தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 24 mei 2014

ஜெகதீஸ்வரன் கைது செய்யப்பட்டமைக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கண்டனம்!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் தங்கவேல் ஜெகதீஸ்வரன் அவர்கள் நேற்றய தினம் 23-05-2014 இரவு பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விடுத்துள்ள அறிக்கை வருமாறு,
நாளை மறுதினம் திங்கட்கிழமை காலை 11.00 மணியளவில் கிளிநொச்சி கச்சேரிக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடாத்துவதற்கு எமது கட்சி ஏற்பாடு செய்திருந்தது.
கிளிநொச்சியில் நில அபகரிப்பை கண்டித்தும், இராணுவத்தின் பிடியிலுள்ள வீடுகள் நிலங்கள் பொதுமக்களிடம் ஒப்படைக்கப்படல் வேண்டும் என்றும், இடம்பெயர்ந்த மக்கள் அவர்களது சொந்த வீடுகளில் மீளக் குடியமர உடனடியாக அனுமதிக்கப்படல் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே மேற்படி போராட்டத்திற்கான அழைப்பு கட்சியினால் விடுக்கப்பட்டிருந்தது.
மேற்படி கவனயீர்ப்பு நிகழ்வை குழப்பும் நோக்கில் இராணுவ உளவுத் துறையினர் கடந்த சில தினங்களாக ஜெகதீஸ்வரன் வீட்டிற்குச் சென்று அச்சுறுத்தல் விடுத்திருந்ததுடன், இடம்பெயர்ந்த மக்களையும், கட்சியின் ஆதரவாளர்களையும் அச்சுறுத்தியிருந்தனர்.
நேற்றைய தினம் ஜெகதீஸ்வரனை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்த பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி போராட்டத்தை கைவிடுமாறு கோரியிருந்தார்.
இந்நிலையில் போராட்டம் நடாத்துவது தொடர்பாக உத்தியோக பூர்வமாக அறிவிக்கும் வகையில் நேற்று 23ம் திகதி கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் எழுத்து மூலமான கடிதம் கட்சியின் பொதுச் செயலாளரால் நேரில் சமர்ப்பிக்கப்பட்டது.
அக்கடிதத்தினை பார்வையிட்ட பொலிஸ் அதிகாரி போராட்டம் நடாத்த அனுமதிக்க முடியாது என்று கூறியிருந்தார். காரணம் கேட்டபோது அன்றைய தினம் முக்கிய பிரமுகர் ஒருவர் வருகை தரவுள்ளார் அதனால் அனுமதிக்க முடியாது என்று கூறப்பட்டது.
போராட்டம் நடாத்த அனுமதிக்க முடியாது என்ற விடயத்தினை எழுத்து மூலம் தருமாறு கட்சியின் பொதுச் செயலாளர் பொறுப்பதிகாரியை கோரியிருந்தார். எழுத்து மூலம் தருவது பற்றி தான் பின்னர் எம்முடன் தொடர்பு கொள்வதாக தெரிவித்திருந்தார்.
சட்டதிட்டங்களுக்கு அமைவாக ஏற்பாடு செய்யப்பட்ட ஜனநாயகப் போராட்டத்தை அச்சுறுத்தல் மூலம் அரசாங்கம் நிறுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொண்டது. அதற்கு இடமளிக்காது சட்டதிட்டங்களுக்கு அமைவாக போராட்டத்தை நடாத்துவதில் பாதிக்கப்பட்ட மக்களும் கட்சியும் உறுதியாக இருந்த நிலையிலேயே மேற்படி கைது இடம்பெற்றுள்ளது.
இக் கைது எமது கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஜனநாயகப் போராட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற நோக்கிலும், கிளிநொச்சி மாவட்டத்தில் எமது கட்சியின் செயற்பாடுகளை முடக்கும் நோக்கிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழ் மக்களால் முன்னெடுக்கப்படும் ஜனநாயக ரீதியான செயற்பாடுகளை இன ரீதியான கண்ணோட்டத்தில் நோக்கும் அரசு தனது இராணுவ மற்றும் பொலீஸ் பலத்தை பிரயோகித்து நசுக்க முயல்கின்றது.
இக் கைதினை நாம் மிகவும் வன்மையாகக் கண்டிப்பதுடன், இவரை விடுவிக்க சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோருவதுடன், இவரது விடுதலைக்காக கட்சி பேதங்களுக்கப்பால் அனைவரையும் எம்முடன் இணைந்து செயற்பட முன்வருமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
தலைவர்
செல்வராசா கஜேந்திரன்
பொதுச் செயலாளர்
http://www.tamilwin.com/show-RUmsyFRYLZlxy.html

Geen opmerkingen:

Een reactie posten