தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 12 mei 2014

மாற்றிடத்தையோ, நஷ்ட ஈட்டையோ ஏற்றுக் கொள்ள மறுக்கும் சம்பூர் மக்கள்!


மாற்றிடத்தையோ அல்லது நஷ்ட ஈட்டையோ ஏற்றுக் கொள்ள மக்கள் தயாராக இல்லை என சம்பூர் இடம் பெயர்ந்தோர் இடைதங்கல் முகாம்களின் சங்க தலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் குமாரசாமி நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
எட்டு வருடங்களுக்கு மேலாக அகதி முகாம்களில் அடைபட்டுக்கிடக்கும் சம்பூர் மக்கள் சார்பாக உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு கடந்த 7ம் திகதி அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது,
சம்பூர் மக்களுக்கு மாற்றுக் காணிகள் அல்லது அதற்கான நஷ்ட ஈடு வழங்கப்படவுள்ளதாகவும், நஸ்ட ஈடு வழங்குவதற்கென 30 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அரச தரப்பு சட்டத்தரணிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஏற்கனவே அறிவிக்கப்பட்ட விடயமாக இருந்தாலும், நீதிமன்றத்தில் சம்பூர் மக்களுக்கான தீர்வாக இவ் விடயங்கள் முன்வைக்கப்பட்டமை மக்களுக்கு மேலும் தமது மீள் குடியேற்றம், இயல்பு வாழ்வு மற்றும் எதிர்காலம் தொடர்பான அச்சத்தையும் சந்தேகத்தையும் அதிகரித்துள்ளது என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் குமாரசாமி நாகேஸ்வரன் தெரிவிக்கின்றார்.இவ்விடயம் தொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் பின்வருமாறு தெரிவிகிறார்.
மாற்றிடத் தெரிவு என்பது கடந்த ஆறு வருடங்களுக்கு முன்னரே அரசால் முன்வைக்கப்பட்டு இதுவரை மக்களால் நிராகரிக்கப்பட்டு வருகின்ற விடயமாகும்.
நஷ்ட ஈடு வழங்கப்படும் என்பதும் அதற்கு விண்ணப்பிக்க முடியும் என்பதும் அரச அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டு ஒன்றரை வருடங்கள் கடந்த நிலையில் இதுவரை சம்பூர் மக்கள் எவரும் அதற்காக விண்ணப்பிக்கவில்லை என்பது இங்கே அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய விடயமாகும்.
எனவே இன்றைய சூழலில் இக் கூற்றுக்கள் தொடர்பாக சம்பூர் பிரதேசத்தையும், மக்களையும் முன்னிறுத்தி ஆராயப்பட வேண்டிய பல விடயங்கள் உள்ளன. அவசர காலச் சட்ட விதிகள் நீக்கப்பட்ட பின் உயர் பாதுகாப்பு வலயங்கள் சட்டரீதியாகச் செயலிழந்து விட்ட பின்னரும் கூட பாதுகாப்பு தரப்பினரின் கட்டுப்பாட்டிலேயே சம்பூர் உயர் பாதுகாப்பு வலயம் உள்ளது.
அப்பகுதிக்குள் அமைந்த கூனித்தீவு, நவரட்ணபுரம், சூடைக்குடா ஆகிய கிராமங்கள் மீள் குடியேற்றப்பட்டும் உள்ளன. இதேவேளை உயர் பாதுகாப்பு வலயமென முன்னர் அறிவிக்கப்பட்ட பிரதேசத்திற்குள்தான் அனல்மின் நிலையத்திற்கும், மின்சார சபைக்கு மென 540 ஏக்கர் நிலமும் முதலீட்டு ஊக்குவிப்புச் சபைக்கென 219 குடும்பங்களது குடியிருப்புக் காணிகள் அடங்கலாக 818 ஏக்கர் நிலமுமாக மொத்தமாக 1458 ஏக்கர் நிலம் மட்டுமே வர்த்தமானி அறிவித்தல் மூலம் சுவீகரிக்கப்பட்டுள்ளது.
700 இற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு சொந்தமான குடியிருப்புக்காணிகளை உள்ளடக்கிய பூர்வீக சம்பூர் கிராமத்தின் 231 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலம் முற்றாக கடற் படையினரின் பயன்பாட்டிலேயே உள்ளது.
எஞ்சிய மேட்டு நிலங்களும், வயல் நிலங்களும் இதுவரை மக்களின் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படவுமில்லை, ஆனால் வேறு தேவைகளுக்காக கையகப்படுத்தப்படவுமில்லை.
இந்நிலையில் மாற்றிடம் அல்லது நஸ்ட ஈடு என்ற அடிப்படையில் அரச தரப்பால் கூறப்படுவது பல்வேறு குழப்பங்களையும் சந்தேகங்களையும் தோற்றுவித்துள்ளது.
நஸ்ட ஈடு என்பது சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு சொந்தக்காரர்களுக்கா? அல்லது முன்னர் உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட பகுதிக்குள் வரும் காணிகளின் சொந்தக்காரர்களுக்குமா? அப்படியானால் அப் பிரதேசத்திற்குள் குடியேற்றப்பட்ட கூனித்தீவு, நவரட்ணபுரம் மக்கள் நீங்கலாக சம்பூர் மக்களுக்கா?
அல்லது அப்பிரதேசத்தினுள் ஏதாவது ஒரு வகையில் வரையறை செய்யப்பட்டு அப்பகுதிக்குள் வரும் காணி சொந்தக்காரர்களுக்கா? அல்லது ஒட்டு மொத்தமாக முகாம்களில் வாழும் அனைத்து குடும்பங்களுக்குமா? என பல குழப்பங்கள் நிலவுகின்றன.
இவை தீர்க்கப்பட்டாலும் கூட  மக்கள் நஷ்ட ஈட்டிற்காக விண்ணப்பிக்க இன்றுவரை தயாரில்லை. நஷ்ட ஈட்டை பெற்றுக்கொண்டால் தமது காணிகளில் தமக்குள்ள உரிமை அற்றுப் போய்விடும்.
சொந்த மண்ணில் குடியேறுவதற்கான கோரிக்கை வலுவற்றதாகி அதற்காக போராடும் தார்மீக உரிமையும் கை நழுவி விடும். அது மட்டுமல்ல தற்போதுள்ள சந்தை விலையில் சம்பூரை அண்டிய கடற்கரைச்சேனை, கட்டைபறிச்சான், சேனையூர் ஆகிய கிராமங்களில் ஒரு பேர்ஜ் காணி 20000 முதல் 25000 ஆக உள்ளது.
அரசு தரும் நஷ்டப் பணத்தில் சம்பூரில் தமக்கிருந்த காணியில் பத்தில் ஒரு பங்கை கூட வாங்க முடியாது என்பதையும் மக்கள் அறிந்துள்ளனர். இது இவ்வாறிருக்க மாற்றுக்காணிகளைப் பொறுத்த வரையில் இதைவிட மோசமான நிலைமை உள்ளது.
சிறந்த நிலத்தடி நீரும், தொழில் வாய்ப்பும், அழகான அமைவிடமுமான சம்பூரை ஒத்ததான ஒரு மாற்றிடத்தை தேட முடியாது. இவற்றில் ஒரு சில சாதகமான அம்சங்களையேனும் கொண்டிராத நீர் வளமும் மண் வளமும்  அற்ற காட்டுப் பிரதேசத்தை மாற்றிடமாக எவ்வாறு ஏற்றுக் கொள்ளலாம்.
பல ஏக்கர்களில் சொந்த நிலங்களைக் கொண்டவர்கள் 20 பேர்ஜ் காணியை எவ்வாறு மாற்றிடமாக ஏற்றுக் கொள்ளலாம் இடம் பெயர்ந்த மக்களை மாற்றிடங்களில் மீளக் குடியேற்றும் போது அவர்களது சம்மதத்துடன் அவர்களுக்கு முன்னர் சொந்தமாக இருந்த நிலத்தை ஒத்த நிலம் முன்பிருந்த அளவில் வளங்கப்பட வேண்டுமென்றும் அத்துடன் அதற்கு புறம்பாக இழப்பீடும் வழங்கப்பட வேண்டுமென்றும் அகதிகளுக்கான ஐ.நா சாசனம் வலியுறுத்துகின்றது.
ஆனால் இங்கோ மாற்றிடம் அல்லது நஷ்ட ஈடு என்று மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பூர் மக்களின் சொந்த மண்ணில் வாழும் அடிப்படை உரிமையை மறுத்து அவர்களை அகதி முகாம்களில் தங்க வைத்து வேடிக்கை பார்க்கும் அரசு எவ்வித நியாயமும் அற்ற முறையில் நிலத்தை சுவீகரித்தது மட்டுமல்ல, அதற்கான மாற்றுத்தீர்வைக் கூட மனிதாபிமானத்துடன் நியாயபூர்வமானதாக முன்வைக்காமல் எள்ளளவும் நியாயமற்றதாக, மனிதாபிமானமற்றதாக அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் முன்வைத்திருப்பதை சம்பூர் மக்கள் உணர்ந்துள்ளனர்.
எனவே அரசின் இந்த அறிவிப்புக் குறித்தும் இது தொடர்பான சம்பூர் மக்களின் தீர்மானம் குறித்தும் சகல தரப்பினரும் புரிந்து கொள்ள வேண்டும்.
இவ் அடிப்படையில் சம்பூர் மக்களின் எதிர்காலம் குறித்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதும் அதற்காக குரல் கொடுப்பதும் அனைவரதும் கடமையாகும் என சம்பூர் மக்களின் ஒரு மித்த கருத்தாக சம்பூர் இடம் பெயர்ந்தோர் இடைதங்கல் முகாம்களின் சங்க தலைவரும் கிழக்குமாகாண சபை உறுப்பினருமான குமாரசாமி நாகெஸ்வரன் தெரிவிக்கின்றார்.

Geen opmerkingen:

Een reactie posten