|
1983ல் நாட்டில் ஏற்பட்ட இனக்கலவரத்தில் சிங்களக் காடையர்கள் இந்து ஆலயங்களை அழித்தனர். இதன்போது பல ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து சிறிலங்காத் தீவில் பிரிவினைவாதப் போர் ஆயுதப்போராகப் பரிணமித்தது.
இவ்வாறு AFP செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்கட்டுரையில் தெரிவித்துள்ளது.
சிறிலங்கா அரசாங்கம் நாட்டில் மீண்டும் யுத்தம் ஏற்படலாம் என எச்சரிக்கின்ற போதிலும், தென் சிறிலங்காவில் அமைந்துள்ள ஆலயம் ஒன்றில் மீளிணக்கப்பாட்டிற்கான முயற்சி வித்தியாசமான ஒரு வழிமுறையில் மேற்கொள்ளப்படுகிறது. "எங்கள் நாடு மீண்டும் யுத்தம் ஒன்றுக்கு முகங்கொடுக்காது" என மாத்தறையில் உள்ள ஆலயத்தில் பூசை வழிபாட்டை நடாத்தும் மதகுருவான மணி சிறினிவாசா தெரிவித்தார். இந்த ஆலயத்தில் பெரும்பான்மை சிங்கள சமூகத்திற்கும் சிறுபான்மை தமிழ் சமூகத்திற்கும் இடையில் மீளிணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கான புதிய ஆன்மீக முயற்சி இடம்பெறுகிறது.
இந்த ஆலயமானது 30 ஆண்டுகால யுத்தத்தின் போது அழிக்கப்பட்டது. பின்னர் தமிழ் மற்றும் சிங்கள சமூகங்களின் உதவியுடன் இந்த ஆலயம் தற்போது மீளப்புனரமைக்கப்பட்டுள்ளது. "இவ்வாண்டு இறுதிக்குள் நாட்டில் இடம்பெறும் அனைத்து வன்முறைகளும் முடிவுக்குக் கொண்டுவரப்படும் என்பதை நாம் அறிவோம்" என சிறினிவாசா குறிப்பிட்டார்.
சிறிலங்காவில் உள்நாட்டுப் போர் முடிவடைந்து ஐந்து ஆண்டுகள் கடந்த நிலையிலும், இங்கு மீளிணக்கப்பாட்டிற்கான முயற்சிகள் பெரும் சவால்களைச் சந்தித்துள்ளன. சிறிலங்காவில் இடம்பெற்ற பல்வேறு மீறல்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என அனைத்துலக சமூகம் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இந்த முயற்சிகள் முற்றிலும் நிறைவுசெய்யப்படவில்லை.
இறுதிக்கட்ட யுத்த காலத்தின் போது சிறிலங்காப் படைகளால் 40,000 வரையான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்படுகின்ற போதிலும், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இது தொடர்பில் அனைத்துலக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்கின்ற கோரிக்கையை நிராகரித்துள்ளார். சிறிலங்காவில் போரால் ஏற்பட்ட காயங்களை ஆற்றுவதற்கு இன்னமும் கால அவகாசம் தேவை என மகிந்த ராஜபக்ச கூறுகிறார்.
ஆனால் சிறிலங்கா அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் மீளிணக்கப்பாடு மிகச் சொற்பமானவையாகும். மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் நாட்டில் தலைதூக்கியுள்ளதால் மீளிணக்கப்பாட்டு முயற்சிகள் தடைப்பட்டுள்ளதாக ஏப்ரலில், பாதுகாப்பு அமைச்சு எச்சரித்திருந்தது. புலிகள் எனச் சந்தேகிக்கப்படும் மூன்று பேரை சிறிலங்கா இராணுவம் சுட்டுப்படுகொலை செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டதையடுத்தே பாதுகாப்பு அமைச்சால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
நாட்டில் மீண்டுமொரு ஆயுதப் போராட்டத்தை ஆரம்பிப்பது தொடர்பில் சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்கள் மத்தியிலோ அல்லது புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியிலோ எவ்வித எண்ணங்களும் இல்லை என வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
"நாட்டில் புலிகள் தொடர்பாக ஒரு தீவிரமான அச்சுறுத்தலை விடுப்பதன் மூலம், சிறிலங்கா அரசாங்கமானது நாட்டில் குறிப்பாக முன்னாள் போர் வலயமான வடக்கு கிழக்கில் இயல்புவாழ்வை ஏற்படுத்துவதற்கு முற்றிலும் தடையாக உள்ளது. இது சிறிலங்க அரசாங்கத்தின் மூலோபாயமாகக் காணப்படுகிறது" என சிறிலங்காவின் முன்னாள் இராஜதந்திரியான டயான் ஜெயதிலக குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்கா அரசாங்கத்தால் இழைக்கப்பட்ட பல்வேறு மீறல்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையானது தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி சில வாரங்களின் பின்னர் சிறிலங்கா அரசாங்கம் தனது நாட்டில் புலிகள் தொடர்பான அச்சம் மீளவும் தோன்றியுள்ளதாக அறிவித்துள்ளதானது சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
எவ்வித குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படாது சிறிலங்காப் படைகள் தொடர்ந்தும் ஆட்களைத் தடுத்து வைப்பதற்கான அனுமதியை வழங்குகின்ற பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் நீக்கப்பட வேண்டும் எனவும் மற்றும் முன்னாள் போர் வலயத்தில் கடமையில் ஈடுபட்டிருக்கும் ஆயிரக்கணக்கான படையினர் திருப்பி அழைக்கப்பட வேண்டும் எனவும் மேற்குலக நாடுகள், சிறிலங்கா அரசாங்கம் மீது தொடர்ந்தும் அழுத்தங்களை மேற்கொண்டு வருகின்றன.
அண்மையில் நாட்டில் புலிகள் சுடப்பட்டுள்ளமையானது, புலிகள் மீண்டும் தமது நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர் என்பதை நிரூபிப்பதாகவும் இதனால் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்க முடியாது எனவும் ஐ.நாவுக்கான சிறிலங்காவின் மனிதஉரிமைகளுக்கான தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
"நாங்கள் மேற்குலக நாடுகளுடன் கலந்துரையாடும் போது, சிறிலங்காப் படையினர் முன்னாள் போர் வலயங்களிலிருந்து அகற்றப்பட வேண்டும் என எம்மிடம் வலியுறுத்தினர். ஆனால் தற்போது புலிச் சந்தேகநபர்கள் நாட்டில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட பின்னர் படையினரை தொடர்ந்தும் வடக்கில் நிலைநிறுத்தி வைக்க வேண்டும் என்கின்ற எமது தீர்மானம் மிகச் சரியானது என நாங்கள் அனைத்துலக சமூகத்திடம் எடுத்துக்கூற முடியும்" என மகிந்த சமரசிங்க அண்மையில் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
நாட்டில் மீண்டுமொரு யுத்தம் ஆரம்பிக்கும் என்கின்ற எச்சரிக்கையை மதகுருவான சிறினிவாசா ஏற்கமறுத்துள்ளார். "போரின் போது சேதமடைந்த சிறி சிவ சுப்ரணிமணியம் ஆலயத்தை நாங்கள் 2006ல் புனரமைக்கத் தொடங்கினோம். இந்தப் பணி கடந்த ஆண்டு முடிவடைந்தது. இது நாட்டில் மீளிணக்கப்பாடு மேற்கொள்ளப்படுவதற்கான ஒரு வலுமிக்க சமிக்கையாகக் காணப்படுகிறது. தவிர, நாட்டில் நிலவிய மோதல் நிலை முடிவுக்கு வந்துள்ளதால் இனியொரு போதும் நாட்டில் யுத்தம் மீளவும் தோன்றுவது சாத்தியமற்றது" என சிறினிவாசா மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சிங்களவர்களின் மத நம்பிக்கையின் படி, விஜயா என அழைக்கப்பட்ட இளவரசர் குவேனி என்கின்ற இளவரசியைத் திருமணம் செய்து கொண்டார். இளவரசர் விஜயா இந்தியாவைச் சேர்ந்தவர். பின்னர் இவர் குவேனியைக் கைவிட்டு இந்தியாவைச் சேர்ந்த இளவரசி ஒருவரை மறுமணம் செய்தார். இதனைத் தொடர்ந்து விஜயா சிறிலங்காவின் முதலாவது அரசரானதுடன் சிங்கள இனத்தை அறிமுகப்படுத்தினார். இதனால் குவேனிக்கும் விஜயாவுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது.
"தற்போது எமது ஆலயத்தில் விஜயாவினதும் குவேனியினதும் சிலைகள் அருகருகே வைக்கப்பட்டுள்ளன. இவர்கள் இருவரும் முதற்தடவையாக இவ்வாண்டு பெப்ரவரி மாதத்தில் இவ்வாறு சோடியாக வைக்கப்பட்டனர். விஜயாவினதும் குவேனியினதும் சிலைகள் அருகருகே வைக்கப்பட்டுள்ள ஒரேயொரு இந்து ஆலயமாக இந்த ஆலயம் காணப்படுகிறது" என ஆலயகுருவான சிறினிவாசா தெரிவித்தார். இந்த ஆலயம் கொழும்பிலிருந்து 100 மைல்கள் தொலைவில் அமைந்துள்ளது.
"சிறிலங்காத் தீவின் பாதுகாவாலர் என இந்துக்களால் நம்பப்படும் கந்தனின் சிலை குவேனி மற்றும் விஜயா ஆகியோரின் சிலைகளைப் பார்க்கினற வகையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தின் ஆன்மிக சக்தி குவேனியால் ஆரம்பிக்கப்பட்ட இனமுரண்பாட்டைத் தீர்க்கும் என்பதை நாம் அறிவோம்" என சிறினிவாசா மேலும் தெரிவித்தார். இவரின் இந்தக் கருத்தை முன்னாள் போர் வலயமான யாழ்ப்பாணத்தில் உள்ள இந்து மதகுருக்கள் ஆதரிக்கின்றனர்.
1983ல் நாட்டில் ஏற்பட்ட இனக்கலவரத்தில் சிங்களக் காடையர்கள் இந்து ஆலயங்களை அழித்தனர். இதன்போது பல ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து சிறிலங்காத் தீவில் பிரிவினைவாதப் போர் ஆயுதப்போராகப் பரிணமித்தது.
மாத்தறையில் அமைக்கப்பட்டுள்ள இந்துக் கோவில் போரின் போது அழிக்கப்பட்ட போது, சில ஆண்டுகளுக்கு முன்னர் அந்தப் பகுதியிலுள்ள வீகிராகென என்கின்ற பிரதான பௌத்த விகாரை, இந்து ஆலயத்தின் புனரமைப்புக்காக நன்கொடைகளைச் சேகரித்து வழங்கியது. இந்த இந்து ஆலயம் மீளப்புனரமைக்கப்பட்டமையானது நாட்டில் இனக்குழப்பங்கள் முடிவுக்கு வந்துள்ளன என்பதை சுட்டிநிற்பதாக பௌத்த விகாரையின் மதகுருவான கேகால இரத்னசேர குறிப்பிடுகிறார்.
"மாத்தறையில் அழிக்கப்பட்ட இந்து ஆலயமானது பௌத்தர்களின் உதவியுடன் மீளக்கட்டப்பட்டுள்ளது. இங்கு மிகக் குறைந்த தமிழர்களே வாழ்கின்றனர். ஆனால் இவர்கள் இங்கு மிகவும் அமைதியாக வாழ்கின்றனர்" என்கிறர் இரத்னசேர. இந்த ஆலயத்தை சிங்கள மற்றும் தமிழ் ஆகிய இரு இனத்தவர்களும் வழிபாடு செய்கின்றமை வரவேற்கத்தக்க விடயம் எனவும் "அற்புத சக்திகள் நிறைந்த இடமாக இது காணப்படுகிறது" எனவும் தர்மதாசா விபரித்தார்.
அதனை மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.
http://kathiravan.com/newsview.php?mid=35&id=28896
|
Geen opmerkingen:
Een reactie posten