தமிழர்களின் தமிழீழ தாயக வேட்கை இன்னும் முற்றுப்பெறவில்லை என்பதற்கு உலகளாவிய ரீதியில் கடந்த 18.05.2014 ஆம் திகதி நடைபெற்ற 5ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காய் நினைவஞ்சலிகள் சிறந்த சான்று பகர்கின்றன.
பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் எமது நாட்டில் இந்த வீர வணக்க நினைவஞ்சலிகள் முன்னெடுக்கப்பட்டன.
தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் பதவி நாற்காலி அரசியலாக இருந்து வந்த அரசியலை பரந்துபட்ட மக்களின் ஒன்றிணைந்த அரசியலாக வளர்த்தெடுப்பதற்கான போராட்டங்களில் புதியதொரு அத்தியாயமே 1976 மே மாதம் 5ம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பாக உருவெடுத்தது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தோற்றம் என்பது வெறுமனே ஒரு அமைப்பின் பிறப்பு மட்டுமல்ல. ஒடுக்கப்பட்ட ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் புதிய ஒரு சகாப்தம் எனக்கூறமுடியும்.
அவ்வாறான ஒரு சகாப்தத்தின் ஆளுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முகமாக பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலிகொண்ட முள்ளிவாய்க்கால் இறுதிக்கட்ட போராட்டம் நடைபெற்றதும் இதே மே மாதத்தில் தான். கடந்த 18ஆம் திகதி வெற்றிக்கொண்டாட்டங்களில் ஈடுபட்ட எமது அரசாங்கம் உயிர்நீத்த எமது தமிழ் உறவுகளுக்காக ஒரு நிமிடமேனும் மௌன அஞ்சலி செலுத்தியதா?
உயிர் நீத்த இராணுவத்தினர் எமது அரசியல் வரலாற்றில் கல்வெட்டுக்களால் பொறிக்கப்பட்ட அதேவேளை, பச்சிளம் குழந்தை முதல் பால் கொடுக்கும் அன்னை கூட கற்பழிக்கப்பட்டு உயிரிழந்த அந்த அப்பாவி பொது மக்களை ஏன் இந்த அரசாங்கம் நினைவில் கொள்ளவில்லை.
தமிழ் மக்களின் மீதான ஆக்கிரமிப்புக்களும் அடக்குமுறைகளும் இன்று நேற்றல்ல ஆண்டாண்டு காலமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன் காரணமாகவே விடுதலைப் போராட்ட இயக்கங்கள் எழுச்சி பெற்றது என்பது கண்கூடு. எனினும், சிங்களப் பேரினவாதம் இதனை அழிப்பதற்கும் இந்த அமைப்பை வேரும் வேரடி மண்ணோடும் பிடுங்கி வீசவும் எல்லா முயற்சிகளையும் இது ஆரம்பித்த நாள்முதலாக இன்றுவரை செய்தே வருகிறது.
சிங்கள அரசாங்கத்தின் வெசாக் கொண்டாட்டங்கள் இடம்பெற்று ஓரிரு தினங்கள் மாத்திரமே கடந்துள்ள நிலையில் தமது மதக் கொள்கைக்கும் நாட்டின் அரசியற் கொள்கைக்கும் அப்பாட்பட்டு ஒரு வெறித்தனமாக காட்டுமிராண்டித் தனமான இனஅடக்கு முறையை தமிழ் மக்கள் மீது இலங்கை அரசாங்கம் நேற்றைய தினம் முன்னெடுத்துள்ளது என்றால் அது மிகையில்லை.
இலட்சக்கணக்கான உயிர்களை காவு கொண்ட முள்ளிவாய்க்கால் மற்றும் நாடு தழுவிய போராட்டங்கள் இடம்பெற்று வருட பூர்த்தியை இந்த அரசாங்கம் வெற்றி விழாவாக கொண்டாடுகின்ற அதேவேளை உயிரிழந்த தமது உறவுகளுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலியேனும் செலுத்துவதற்கு இந்த அரசாங்கம் தடைவிதித்தமை மாத்திரமல்லாது அவற்றை தமது கால்களால் உதாசீனப்படுத்தியமை எந்த வகையில் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்று?
தமிழர்களின் கலாசார பண்பாட்டு விழுமியங்களின் அடிப்படையில் மாத்திரமன்றி உயிரிழந்த ஒவ்வொரு ஆன்மாவும் இறைவனுக்கு சமமாக மதிக்கப்படுவதையே ஒவ்வொருவராலும் ஆத்மார்த்தமாக நம்பப்படுகின்றது. எனினும் மனிதாபிமானத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முகமாக எமது அரசாங்கத்தின் இந்த அடாவடிச் செயற்பாடுகள் அன்றைய தினம் யாழ் நகரில் மாத்திரமன்றி நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளமை வேதனைக்குரியதே.
உயிரிழந்த தமது உறவுகளின் கல்லறைகளை கூட நேரில் சென்று பார்வையிடுவதற்கும் பிதிர்கடன் நிறைவேற்றுவதற்கும் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தமது பிரதேசங்களில் அல்லது பொதுவான இடத்தில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்துவதற்குக்கூட நேற்று முன் தினம் அனுமதி மறுக்கப்பட்டு உயிரிழந்த ஒவ்வொருவரும் அவமதிக்கப்பட்ட செயற்பாடானது தமிழர்கள் மீதான அடக்குமுறைக்கு சிறந்த சான்றுபகர்கின்றது.
தமது சொந்த நாட்டில் சொந்த பிரதேசத்தில் தாமாக சுயஉரிமையுடன் வாழ்வதற்கு தொடர்ச்சியாக தடைவிதிக்கப்பட்டு வருகின்றமை அனைவரும் அறிந்தமையே.
எனினும், அன்றைய தினம் தெல்லிப்பழை சந்தியில் இருந்து கீரிமலை செல்லும் வீதிப் பாவனைக்கு இராணுவத்தினரால் தடை விதிக்கப்பட்டுள்ளது. தெல்லிப்பழை சந்தியில் இருந்து கீரிமலை செல்லும் வீதி சிங்கள சுற்றுலாத்துறை பயணிகளைத் தவிர ஏனையவர்களுக்கு இராணுவத்தினரால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நம் நாட்டில் பட்டிதொட்டியெல்லாம் தமிழீழ தாயகம் என்ற ஆத்மார்த்த உணர்வுடன் தமிழர்கள் வாழ்ந்த காலம் மறைக்கப்பட்டு தற்போது சுயமரியாதையை காப்பாற்றிக் கொள்வதற்கான ஒரு பிரயத்தனமான எதிர்பார்ப்புக்களுடனேயே தமிழர்கள் தத்தம் பகுதிகளில் வாழ வேண்டிய கடப்பாட்டிற்குள் தள்ளப்பட்டுள்ளனர் என்றால் அது மிகையில்லை.
ஒரு ஜனநாயக நாட்டில் ஆண்டாண்டு காலமாக வாழ்ந்து வந்த ஒரு இனத்தை அழித்து ஆக்கிரமித்துவிட்டு வெற்றி விழா கொண்டாடும் இலங்கை அரசாங்கம் தமிழ் மக்கள் தம் உறவுகள் மீது கொண்ட உன்னதமான உறவுகளுக்குக் கூட மதிப்பளிக்கவில்லை என்பதை கடந்த 18ம் திகதி முன்னெடுக்கப்பட்ட இராணுவ ஆக்கரமிப்பு பறைசாற்றுகின்றன.
இவ்வாறான செயற்பாடுகள் மூலம் இலங்கை அரசாங்கம் இங்கு வாழ்கின்ற தமிழர்களை மாத்திரமே அடக்கி ஆக்கிரமிக்கின்ற போதிலும் உலகளாவிய ரீதியில் வாழ்கின்ற தமிழ் மக்களின் உணர்ச்சிகளை இந்த அரசினால் என்றைக்குமே கட்டுப்படுத்த முடியாது.
அதற்கு சான்று பகரும் வண்ணமாகவே இந்தியாவின் மெரினா கடற்கரை, கனடா ரொறன்ரோ மாநகரில் அல்பெர்ட் கம்பெல் சதுர்க்கம், பிரித்தானியா உள்ளிட்ட பல மேற்கத்தைய நாடுகளிலும் தீப அஞ்சலிகள் மிகவும் உணர்வு பூர்வமான முறையில் முன்னெடுக்கப்பட்டன.
மக்களின் அபிலாசைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முகமாக இராணுவத்தினர் பலர் தமிழர் பகுதிகளில் மேலதிகமாக குவிக்கப்பட்ட போதிலும் யாழ் நல்லூர் உட்பட ஒரு சில பகுதிகளில் கோவில்களில் மற்றும் தேவாலயங்களில் முன்னெடுக்கப்பட்ட பிரார்த்தனைகள் தொடர்பில் இராணுவத்தினர் எவ்வித விழிப்புனர்வும் இன்றி அவர்களும் கலந்து கொண்டிருந்த வேடிக்கையான நிகழ்வுகளும் நேற்றைய தினம் நடைபெற்றிருந்தன.
உலகில் உள்ள எந்தவொரு நாட்டிலுமே போரின்போது கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு அந்த நாடுகள் முழுமையான ஆதரவை வழங்குகின்றபோது இலங்கை அரசு மட்டும் ஏன் இவ்வாறான அஞ்சலி நிகழ்வுகளுக்கு தடை விதித்து மனித நேயமற்ற செயற்பாடுகளை முன்னெடுக்கின்றது என்பது புரியாத புதிராகவேதான் உள்ளது.
இந்தியாவில் அன்னை இந்திராகாந்தி சீக்கியர்களின் பொற்கோவில் மீது படையெடுத்து அதைக் கைப்பற்றியபோது அதற்காக வெற்றி விழா கொண்டாடும்படி இந்திராகாந்தியின் ஆதரவாளர்கள் கூறியபோது அதற்கு அன்னை இந்திரா சொன்ன பதில் “எனது மக்களை நானே கொன்றுவிட்டு அதற்காக ஒரு வெறிறி விழாவா இறந்த எம் மக்களுக்கு அஞ்சலி செலுத்துகின்றேன்” என கூறினார். இதேபோன்று பல சம்பவங்களை உலகில் நடைபெற்றிருக்கின்றன.
இலங்கையில் மக்கள் விடுதலை முன்னணி அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்தது இதன்போது அதன் தலைவர் உட்பட பல ஆயிரம்பேரை அப்போதைய அரசு கொன்று குவித்தது இதன் நினைவஞ்சலிகள் வருடம் தோறும் சித்திரை மற்றும் கார்த்திகை மாதங்களில் நடைபெறுகின்றன இதற்கு பூரணமான ஆதரவை வழங்குகின்ற இந்த அரசு தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதற்கான நினைவஞ்சலிகளை மட்டும் நடாத்த முடியாமல் தடுப்பதானது தமிழ் மக்களை இந்த அரசு எந்தளவிற்கு இன சுத்திகரிப்பு செய்கின்றது என்பதற்கான சிறந்த சான்றாக கருதப்படுகின்றது.
மேலும் இலங்கை அரசு மீது சர்வதேசம் கொண்டுள்ள கசப்பான எண்ணப்பாடுகளுக்கு மேலும் வலுச்சேர்க்கின்ற ஒரு செயற்பாடாகவேதான் இந்த அடக்குமுறையும் அமைகின்றது அத்துடன் தமிழ் மக்கள் மீது நல்லெண்ண செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக இலங்கை அரசு கூறுகின்ற பொய்யான பரப்புரைகளுக்கு சான்று பகர்வனவாகவும் இந்த மனித நேயமற்ற செயற்பாடுகள் அமைவதனைக் காணலாம்.
தமிழர் பகுதிகளில் சிங்களவர் குடியேற்றங்கள் அமைக்கப்பட்டு வருகின்றமை, புலிக்கொடி போர்த்தியவர்கள் என்பதற்கான கைதுகள், கல்வி கற்ற இளம் சமூகத்தினர் மீதான அடக்கு முறை,தமிழ்ப் பெண்கள் விலைமாதுக்களாக மாற்றப்படுகின்ற கட்டாயத்திற்குள் தள்ளப்படுகின்றமை, உள்ளிட்ட மேலும் பல ஆக்கிரமிப்புக்களை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துச் செல்கின்றமை உலகறிந்த உண்மை இதற்காக மேற்கத்தைய சமூகங்கள் குரல் கொடுக்கின்றமை வரவேற்கத்தக்கது
எனினும், தாயக வேட்கைக்கான முள்ளிவாய்க்கால் இறுதிக்கப்பட்ட போர் முற்றுப்பெற்று ஐந்து வருடங்கள் கடந்துள்ள போதிலும் விடுதலைப் போராட்டத்தின் பங்காளிகளாக செயற்பட்டு இன்னமும் இலங்கையில் வாழ்கின்ற நசுக்கப்படுகின்ற ஒவ்வொரு தமிழரும் தமது அன்றாட வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான போராட்டங்கள் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்றன என்றால் அது மிகையில்லை. எனவே அடக்கப்படுகின்ற சமூகத்தின் பால் குரல்கொடுக்கின்ற ஒவ்வொரு சமூகமும் இலங்கை வாழ் உறவுகளின் அன்றாட தேவைகளுக்கான மனிதாபிமான உதவிகளை முன்னெடுப்பதே சாலச்சிறந்தது.
தமது உறவுகளை, உடமைகளை, அபிலாசைகளை, இழந்து தமது அன்றாட தேவைகளுக்கான போராட்டங்களுக்கு மத்தியில் எம்மக்களின் ஒவ்வொரு பொழுதுகளும் விடிகின்றமை வேதனைக்குரியதே.
நாட்டில் தாயக வேட்கை என்ற போராட்டங்களுக்கு அப்பால் நின்று வடக்கு கிழக்கு மாகாணங்கள் என்ற பிரிவினை இல்லாது ஒட்டுமொத்த தமிழ் சமூத்தினரின் தேவைகள் குறித்து சர்வதேச சமூகமும், புலம் பெயர் தமிழர்களும் சிந்தித்து செயலாற்ற வேண்டும் என்பதே இங்கு எமது நாட்டில் ஒரு கூரையின் கீழ் அடக்கப்படுகின்ற ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் அபிலாசைகளாகும்.
ஜெ.சுவாதி
http://www.tamilwin.com/show-RUmsyFRULZnv0.html
Geen opmerkingen:
Een reactie posten