தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 25 mei 2014

புதிது புதிதாக கிளம்பும் போர்க்குற்ற ஆதாரங்கள்!

இலங்கையில் போரின் போது நடந்த மனித உரிமை மற்றும் மனித குலத்திற்கு எதிரான மீறல்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கான ஐநா விசாரணைக் குழு எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இம்மாத இறுதிக்குள் இந்த அறிவிப்பு பெரும்பாலும் வெளியாகி விடும் என்று நம்பப்படுகின்ற நிலையில், இந்த விசாரணைக் குழுவை உருவாக்கும் பணிகள் ஜெனிவாவில் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளன.
இந்தநிலையில், போரின் இறுதிக் கட்டத்தில் நிகழ்ந்த போர்க்குற்றங்களை வெளிப்படுத்தும் புதிய ஆதாரங்கள் பலவும் வெளிவரத் தொடங்கியுள்ளன.
போர் முடிவுக்கு வந்து கடந்த 18ம் திகதியுடன் ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
இந்தப் போரின் இறுதிக் கட்டத்தில் எடுக்கப்பட்ட சில ஒளிப்படங்களை கடந்த வாரம் பிரித்தானியத் தமிழர் பேரவை வெளியிட்டிருந்தது.
விடுதலைப் புலிகளின் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் இசைப்பிரியாவும் மற்றும் ஒரு பெண்ணும் இராணுவப் பதுங்கு குழியொன்றுக்குள் அமர வைக்கப்பட்டிருக்கும் காட்சிகளும், வேறு சுமார் 20ற்கும் அதிகமான ஆண், பெண் போராளிகள், ஆடைகள் களையப்பட்ட நிலையில் நீர் காணப்படும் குழியொன்றுக்குள் அமர வைக்கப்பட்டுள்ள காட்சிகளும் இந்த ஒளிப்படங்களில் பதிவாகியுள்ளன.
கடந்த ஐந்து ஆண்டுகளில் வெளியாகிய போர்க்குற்றங்களுடன் தொடர்புடைய ஒளிப்படங்களின் தொடர்ச்சி என்று இதனைக் கூறலாம். இசைப்பிரியா தொடர்பாக வெளியாகும் மூன்றாவது ஆதாரத் தொகுப்பு இதுவாகும்.
முதலில் வெளியான படங்களில் அவர் உடைகள் களையப்பட்ட நிலையில், கைகள் பின்புறம் கட்டப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்டுக் கிடக்கும் காட்சிகளை வெளிப்படுத்தின. பின்னர், வெளியான வீடியோ ஒன்றில், மேலாடை களையப்பட்ட நிலையில், நீர் நிறைந்த பகுதியொன்றில் இருந்து அவர் இராணுவத்தினரால் வெளியே இழுத்து வரப்படும் காட்சிகள் பதிவாகியிருந்தன.
அப்போது அது புலிகளின் சோடிப்பாக இருக்கலாம், நாடகமாக இருக்கலாம் என்று தட்டிக் கழித்திருந்தது இராணுவத் தரப்பு.
இப்போது, அவர் உயிரோடு பிடிக்கப்பட்டதற்கான இன்னொரு ஆதாரமாக அவர் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கொல்லப்பட்டுக் கிடக்கும் காட்சிகளில் காணப்பட்ட அதே அரைகுறை ஆடைகளுடன் கைகள் பின்புறம் கட்டப்பட்ட நிலையில் இந்தப் படங்களில் இசைப்பிரியா காணப்படுகிறார்.
அவருக்கு அருகில் படமொன்றில் காணப்படும் மற்றொரு பெண், ஆடைகள் களையப்பட்டு வெறும் துணியால் போர்த்தப்பட்டிருந்த காட்சியும், இன்னொரு படத்தில் ஆடைகள் களையப்பட்ட ஆண் போராளிகள் மத்தியில், பெரும்பாலும் ஆடைகள் களையப்பட்ட நிலையில், அமர வைக்கப்பட்டுள்ள காட்சியும் பதிவாகியுள்ளன.
அந்தப் பெண்ணின் படத்தைப் பார்த்து அவரது பெற்றோர் அடையாளம் கண்டுள்ளனர்.
மல்லாவியைச் சேர்ந்த குணலிங்கம் உசாளினி என்று அவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் 2008ம் ஆண்டில் புலிகளால் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர் என்றும் இவரது பெற்றோர் இவரை முள்ளிவாய்க்காலில் இறுதியாக சந்தித்திருந்ததாகவும் கூறியுள்ளனர்.
மேலும் சனல் 4 தொலைக்காட்சி முதன்முதலாக வெளியிட்ட நிர்வாணமாக்கபட்ட நிலையில், கைகள் பின்புறம் கட்டப்பட்ட ஆண்கள், தலையில் சுட்டுக் கொல்லப்படும் காட்சிகளுடன் தொடர்புடைய படங்களே இவையெனக் கருதப்படுகிறது.
அந்த நிகழ்வுக்கு முன்னதாக உயிரோடு பிடித்து வைத்திருந்த போது எடுக்கப்பட்ட படங்களாகவே இவை தெரிகின்றன.
இருபதுக்கும் அதிகமான போராளிகள் ஆடைகள் களையப்பட்ட நிலையில், நீர் காணப்படும் குழியொன்றுக்குள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதை இந்தப் புதிய ஆதாரங்கள் வெளிப்படுத்துகின்றன.
இந்தப் படங்களில் காணப்படும் சில போராளிகள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டவர்கள் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அவர்களில், புலிகளின் திருகோணமலை மாவட்ட தளபதியாக இருந்த உதயன் என்பவரும் அடங்கியுள்ளார்.
அதைவிட, அமர வைக்கப்பட்டுள்ள ஆண்களில் ஒருவர் சிறுவனாக இருப்பதையும் காண முடிகிறது.
முள்ளிவாய்க்கால் நினைவு நாளன்று வெளியாகியுள்ள இந்தப் படங்கள், போரின் இறுதிக் கட்டத்தில் சரணடைந்தவர்கள் பலருக்கு நேர்ந்த அவலத்தை இழைக்கப்பட்ட கொடுமைகளை வெளிப்படுத்தியுள்ளது.
இந்தப் படங்கள் குறித்து கருத்து வெளியிட்டுள்ள பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய இதுகுறித்து உடனடியாக எதையும் கூறமுடியாது என்று கடந்த வாரம் பதிலளித்திருந்தார்.
அதாவது முதன்முறையாக இலங்கை இராணுவம், போர்க்குற்றங்கள் தொடர்பாக தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு ஒன்றை உடனடியாகவே நிராகரிப்பதை தவிர்த்துக் கொண்டுள்ளது.
சனல் 4 வீடியோக்கள் மற்றும் போர்க்குற்றங்களை வெளிப்படுத்தும் ஒளிப்படங்கள் வெளியாகின்ற போதெல்லாம் அதை உடனடியாக போலியானது, திரிக்கப்பட்டது என்று நிராகரிப்பதையே இலங்கை இராணுவமும், அரசாங்கமும் இதுவரை வழக்கமாக கொண்டிருந்தன.
இராணுவத்தினது பெயரைக் கெடுப்பதற்காக இவை வெளியிடப்படுவதாக கூறி இவற்றை உடனடியாகவே நிராகரித்து அந்த ஆதாரங்களின் உண்மைத் தன்மையை ஆராய முனைவதில்லை.
ஆனால் முதல் முறையாக ஆராய்ந்து பார்த்துத்தான் இதன் உண்மைத் தன்மையை அறிய வேண்டும் என்று பிரிகேடியர் ருவான் வணிகசூரிய குறிப்பிட்டுள்ளார்.
இது இந்த ஐந்து ஆண்டுகளில் போர்க்குற்றங்கள் பற்றிய குற்றச்சாட்டுகளால் அரசாங்கத்துக்கும் இராணுவத்துக்கும் ஏற்பட்டுள்ள நெருக்கடியினால் ஏற்பட்டிருக்கும் உண்மையான மாற்றமாகும்.
அதற்காக பிரிகேடியர் ருவான் வணிகசூரிய இந்தப் படங்களை உண்மையென்று ஏற்றுக்கொண்டு விட்டதாக கருத முடியாது.
வழக்கம் போலவே இராணுவத்தின் பெயரைக் கெடுப்பதற்காகவே திட்டமிட்டு இதுபோன்ற படங்கள் வெளியிடப்படுவதாக அவர் கூறியிருக்கிறார்.
ஆனாலும், ஏற்கனவே சனல் 4 வெளியிட்ட வீடியோ குறித்து நடத்தப்படும் விசாரணையுடன் சேர்ந்து இது குறித்தும் விசாரணை நடத்தப்படும் என்று பொறுப்பாக பதிலளித்துள்ளார்.
இந்தக் கருத்து மேற்கு நாடுகளுக்குத் திருப்தியளித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், எப்போது இந்த உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும் இந்த விசாரணைகள் எப்போது முடிவடையும் என்று அரசாங்கத்துக்கே வெளிச்சம்.
சனல் 4 வெளியிட்ட வீடியோ ஆதாரத்தை முதலில் பொய்யானது போலியானது என்று தமது தொழில்நுட்ப நிபுணர்களை வைத்து நிரூபித்திருப்பதாக இராணுவம் கூறியது.
ஆனால் 2012ம் ஆண்டு ஐநா மனித உரிமைகள் பேரவையில்,  இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது என்று அறிந்தவுடன், அதேயாண்டு தொடக்கத்தில் ஒரு இராணுவ நீதிமன்றத்தை அமைத்து விசாரணை நடத்துவதாக அரசாங்கம் அறிவித்திருந்தது.
இந்த இராணுவ நீதிமன்றம் 2013ம் ஆண்டில் முதற்கட்ட அறிக்கையை கையளித்து போரின் போது படையினர் எந்த திட்டமிட்ட போர்க்குற்றங்களிலும் ஈடுபடவில்லை என்று கூறியிருந்தது.
அடுத்த கட்டமாக சனல் 4 வீடியோ பற்றிய குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிப்பதாக இராணுவ நீதிமன்றம் கூறி ஒன்றரை ஆண்டுகளாகப் போகின்றன. ஆனால் அந்த அறிக்கை இன்னமும் கையளிக்கப்படவில்லை.
இராணுவ நீதிமன்ற விசாரணைகள் இன்னமும் நடத்தப்படுகிறதா இல்லையா என்று கூடத தெரியவில்லை.
அதனுடன் சேர்த்தே இந்த ஒளிப்படங்கள் குறித்த விசாரணைகளையும் இராணுவ நீதிமன்றம் மேற்கொள்ளும் என்று பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
ஆனால் இராணுவ நீதிமன்றத்தின் தலைவராக இருந்த மேஜர் ஜெனரல் கிரிசாந்த டி சில்வா ரஷ்யாவுக்கான பிரதித் தூதுவராக கடந்த 17ம் திகதி அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் வகித்து வந்த இராணுவத் தலைமை அதிகாரி பதவிக்கு கடந்த 17ம் திகதி மேஜர் ஜெனரல் பிரசாந்த சமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
எனவே அவரது தலைமையிலான இராணுவ விசாரணை நீதிமன்றத்துக்கு என்ன நடந்தது, அது எவ்வாறு செயற்படுகிறது, யாருடைய தலைமையில் செயற்படுகிறது, இதன் விசாரணைகளும்,  அறிக்கையும் வெளிச்சத்துக்கு வருமா என்பதெல்லாம் கேள்விகளாகவே இருக்கின்றன.
இராணுவ நீதிமன்ற விசாரணை அறிக்கைகளைக் கூட பகிரங்கப்படுத்துமாறு அமெரிக்கா கோரி வருகிறது. ஐநா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானமும் கூட, அதனை ஐநா மனித உரிமை ஆணையாளர் பணியகத்துடன் பகிர்ந்து கொள்ள வலியுறுத்தியுள்ளது. ஏனென்றால் இது எந்தளவுக்கு சுயாதீனத்தன்மை கொண்டது என்ற சந்தேகம் உலகம் முழுவதும் உள்ளது.
இந்தநிலையில் புதிய படங்கள் பற்றிய ஆதாரங்கள் குறித்து விசாரித்து அரசாங்கம் பதிலளிக்குமா என்பது சந்தேகம் தான்.
ஆனால் ஒரேயடியாக மறுக்காமல் கொஞ்சம் புத்திசாலித்தனமாக நடந்து கொண்டிருக்கிறது. அதேவேளை, போரின் இறுதிக் கட்டத்தில் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் மற்றம் புலித்தேவன் ஆகியோர் கொல்லப்பட்ட வெள்ளைக்கொடிச் சம்பவம் குறித்து மேலதிகமான சாட்சியங்கள் கிடைத்துள்ளதாக, தென்னாபிரிக்காவைச் சேர்ந்த மனித உரிமை சட்டத்தரணி யஸ்மின சூகா கூறியுள்ளார்.
ஐநா பொதுச் செயலர் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழுவில் இடம்பெற்றவர்களில் ஒருவரான யஸ்மின் சூகா தலைமையிலான அமைப்பு ஒன்று, வெள்ளைக்கொடிச் சம்பவம் தொடர்பான ஆதாரங்கள் பலவற்றைத் திரட்டி ஐநா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் கையளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அவரது அறிக்கையில், நடேசன், புலித்தேவன் ஆகியோர் சரணடைந்ததை நேரில் கண்ட நான்கு சாட்சிகளும், இவர்கள் சரணடைய உத்தரவாதம் கொடுத்த அப்போதைய வெளிவிவகாரச் செயலர் பாலித கொகன்னவுடன் நடத்தப்பட்ட தொலைபேசி உரையாடல் மற்றும் குறுஞ்செய்திப் பரிமாற்றங்களும் சான்றுகளாகச் சேர்க்கப்பட்டுள்ளன.
ஐநா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையினால் போர்க்கால மீறல்கள் குறித்து விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்படவுள்ள சூழலில் இந்தப் புதிய ஆதாரங்கள் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன.
இத்தகைய ஆதாரங்களை அரசாங்கம் ஒரே அறிக்கையில் நிராகரித்து விட்டுப் போகலாம். எனினும் சர்வதேச விசாரணையொன்று வரும் போது, அவை பொய்யென்று நிரூபிக்க வேண்டும். அதுதான் சர்வதேச சமூகத்தினால் ஏற்றுக் கொள்ளப்படும்.
அதற்கு, ஐநா விசாரணைகளுக்கு அரசாங்கம் ஒத்துழைத்ததாக வேண்டும். ஆனால் ஐநா விசாரணைக் குழுவை நிராகரிக்கும் இலங்கை அரசாங்கம் எவ்வாறு இவை பொய்யான குற்றச்சாட்டுகள் என்று நிரூபிக்கப் போகிறது?
சுபத்ரா
http://www.tamilwin.com/show-RUmsyFRZLZks0.html

Geen opmerkingen:

Een reactie posten