தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 9 mei 2014

திருச்சி சிறப்பு முகாமில், இலங்கைத்தமிழ் அகதி ஒருவர் தற்கொலை முயற்சி.!

திருச்சில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள இலங்கைத்தமிழர் ஒருவர் இன்று அதிகாலை தற்கொலைக்கு முயன்றுள்ளார்.தேவரூபன் த.பெ தேவகுமரேசன் எனும் இலங்கை தமிழ் அகதியே தற்கொலைக்கு முயன்றவர் ஆகும். சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்ததும், சிறப்பு முகாம் எனும் பேரில் காலவரையறையற்று பல வருடங்களாக, தமிழ் அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு குடும்பத்தில் இருந்து தனிமைப்படுத்தி வருடக்கணக்கில் தடுத்து வைப்பதாலும், எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லாது சிறையை விட மோசமான நிலையில் தடுத்து வைப்பதாலும், முகாமில் உள்ள பலரின் மன நிலை பாதிப்படைந்த நிலையிலேயே காணப்படுகின்றனர்.
தேவரூபன் என்பவர், வருடக்கணக்கில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதால் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில், திருச்சி அரச மருத்துவமனையில் மனநல பிரிவில், சிகிச்சை பெற்றுவரும் நிலையில் பல தடவைகள் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெறவேண்டும் என மருத்துவர்கள் சிபாரிசு செய்த போதும் அதனை காவல்துறையும், அரச அதிகாரிகளும் நிராகரித்துவிட்டனர்.
கடந்த இரு நாட்களுக்கு முன்பு மருத்துவர்கள் வைத்திய சாலையில் கண்டிப்பாக அனுமதிக்க வேண்டும், என தமிழக காவல்துறைக்கு கூறியபோதும், அதனை பொருட்படுத்தாது சிறப்பு முகாமுக்கு அழைத்து சென்று விட்டனர். திருச்சி அரச மன நல மருத்துவர், தேவரூபனுக்கு மேலதிக மன நல சிகிச்சைக்கு தமிழக காவல்துறை அனுமதி மறுத்து விட்டதால் அவரது உயிருக்கு ஏதாவது ஆபத்து நேரிட்டால் அதற்கு அதிகாரிகளே முழுப்பொறுப்பு என எழுத்து பூர்வமாக தெரியப்படுத்தியுள்ளார்.
இவ்வாறு தெரியப்படுத்தி இரண்டு நாட்களாகியும்,மருத்துவமனியில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதற்கான அனுமதியினை வழங்கவில்லை என்பதனால், மிகவும் மோசமாக பாதிப்படைந்த நிலையில் தேவரூபன் காணப்பட்டார். இந்நிலையிலேயே இன்று அதிகாலை முகச்சவரம் செய்யும் கத்தியால் தனது கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லி சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டவர்களில் பலர் மன நிலை பாதிக்கப்பட்ட நிலையில் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டுள்ளனர். ஆயினும் இன்றுவரை தமிழக அரசு இதற்கான உரிய நடவடிக்கையினை எடுப்பதாக் தெரியவில்லை.
இலங்கையில் நடந்த கொடூரமான யுத்தத்தில் உயிர் தப்பி அகதிகளாக அடைக்கலம் தேடி தமிழகம் வந்த ஈழத்தமிழ் மக்கள், தமிழகத்தில் இவ்வாறு பல வருடங்கள் சிறப்பு முகாம் எனும் பேரில் தடுத்து வைப்பது மிகவும் வேதனையான விடையமாகும்.
தமிழக கியூ பிரிவு போலீசாரால் வழக்குகள் போடப்பட்டு, பல வருடங்களுக்கு பின்னரே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுகிறது. அத்துடன் வக்கறிஞ்சர்கள், சிறப்புமுகாமில் தடுத்து வைக்கப்பட்டிருப்ப்பவர்களை பார்ப்பதற்கு கூட அனுமதி மறுக்கப்படுகிறது. இவ்வாறான பல அடக்குமுறைகளால், சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் கடுமையான மன அழுத்தத்துக்கு ஆளாகிய நிலையிலேயே காணப்படுகின்றனர்.
குடும்பத்தில் இருந்து பிரித்து தடுத்து வைப்பதால் பல குடும்பங்கள் மிகுந்த கஷ்டத்தினை அனுபவிப்பதோடு குடும்பத்தினுள் பல பிரச்சனைகளும் ஏற்படுகிறது. இவ்வாறு தடுத்து வைப்பதால் மேலும் பலர் தற்கொலைக்கு முயற்சிக்கலாம் என்ற அச்சம் நிலவுகின்றது.
ஆகையினால் தமிழக அரசு சிறப்பு முகாமினை கவனத்தில் எடுத்து அடைத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் விடுதலை செய்து, அவர்களது குடும்பங்களோடு வாழ அனுமதி வழங்கவேண்டும் என்பதே மனிதவுரிமை ஆர்வலர்களின் வேண்டுகோளாகும்.
சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களை இன்றுவரை எந்த தொண்டு நிறுவனமும் பார்க்க அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி - அகதியின் வலி


Geen opmerkingen:

Een reactie posten