இலங்கையில் பயங்கரவாதம் முற்றுப்பெற்று விட்டது, நாட்டில் நிரந்தர சமாதானம் நிலவுகின்றது. இது ஒரு ஜனநாயக நாடு என்ற கூற்றுக்கள் வெறும் மேடைப்பேச்சு என்பதற்கு பயங்கரவாத தடைச்சட்டம் இன்னும் அமுலில் இருக்கின்றமையானது சிறந்த சான்று பகர்கின்றது.
யுத்தம் முற்றுப் பெற்ற ஐந்து வருடங்கள் ஆன போதும் நாட்டில் தற்போதும் பயங்கரவாத தடைச்சட்டம் அமுலில் இருக்கின்றமையானது நாட்டின் இறைமைக்கு பங்கம் விளைவிக்கும் ஒரு செயற்பாடாகும்.
இந்த தடைச்சட்டத்தின் கீழ் பெருவாரியாகப் பாதிக்கப்படுபவர்கள் தமிழ் மக்கள் மட்டும் என்றால் அது மிகையில்லை. தமிழ் மக்களின் தமிழீழ தாயகம் என்ற அபிலாசைகளுக்கு அப்பால் இனசுத்திகரிப்பை மேற்கொள்வதற்கான ஒரு முனைப்பாட்டின் சாரம்சமே இந்த பயங்கரவாத தடைச்சட்டம் ஆகும்.
இந்த பயங்கரவாத தடைச்சட்டம் இலங்கையில் குடிசார் உரிமைகள் எந்தளவு பேணப்படுகின்றது என்பதற்கும் சிறந்த சான்று பகர்கின்றது.
இச்சட்டத்தின் மூலம் பொலிஸார் சந்தேகநபர்கள் என்ற அடிப்படையில் நீதிமன்ற அனுமதியின்றியே ஒருவரை கைது செய்வதற்கும், சுமார் 48 மணித்தியாலங்கள் வரையில் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை செய்யவும் முடியும்.
எனினும் சர்வதேச ரீதியாக கடந்த 100 ஆண்டுகளாக இருந்து வந்த சட்டத்தின் படி ஒருவரைப் பொலிஸ் நிலையத்தில் 24 மணிநேரமே தடுத்து வைக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த காலங்களில் அவசரகாலச் சட்டம், பயங்கரவாதத் தடைச்சட்டம் என்பன மூலம் ஒருவரைக் கைது செய்யவும், நீதிமன்றில் முன்னிலைப்படுத்தாமலே எவ்வளவு காலமும் தடுத்து வைத்து விசாரிக்கவும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. போர் முடிவுக்கு வந்த பின்பு தொடர்ந்து விடுக்கப்பட்ட சர்வதேச அழுத்தங்கள் காரணமாக அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டது.
ஆனால் அதன் சில விதிகள் பயங்கரவாத தடைச் சட்டத்திற்குள் புகுத்தப்பட்டன. தற்சமயம் நாடாளுமன்றத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தால் வழங்கப்பட்ட சில அதிகாரங்கள் சாதாரணக் குற்றவியல் நீதிச் சட்டத்தில் புகுத்தப்பட்டு விட்டன.
இவற்றை விடவும் இந்த பயங்கரவாத தடைச்சட்டங்களின் கீழ் ஒருவரை தடுத்து வைத்து விசாரிக்கின்ற நீதிமன்ற அதிகாரம் பொலிஸாருக்கு தாரைவார்க்கப்பட்டுள்ளமையானதும் நாட்டின் நீதித்துறையின் எதிர்கால அதிகாரங்கள் குறித்தும் சந்தேகநபர்களின் வாக்குமூலப் பதிவுகள் குறித்தும் நம்பகத்தன்மை என்பது கேள்விக்குறியாகவே காணப்படுகின்றது.
இவற்றை விடவும் கடந்த காலங்களில் நிறைவேற்று அதிகாரத்துக்கும் நீதித்துறைக்குமிடையே எழுந்த முரண்பாட்டில், குற்றவியல் நடவடிக்கைச் சட்டக்கோவையின் விசேட ஏற்பாடுகள் அதிகாரங்களை சாதாரண பொலிஸ் நிலையங்களுக்கும் வழங்கப்படுவதற்கான நாடாளுமன்றத்தின் முன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள் நீதித்துறையின் சுதந்திரமான செயற்பாட்டுக்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டது.
இவ்வாறு நீதித்துறை பல வீனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மறு புறத்தில் இச்சட்டத்தின் மூலம் பொலிஸாரின் அதிகாரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆயுதப் படையினருக்கு ஏற்கனவே அதிக அதிகாரம் வழங்கப்பட்டது மட்டுமன்றி சிவில் நிர்வாகத்திலும் அவர்களின் தலையீடுகள் அதிகரித்துள்ளமையானது நாட்டின் அரசியல் சர்வாதிகார வழிமுறைக்கு நகர்த்ப்படுவது தெளிவாக வெளிப்படுகின்றது எனலாம்.
1979ம் ஆண்டு அப்போது ஆட்சியிலிருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரசாங்கத்தால் 3 வருடங்களுக்கு என்று மாத்திரம் கொண்டு வரப்பட்ட குறித்த பயங்கரவாத தற்காலிக தடைச் ஏற்பாட்டுச்சட்டம் அதனை தொடர்ந்து வந்த பேரினவாத அரசுகளால் 1982 ஆம் 1988 ஆம் ஆண்டுகளில் நிரந்தரச் சட்டமாக்கப்பட்டது.
தமிழ் மக்களை மாத்திரம் இலக்கு வைத்து கொண்டுவரப்பட்ட குறித்த சட்டம், முன்னறிவித்தல் இன்றி எவரையும் எவ்விடத்திலும், தம் விருப்பத்திற்கு ஏற்ப பொய் குற்றம் சுமத்தி கைதுசெய்யலாம் எனும் அவசர கைதுகளுக்கும், பிணையில் எடுக்க முடியாத தடுப்பு காவலுக்கும், நீண்ட நேர சித்திரவதைகளுடன் வற்புறுத்தி ஒப்புதல் வாக்குமூலம் பெறுவதற்கும், பொதுவில் நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளாத அந்த குற்ற ஒப்புதல் பத்திரத்தை கொண்டு வழக்குத்தாக்கல் செய்வதற்கும், தாம் விரும்பாத ஊடகத்தை தடை செய்வதற்கும் வழி வகை செய்கின்றது.
1966ம் ஆண்டு ஐநா சபையால் நிறைவேற்றப்பட்ட சர்வதேச குடியியல் அரசியல் உரிமைகளுக்கான உடன்பாட்டு ஒப்பந்தத்தின் கீழ சட்ட விரோத கைதுகள், பாரபட்சமான இன மத பாகுபாடுகளுடனான விசாரணைகள், மனித சித்திரவதைகளை ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதால், ஐநா சபையின் சரத்துகளுக்கு முரணான குறித்த பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்துச் செய்யுமாறு இலங்கை அரசாங்கத்தை பல தரப்புக்களும் வலியுறுத்திய போதும். ஆவை இதுவரையில் கருத்திற்கொள்ளப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
சர்வதேச அமைப்புக்களும், புலம்பெயர் சமூகமும் ஒன்றிணைந்து பல தடவைகள் வலியுறுத்திய போதும் இதுவரையில் பயங்கரவாத தடைச்சட்டம் அரசியல் சட்டக் கோவையில் இருந்து நீக்கப்படாமைக்குக் காரணம் சிங்கள பேரினவாதிகள் தமது அரசியல் இருப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்கே தவிர நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கும் என்பதற்கல்ல.
எனினும் விடுதலைப்புலிகள் இயக்கம் நாட்டில் மீள உருவாகின்றது என சர்வதேசத்தின் மத்தியில் ஒரு வெளிவே~ம் போடும் பேரினவாத சக்திகள் தமது இருப்பை தொடர்ந்தும் நிலைநிறுத்துவதுடன், தொடர்ச்சியாக இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இனச்சுத்திகரிப்பு இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபடுவது கண்கூடு.
எவ்வித காரணங்களுமின்றி தமிழர்களில் பலர் கைது செய்யப்படுகின்றமையும், வலுக்கட்டாயமான வாக்குமூலம் பெறப்படுகின்றமையும், காணமற்போன பட்டியலில் பெயரிடப்பட்டுள்ளமையும் நாளாந்த அரசியல் மேடைகளின் சாரம்சம். எனினும்,
நாட்டில் யுத்தம் முற்றுப் பெற்று ஐந்து வருடங்கள் நிறைவுபெற்று விட்டது என வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபடுகின்ற இந்த அரசாங்கம் தொடர்ச்சியாக தமிழ் மக்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்து வருகின்றமையானது. நூட்டில் ஜனநாயம் அல்லது சமாதானம் என்ற இவ்விரண்டு விடயங்களும் இல்லை அல்லது மறைக்கப்பட்டு வருகின்றது என்பதற்கு சிறந்த சான்று பகர்கின்றது.
அந்த வகையில் சர்வதேச ரீதியில் வவுனியா ஆசிகுளம், தரணிக்குளத்தைச் சேர்ந்த சசிகரன் தவமலர் என்ற 42 வயது தாயாரும், அவருடைய மகளான யதுர்சினி என்ற 16 வயது பாடசாலை மாணவி, கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் ஜெயக்குமாரி மற்றும் அவருடைய 14 வயதான மகள் விபூசிக்காவும் கைது செய்யப்பட்டுள்ளமை, கிளிநொச்சியில் 64 வயதான மூதாட்டி ஒருவர் கைதுசெய்து செய்யப்பட்டுள்ள விவகாரங்கள் வெளிக்கொணரப்பட்டன என்றாலும். இன்னமும் எத்தனை கைதுகளும் காணமற்போதலும் இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தினால் மேற்கொள்ளப்படுகின்றதால் அது வேதனைக்குரியதே.
இந்நிலையில் இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அதிகளவில் பெண்களும் சிறுபிள்ளைகளும் கைது செய்யப்படுகின்றமையை பல பெண்கள் செயற்பாட்டு அமைப்புக்களும் கடந்த காலங்களில் கண்டித்திருந்தனர். என்றாலும் கைது செய்யப்படுகின்ற பெண்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் எதிர்காலம் குறித்து அமைப்புக்களோ அல்லது சர்வதேச சமூகமோ எவ்வித அக்கறைகளையும் காட்டுவதாகக் தெரியவில்லை.
நாட்டில் சமாதானம் நிலவுகின்றது அபிவிருத்தி துரிதமாக முன்னெடுக்கப்படுகின்றது என்றெல்லாம் வெளிவேஷம் போடும் அரசாங்கம் இன்னமும் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவில்லை என்பதும், இலங்கையின் அரசியல் கோட்பாடுகள் இலங்கை அரசே இதற்கான நிரந்திர முடிவை பெற எத்தனிக்க வேண்டும் என்று அமைதி காப்பதை விடுத்து தமிழர்களின் பாதுகாப்பையும் எதிர்கால இருப்பையும் உறுதி செய்வது ஐக்கிய நாடுகள் சபை மாத்திரமல்ல சர்வதேச நாடுகளும் இதற்கு பூரண ஒத்துழைப்புக்களையும் அழுத்தங்களையும் வழங்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
எஞ்சியுள்ள தமிழ் மக்களாவது தமக்கான சுயகௌரவத்துடனும் பாதுகாப்புடனும் வாழ வழிசமைக்க வேண்டியது புலம்பெயர் சமூகம் என்றால் அதில் எவ்வித ஐயமுமில்லை.
ஜெ.சுவாதி
http://www.tamilwin.com/show-RUmsyFRYLZkq2.html
Geen opmerkingen:
Een reactie posten