வட மாகாணத்தின் புதிய ஆளுநராக, தற்போதைய பிரதிப் பொலிஸ் மா அதிபரான அநுர சேனநாயக்கா நியமிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தற்போதைய ஆளுநர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறியின் பதவிக்காலம் எதிர்வரும் யூன் 30ஆம் திகதியுடன் முடிவடைகின்றது. இதே காலப்பகுதியில் தற்போதைய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அநுர சேனநாயக்கா தமது பதவியிலிருந்து ஓய்வுபெற உள்ளார். இந்த நிலையில், வட மாகாண ஆளுநராக அவர் நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கத்தின் உயர் மட்டத்தினருக்கு மிக நம்பிக்கையானவரான அநுர சேனநாயக்கா, அடுத்த பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்படக்கூடும் என முன்னர் எதிர்ப்பார்க்கப்பட்டது.
அண்மையில் அவரது பிரதிப் பொலிஸ்மா அதிபர் பதவிக்காலம் முடிவுற்ற சமயம் மேலும் ஆறு மாதங்களுக்கு அப்பதவியில் அவருக்கு நீடிப்பு வழங்கப்பட்டு இருந்தது. அடுத்த பொலிஸ் மா அதிபராக நியமிக்கும் நோக்குடனேயே அந்த பதவி நீடிப்பு வழங்கப்பட்டதாகவும் கருதப்பட்டது.
எனினும், தற்போதைய பொலிஸ்மா அதிபரே அப்பதவியில் தொடரட்டும் என கருதும் அரசாங்க உயர் மட்டத்தினர் அநுர சேனநாயக்காவை வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கலாம் என்றும் இப்போது முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகின்றது.
வட மாகாணத்துக்கு புதிய ஆளுநரை நியமிப்பதில் பல தரப்பிலிருந்தும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை இதன் மூலம் தீர்க்கலாம் என்றும் அரசாங்க தரப்பு கருதுவதாகவும் கூறப்படுகின்றது.
முன்னாள் படை அதிகாரி ஒருவரை இந்தப் பதவிக்கு நியமிப்பதை தமிழர்களும் அவர்களின் அரசியல் பிரதிநிதிகளும் மற்றும் சர்வதேச தரப்பினரும் விரும்பாத நிலையில் பொலிஸ் நியமனத்தை அரசாங்கம் வழங்க முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான படையினர் நிலைகொண்டுள்ள வடக்கு மாகாணத்தில், படைத்தரப்பையும் அரவணைத்து அங்கு நிர்வாகத்தை முன்னெடுப்பதில் உள்ள சிக்கல்கள் நீங்கும் அதே வேளை, படையினர் அல்லாத பொலிஸ் அதிகாரியை நியமிப்பதன் மூலம் மாற்றுத் தரப்பையும் தாஜா பண்ணலாம் என அரசாங்கம் சிந்திப்பதாக கூறப்படுகிறது.
அநுர சேனநாயக்கா, தென்னிலங்கையில் பெரும் வரவேற்பைப் பெற்ற சிங்கள மேடைப் பாடகர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது பல சிங்களப் பாடல் இறுவட்டுக்கள் வெளிவந்துள்ளன. சிங்கள மக்கள் மத்தியில் அவை அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன.
சிங்கள வானொலிகளில் தினசரி அவரது பாடல்கள் ஒலிக்கின்றன. அவர் தமது பங்களிப்புடன் தனியான ஓர் இசைக் குழுவையும் வழிநடத்தி வருகின்றார். பொலிஸ் இசைப் பிரிவு அணியுடனும் அவர் பங்காற்றி வருகின்றார்.
கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு, மேல் மாகாண பொலிஸ் பிரிவு போன்றவற்றுக்கு அவர் பொறுப்பதிகாரியாகப் பணியாற்றியிருக்கின்றார்.
இதேவேளை அனுரசேனநாயக்கா ஆடுவார் பாடுவார், இசைக்குழுவை வழிநடத்துகிறார் என்ற அவரின் கலைசார்ந்த ஈடுபாட்டையும், இந்தத் தகவலையும் தமிழ் ஊடகங்களில் கசியவிடுவதன் மூலமம் தமது புதிய நிலைப்பாடு குறித்து அரசாங்கம் கருத்தறிய முற்படுவதாகவும் மற்றும் ஒரு தகவல் கூறுகின்றது.
குறிப்பாக பாதுகாப்பு தரப்போடு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நியமிப்பதற்கு வடக்கு மாகாண சபை காட்டிவரும் எத்ர்ப்பு, சர்வதேச மட்டத்தில் தோன்றியுள்ள அதிர்ப்த்தி, மக்களின் உணர்வு நிலை குறித்து கருத்தறியும் நோக்குடனேயே இந்த தகவல் ஊடக மட்டத்தில் விடப்பட்டு உள்ளதாக தெரிய வருகிறது. |
Geen opmerkingen:
Een reactie posten