[ புதன்கிழமை, 07 மே 2014, 03:37.02 PM GMT ]
மன்னார் முள்ளிக்குளப் பிரதேசத்தில் கடற்படையினர் கையகப்படுத்தி வைத்திருக்கும் தங்கள் வயல் நிலங்களையாவது விடுவித்துப் பயிர்செய்ய ஏற்பாடு செய்து தருமாறு இடம்பெயர்ந்து வாழும் முள்ளிக்குள மக்கள் வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனிடம் மன்றாட்டமாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மன்னார் முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முள்ளிக்குளப் பிரதேசம் 2007ம் ஆண்டு இராணுவத்தினரின் கட்டுப்பாட்டின்கீழ் வந்தபோது அங்கிருந்த மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.
இப்பிரதேசம் அதன் பின்னர் கடற்படையின் வடமேற்குக் கட்டளைப் பணியகத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதால் இடம்பெயர்ந்த மக்களால் இன்னமும் தங்கள் சொந்த வாழ்விடங்களில் குடியமர முடியவில்லை.
முசலியில் மலைக்காடு என்னும் இடத்தில் அடிப்படை வசதிகள் எதுவும் அற்ற நிலையில் ஓலைக்குடில்களில் வாழ்ந்து வருகின்றனர்.
இடம்பெயர்ந்து வாழுகின்ற முள்ளிக்குள மக்களை நேற்று செவ்வாய்க்கிழமை (06.05.2014) வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன்; சந்தித்துக் கலந்துரையாடினார்.
அப்போதே, “முள்ளிக்குளத்தில் உள்ள எங்கள் காணிகளையும் வீடுகளையும் திருப்பிக் கேட்க மாட்டோம் என்று கையெழுத்து வைத்துத் தந்தால் நாங்கள் குடியேறுவதற்கு மாற்று இடங்களை ஓழுங்கு செய்து தருவதாக அரசாங்கம் கூறுகிறது.
ஆனால், உயிரே போனாலும் வேறு இடங்களில் குடியமர மாட்டோம். எமது சொந்த இடங்களுக்கு நாங்கள் திரும்ப வழிசெய்து தாருங்கள்.
அங்கே 700 ஏக்கர்கள் அளவில் எங்களால் கைவிடப்பட்ட வயல்களும் உள்ளன. கடற்படை கையகப்படுத்தி வைத்திருக்கும் அந்த வயல் நிலங்களையாவது விடுவித்துப் பயிர் செய்வதற்காகவாவது அங்கு போய்வர அனுமதி வாங்கித் தாருங்கள்” என்று கண்ணீருடன் கோரிக்கை விடுத்தார்கள்.
மேலும், “வலி வடக்கு மக்களின் மீள் குடியேற்றத்துக்குக் குரல் கொடுக்கும் அரசியல்வாதிகள் எங்களை மட்டும் கண்டுகொள்கிறார்கள் இல்லை. நாங்கள் வளர்த்த மாடுகள்கூட எங்களைத் திரும்பிப் பார்க்குதில்லை.
இடப்பெயர்வின் போது நாங்கள் கைவிட்டு வந்த மாடுகள் படைகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இருந்து வெளியேறி வந்தாலும் மீளவும் அங்கேயே திரும்பி விடுகின்றன.
இதில் ஒரு மாடு தன்னும் திரும்பிப் போகாவிட்டால் கடற்படையினரும் எங்களை வந்து மிரட்டுகிறார்கள். கால்நடை வளர்ப்புக்கும் உதவி செய்யுங்கள்” என்றும் கேட்டுக்கொண்டார்கள்.
சொந்த இடங்களில் மீளக் குடியமர்வது தொடர்பாகவும், படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் வயல் நிலங்களில் பயிர்ச்செய்கை மேற்கொள்வது தொடர்பாகவும் முதலமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு செல்வதாகத் தெரிவித்த விவசாய அமைச்சர், தற்போது அவர்கள் தங்கியிருக்கும் பகுதியில் இருக்கும் புளியங்குளத்தைப் பயன்படுத்தி விவசாயம் செய்வதற்கு வேண்டிய உதவிகளைச் செய்வதாகவும், கால்நடை வளர்ப்புக்கு உதவுவதாகவும் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பின் போது வடமாகாண சிறுகைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் பா.டெனீஸ்வரன், மன்னார் நகரசபை உறுப்பினர் இ.குமரேஸ் ஆகியோரும் உடன் இருந்தார்கள்.
http://www.tamilwin.com/show-RUmsyFTbLYjo3.html
இலங்கையில் மேலும் வன்முறைக்கான ஏதுக்கள்!- கனடா எச்சரிக்கை
[ புதன்கிழமை, 07 மே 2014, 03:46.58 PM GMT ]
இலங்கையில் மேலும் வன்முறைகள் இடம்பெற ஏதுக்கள் உள்ளதாக கனடா எச்சரித்துள்ளது. இன்னர் சிட்டி பிரஸ் இந்த செய்தியை பிரசுரித்துள்ளது.
நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் கனேடிய அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் இந்த கருத்து வெளியிடப்பட்டதாக இன்னர் சிட்டி பிரஸ் குறிப்பிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளுக்கான கனேடிய வதிவிடப் பிரதிநிதி குய்லர்மோ ரிச்சின்ஸ்கியின் கருத்துப்படி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீம்பிள்ளையின் விஜயத்தின் பின்னர் இலங்கையில் சிவில் சமூகம் மீது தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவங்கள் கவலைக்குரியவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கனேடிய அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பங்கேற்ற நோர்வே, அமெரிக்கா, நைஜீரியா, ஜப்பான், பாகிஸ்தான், தென்னாபிரிக்கா ஆகியவற்றின் பிரதிநிதிகளும் இலங்கையின் நிலைமை குறித்து கரிசனை கொள்வதாக குறிப்பிட்டனர்.
எனினும் இலங்கை இராணுவம் தமிழ் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டை இலங்கையின் ஐக்கிய நாடுகளுக்கான பிரதி வதிவிடப் பிரதிநிதி சவேந்திர சில்வா, மறுத்துள்ளமையையும் இன்னர் சிட்டி பிரஸ் சுட்டிக்காட்டியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyFTbLYjo4.html
Geen opmerkingen:
Een reactie posten