இலங்கை மீதான விசாரணைக்கு மேற்குலகு பாரிய நிதியுதவி!
இலங்கையின் மனிதஉரிமை மீறல்கள் தொடர்பான சர்வதேச விசாரணையை மேற்கொள்ள 15 லட்சம் டொலர் நிதி தேவைப்படுவதாக ஐ.நா அறிவித்துள்ளது. விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை இராணுவத்தினருக்கும் இடையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் தொடர்பான சர்வதேச விசாரணையொன்றை முன்னெடுக்கவே இந்தத் தொகை தேவைப்படுவதாக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை கணக்கிட்டுள்ளது.
இதற்கிடையே இலங்கைக்கு எதிரான இந்த சர்வதேச விசாரணைக்குத் தேவையான பணத்தில் ஒருபகுதியை கனடா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் வழங்க இணக்கம் தெரிவித்துள்ளன. மேலும் தேவைப்படும் எஞ்சிய பணத்தைத் திரட்டித் தரவும் அந்நாடுகள் முன்வந்துள்ளன. இதனையடுத்து இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணைக் குழுவொன்றை அமைப்பது மற்றும் அதன் பொறுப்புகள் தொடர்பில் இம்மாத இறுதிக்குள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அமைப்பு அறிவித்தல் ஒன்றை விடுக்கவுள்ளது.
அதேவேளை, இலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை நடத்த நோர்வே நிதி உதவிகளை வழங்கியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளைக்கு இவ்வாறு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. நிதி வழங்குவது குறித்து நவனீதம்பிள்ளையுடன் ஏற்கனவே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.இலங்கைக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தீர்மானத்திற்கு நோர்வே ஆதரவளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





இலங்கை அரசின் 424 தடை குறித்து மத்திய உளவுத்துறை தமிழகத்தில் விசாரணை!
இலங்கை அரசாங்கத்தினால் தடைவிதிக்கப்பட்டுள்ள நபர்கள் பற்றிய விவரங்கள், பின்புலத்தை ஆராயும் நடவடிக்கையில் இந்திய மத்திய உளவுத்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. பயங்கரவாதிகள் எனக் கூறி இலங்கை அரசால் தடை விதிக்கப்பட்ட 424 பேரில், 32 பேர் தமிழகத்தில் அகதிகளாக வசித்து வருவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இலங்கை அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் இடம்பெற்றுள்ள பெயர் பட்டியலை ஏற்றுக் கொள்வதாக இந்தியா அண்மையில் அறிவித்ததால், அவர்களின் நிலை என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தப் பட்டியலில் அப்பாத்துரை அமலன், இராசதுரை சசீகரன், சிவஞானசுந்தரம் சிவகரன், யோகநாதன் திலீபன், சந்தியாப்பிள்ளை, சிவசேகரன் விஜயநீதன், குணசீலன் ரமணன், குணேந்திரராஜா ஜெயராஜ், அம்பிகேதேசன் ஜனார்த்தனன், சந்திரபோஸ் ஜெயரூபன், போலிகாப் அலெக்சாண்டர், நவரத்னம் சதீஸ்வரன், சுப்பிரமணியம் சதீஸ்குமார், கமலதாஸ் கௌஷில்யா, ரூபசிங்கம் ஜனகாந்த், இரத்னசிங்கம் நித்தியானந்தம், பரமானந்தன் சிவராமகிருஷ்ணன், தம்பிதுரை சிவசிதம்பரநாதன், அமுதன், அந்திரஹென்னடிகே சமிந்தா தர்ஷனா, நவாஸ் (எ) சுரேஷ், இராஜேந்திரன் மூர்த்தி, சுதர்சன் கயிலநாதன், விக்னேஸ்வரன் பரமேஸ்வரி, விக்னேஸ்வரன் கந்தப்ப முத்தையா பிள்ளை. ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
அதேசமயம், மேலும் ஆறு பேரின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்களின் வசிப்பிட முகவரியையும் இலங்கை அரசு வெளியிட்டுள்ளது. அதன் விவரம் இளங்குமரன் ரஞ்சிதகுமாரி (வாலாஜாபேட்டை); செபஸ்தியன்பிள்ளை ரவிகுமார் (திண்டுக்கல் அகதிகள் முகாம்); கதிர்வேலு சிவஞானசெல்வம் (திருவள்ளுவர் நகர், திருவான்மியூர், சென்னை); அமல்ஆரோக்கியசாமி சந்திரவதனா (ஆதம்பாக்கம், சென்னை); அகநிலா (சேலையூர், சென்னை); தங்கய்யா தங்கம் (முதலியார்குப்பம், காஞ்சிபுரம்).
இவர்கள் நீங்கலாக, இந்தியாவில் வசித்து வருவதாகக் குறிப்பிட்டு வேலுபிள்ளை ரேவாதன் என்பவரின் பெயர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. அவர் பயங்கரவாத வழக்குகளில் இலங்கை அரசால் தேடப்படும் குற்றவாளி என சர்வதேச போலீஸ் அமைப்பான இண்டர்போல் அறிவித்துள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
இந்தியா- இலங்கை கைதிகளை பரஸ்பரம் ஒப்படைக்கும் ஒப்பந்தம் 2010, ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்டது. அந்த அடிப்படையில் இவர்கள் இந்தியாவில் தங்கியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டால், இவர்களை கைது செய்து முறைப்படி இலங்கையிடம் இந்தியா ஒப்படைக்க வேண்டும். ஆனால், ஒரு நாட்டில் இருந்து தப்பித்து இந்தியாவில் அகதிகளாக தஞ்சம் அடைந்த இவர்களை எந்த அடிப்படையில் இலங்கை வசம் திரும்ப ஒப்படைப்பது என்பதில் சட்டச் சிக்கல் எழுந்துள்ளது. இது தொடர்பாக மத்திய சட்டத் துறையுடன் மத்திய உள்துறை தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
அதேவேளை 16 புலம்பெயர் அமைப்புகள் மீது பயங்கரவாத செயல்களுக்கு துணைபோவது, நிதி திரட்டுவது, சட்டவிரோதமாகக் கூடி இலங்கைக்கு எதிராக சதி செய்வது போன்ற குற்றச்சாட்டுகளை இலங்கை அரசு சுமத்தியுள்ளது இத்தடையையும் இந்தியா முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten