ஜனாதிபதியால் உருவாக்கப்பட்டுள்ள விசேட பிரிவால் அமைச்சர்கள் , பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 800 பேரினது தொலைபேசிகள் ஒற்றுகேட்கப்படுவதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத்சாலி குற்றம்சாட்டியிருக்கின்றார்.
இதனை தடுப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி பேதங்களை துறந்து இதற்கெதிராக குரல்கொடுக்க வேண்டுமெனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். அதிகாரத்தை பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்துவோம் அமைப்பு கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் இங்கு மேலும் பேசுகையில்;
"தம்புள்ள பள்ளிவாசல் உடைக்கப்படமாட்டாது, அதற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாத வகையில் தம்புள்ள புனித நகர நிர்மாணப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்று ஜனாதிபதி இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு உறுதி அளித்திருந்தார். ஆனால் இன்று அது காற்றில் பறக்கவிடப்பட்ட அவரின் மற்றொரு உறுதி மொழியாகிவிட்டது.
நேற்று முன்தினம் தம்புள்ள ரஜமகாவிகாரையின் தலைமை மதகுருவின் நேரடி மேற்பார்வையில் தம்புள்ள பள்ளிவாசலை அங்கிருந்து அகற்ற அல்லது அதன் தற்போதைய இடப்பரப்பை குறைக்கும் வகையில் பள்ளிவாசலை ஊடறுத்து குறுக்கு வீதி ஒன்றை நிறுவும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
மதகுருமார் தலைமையில் பொலிஸாரும் பல அதிகாரிகளும் இந்தக் காரியத்தில் ஈடுபட்டுள்ளனர். பல மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டுள்ளன. இன்று இந்தப் பணிகள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன. பள்ளிவாசலின் அடையாளத்தை அழிக்கும் அளவுக்கு திட்டமிட்டு இந்தச் செயல்கள் மேற்கொள்ளப்படுகின்றனவே தவிர அங்கு குறுக்குப்பாதை ஒன்று அமைப்பதற்கான தேவை இருப்பதாகத் தெரியவில்லை.
இதற்காகத்தான் ஜனாதிபதிக்கு பஹ்ரேனில் அதியுயர் சிவிலியன் விருது வழங்கப்பட்டதா ? ஜனாதிபதி முஸ்லிம் நாடுகளில் கௌரவங்களைப் பெற்றுக்கொண்டு உள்ளூரில் முஸ்லிம்களுக்கு துரோகம் இழைத்து வருகின்றார். இந்த தவறுகளுக்காக இந்த நாட்டு முஸ்லிம்கள் ஒருபோதும் அவரை மன்னிக்க மாட்டார்கள். அவரோடு இன்னமும் ஒட்டிக்கொண்டிருக்கும் அமைச்சர்கள் என்ன சொல்லப்போகிறார்கள் சமூகத்துக்கு அவர்கள் கூறும் பதில் என்ன?
பொலிஸாரால் மனிதர்கள் கடத்தப்படும் காலம் கடந்து போய் தற்போது இனந்தெரியாத கோஷ்டிகள் பொலிஸாரையே கடத்திச் சென்று கொலை செய்யும் அளவுக்கு நாட்டில் சட்டமும் ஒழுங்கும் சீர்குலைந்து விட்டது. பொலிஸாருக்கே இந்தக் கதி என்றால் சாதாரண மக்களுக்கு இந்தநாட்டில் எங்கே பாதுகாப்பு உள்ளது என்று கேட்க விரும்புகின்றேன்.
இவை எல்லாவற்றையும் விட இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள மிகவும் பயங்கரமான நிலை ஒரு அமைச்சருக்கு அவருடைய மனைவியோடு கூட தொலைபேசியில் அந்தரங்கமாக பேசமுடியாத நிலை .
இதை விளையாட்டாக இலேசான குற்றச்சாட்டாக நான் கூறவில்லை . மிகவும் பாரதூரமாக இதைக் கூறுகின்றேன். அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் என சுமார் 800 தொலைபேசி இலக்கங்கள் ஜனாதிபதியால் ஏற்படுத்தப்பட்டுள்ள விஷேட பிரிவால் இன்று ஒற்றுக்கேட்கப்படுகின்றன.
ஊடக நிறுவன முக்கியஸ்தர்கள், முக்கிய ஊடகவியலாளர்கள், அரசாங்க உயர் அதிகாரிகள் என பலரின் இலக்கங்கள் இதில் அடங்கும் . அமைச்சர்கள் தமது மனைவிமாருடன் பேசுவதை கூட ஜனாதிபதி இன்று கேட்டுக்கொண்டிருக்கிறார் . இதை சில அமைச்சர்களே எம்மிடம் கூறி வேதனைப்பட்டுள்ளனர். இது மிகவும் வெட்கத் கேடான நிலை. ஒருவர் வேறு ஒரு புதிய அழைப்பில் இருந்து பேசினாலும் அதுபற்றிய விபரங்களைத் தெரிந்துகொள்ளும் அளவுக்கு குரல் அடையாளமாக பதிவுகொண்ட விஷேட ஒற்றுக்கேட்கும் கருவிகள் இதற்குப் பயன்படுத்தப்படுகின்றன.
பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி பேதங்களைத் துறந்து இதற்கு எதிராக குரல்கொடுக்க வேண்டும். இது மிகவும் கேவலமானதோர் நிலையாகும். என்னை பொலிஸார் கைது செய்யவந்தபோது தான் இந்த விடயத்தை நான் தெளிவாகத் தெரிந்துகொண்டேன் . இந்த தொலைபேசி ஒற்றுக்கேட்கும் பிரிவை உடனடியாக மூடிவிட வேண்டும். சகல அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இதற்கு எதிராக கிளர்ந்து எழ வேண்டுமென கோருகின்றேன்." |
Geen opmerkingen:
Een reactie posten