இலங்கையில் நடக்கும் அடக்குமுறையில் இருந்து தப்பி தமிழகம் சென்ற 10 இலங்கை தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை இராமநாதபுரத்தில் உள்ள மனித உரிமை ஆர்வலர்களையும் தமிழ் ஆர்வலர்களையும் ஆத்திரமடைய செய்துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
5 சிறு பிள்ளைகள் உட்பட 10 இலங்கை தமிழர்கள் தமிழகத்தின் தனுஸ்கோடியில் கரையிறங்கினர். இவர்களை வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் கைது செய்த பொலிஸார், கடந்த 5 ஆம் திகதி சென்னை புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த அகதிகள் இரண்டு குழுக்களாக சென்றிருந்தனர்.
இலங்கையில் அரச படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற 3 தசாப்த போர் காரணமாக இந்தியாவில் பல தமிழர்கள் புகலிடம் பெற்றுள்ளனர்.
போர் முடிவுக்கு வந்த பின்னர், அமைதியான வாழ்க்கையை எண்ணி 20 ஆயிரம் தமிழர்கள், இந்திய அரசின் வெளியேற்ற அனுமதியை பெற்று சொந்த நாடு திரும்பினர்.
இலங்கையில் அமைதி திரும்பியதால், இந்திய அரசாங்கம் 2011 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் இருந்து வரும் அகதிகளை ஏற்பதில்லை.
இந்த நிலையில், தற்போது இந்தியாவுக்கு சென்று கரையிறங்கும் இலங்கை தமிழர்கள் வெளிநாட்டவர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவதுடன் அவர்கள் சிறையில் அடைக்கப்படுகின்றனர்.
இலங்கை தமிழர்களுக்கு இந்தியாவின் புதிய விதிகள் தெரியாது என மக்கள் கண்காணிப்பு அமைப்பின் இராமநாதபுரம் இணைப்பாளர் ஷேக் இப்ராஹிம் தெரிவித்தார்.
இலங்கை தமிழர்களுக்கு இந்திய அரசாங்கம் கட்டாயம் அகதி அந்தஸ்து வழங்க வேண்டும். அவர்களை அகதி முகாம்களில் வசிக்க இடமளிக்கப்பட வேண்டும்.
அவர்களை முகாம்களில் தங்க வைத்து ஏனைய அகதிகளுக்கு வழங்கும் சலுகைகளை வழங்க வேண்டும் எனவும் இப்ராஹிம் கூறியுள்ளார்.
அமைதியான வாழ்க்கையை எதிர்பார்த்தே தமிழர்கள் இலங்கையில் இருந்து வெளியேறுகின்றனர். எனினும் இந்தியா உணர்வற்ற அணுகுமுறையை கையாள்கிறது என்றும் இப்ராஹிம் குற்றம் சுமத்தியுள்ளார்.
2011 ஆம் ஆண்டுக்கு பின்னர் வரும் எந்த அகதிகளையும் தங்க அனுமதி வழங்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளதாக மண்டபம் முகாமில் உள்ள விசேட பிரதி ஆட்சியாளர் அலுவலகத்தின் தகவல்கள் தெரிவித்தன.
Geen opmerkingen:
Een reactie posten