1986-ம் வருடம், இலங்கையைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் சென்னை சூளைமேட்டில் வீடு எடுத்து தங்கியிருந்தனர். அவர்கள் அனைவரும் ஈ.பி.ஆர்.எல்.எப். என்ற தமிழ் போராளிக் குழுவைச் சேர்ந்தவர்கள். டக்ளஸ் தேவானந்தா என்பவர்தான் அந்த இளைஞர்களுக்குத் தலைவன். இவர்கள் தங்கியிருந்த, சூளைமேடு இருளர் காலனியில் உடற்பயிற்சிக் கூடம் நடத்தி வந்தவர் திருநாவுக்கரசு. அந்தப் பகுதி மக்களுக்கு ஏதாவது பிரச்னை என்றால், திருநாவுக்கரசுதான் ஓடிவந்து முன்னால் நிற்பார். மக்களும் அவரைத்தான் முதலில் நாடிப்போவார்கள்.
அந்த வருடம் நவம்பர் 1-ம் தேதி தீபாவளி. காலையில் இருந்து தீபாவளிக் கொண்டாட்டங்கள் பட்டாசு சத்தங்கள் என அமர்க்களப்பட்ட ஏரியா, மதியத்திற்கு மேல் வெறிச்சோடியது. அந்த நேரத்தில், நன்றாக குடித்துவிட்டு போதையில் வந்த ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்க இளைஞர்கள், பெட்டிக் கடையில் வாழைப்பழம் வாங்கிவிட்டு காசு தராமல் போனார்கள். இதை கடைக்காரர் தட்டிக் கேட்டதும் தகராறு மூண்டது.
கடைக்காரருக்கு ஆதரவாக அந்தப் பகுதியில் இருந்த சிலர் திரள, நிலைமை களேபரம் ஆனாது. காலனியினருக்கும், ஈ.பி.ஆர்.எல்.எப். இளைஞர்களுக்கும் தகராறு பெரிதானது. சத்தம் கேட்டு காலனி மக்களில் பெரும்பகுதியினர், வீட்டை விட்டு வெளியில் வந்து அந்த இளைஞர்களைத் தாக்க முற்பட, பயந்துபோன அவர்கள் தங்கள் அறைக்குச் சென்று ஏ.கே. 47 உள்ளிட்ட துப்பாக்கிகளை கையில் எடுத்து வந்து மக்களை நோக்கி சுட ஆரம்பித்தனர்.
ஆரம்பத்தில் பட்டாசுச் சத்தம் என்று நினைத்துக் கொண்டு வீட்டிற்குள்ளேயே இருந்தவர்கள்கூட பொதுமக்களின் அலறல் கேட்டு வீதிக்கு வந்தனர். அவர்களில் திருநாவுக்கரசு மட்டும், அந்த இளைஞர்களை நோக்கி சுடாதீர்கள்... சுடாதீர்கள்... என்று சொல்லிக் கொண்டே முன்னேறிப்போனார். ஆனால், அதைப் புரிந்து கொள்ளாத டக்ளஸ் தேவனாந்தாவின் ஏ.கே.47-ல் இருந்து சீறிய தோட்டாக்கள், திருநாவுக்கரசின் உயிரைப் பறித்தன. அருகில் இருந்த சுவரில் பாய்ந்த ஒரு தோட்டா, அதில் அரையடிக்கு பள்ளத்தை ஏற்படுத்தியது என்றால், அதன் வீரியத்தை உணரலாம். அதன் பிறகு அவர்கள் மொட்டை மாடியில் ஏறி, பொதுமக்களை மிரட்டிக் கொண்டு இருந்தனர்.
இந்தத் தகவல் பரவி, அந்தப் பகுதி முழுவதும் கூட்டம் கூடியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு ஒரு வேன் நிறைய போலீஸ்காரர்கள் வந்தனர். அந்த வேனையும் ஈ.பி.ஆர்.எல்.எப். இளைஞர்கள் குறிவைத்து சுட ஆரம்பித்ததும், போலீஸ் வேன் அங்கிருந்து மாயமானது. அதன்பிறகு நூற்றுக்கணக்கில் வந்து குவிந்த போலீஸ்காரர்கள் ஏரியா மக்கள் அனைவரையும் வெளியில் அனுப்பிவிட்டு மொத்தமாக அந்த ஏரியாவை தங்களின் கண்ட்ரோலுக்கு கொண்டுவந்தனர்.
துப்பாக்கிகளுடன் மொட்டை மாடியில் நின்று கொண்டிருந்த இளைஞர்களை சரண் அடையச் சொன்னது போலீஸ். ஆனால், அவர்கள் போலீஸ் அதிகாரி வால்டர் தேவாரம் முன்னிலையில்தான் சரணடைவோம் என்று கோரிக்கை வைத்தனர். அதன்பிறகு, சம்பவ இடத்திற்கு வால்டர் தேவாரம் வந்தார். அவர் முன்னிலையில் பத்து பேரும் சரணடைந்தனர். வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதன்பிறகு ஜாமீன் பெற்று வெளியில் வந்தவர்கள், இலங்கைக்கு தப்பி ஓடிவிட்டார்கள். திருநாவுக்கரசை சுட்டுக்கொன்ற டக்ளஸ் தேவானந்தா தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். தற்போது இலங்கையில் அமைச்சராகி, அரசு விருந்தினராக இந்தியா வந்தபோது கூட டக்ளஸ் தேவானந்தா தலைமறைவுக் குற்றவாளிதான்.
|
Geen opmerkingen:
Een reactie posten