கனடாவிலிருந்து வந்து தனது சொந்த வீட்டிலிருந்தவர்களை வெளியேற்ற முயன்ற மூதாட்டி ஒருவரை வீட்டில் குடியிருப்பவர்கள் தாக்கி காயப்படுத்தி, கொலை அச்சுறுத்தலும் விடுத்துள்ள சம்பவமொன்று சாவகச்சேரி, நுணாவில் மேற்கு பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் காயமடைந்த, குணாநந்தன் தயாளசோதி (வயது 78) என்ற மூதாட்டி சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து தெரியவருவதாவது,
நுணாவில் மேற்கைச் சேர்ந்த குறித்த மூதாட்டி, தான் கனடாவுக்குச் செல்வதற்கு முன்னர், வீடில்லாமல் தவித்த ஒரு குடும்பத்தினரை தனது வீட்டில் குடியிருக்க அனுமதித்து, வாடகை ஒப்பந்தமும் செய்துவிட்டுச் சென்றுள்ளார்.
கனடாவிலிருந்து அண்மையில் திரும்பி வந்த மூதாட்டி, இருபகுதியினரும் செய்து கொண்ட வாடகை ஒப்பந்த காலம் முடிவடைந்த நிலையில், வீட்டிலிருந்து வெளியேறுமாறு குடியிருந்தவர்களைக் கேட்டுள்ளார்.
வீட்டிலிருந்தவர்கள், தாம் வெளியேறுவதற்கு ஒரு மாத கால அவகாசம் கேட்டபோது, அதற்குச் சம்மதித்து விட்டுச் சென்ற மூதாட்டி, ஒரு மாதத்தின் பின்னர் திரும்ப வந்து, கடந்த ஏப்ரல் 12ம் திகதி வீட்டை விடுவிக்குமாறு கேட்ட போது, குடியிருந்தவர்கள் மீணடும் அவகாசம் கேட்டுள்ளனர்.
இதனையடுத்து, சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் மூதாட்டி முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.
வீட்டில் குடியிருந்தவர்களை அழைத்து சாவகச்சேர் பொலிஸார் விசாரித்த போது, இரு நாட்களில் வீட்டிலிருந்து தாம் வெளியேறி விடுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இருந்த போதிலும், அவர்கள் வீட்டிலிருந்து வெளியேறாததால், நேற்று பகல் வீட்டிற்குச் சென்ற மூதாட்டி வீட்டினை விடுமாறு குடியிருப்பாளர்களைக் கேட்ட போது, வீட்டிலிருந்தவர்கள் மூதாட்டியைத் தாக்கி காயப்படுத்தியுள்ளனர்.
அத்துடன், ‘வீட்டுக்கு இனிமேல் திரும்ப வந்தால், கனடாவுக்கு பெட்டிக்குள் வைத்து அனுப்பி விடுவோம்’ என கொலை அச்சுறுத்தலும் விடுத்துள்ளனர்.
காயமடைந்த மூதாட்டி சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து விட்டு, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மூதாட்டியைத் தாக்கிய தங்கராசா சிவசுதன் என்பவரைப் பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmsyFTZLYlu1.html
Geen opmerkingen:
Een reactie posten