப்படவில்லை. கடந்த இருபத்தைந்து ஆண்டு கால உள்நாட்டு யுத்தத்தின் போது காணாமற் போனவர்களின் குடும்பத்தவர்களின் தேவைகளைப் பகுப்பாய்வு செய்வதற்கான பரிந்துரை ஒன்றை ஜனவரி மாதத்தில் சிறிலங்கா அரசாங்கத்திடம் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் கோரியிருந்தது.
சிறிலங்காவில் உள்நாட்டுப் போர் முடிவடைந்து ஐந்து ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போது காணாமற் போனவர்களின் குடும்பங்களுக்கான தேவைகள் தொடர்பில் ஆராய்வதற்கான முதலாவது தேவைப் பகுப்பாய்வை சிறிலங்கா அரசாங்கம் தற்போது மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது. இந்தக் குடும்பங்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதையும் இவர்கள் தொடர்பில் மேலும் கவனம் செலுத்துவதற்கும் இத்தேவைப்பகுப்பாய்வு உதவும் என எதிர்பார்க்கப்படுவதாக சிறிலங்கா அரசாங்க அதிகாரிகளும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.
“நாங்கள் காணாமற்போனவர்களின் குடும்பங்களுக்கான தேவைப்பகுப்பாய்வை ஏப்ரல் மாதத்திலிருந்து நாடு பூராவும் மேற்கொண்டு வருகிறோம். இந்தக் குடும்பங்களின் தேவைகள் என்ன என்பது தொடர்பாக எழுமாற்றாக எடுக்கப்பட்ட குடும்பப் பிரதிநிதிகளின் ஊடாக அறிந்து இதற்கான படிவங்களைப் பூரணப்படுத்துவோம்” என சிறிலங்காவுக்கான அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதி வதிவிடப் பிரதிநிதி டேவிட் குயிஸ்னி தெரிவித்துள்ளார் இந்தப் பகுப்பாய்வு நடவடிக்கையில் சிறிலங்கா அரசாங்கத்தின் பிரதிநிதியாக சமூக நலத்துறை அமைச்சு பங்கெடுக்கிறது.
காணாமற் போனவர்கள் தொடர்பான பிரச்சினை சிறிலங்காவில் முதன்மை இடத்தில் உள்ளது. அதாவது தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழர்களுக்கான தனிநாடு கோரி 1980களில் போராடத் தொடங்கிய காலத்திலிருந்து இறுதியாக 2009ல் சிறிலங்கா அரசாங்கத்தால் புலிகள் தோற்கடிக்கப்பட்ட காலம் வரை காணாமற் போதல்கள் தொடர்ந்த வண்ணமிருந்தன. இந்தப் போரின் போது 70,000 இற்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். 40,000 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் காணாமற் போயுள்ளனர்.
காணாமற் போனவர்கள் தொடர்பாக தேடுதல் மேற்கொள்ளுமாறு கோரப்பட்ட குடும்பங்களின் விபரங்களை மட்டுமே அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் பதிவுசெய்கிறது. 1990களிலிருந்து இற்றைவரை காணாமற் போன 16,000 பேரின் விபரங்கள் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் உள்ளதாக குயிஸ்னி குறிப்பிட்டுள்ளார்.
காணாமற் போதல் உட்பட பல்வேறு போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை செய்யப்பட வேண்டும் எனக் கோரி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக கடந்த மாதம் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது. இவ்வாறான எந்தவொரு விசாரணைக்கும் சிறிலங்கா அரசாங்கம் ஒத்துழைப்புத் தரமாட்டாது என சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அறிவித்திருந்தார்.
“நாங்கள் உள்நாட்டு பொறிமுறைகளின் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்க விரும்புகிறோம்” எனவும் பீரிஸ் மேலும் குறிப்பிட்டிருந்தார்.
“காணாமற் போனோரின் குடும்பங்கள் தொடர்பான தேவைப்பகுப்பாய்வானது சிறிலங்காத் தீவு முழுவதிலும் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக காணாமற் போனவர்களின் குடும்பத்தவர்கள் எழுமாற்றாகத் தெரிவு செய்யுப்படுகின்றனர். இந்தக் குடும்பங்களின் தேவைகளைப் பகுப்பாய்வு செய்வதே ஆரம்ப நோக்காகும். இந்தக் குடும்பங்களின் பொருளாதார, நிர்வாக, சட்ட மற்றும் உளசமூக விடயங்கள் உள்ளடங்களாக அனைத்தும் ஆராயப்படும்” என சிறிலங்காவில் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் பாதுகாப்பு அதிகாரியான குவெனலா பொன்ரானா தெரிவித்தார்.
இந்த மாதிரி குடும்பத் தெரிவில் காணாமற் போன சிறிலங்கா இராணுவ வீரர்களின் குடும்பங்களும் உள்ளடங்குவர். “காணாமற் போனவர்களின் குடும்பங்கள் தொடர்பாக திட்டமிடல்களை மேற்கொள்வதற்கான ஒரு முக்கிய கருவியாக இத்தேவைப்பகுப்பாய்வு அமையும். இவர்கள் ஒருபோதும் சிறிலங்காவின் சிறப்புத் தேவைக்குட்பட்டோர் என அடையாளங்காணப்படவில்லை. இது நீதியற்ற செயலாகும்” என தன்னை அடையாளங் காண்பிக்க விரும்பாத, கிளிநொச்சியைச் சேர்ந்த காணாமற் போன ஒருவரின் தாயார் தெரிவித்துள்ளார்.
காணாமற் போனவர்களின் குடும்பங்களுக்கு உதவுவதற்கான திட்டங்களை சிறிலங்கா அதிகாரிகள் கொண்டுள்ளனர். சிறிலங்கா அதிபர் செயலக ஆணைக்குழுவால் காணாமற் போனோர் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் 16,000 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தால் மேற்கொள்ளப்படும் தேவைப்பகுப்பாய்வானது இவ்வாண்டின் இறுதியில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்பின்னர் இது தொடர்பான அறிக்கை சிறிலங்கா அரசாங்கத்திடம் கையளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 2008ன் பிற்பகுதி தொடக்கம் ஏப்ரல் 2009 வரையான காலப்பகுதியில் காணாமற் போனவர்கள் தொடர்பில் 14,000 முறைப்பாடுகளை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் பெற்றிருந்தது.
ஜனவரியில் ஆரம்பிக்கப்பட்ட காணாமற் போனவர்கள் தொடர்பான தேடுதல் நடவடிக்கையின் பின்னர் மார்ச் மாத இறுதிப்பகுதியில் 26 பேர் கண்டுபிடிக்கப்பட்டதாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. காணாமற் போனவர்களின் குடும்பங்களிடம் அவர்களது உறவுகள் காணாமற் போயுள்ளனர் என்பதை உறுதிப்படுத்தி சான்றுகள் வழங்குவதில் சிறிலங்கா அதிகாரிகள் ஆர்வம் காண்பிக்கின்ற போதிலும், இவர்கள் ‘இறந்துவிட்டார்கள்’ என்பதை உறுதிப்படுத்தி மரணச் சான்றிதழ்களை வழங்குவதில் சிறிலங்கா அதிகாரிகள் விருப்பங் காட்டவில்லை என பொன்ரானா சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் காணாமற் போனவர்களின் குடும்பத்தவர்கள் பல்வேறு சட்டப்பிரச்சினைகளை முகங்கொடுப்பதாகவும், இவர்கள் ஓய்வுதியம் மற்றும் காணி உறுதிகள் போன்றவற்றைப் பெறமுடியவில்லை எனவும் இதனால் இதில் காலதாமதல் ஏற்படுவதாகவும் பொன்ரானா குறிப்பிட்டுள்ளார்.
மொழியாக்கம் : நித்தியபாரதி
http://www.jvpnews.com/srilanka/68028.html

Geen opmerkingen:
Een reactie posten