தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 24 mei 2014

தமிழர் மனங்களை நீங்களும் ரணமாக்காதீ​ர்கள்: மோடியிடம் இயக்குனர் கௌதமன் வேண்டுகோள்

தெரிவுக்குழுவுக்குச் சென்றால் ஏமாற்றப்பட்டு படுகுழிக்குள் தள்ளப்படுவோம்!- செல்வம் எம்.பி.
[ சனிக்கிழமை, 24 மே 2014, 03:38.00 PM GMT ]
நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு நாம் சென்றால், ஏமாற்றப்பட்டு படுகுழிக்குள் தள்ளப்படுவோம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்திற்கும் பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும். அதனூடாக தீர்வை எட்டுகின்ற போது அதனை நாடாளுமன்ற தெரிவு குழுவுக்கு போட்டு அதனை நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்பு ஏற்படுமானால் அதனை பரிசீலிப்பதற்கு நாம் தயார் என தெரிவித்திருந்தோம்.
அந்தவகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் போச்சுவார்த்தை இடம்பெற வேண்டுமே தவிர, நாடாளுமன்ற தெரிவுக்குழுவூடாக எமது இனப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமென்ற நம்பிக்கை எமக்கு இல்லை.
ஏனெனில் கடந்த கால தெரிவுக்குழுக்களை பார்க்கின்ற போது அவை அனைத்தும் குப்பைத்தொட்டியில் போடப்பட்ட விடயங்களாகவேயுள்ளது. அதனாலேயே சர்வதேசத்தின் நடுநிலைமையை நாம் நோக்கி நிற்கின்றோம்.
தெரிவுக்குழுவால் சொல்லப்படுகின்ற விடயங்கள் கூட நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. உதாரணமாக நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் கூட நிறைவேற்றப்படவில்லை. ஆகவே எங்கள் கண் முன் நிறையவே அனுபவங்கள் உள்ளது.
இவ்வாறு இருக்கையில் நாம் தெரிவுக்குழுவுக்கு போவோமேயானால் நாம் ஏமாற்றப்பட்டு இன்னும் பின்னோக்கி சென்று எமது இனப்பிரச்சினை தீர்க்கப்படவேண்டும் என்ற கோசம் அல்லது அவ் விடயங்கள் எடுபடாமல் போய்விடும் நிலைக்கு சென்றுவிடுவோம்.
தெரிவுக்குழு மூலமாக எம்மை படுகுழிக்குள் தள்ளிவிடும் செயற்பாட்டையே இந்த அரசாங்கம் செய்ய பார்க்கின்றது. ஆகவே கடைசி வரை தெரிவுக்குழுவுக்கு நாம் செல்லப்போவதில்லை.
இதேவேளை தமிழ் தேசியக்  கூட்டமைப்பு எக்காலத்திலும் எமது தமிழ் மக்களை அடகு வைக்கும் செயற்பாட்டில் ஈடுபடாது என்பதுடன் தெரிவுக்குழு மூலம் தீர்வு கிடைக்கும் என்பதனையும் நம்பவில்லை என தெரிவித்தார்
http://www.tamilwin.com/show-RUmsyFRYLZkqy.html
தமிழர் மனங்களை நீங்களும் ரணமாக்காதீ​ர்கள்: மோடியிடம் இயக்குனர் கௌதமன் வேண்டுகோள்
[ சனிக்கிழமை, 24 மே 2014, 02:35.20 PM GMT ]
சிறிலங்கா அரசின் இன அழிப்பில் ஈழத் தமிழினம் எரிந்து அழிந்து கிடக்கிறது. அவர்களை அரவணைத்து ஆறுதலளித்து, இழந்த உரிமைகளை மீட்டெடுக்க ஆதரவு வழங்குவதற்கு பதிலாக நீங்களும் ஒட்டுமொத்தமாக வெட்டிவீழ்த்திவிடாதீர்கள் என திரைப்பட இயக்குனர் கௌதமன் நரேந்திர மோடியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக இயக்குனர் கௌதமன் விடுத்துள்ள அறிக்கையில்,
இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் இனப்டுகொலையாளியான ராஜபக்சவை தங்களது பதவியேற்பு நிகழ்வுக்கு அழைத்திருப்பதானது ஈழத்தமிழினத்தின் அழிவுகளையும் கண்ணீரையும் நீங்கள் இன்னமும் கண்டுகொள்ளவில்லையா என்கின்ற எண்ணத்தைதான் உலகத் தமிழ்மக்கள் மனதில் ஏற்படுத்தியுள்ளது. பெரு வலியை உண்டாக்கியுள்ளது.
சிங்கள அரசுகளால் காலம் காலமாக ஒடுக்கப்பட்டு இன அழிவுக்கு உள்ளாக்கப்பட்டு வந்த ஈழத்தமிழர்களின் போராட்ட நியாயத்தை நிராகரித்து இந்தியாவும் உலக நாடுகளும் ஒட்டுமொத்த தமிழினத்தையும் பயங்கரவாதம் என்று வர்ணிக்க சிங்களப் பேரினவாத அரசு தமிழ் மக்கள் மீதுகொடிய இனவழிப்பை நடத்தி முடித்துள்ளது. இன்றும் நடத்திக் கொண்டிருக்கிறது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஈழ மண்ணில் சிங்களப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பின் வலிகள் காலம் நீண்டு சென்றாலும் கூட தமிழ் மக்களின் மனங்களிலிருந்து என்றும் நீங்காது.
முள்ளிவாய்க்காலில் இலட்சக்கணக்கான எங்கள் உறவுகள் கொல்லப்பட ஏனையவர்கள் வதை முகாம்களிலும் தடுப்பு முகாம்களிலிலும் இன்றும் அவல வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
ஐ.நா மன்றத்தின் வேண்டுகோளுக்கு இணங்க சிங்களப் படைகளிடம் சரணடைந்த எங்கள் உறவுகள் எவ்வாறு சீரழிக்கப்பட்டிருக்கிறார்கள் எவ்வாறு படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதை நாங்கள் சொல்லிப் புரிந்துகொள்ள வேண்டிய அவசியம் உங்களுக்கு இல்லை என்று நினைக்கின்றோம்.
நிராயுத பாணிகளாக நின்ற போராளிகளை கைது செய்து, நிர்வாணமாக்கி, கண்களையும், கைகளையும் கட்டி, தலையிலே சுட்டுப் படுகொலை செய்ததோடு, பெண்களை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தி கொன்று குவித்தது இனவெறி சிங்கள அரசு.
எங்களின் வலியை நீங்கள் கண்டுகொள்ளவில்லையா? அல்லது இன்னும் புரிந்து கொள்ளவில்லையா?சிங்கள இனவெறி படைகளால் சிதைக்கப்பட்ட எங்களது குலப் பெண்களின் உடலங்களை உலகம் முழுவதும் திரையிட்டுக் காட்டுகிறதே சனல் 4 உள்ளிட்ட ஊடகங்கள். இதனை நீங்கள் பார்க்கவில்லையா?
இத்தனை கொடுமைகளையும் செய்தவன் ராஜபக்சதானே. அவனின் படைகள் தானே.
குஜராத்திலோ அல்லது உங்கள் உறவுகளில் ஒருவருக்கோ இந்த நிலை ஏற்பட்டால் கொன்றவனை, கொடுமை செய்தவனை வரவேற்று மதிப்பளித்து விருந்தளிப்பீர்களா?
எங்களது உறவுகளின் இத்தனை அவலத்துக்கும் காரணம் ஆட்சியில் இருந்த காங்கிரசும் அவர்களுக்கு துணைநின்றவர்களும் இன்று வரலாற்றிலிருந்தே காணாமல் போயிருக்கின்றார்கள்.
தமிழக மக்கள் சரியான முடிவெடுத்து முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் கரங்களைப் பலப்படுத்தியுள்ளனர். அவர் மீதான நம்பிக்கை உலகத்தமிழ் மக்களிடம் உச்சம் பெற்றுள்ளது.
சிறிலங்கா அரசு மீது பொருளாதார தடைவிதிக்க வேண்டும். சிங்களப் படைகளுக்கு இந்தியாவில் பயிற்சி வழங்கக்கூடாதென பல தீர்மானங்களை தமிழக அரசு
நிறைவேற்றியிருக்கின்றது.
ஒட்டுமொத்த தமிழ் மக்களும். உலகநாடுகளும் இனப்படுகொலையாளி மகிந்தவையும் அவனது கும்பலையும் தண்டிக்க வேண்டும், ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று குரலெழுப்ப உங்களுக்கு மட்டும் எப்படி ஐய்யா மனம் வந்தது ராஜபக்சேவிற்கு கைகொடுத்து வரவேற்று மதிப்பளித்து விருந்தளிக்க.
இலங்கையை ஏன் என்று தட்டிக் கேட்பதற்குரிய அதிகாரத்தில் அமரப்போகும் நீங்கள் தமிழ் மக்களின் மனங்களை புண்படுத்தும் இந்த நடவடிக்கையை கைவிட்டு இன அழிப்புக்கு ஆளாகி நிற்கும் தமிழர்களின் பக்கமும் தர்மத்தின் பக்கமும் ஆதரவாக நிற்கவேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கின்றேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyFRYLZkp6.html

Geen opmerkingen:

Een reactie posten